கள்ளன் பவித்ரன் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7137
அதற்குப் பிறகு இன்னொரு மனிதனின் குரலே கேட்கவில்லை.
பவித்ரன் கூட அப்போது அதைப்பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். ஒருவேளை வியாபாரி உள்ளே இருந்து கொண்டே வெளியே இருந்து யாரையாவது பூட்டும்படி சொல்லியிருக்கலாம். அல்லது உள்ளே இருந்து கொண்டே பூட்டு போடும் அளவிற்கு ஏதாவதொரு வசதி இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். இவற்றில் ஏதாவதொன்று தான் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவன் மனம் நினைத்தது. இல்லாவிட்டால் இவை இரண்டுமே இல்லாமல் வேறு ஏதாவது வசதி கூட இருந்தாலும் இருக்கலாம் என்று கூட அவன் நினைத்தான். எது எப்படி இருந்தாலும் வியாபாரியின் புத்திசாலித்தனமான செயலைப் பார்த்து அவர் காலடியில் விழுந்து வணங்க வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது.
திருடர்களென்றால் இப்படி இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் தானெல்லாம் ஒரு திருடனா என்று தன்னைப் பற்றியே அவன் தாழ்வாக நினைக்க ஆரம்பித்துவிட்டான்.
வெளியே வேன் மெதுவாக நகர்வது கேட்டது. அதற்கு முன்பு இறுதியாக ஒரு எச்சரிக்கை விடுவதைப் போல இன்ஸ்பெக்டர் சொன்னார்.
"கதவை உடைச்சு உள்ளே பார்க்கலாம்னா... அப்பன் பேர் தெரியாத இந்தத் தேவிடியா மகன் சங்கத்தோட தலைவனாம். மேலிடத்துல இருந்து உத்தரவு இல்லாம எப்படி கடையை உடைக்கலாம் அது இதுன்னு பெரிய பிரச்சினையை உண்டாக்கினான்னா, தேவையில்லாம அவன் பின்னாடி நான் அலைஞ்சுக்கிட்டு இருக்கணும். ம்... பரவாயில்ல... நாம வேற எங்கேயாவது இவனைப் பிடிப்போம்!"
வேன் அந்த இடத்தை விட்டு நீங்கியது.
சிறிது நேரம் சென்ற பிறகுதான் வியாபாரி பவித்ரனின் வாயில் வைத்திருந்த தன்னுடைய கையையே எடுத்தார்.
வெளியே யாராவது நடக்கும் அல்லது பேசும் சத்தம் கேட்கிறதா என்று அவர் சிறிது நேரம் காதுகளைத் தீட்டிக் கொண்டு நின்றிருந்தார்.
எந்த சத்தமும் வராமல் இருக்கவே, வியாபாரி விளக்கைப் போட்டார்.
மீண்டும் மூச்சு வந்ததைப் போல் உணர்ந்த பவித்ரன் கேட்டான்.
"ஆமா எப்படி வெளியே பூட்டினீங்க?"
"போடா முட்டாள்..."- வியாபாரியின் வாய் பிளந்த சிரிப்பில் ஒரு மிகப்பெரிய சாதனை செய்த திருப்தி தெரிந்தது.
"நான் பூட்டவே இல்ல..."
"பிறகு?"- பவித்ரனால் அதை நம்பவே முடியவில்லை.
"பார்த்தா கடை அடைக்கப்பட்ட மாதிரி இருக்கும். ஆனா, அடைக்கப்பட்டிருக்காது. இலேசா தட்டினா கதவு திறந்திடும்."
"அப்படியா?"- பவித்ரன் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியமாகப் பார்த்தான்.
"ஹ! ஹ! ஹ!"- வியாபாரி மீண்டும் சிரித்தார். "வாடா முட்டாள்..."
மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த வியாபாரி பவித்ரனுக்குப் பின்னால் நின்றிருந்தார். பவித்ரனின் கழுத்தைப் பிடித்து பாத்திரங்களுக்கு மத்தியில் இருந்த இடைவெளி வழியாக அவனை மெதுவாக அவர் தள்ளிக் கொண்டே போனார். எந்த வழியாக அவர் தன்னைக் கொண்டு போகிறார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு முன்பே அவன் வெளியே இருக்கும் வாசல் கதவுக்குப் பக்கத்தில் நின்றிருந்தான்.
வியாபாரி பவித்ரனை வேகமாக முன் பக்கமாகத் தள்ளிவிட்டார். பவித்ரன் ஏற்கனவே தான் நின்றிருந்த உயரம் குறைவான மேஜைக்கு அருகில் போய் நின்றான். வியாபாரி அங்கிருந்த விளக்கைப் போட்டார்.
பவித்ரன் நான்கு பக்கங்களிலும் கண்களை ஓட்டினான். முன்பு அவன் பார்த்தவை எல்லாமே அப்படியே இருந்தன. உயரம் குறைவான மேஜை, மங்கலாக எரிந்து கொண்டிருந்த பல்ப், பின்னால் சுவரில் இருந்த கடவுள்கள், மேஜை மேல் இருந்த தடிமனான பேரேடு புத்தகம்...
வியாபாரி தான் எப்போதும் அமரும் இடத்தில் போய் அமர்ந்தார். தனக்குப் பின்னாலிருந்த ஒரு உருளையான தலையணையை எடுத்து அதைக் கொடுத்தவாறு அவர் குலுங்கிக் குலுங்கி சிரித்தார். ஒரு மிகப்பெரிய நிம்மதி தனக்கு வந்திருப்பதை வெளிக்காட்டும் வண்ணம் அவர் அடிக்கொருதரம் "ஹோய்! ஹோய்!” என்று கூறிக் கொண்டிருந்தார்.
சில நிமிடங்கள் இந்த விஷயமே தொடர்ந்தது.
பிறகு இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டே ஏதோ ஒரு நினைப்புடன் காலால் அங்கிருந்த ஒரு பலகையை இலேசாகத் தட்டினார் வியாபாரி.
பவித்ரனே ஆச்சரியப்படும் வகையில் அந்தப் பலகை நகர்ந்து உட்பக்கமாக வந்தது. மிகவும் சிறியதாக இருந்தது அந்தப் பலகைத் துண்டு. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு ஸ்ப்ரிங்கால் கட்டியிருப்பதைப் போல் அது ஆடிக் கொண்டிருந்தது. வியாபாரி அதன் அடிப்பகுதியைப் பிடித்து, அதை மேல் நோக்கித் தள்ளினார். அப்போது அந்த நீளமான பலகை இலேசாக நகர்ந்தது. அந்த இடைவெளி வழியாக பவித்ரன் வெளியே இருக்கும் சாலையைப் பார்த்தான்.
"பார்த்தியா?"- வியாபாரி பவித்ரனைப் பார்த்து கேட்டார்; "என் கடைக்குப் பூட்டு இருக்கான்னு பார்த்தியா?"
பவித்ரன் தன் கண்களில் வழிந்த நீராலும், அப்போது உண்டான பதைபதைப்பாலும் எதுவுமே பேசமுடியாமல் மவுனமாக இருந்தான். காக்காவலிப்பு வந்தவனைப் போல நெடுஞ்சாண் கிடையாக அவன் தரையில் விழுந்து வியாபாரியைத் தொழுதான்.
பவித்ரனின் செயலைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த வியாபாரி அவனைக் கையால் பிடித்துத் தூக்கினார்.
"எழுந்திரு பவித்ரா"- அவர் சொன்னார். "நம்ம ரெண்டு பேருக்கும் ஏதோ அதிர்ஷ்டம் இருக்குன்னு நினைக்கிறேன்."
"அதிர்ஷ்டமும் கிடையாது, ஒண்ணும் கிடையாது..."- பவித்ரன் சொன்னான், "புத்திசாலித்தனத்தோட விளைவு இது!"
வியாபாரியை மனம்போனபடி புகழ்வதில் பவித்ரனுக்கு அப்போது எந்த கஷ்டமும் இருக்கவில்லை.
"இப்படியொரு வாசல் கதவும் பூட்டும்... அடக்கடவுளே!"- அவன் கைகூப்பி ஆச்சரியப்பட்டான்.
அதைப் பார்த்து வியாபாரி மீண்டும் உரத்த குரலில் விழுந்து விழுந்து சிரித்தார்.
அவருக்கு தன்னை மிகவும் பிடித்துவிட்டது என்பதை பவித்ரனால் புரிந்து கொள்ள முடிநத்து. அவனும் அதற்கேற்றபடி நடந்து கொண்டான்.
"சரி..."- சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருந்த வியாபாரி சிரிப்பை நிறுத்திவிட்டு திடீரென்று சொன்னார். "இனிமேல் நீ போகலாம்."
அவர் அப்படிச் சொன்னதும் அதுவரை பவித்ரனின் மனதிற்குள் இருந்த மகிழ்ச்சி இருந்த இடமே தெரியாமல் போனது. காரணமே இல்லாமல் அவனிடம் உண்டான அச்சம் கலந்த உணர்வு அவன் கண்களை மேலும் இருள்படியச் செய்தது.
வியாபாரி அதைக் கவனிக்காமலில்லை.
அவர் மேஜையின் ட்ராயரைத் திறந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து மேஜை மேல் வைத்தார். "சைக்கிள் போயிருச்சேன்னு கவலைப்படாதே" அவர் பவித்ரனைப் பார்த்துச் சொன்னார். "இந்தா... இதை வைச்சுக்கோ!"
பவித்ரன் அந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து தன்னுடைய பாக்கெட்டினுள் வைக்காமல் கையில் வைத்தபடி நின்றிருந்தான்.
"அந்த சைக்கிள் கடையில் இதைக் கொடுத்திடு. வண்டி தொலைஞ்சு போச்சுன்னு சொல்லு. ஒரு கடை முன்னாடி நிறுத்தியிருக்கிறப்போ, யாரோ எடுத்துட்டாங்கன்னு சொல்லு."