கள்ளன் பவித்ரன் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7143
6
ஆனால், பவித்ரன் அப்படிச் சொன்னதை ஊர்க்காரர்கள் பெரிய ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. எந்தப் பெண் தன்னை விட்டுப் போனாலும் ஆணொருவன் சாதாரணமாகச் சொல்லக்கூடிய வார்த்தை இதுதான் என்பதைத் தாண்டி அவர்கள் எந்த முக்கியத்துவத்தையும் தரவில்லை. கள்ளு குடித்துவிட்டு இப்படி எல்லோரும் ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள்.
ஆனால், பவித்ரன் விஷயத்தைப் பொறுத்தவரை அவன் என்ன சொன்னானோ அதன்படி தான் அவன் அதற்குப் பிறகு நடந்தான். மாமச்சன் சம்பவத்திற்குப் பிறகு திருடன் பவித்ரனின் வாழ்க்கையைப் பொறுத்தவரை படிப்படியான வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
முதலில் அந்த மாற்றத்தை யாரும் சரியாகக் கவனிக்கவில்லை. பவித்ரன், அவனுடைய ஐந்து குழந்தைகள், ஜானகி ஆகியோரின் தோற்றத்தில் தான் முதலில் மாற்றம் உண்டானது. அவர்களின் ஒட்டிப்போன கன்னங்களில் சதை பிடிக்க ஆரம்பித்தது. பவித்ரனின் பிள்ளைகள் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து பள்ளிக்கூடம் போகத் தொடங்கினார்கள். பெரும் வசதி படைத்த வீட்டைச் சேர்ந்த பிள்ளைகளைப் போல பார்ப்பதற்கு அவர்கள் தோன்றினார்கள். பவித்ரனையும் அவன் மனைவியையும் பார்க்கும் போதே பணவசதி படைத்த தம்பதிகளாகத் தோன்றினார்கள். அவர்களைப் பார்க்கும் போதே ஐஸ்வர்யம் அவர்களிடம் குடி கொண்டிருப்பதை உணர முடிந்தது.
வெளித் தோற்றத்தில் உண்டான இந்த மாற்றங்களுக்கப் பொதுவாக ஊர்க்காரர்கள் ஆரம்பத்தில் பெரிய முக்கியத்துவம் எதுவும் தரவில்லை. நான்கு வேளையும் நல்ல சாப்பாடு சாப்பிட்டால் யாரும் சற்று தடித்துத்தான் காணப்படுவார்கள் என்று அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள். நல்ல ஆடைகளை யார் அணிந்தாலும் பார்ப்பதற்கு கொஞ்சம் அழகாகத்தான் இருப்பார்கள் என்பதும் அவர்களுக்குப் புரியாமல் இல்லை. தமயந்தியை வெறுப்படையச் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பவித்ரன் இந்தப் பாடுபடுகிறான் என்று அவர்கள் நினைத்தார்கள். படிப்படியாக பவித்ரன் வளர்ந்து கொண்டிருக்கிறான், அதன் வெளிப்பாடுதான் இந்தத் தோற்றங்களெல்லாம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லை.
அதற்குப் பிறகு தமயந்தியும் பவித்ரனைத் தேடிச் செல்லவில்லை. ஒரு பீடை தன்னைவிட்டு ஒழிந்தது என்று அவள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள். முன்பு என்றால் அவளும் அவளின் குழந்தைகளும் சாப்பிட்டு உயிர்வாழ கடுமையாகக் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. திருடன் பவித்ரன் திருடிக் கொண்டு வருவதை மட்டும் வைத்து அவர்களால் வாழமுடியுமா என்ன?
"நான் போடுற கண் மைக்குத் தேவையான காசைக்கூட அந்த ஆளால தரமுடியாது" என்று அவள் பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள். "எது எப்படியோ, நாங்க இப்போ கொஞ்சம் கூட பயமில்லாம வாழறோம். எதுக்குமே லாயக்கில்லாத அந்த மனிதன் கூட வாழ்றதை விட அப்பப்பா!" என்றாள் அவள்.
இது ஒருபுறமிருக்க, மாமச்சனை தமயந்தி அவ்வப்போது ரகசியமாகச் சென்று பார்ப்பது உண்டென்றும், என்னென்னவோ காரணங்களைச் சொல்லி அந்த மனிதரை மிரட்டி அவள் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறாளென்றும் ஊரில் உள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள்.
மாமச்சன்-தமயந்தி உறவைப் பற்றி ஊருக்குள் கதை கதையாகப் பேசிக் கொண்டார்கள். பவித்ரனின் வளர்ச்சியை நினைத்துப் பார்ப்பதைவிட அவர்களுக்கு இந்தப் புதிய விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில்தான் ஆர்வம் அதிகமிருந்தது.
மாமச்சனின் மில்லுக்கு அவ்வப்போது தமயந்தி போய்வருவதை ஊர்க்காரர்கள் கவனித்துக் கொண்டுதானிருந்தார்கள். தலையில் கூடையை வைத்துக் கொண்டு, முடிந்தால் முகத்தை மூடியவாறு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்து அங்கு போகும் அவளைப் பார்த்தவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எல்லாம் மாமச்சனின் கெட்ட நேரம்தான் என்று ஊர்க்காரர்கள் தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள்.
மனைவியைப் பறிகொடுத்து, மரியாதைக்குரிய ஒரு நபராக இதுவரை வாழ்க்கையை நடத்தி, தன்னுடைய மகளுக்குத் திருமணம் செய்து முடித்து- சொல்லப் போனால்- ஊர் மக்களிடம் நல்ல ஒரு பெயரைப் பெற்று வைத்திருக்கும் மாமச்சன் தற்போது மோசமான ஒரு வலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து ஊர்க்காரர்கள் எல்லோரும் அவருக்காக வருத்தப்பட்டார்கள்.
மாமச்சனிடமோ தமயந்தியிடமோ இந்த விஷயத்தைப் பற்றி வாய் திறந்து கேட்பதற்கு பொதுவாக யாருக்குமே தைரியம் வரவில்லை. மாமச்சனிடம் அவர்கள் எப்படி இதைப்பற்றி கேட்பார்கள்? இந்த மாதிரியான விஷயங்களை பாவம் அந்த அப்பிராணி மனிதர் எப்படி மற்றவர்களிடம் பேசுவார்?
"என்ன, இப்படித்தான் மனம் போனபடி நடக்குறதா?" என்று ஒரு வாயாடியான பெண் தமயந்தியைப் பார்த்து ஒரு நாள் கேட்டுவிட, அடுத்த நிமிடமே, "நான் எப்படி வேணும்னாலும் நடப்பேன். அதைக் கேட்க நீ யாரு?" என்று கோபத்துடன் கேட்டாள் தமயந்தி.
எது எப்படியோ, மாமச்சன்- தமயந்தி உறவைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஊர்க்காரர்கள் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் கிட்டத்தட்ட பவித்ரனை முழுமையாக மறந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். புதிய திருட்டு சம்பவங்கள் எதுவுமே இல்லாமல் இருக்கிற சூழ்நிலையில் அவர்கள் எதற்காக திருடன் பவித்ரனைப் பற்றி தேவையில்லாமல் நினைத்துப் பார்க்க வேண்டும்?
மாமச்சனின் உண்மையான மனநிலை என்ன என்பதைப் பற்றி யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. தமயந்தி அந்த மனிதரை மிரட்டி பணம் பறித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை மட்டும் அவர்களால் யூகிக்க முடிந்தது. ஆனால், மாமச்சன் தமயந்தியின் மிரட்டலுக்குப் பயப்படக்கூடிய ஒரு மனிதரா? அதுவும் இவ்வளவு மாதங்கள் கழிந்தும் இன்னும் அவர் அப்படியேவா இருப்பார்? இப்படிப் பல விஷயங்களையும் தங்களின் மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்தனர் ஊர்மக்கள்.
மாமச்சனுக்கு தமயந்தி மீது தீராத காதல் என்று சிலர் சொன்னார்கள். தமயந்தியின் வலையில் விழுந்தவர்கள் அவ்வளவு எளிதாக அவளை விட்டு மீள முடியாது என்று பலவித சான்றுகளுடன் சிலர் சொன்னார்கள்.
இப்படியொரு குற்றச்சாட்டு தனக்கு எதிராக ஊர்மக்கள் மத்தியில் எழுந்திருப்பதைப் பார்த்து மாமச்சன் 'துரோகிகள்' என்று அவர்களைத் திட்டினார்.
உண்மையாகச் சொல்லப்போனால் தமயந்தியை எப்படி உதறிவிடுவது என்பதுதான் மாமச்சனுக்கு ஆரம்பத்தில் ஒரு பெரிய பிரச்சினையாகவே இருந்தது. "என் வாழ்க்கையையே நாசமாக்கிட்டீங்க?" என்று உரத்த குரலில் கூப்பாடு போடுகிற அவளின் உருவம் ஒவ்வொரு நாளும் அவர் கனவில் வந்து அவரை தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தது. தன்னுடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கையில் இருப்பதை அவளிடம் கொடுப்பது - என்பதைத்தான் அரம்பத்தில மாமச்சன் செய்து கொண்டிருந்தார்.
அதற்குப் பிறகு ஒரு விஷயம் அவருக்குப் புரிந்தது. அதாவது எதைக் கொடுத்தாலும், தமயந்தி அதை வாங்கிக் கொண்டு போய்விடுவாள் என்பதுதான். அது எவ்வளவு பணம் கொடுத்தாலும், அதில் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கூட அவள் பார்ப்பதில்லை என்பதே உண்மை.
எது எப்படியோ, தன்னையுமறியாமல் மாமச்சன் அவளின் வலையில் விழுந்துவிட்டார். ஐம்பதுபைசா வீதம் காகிதத்தில் பொட்டலம் கட்டி மடித்து வைத்து, அதை மேஜை ட்ராயருக்குள் எப்போதும் மாமச்சன் வைத்திருப்பார். வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வந்து அதை தமயந்தி அவரிடம் வாங்கிச் செல்வாள். எப்போது வந்தாலும் நன்றி நிறைந்த ஒரு புன்சிரிப்புடன்தான் தமயந்தி வீடு திரும்புவாள்.