
உண்மையாகச் சொல்லப்போனால் தமயந்திக்குத தேவையாக இருந்தது பெயர் மட்டும்தான். அதாவது- 'மாமச்சனோட ஆள்' என்ற பெயர். திருடன் பவித்ரனின் ஆள் என்பதைவிட இப்படி அழைப்பதில் மதிப்பும், மரியாதையும் அதிகமாக இருப்பதாக உணர்ந்தாள் தமயந்தி. அதனால்தான் அவள் மாமச்சனிடமிருந்து பெரிதாகப் பணமெதையும் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருதடவை அவள் வரும்போதும் வெறும் பத்து பைசவீதம் அவர் அவளுக்குத் தந்திருந்தாலும் அவள் அதைப் பெற்றுக் கொள்ளவே செய்திருப்பாள். அதற்காக அவர் எதுவுமே தராமல் இருந்தாலும், அவள் அதை ஏற்றுக் கொண்டிருக்கமாட்டாள். எதுவுமே தராமல் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்? மாமச்சன் அவளுடன் கொண்ட உறவை முழுமையாக மறுக்கிறார் என்று அர்த்தம் ஆகிவிடாதா? எவ்வளவு மோசமான பெண்ணாக இருந்தாலும், பெயர் பெற்ற ஒரு ஆண் உடனிருந்தால் ஊர்க்காரர்கள் அந்தப் பெண்ணை மதிக்கவே செய்வார்கள் என்பதைத் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தில் நன்றாகவே அறிந்திருந்தாள் தமயந்தி.
ஒரு நாள் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்ட பிறகும் தமயந்தி அந்த இடத்தை விட்டுப் போகாமல், மில்லுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாள். யாருமே இல்லாதிருந்த அந்த இடத்தில் ஒரு துடைப்பத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்த உமியையும் தவிட்டையும் பெருக்கியவாறு நின்றிருந்த அவளைப் பார்த்ததும், மாமச்சனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. என்ன விஷயம் என்று அவர் விசாரித்ததற்கு அவள் மாமச்சனைப் பார்த்துக் கேட்டாள். "கண்ணுல இரத்தமே இல்லாம இப்படித்தான் என்கிட்ட நீங்க நடக்குறதா?"
"நீ தான் கண்ணுல இரத்தமே இல்லாம நடந்துக்கிட்டு இருக்கே?"- மாமச்சன் சொன்னார்.
"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..." தமயந்தி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். "பிறகு எதற்கு நான் உங்களைத் தேடி அடிக்கடி வந்துக்கிட்டு இருக்கேன்? உங்களைப் பார்க்காம என்னால இருக்க முடியலைன்றதுதான் உண்மை."
அவளின் கண்ணீர் மாமச்சனின் இதயத்தை என்னவோ செய்தது.
"ஒரு நாளாவது என்னைப் பார்க்கணும்னு உங்களுக்குத் தோணியிருக்கா?"- தமயந்தி மனக்குறையுடன் கேட்டாள்.
"நான் உன்னை பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன்!"
"அதென்ன பார்க்குறது? என் வீட்டுக்கு ஒரு தடவை என்னைப் பார்க்க வந்தால் என்ன? செருப்பு தேய்ஞ்சு போய்டுமா?"
மாமச்சன் அதற்கு ஒரு பதிலும் கூறவில்லை.
"வழி தெரியாது அது இதுன்னு ஏதாவது சொல்ல வேண்டியது தானே?"
அதற்கும் மாமச்சன் எந்த பதிலும் கூறவில்லை. மில்லில் அப்போது வேறு யாரும் இல்லை. தமயந்தி மாமச்சனை இறுகக் கட்டிப் பிடித்து, முத்தமொன்றைக் கொடுத்தவாறு சொன்னாள்; "இன்னைக்கு மட்டும் நீங்க வராம இருந்தீங்க...?"
காலியாக இருந்த கூடையைக் கையில் எடுத்துக் கொண்டு அவள் வெளியே நடந்தாள். வாசலை அடைந்ததும் ஒரு நிமிடம் நின்ற அவள் தொடர்ந்து சொன்னாள்.
"என் வாழ்க்கையில இதுவரை யார்கிட்டேயும் இந்த மாதிரி காலைப்பிடிச்சு நான் சொன்னதே இல்லை. நீங்க மட்டும் இன்னைக்கு வீட்டுக்கு வரலைன்னா, நாளைக்குக் காலையில பொழுது விடியிறப்போ என் பிணம் கிணத்துல கிடக்கும். அவ்வளவுதான் நான் சொல்லுவேன்."
இதைச் சொல்லிவிட்டு அவள் வேகமாக அங்கிருந்து நடந்தாள்.
அன்று இரவு மாமச்சன் யாருக்கும் தெரியாமல் மறைந்து ஒளிந்து தமயந்தியின் வீட்டைத் தேடிச் சென்றார். தமயந்தி கோழிக்கறி சமைத்து அவருக்காக அங்கு காத்திருந்தாள். அவருக்காகக் கடையிலிருந்து ஒரு புதிய படுக்கை விரிப்பை வாங்கி வைத்திருப்பதைப் பார்த்த மாமச்சனுக்கு அது ஒரு மறக்க முடியாத சம்பவமாக இருந்தது. பல விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்த அவர்கள் இருவரின் கண்களும் நீரால் நிறைந்தன.
தன் மீது விருப்பம் ஒரு பக்கம் இருந்தாலும், அடிக்கடி மில்லுக்கு வந்து தன்னைப் பார்ப்பதை அவள் நிறுத்த வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் மாமச்சன். அதற்குப் பதிலாக வாரத்திற்கொருமுறை தான் தமயந்தியின் வீட்டுக்கு வருவதாக அவர் வாக்களித்தார்.
தமயந்தியும் அதற்கு 'சரி'யென்று சம்மதித்தாள்.
அன்று அவர்கள் இருவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் திளைத்தார்கள்.
அன்று இரவுதான் மாமச்சன்- தமயந்தி இருவருக்குமிடையிலான உறவு ஆரம்பித்தது என்ற உண்மையை பொழுது புலரும் நேரத்தில் மாமச்சனே உணர்ந்தார். மற்ற விஷயங்களெல்லாம் வெறுமனே ஊரில் உள்ளவர்கள் கற்பனை பண்ணி பேசிக் கொண்ட விஷயங்களே.
பொழுது விடிந்ததும் அவர் தமயந்தியைப் பார்த்து அந்த விஷயத்தைச் சொன்னார்.
"அப்போ அன்னைக்கு நாம இருந்தது...?" என்று இழுத்தாள் தமயந்தி.
"ஓ... அதைச் சொல்றியா? அது சும்மா...”- மாமச்சன் கண்களைச் சிமிட்டியவாறு சொன்னார்.
அண்டாவும், கிண்டியும், குடமும் காணாமல் போனதற்காக உண்டான மனவருத்தத்தில், அதை ஈடுகட்டுவதற்காக நடத்திய ஒரு பொய்யான விளையாட்டுதான் அது என்பதை காலையில் உட்கார்ந்திருந்தபோது மாமச்சன் நினைத்துப் பார்த்தார். இருந்தாலும் வேண்டாத அந்த விளையாட்டில் தனக்கொன்றும் நஷ்டமுண்டாகி விடவில்லை என்பதையும் அவர் எண்ணாமல் இல்லை. அதனால் தனக்கு நல்லதே நடந்திருக்கிறது என்று அவர் நினைத்தார்.
அன்று காலையில் இன்னொரு ஆச்சரியமான சம்பவமும் நடைபெற்றது. தமயந்தி தொடக்கூடாதவளாகத் தன்னைக் காட்டிக் கொண்டாள். அப்போத தீட்டு வந்திருப்பது ஒரு நல்ல காரியத்துக்கான அறிகுறி என்றாள் தமயந்தி. அதைச் சொல்லும் போது அவளிடம் நாணம் கலந்த அழகு கொப்பளித்துக் கொண்டிருப்பதை மாமச்சனால் உணர முடிந்தது.
காலையில் எழுந்ததும் குளித்து, துவைத்த முண்டைக் கட்டிக் கொண்டு உடம்பைத் தொட அனுமதிக்காமல், தேநீரைக்கூட நேரடியாகத்தராமல் தூரத்தில் வைத்து, அவர் தொட முயன்றபோது பிடியில் அகப்படாமல் "அய்யே! அய்யே!" என்று பாய்ந்தோடிய தமயந்தி மாமச்சனைத் தன்னுடைய இந்த நடவடிக்கைகளின் மூலம் கிட்டத்தட்ட அடிமைப்படுத்திவிட்டாள் என்றே சொல்ல வேண்டும்.
அங்கு பார்க்கும் எல்லா விஷயங்களும் மாமச்சனுக்கு மிகவும் பிடித்திருந்தன. தமயந்தியின் குழந்தைகள், வாசலில் இருந்த வாழைகள், அவளின் தங்கை, அவளின் தம்பி, இலேசாகத் தொட்டவுடன் ஓடிய அவள் செயல்- எல்லாமே அவருக்கு மிகவும் பிடித்திருந்தன.
அந்த வீட்டில் இருந்த எல்லாவற்றுக்குமே சுத்தமும், திட்டமும், ஒரு சீரான நிலையும் இருப்பதைப் பார்த்து அவருக்கு ஆச்சர்யம்தான் உண்டானது. தமயந்தியின் துறுதுறுப்பைப் பார்த்து அவருக்குப் பெருமையாக இருந்தது.
அந்த வீட்டிற்குள் நுழையும் போது இருந்த மாமச்சனுக்கும் இப்போதிருக்கும் மாமச்சனுக்கும் நிறையவே வித்தியாசமிருக்கிறது.
ஊர் மக்கள் முன்னால் தான் இதுவரை காப்பாற்றி வந்த நல்ல பெயர் இப்படி ஒரே நாளில் காற்றில் பறப்பதைப் பார்த்து மாமச்சனின் மனதில் சிறிது கூட வருத்தம் உண்டாகவில்லை என்பதுதான் உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook