கள்ளன் பவித்ரன் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7138
"சார்..."
பதில் குரல் எதுவும் வராமற் போகவே, பவித்ரன் மேலும் உரத்த குரலில் அழைக்க ஆரம்பித்தான். தொண்டையே கிழிந்து போகும் அளவிற்கு தான் உரத்த குரலில் அழைத்தும், பாத்திரங்கள் மேல் அந்தச் சத்தம் மோதி பெரிதாக எதிரொலித்தும், வியாபாரி என்னவென்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே என்பதை எண்ணிப் பார்த்தபோது அவனுக்கே வியப்பாக இருந்தது. இருந்தாலும் அவன் அழைப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
கூப்பிட்டுக் கூப்பிட்டு பவித்ரனுக்கு தொண்டையே போய் விட்டது. திரும்பத் திரும்ப, பலமுறை அழைத்தும், யாரும் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. சிறிது நேரம் சென்றதும் பவித்ரனுக்கு ஒரு உண்மை புரிந்தது. யாரும் அவன் அழைப்பதைக் கேட்டு அங்கு வரப் போவதில்லை. இந்த உண்மையைப் புரிந்து கொண்டதும் அவன் தான் அழைத்துக் கொண்டிருப்பதை நிறுத்தினான். அடுத்த நிமிடம் மூலையில் இருந்த ஒரு பெரிய பாத்திரத்தின் மீது போய் அவன் அமர்ந்தான்.
அப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தோம் என்று பவித்ரனுக்கே தெரியவில்லை. இடையில் சிறிது நேரம் தூங்கிவிட்டோமோ என்ற சந்தேகம் கூட அவனுக்கு இருந்தது. அதற்குப் பிறகு அவன் அந்த இடத்தை விட்டு திடுக்கிட்டு எழுந்தது பாத்திரங்களுக்கு மத்தியில் யாரோ தட்டுத் தடுமாறியபடி ஓடிவரும் சத்தத்தைக் கேட்டுத்தான்.
ஓடி வந்தது வியாபாரிதான். அவர் யாரையோ பார்த்து பயப்படுவதைப் போல அடிக்கொருதரம் பின்னால் திரும்பிப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தார். ஓடிவரும் போது மேல்மூச்சு கீழ்மூச்சு வேறு விட்டுக் கொண்டிருந்தார்.
"பவித்ரா!"- ஓடி வரும்போதே மெதுவான குரலில் வியாபாரி சொன்னார். "நாம பிரச்சினையில மாட்டிக்கிட்டோம்..."
"என்ன ஆச்சு?"- பவித்ரன் பதைபதைப்புடன் கேட்டான்.
"போலீஸ் இப்போ நம்ம கடையை வளைக்கப் போறாங்க."
அவ்வளவுதான் - திருடன் பவித்ரனுக்கு நாக்கே வறண்டு போய்விட்டது. போலீஸ்காரர்களுக்கு பயந்துதான் அவன் நேரடியாக திருட்டு பொருட்களுடன் வேறெங்கும் செல்லாமல் இவ்வளவு தூரம் தாண்டி வந்ததே. அதற்குப் பிறகும் இப்படியென்றால்...
"நான் முன் பக்கத்தை மூடிட்டேன். விளக்கையும் அணைச்சாச்சு."
"அவங்க வந்துட்டாங்களா?"
"இல்ல... வந்துக்கிட்டு இருக்காங்க"- முதலாளி சொன்னார்.
"அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். என்னவோ மனசில தோணுச்சு. அதுனாலதான் முன் பக்கத்தையே அடைச்சேன்."
அவர் மிகவும் கஷ்டப்பட்டு தட்டுத்தடுமாறி நடந்து சென்று, ஸ்விட்சைக் கண்டுபிடித்து, விளக்கை அணைத்தார்.
நல்ல பாம்புக் கூட்டமொன்று தனக்கு நேராக ஊர்ந்து கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தான் பவித்ரன். ஆனால், மனதில் தோன்றிய அந்த விஷயம் மாறுவதற்கு முன்பே சாலையில் ஜீப்பொன்று வேகமாக வந்து நிற்கும் ஓசையும், அதிலிருந்து பூட்ஸ் அணிந்த கால்கள் கீழே இறங்கும் சத்தமும் அவன் காதில் விழுந்தது.
பரபரப்பாக தன்னையே மறந்து நான்கு பக்கங்களிலும் கைகளை வீசிய பவித்ரனின் தோள்மீது வியாபாரியின் கைவந்து விழுந்தது. இந்த அடர்ந்த இருட்டில் தன்னை அவர் எப்படி கண்டுபிடித்தார் என்று பவித்ரன் மிகவும் ஆச்சரியப்பட்டான்.
"நமக்குச் சொந்தமான மூணு கடைகளையும் அவங்க ஏற்கனவே ரெய்டு பண்ணிட்டாங்க"- வியாபாரி பவித்ரனின் காதில் மெதுவாகச் சொன்னார். "கைமளைப் பிடிச்சிட்டாங்கன்னு செய்தி வந்தது..."
கைமளைப் போலீஸ்காரர்கள் பிடித்துவிட்டார்கள் என்றால், பவித்ரனின் பாத்திரங்களையும் சேர்த்துப் பிடித்து விட்டார்கள் என்றுதானே அர்த்தம்? ஆனால், அந்த நிமிடத்தில் பவித்ரனுக்கு அந்தத் தகவல் எந்தவித அதிர்ச்சியையும் தரவில்லை.
புதிது புதிதாக பலவிதப்பட்ட எண்ணங்களும் அவன் மனதில் வந்து அலைபாய்ந்து கொண்டிருந்தன. இந்த வியாபாரி சரியான ஒரு மனிதனல்ல- பவித்ரனை மிகவும் ஆச்சரியத்திற்குள்ளாக்கிய எண்ணம் இதுதான்.
அரசாங்கம் உருவாக்கிய இலட்சம் வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட ஒரு வீட்டில் வசித்துக் கொண்டிருப்பவன் என்ற நிலையிலும், தினந்தோறும் திரைப்படம் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் மனிதன் என்ற முறையிலும் வியாபாரி எப்படிப்பட்ட ஆளாக இருப்பார் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒருவேளை இந்த மனிதன் ஒரு கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருக்கலாம். குவிந்து கிடக்கும் இந்தப் பாத்திரங்களுக்குக் கீழே தங்கக் கட்டிகளை இந்த மனிதர் மறைத்து வைத்திருக்கலாம்... - இப்படியெல்லாம் நினைத்தான் பவித்ரன்.
வெளியே வாசல் கதவை யாரோ பலமாகத் தட்டிக் கொண்டிருப்பது கேட்டது. தடிமனான குரலில் யாரோ தொடர்ந்து கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருந்தார்கள். கதவைத் திறக்கும்படி யாரோ உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கதவைத் திறக்காவிட்டால், அவர்கள் அதை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தாலும் வரலாம்.
பவித்ரன் பயத்தில் நடுக்கம் உண்டாக வியாபாரியை இறுகப் பற்றியவாறு நின்றிருந்தான். வியாபாரியின் முகம் அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை. இருந்தாலும் அப்படியொன்றும் அவர் பயப்படவில்லை என்பதையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு விரலால் அவ்வப்போது அவர் சமாதானப்படுத்துவது மாதிரி அவனின் தோள் மீது தட்டிக் கொண்டிருந்தார். அவர் அப்படி அமைதியாக இருந்தது அவனிடம் இலேசான ஒரு தைரியத்தை உண்டாக்கியதென்னவோ உண்மை.
வெளியே இதுவரை இருந்த ஆரவாரம் கொஞ்சம் அடங்கியிருந்தது. போலீஸ்காரர்கள் தங்களுக்குள் என்னவோ 'குசுகுசு' வென்று பேசிக் கொண்டிருந்தார்கள். இடையில் அவர்களின் கையிலிருந்த லத்தி கதவில் பட்டு சத்தம் வந்தது. இன்னும் அவர்கள் அங்கே இருக்கிறார்கள் என்பதை அதை வைத்து தெரிந்து கொள்ள முடிந்தது.
"இந்த சைக்கிள் யாரோடதுடா?"- உரத்த ஒரு சத்தம் கேட்டது. யாரும் எந்த பதிலும் கூறவில்லை. பவித்ரனின் நெஞ்சு பயங்கரமாகத் துடித்தது.
"இது யாரோடது?"- மீண்டும் அந்தக் கேள்வி ஒலித்தது.
வியாபாரியின் கை அடுத்த நிமிடம் பவித்ரனின் வாய் மேல் பட்டது. எங்கே தன்னைமீறி அவன் ஏதாவது வாய் திறந்து உளறிவிடப் போகிறானோ என்ற பயம் அவருக்கு.
"இந்த சைக்கிளை வேன்ல ஏத்துடா"- மீண்டும் அந்த கட்டளைக்குரல் கேட்டது.
யாரோ சைக்கிளைத் தூக்கியெடுத்து வேனிற்குள் எறியும் சத்தம் கேட்டது.
"அவங்க கார்ல ஏறி வேகமா போயிட்டாங்க எஜமான்"- கூட்டத்திலிருந்த யாரோ ஒரு வயதான மனிதனின் குரல் கேட்டது.
"அப்படி போறதா இருந்தா, அவங்கள்ல ஒருத்தன் சைக்கிளையும் எடுத்துட்டுல்ல போயிருக்கணும்..."
"அதுவும் சரிதான்" இன்னொரு மனிதனின் குரல்.
"உள்ளே ஒருவேளை ஆள் இருந்தா..." இன்னொரு மனிதன் கேட்டான்; "வேணும்னா கதவை உடைச்சு உள்ளே பார்ப்போம்."
"போடா... முட்டாள்தனமா ஏதாவது பேசிக்கிட்டு இருக்காம" - இப்படிச் சொன்னது அனேகமாக ஒரு இன்ஸ்பெக்டராக இருக்க வேண்டும். அதிகாரத் தொனியில் அவர் சொன்னார்; "பிறகு எப்படி வெளியே பூட்டியிருப்பாங்க?"