கள்ளன் பவித்ரன் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7137
"பாத்திரங்களை விற்ற பிறகுதான் எல்லாமே... அப்படித்தானே?"
பவித்ரன் 'ஆமாம்' என்பது மாதிரி தலையை ஆட்டினான்.
வியாபாரி தன் பாக்கெட்டிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து நீட்டினார்.
"இந்தா... போயி காப்பி குடிச்சிட்டு வா..."
சொல்லப்போனால் அப்போதுதான் பசி என்ற ஒன்றையே பவித்ரன் உணர ஆரம்பித்தான். நேற்று அவன் என்னவோ சாப்பிட்டான். அதற்குப்பிறகு ஒரு வாய் தண்ணீர்கூட அவன் குடிக்க வில்லை.
பவித்ரன் வியாபாரி தந்த பணத்தை வாங்கிக் கொண்டான். அவனுக்கு வியாபாரி மீது இனம்புரியாத ஒரு ஈடுபாடு உண்டானது. தன்னுடைய சொந்த தந்தையிடமோ வேறு யாரிடமோ தோன்றக்கூடிய ஒருவகை நெருக்கம் அந்த மனிதரிடம் தனக்கு உண்டாவதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. சைக்கிளை எடுப்பதற்காக அவன் நகர்ந்தபோது வியாபாரி அவனைப் பார்த்துக் கேட்டார்.
"இந்த சைக்கிள் உன் சைக்கிளா?"
"ஆமா..."- பவித்ரன் பயத்துடன் பதில் சொன்னான்.
"அப்படின்னா...?"
"சொந்தம் மாதிரிதான்... வாடகைக்கு எடுத்துட்டு வந்தேன்."
"ம்... அப்படிச் சொல்லு! அதனாலதான் கேட்டேன். சைக்கிள் சொந்தமானதா இல்லையான்னு."
பவித்ரன் பவ்யமாக அவரைப் பார்த்து சிரித்தான்.
"இது திருடினதா இருக்குமோன்னு நான் நினைச்சேன்."
பவித்ரன் காப்பி குடித்துவிட்டு திரும்பி வரும்போது கடையில் ஒரு பல்ப் எரிந்து கொண்டிருந்தது. மிகவும் குறைவான வோல்ட் டேஜ் கொண்ட பல்ப் அது. அந்த பல்ப் அங்கிருந்த செம்பு பாத்திரங்களில் பட்டு ஆங்காங்கே பிரகாசம் தெரிந்தது.
யாரோ இரண்டு பேர் கடையில் பாத்திரம் வாங்குவதற்காக வந்து நின்றிருந்தார்கள். அவர்கள் திரும்பிப் போகும்வரை பவித்ரன் சற்று தூரத்தில் யாருக்கும் தெரியாமல் மறைந்து நின்றிருந்தான். அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும், அவன் மீண்டும் முன்பு அவன் நின்றிருந்த இடத்திலேயே வந்து நின்று கொண்டான்.
வியாபாரி யாரோ ஒரு புதிய மனிதனைப் பார்ப்பது போல அவனைப் பார்த்தார். பிறகு என்ன நினைத்தாரோ, மீண்டும் கணக்குப் புத்தகத்தில் அவர் ஆழ்ந்து போனார்.
மேஜை மேல் ஒரு காலியான தேநீர் க்ளாஸ் இருந்தது. அதற்குள் இரண்டு மூன்று ஈக்கள் இருந்தன.
"கைமள் வந்துட்டாரா?"- பவித்ரன் மரியாதையான குரலில் கேட்டான்.
"இல்ல பவித்ரா..."- முதல் முறையாக அவன் பெயரைச் சொல்லி அழைத்தார் வியாபாரி. தங்கள் இருவருக்குமிடையில் இருக்கும் உறவுநேரம் அதிகமாக அதிகமாக பலப்பட்டு வருவதை பவித்ரன் நன்றாகவே உணர்ந்தான்.
"ஆமா... எந்தக் கடைக்கு அவர் போயிருக்காரு?"- பவித்ரன் கேட்டான்.
"நம்ம கடைதான்... ஆனா, எந்தக் கடைக்கு அவர் போயிருக்காருன்னு தெரியலையே...!"- வியாபாரி தாடையில் கையை ஊன்றியவாறு உட்கார்ந்திருந்தார்.
"நம்ம கடைன்னு நீங்க சொல்றீங்க..."- பவித்ரன் தான் மேலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவன் போல் கேட்டான்.
"எந்த கடைன்னு யாருக்குத் தெரியும்?"- வியாபாரி கேட்டார். "மொத்தம் நமக்கு பதினாறு கடைகள் இருக்கு. எல்லா கடைகளோட கணக்கும் மற்ற விஷயங்களும் கைமளுக்கு மட்டும்தான் தெரியும். அவர் எங்கே போறார்ன்றதும் எதற்காக போறார்ன்றதும் அவருக்கு மட்டுமே தெரியும்."
அதைக் கேட்டு பவித்ரனுக்கு கைமளைப் பற்றி மேலும் மதிப்பு அதிகமாகத் தொடங்கியது. வியாபாரியின் எல்லையையும் தாண்டி உள்ள மனிதர் கைமள் என்பதுதானே இதற்கு அர்த்தமாகிறது!
"எது எப்படியோ நீ ஒரு காரியம் செய்..." என்னவோ மனதில் நினைத்த வியாபாரி சொன்னார். உள்ளே நுழைஞ்சு பார். உள்ளே இருக்குற பாத்திரங்களுக்கு மத்தியில் உன்னோட பாத்திரங்கள் இருந்தா, அதை உன்னால கண்டுபிடிக்கமுடியுமா?"
"நிச்சயமா..."
"அப்படின்னா வா..."
இப்படித்தான் கடைக்குள் என்ன இருக்கிறது என்பதையே பவித்ரனால் தெரிந்து கொள்ள முடிந்தது.
உள்ளே அழைத்துக் கொண்டு செல்லும்போது, வியாபாரி சொன்னார்:
"இதுக்கு முன்னாடி உள்ளே யாரையும் நான் விட்டதேயில்ல."
உள்ளறை முழுவதும் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. தலைக்கு மேலே உயரத்தில் குவிக்கப்பட்டு நிறைந்திருந்த பாத்திரங்களுக்கு மத்தியில் வளைந்தும் நெளிந்தும் நடந்து போவதற்கான பாதைகள் இருந்தன.
அதைப் பார்த்ததும் உண்மையிலேயே திகைத்துப் போய் நின்று விட்டான் பவித்ரன். வெளியே நின்று கொண்டிருந்தபோது பாத்திரக் கடைக்குள் இவ்வளவு பாத்திரங்கள் இருக்கும் என்று அவன் சிறிது கூட எதிர்பார்த்திருக்கவில்லை. இருட்டில் நின்றவாறு "கொஞ்சம் நில்லு" என்று கூறியவாறு பவித்ரனைப் பார்த்து சொன்ன வியாபாரி ஒரு ஸ்விட்ச்சைப் போட்டார்.
திடீரென்று வந்து விழுந்த விளக்கு வெளிச்சத்தில் கண்ணில் தெரிந்த காட்சியைப் பார்த்து பவித்ரன் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிட்டான் என்றுதான் கூறவேண்டும்.
பாத்திரங்களின் குவியல்கள்- புதிய- பழைய செம்பு, பித்தளை, பீங்கான், ஸ்டீல் பாத்திரங்களின் குவியல்கள்- கரி பிடித்த, பாசி படர்ந்த பழைய பாத்திரங்கள், ஒளி வீசிக் கொண்டிருக்கும் புதிய பாத்திரங்கள், ஒடிந்தவை, சப்பிப்போனவை, என்ன என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உருவம் பாதிக்கப்பட்டவை- இப்படிப் பல்வகைப்பட்ட பாத்திரங்களும் அங்கு இருந்தன.
இன்னொரு விஷயத்தையும் பவித்ரன் கவனிக்காமலில்லை. அந்த அறையில் இருந்த ஒரு வகையான வெளிச்சம்தான் அது முன்பக்கத்தில் மெழுகுவர்த்தி அளவிற்கே வெளிச்சம் இருக்கின்ற அந்தக் கடைக்குள் இவ்வளவு வெளிச்சம் தேவைதானா என்று அவன் நினைத்தான். சூரியன் எரிவதைப் போல ஒரு பல்ப் உள்ளே எதற்கு என்று அவன் சிந்தித்தான்.
அந்தப் பக்கம் பார்த்தபோது பவித்ரனின் கண்கள் கூசின. அவனுடைய கண்களில் நீர் அரும்பியது.
"என்ன, பவித்ரன்?"- வியாபாரி கேட்டார்.
"கண்கள் கூசுது"- பவித்ரன் உண்மையைச் சொன்னான்.
"அப்படித்தான் இருக்கும். இந்த பல்ப் விலை உயர்ந்ததாச்சே!"- வியாபாரி சொன்னார்.
"பாம்பு! உள்ளே நான் ஒரு பாம்பைப் பார்த்தேன்."
அவன் ஒரு மூலையை விரலால் சுட்டியவாறு சொன்னான்.
"நம்ம கைமளோட மாமா அதோ அந்த இடத்துலதான் ஒரு பாம்பு கடிச்சு செத்தாரு. இந்த மாதிரி எத்தனையோ பேர் இறந்திருக்காங்க. எங்கப்பாக்கிட்ட இருந்து நான் கடையோட பொறுப்பை ஏத்துக்கிட்ட பிறகு தான் இந்த பல்பே வந்துச்சு. அதற்குப் பிறகு பாம்பு கடிச்ச சம்பவம் எதுவும் இதுவரை சொல்லிக்கிற மாதிரி நடக்கல. ஒண்ணு ரெண்டு தடவைகள் சாதாரணமா கொத்தியிருக்கும் அவ்வளவுதான்..." மிகப் பெரிய காரியத்தைச் செய்ததைப் போல் வியாபாரி சொன்னார். மீண்டும் பல்பைச் சுட்டிக் காட்டியவாறு அவர் சொன்னார்; "இதைப் பார்த்துக்கிட்டே இருந்தா பிரகாசம் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகுறது மாதிரி தோணும்..."
பவித்ரன் அந்த வினோதமான விளக்கையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் வியாபாரி திடீரென்று வெளியே நடந்தார். போகும்போது அவர் சொன்னார். "உன்னோட அண்டாவும், குடமும் இந்தப் பாத்திரங்களுக்கு மத்தியில் தான் எங்கேயோ இருக்கணும்.