கள்ளன் பவித்ரன் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7137
பவித்ரனின் கெட்ட நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். மார்க்கெட்டுக்குள் நுழைந்த அவன் அங்கேயே மாட்டிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிவிட்டான்.
யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து போயும் கடைசியில் அவன் தானாகவே போய் மாட்டிக் கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
திருட்டுப் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்பவனும் சரி, அவற்றை வாங்குபவனும் சரி, அது திருட்டுப் பொருள்தான் என்பதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.
ஒன்றிரண்டு சிறு வியாபாரிகள் தன்னைப் பார்த்து சந்தேகப்பட்டு கேள்வி கேட்டதைப் பார்த்த பவித்ரன் கோணியைக் கையில் எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டே நகர்ந்து விட்டான். ஆனால், இந்த வியாபாரியிடம் ஏனோ அவனால் அப்படி நடக்க முடியவில்லை. தன்மீது அந்த வியாபாரிக்கு கொஞ்சம் கூட சந்தேகம் உண்டாகவில்லை என்று அவன் தனக்குள் நினைத்துக் கொண்டது கூட ஒரு முட்டாள்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். பிறகு தேவையில்லாமல் இவ்வளவு பணமும் செல்வாக்கும் நான்கு பக்கங்களிலும் வெண்கல பாத்திரங்களையும் கொண்டிருக்கும் இந்த வயதான மனிதர் இப்படியெல்லாம் தன்னிடம் நடப்பார் என்று அவன் எதிர்பார்த்திருப்பானா என்ன?
அவர் அண்டாவையும், கிண்டியையும், குடத்தையும் வெளியே எடுத்து இப்படியும் அப்படியுமாய் பார்த்தார். மனதில் எந்தவித சந்தேகமும் உண்டாகாத மனிதரைப் போல் அவனைப் பார்த்துக் கேட்டார், "எவ்வளவு கிலோ இருக்கும்?"
அவன் முகத்தைச் சிறிது கூட பார்க்காமலே அவர் அந்தக் கேள்வியைக் கேட்டார்- முகத்தில் எந்தவித உணர்ச்சி வேறுபாடும் இல்லாமல்.
"பத்து பதினைஞ்சு கிலோ வரும்னு நினைக்கிறேன்"- திருடன் பவித்ரன் சொன்னான்.
"பத்து, பதினைஞ்சா?"- அவர் ஒரு மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டு பவித்ரனையே பார்த்தார்.
அப்போதுதான் பவித்ரன் அந்த மனிதரின் முகத்தை முதல் தடவையாக முழுமையாகப் பார்த்தான்.
ஒரு தடிமனான முகம். சதைப்பிடிப்பான கழுத்திற்கு மேல் ஒரு பெரிய தக்காளிப் பழத்தைப்போல அந்த முகம் இருந்தது.
உண்மையிலேயே பவித்ரன் பயந்து போனான்.
"கைமள்..."- வியாபாரி அழைத்தார்.
கைமள் அங்குவர, வியாபாரி கிண்டியை எடுத்து அவன் முன்னால் வைத்தார்.
"இதைக் கொண்டு போய் எடை போட்டுப் பாருங்க."
கைமள் கிண்டியையும், மற்ற பாத்திரங்களையும் கையில் எடுத்தார். அவர் பவித்ரனின் முகத்தை ஏறிட்டு பார்க்கவேயில்லை.
வியாபாரம் செய்வதாக இருந்தால் அதற்குரிய உயர்ந்த தகுதிகள் கொண்டவர்களுடன்தான் செய்ய வேண்டும் என்று பவித்ரனுக்கு அப்போது தோன்றியது. அப்படி இல்லாமல் கண்ட கண்ட வியாபாரிகளிடமெல்லாம் தான் கொண்டு வந்த பொருட்களை கொண்டு போய் காட்ட, அவர்கள் ஒருவித சந்தேகத்துடன் அவனையே ஏறிட்டு நோக்க... இதெல்லாம் தேவையா என்று அவன் அப்போது நினைத்தான்.
ஆனால், அந்த நினைப்பு அதிக நேரம் நீடித்து நிற்கவில்லை. உள்ளே போன கைமள் அதற்குப் பிறகு நீண்ட நேரமாகியும் வெளியே வருவதாகத் தெரியவில்லை. வியாபாரி கூட பவித்ரனை முழுமையாக மறந்தேவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஒரு பெரிய புத்தகத்தில் சிறு சிறு எழுத்துக்களால் என்னவோ கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்.
பொதுவாக எல்லோரும் செய்வதைப் போல பவித்ரனும் தான் அங்கு நின்றிருப்பதை அந்த மனிதருக்கு உணர்த்தும் பொருட்டு இருமவும் செருமவும் செய்தான். வியாபாரி அதைத் தன்னுடைய காதுகளில் வாங்கியதாகவே காட்டிக் கொள்ளவில்லை. கடைசியில் பொறுமையை இழந்த பவித்ரன் சொன்னான், "பாத்திரம் எவ்வளவு எடை இருக்குன்னு சொல்லவே இல்லையே!" தான் சொன்னதையே திரும்பவும் இன்னொரு முறை சொல்ல வேண்டிய கட்டாயம் அவனுக்கு உண்டானது.
"பாத்திரத்தின் எடையா?"- அவர் பவித்ரனை புதிதாக பார்க்கும் ஒரு ஆளைப் போல பார்த்தார்.
அதைப்பார்த்து உண்மையிலேயே பவித்ரன் பயந்து போனான். தான் எங்கே அவனிடமிருந்து அப்படி பாத்திரங்கள் எதையும் வாங்கவே இல்லை என்று அந்த மனிதர் கூறிவிடப் போகிறாரோ என்று கூட அவன் பயந்தான். இருந்தாலும் மனதிற்குள் உண்டான அந்த பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், இலேசாக சிரித்தவாறு பவித்ரன் கேட்டான்,
"எடை பார்க்குறதுக்காக உள்ளே பாத்திரத்தை ஒருவர் எடுத்திட்டுப் போனாரு. பாத்திரத்தையும் காணோம். ஆளையும் காணோமே!"
வியாபாரி அவனையே வைத்த கண் எடுக்காது ஒரு நிமிடம் உற்று பார்த்தார். தொடர்ந்து அழைத்தார், "கைமள்..."
அடுத்த சில நிமிடங்களுக்கு அங்கு யாரும் வரவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளேயிருக்கும் வெங்கலப் பாத்திரங்களை மிதித்து ஓசை எழுப்பியவாறு ஒரு மெலிந்து போய்க் காணப்பட்ட கிழவன் வெளியே வந்தான்.
"கைமள் கடைக்குப் போயிருக்காரு..."- கிழவன் சொன்னான்.
வியாபாரி அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. அவர் மீண்டும் கணக்கு புத்தகத்தில் தன் கவனத்தைச் செலுத்தினார்.
கிழவன் பாத்திரங்களின் ஒலிகளுக்குள் தன்னை மறைத்துக் கொண்டதும், மீண்டும் அங்கு பழைய சூழ்நிலையே உண்டாக ஆரம்பித்தது. அப்படியொரு சம்பவமே அங்கு நடக்காதது போலவும், அப்படி ஒரு கிழவனே அங்கு வராதது போலவும் சூழ்நிலை தொடர்ந்தது.
மின்னல் வெட்டியதைப் போல அப்போதுதான் பவித்ரனுக்கே தோன்ற ஆரம்பித்தது... தான் வந்து சரியாக மாட்டிக் கொண்டதாக அவன் நினைத்தான்.
"கைமள் எப்போ கடையில இருந்து வருவாரு?" அவன் ஆர்வத்துடன் விசாரித்தான்.
"அது எப்படி எனக்குத் தெரியும்?"- வியாபாரி முணுமுணுக்கும் குரல் அவன் காதில் விழுந்தது.
தொடர்ந்து அவர் சற்று உரத்த குரலில் கோபம் தொனிக்க சொன்னார்,
"இவ்வளவு அவசரம்னா திருடின இந்தப் பொருள்களோட எதற்காக இங்கே வரணும்? சாமான்களை நாங்க இங்கே கட்டாயம் வாங்கிக்கிறோம்னு ஏதாவது முன்கூட்டியே சொல்லியிருக்கோமா என்ன?"
வியாபாரி இவ்வாறு சொன்னதைக் கேட்டு திருடன் பவித்ரன் செயலற்று நின்றுவிட்டான். ஆனால், அவன் தன் மனக்கலக்கத்தை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் வெறுமனே அவன் நின்றிருந்தான்.
"இங்கேயே நில்லு..."- மனதிற்குள் உண்டான கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வியாபாரி தாழ்ந்த குரலில் சொன்னார்: "கைமள் வரட்டும்..."
பவித்ரன் எல்லாவற்றையும் புரிந்து கொண்டதைப் போல பவ்யமாக நின்று கொண்டு தலையை ஆட்டினான்.
வியாபாரிக்கு மிகவும் அருகில் இருந்த செம்பு, பித்தளைப் பாத்திரங்களுக்கு நடுவில் எங்கோயிருந்து ஒரு தொலைபேசி திடீரென்று ஒலித்தது. தான் அங்கு இருப்பதை ஞாபகப் படுத்துவதைப் போல அந்த மனிதரின் முகத்துக்கு நேராக தொலைபேசி இருந்த இடத்தை விட்டு எடுக்கப்பட்டதை அவன் பார்த்தான். அதற்குப் பிறகு எந்த சத்தத்தையும் அவனால் கேட்க முடியவில்லை. அவர் ஏதாவது பேசுகிறாரா இல்லையா என்பதைக் கூட அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம்- அந்த அளவிற்கு மிகவும் மெதுவான குரலில் அவர் பேசிக் கொண்டிருந்தார்.