கள்ளன் பவித்ரன் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7137
"இங்கே... நான் மட்டும் செய்யிற அளவுக்குத்தான் வேலையே இப்போ இருக்கு"- மாமச்சன் சொன்னான். "இப்போ நீ கிளம்பு, பவித்ரன். அப்படி வேலை எதுவும் இருந்துச்சுன்னா நான் பிறகு சொல்றேன்."
அடுத்த நிமிடம் அந்த இடத்தை விட்டு பவித்ரன் கிளம்பினான்.
அதற்குப் பிறகு சிறிது நாட்களாக இரவு நேரங்களில் ஒரு சிறு அசைவு கேட்டால் கூட சரி... பக்கத்திலிருக்கும் சிறு கம்பையும் டார்ச் விளக்கையும் உடனடியாகக் கையில் எடுத்துக் கொண்டு ஆவேசமாக எழுந்திருப்பது என்பது மாமச்சனின் அன்றாட நடவடிக்கையாகிவிட்டது. நாட்களும் வாரங்களும் செல்லச் செல்ல அவனுடைய அந்த பயம் சிறிது சிறிதாகக் குறைந்தது.
திருட்டு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, பவித்ரன் மாமச்சனின் வீட்டிற்கு மீண்டுமொருமுறை வந்தான். "எனக்கு அவசரமா பத்து ரூபா வேணும்"- என்றான் பவித்ரன். "ஒரு வாரத்துக்குள்ள நான் அதைத் திருப்பித் தர்றேன்" என்றான்.
"பத்து ரூபாவா?"- மாமச்சன் மனதிற்குள் அதிர்ச்சி அடைந்தவாறு, வேண்டுமென்றே ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னான்: "இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. மில்லுக்குக் கூட இன்னைக்கு விடுமுறை."
"நாளைக்குக் கிடைக்குமா?"- பவித்ரன் சிரிக்காமல் கேட்டான்.
"நாளைக்கு..." - மாமச்சன் ஏதோ சிந்தித்தவாறு சொன்னான்: "ரெண்டோ மூணோன்னா நாளைக்கு சாயங்காலம் பார்க்கலாம். பத்து ரூபாய்ன்னா... எப்படி முடியும் பவித்ரா? ராத்திரியும் பகலும் நெல் அரைச்சாலும் பத்து ரூபாய் கிடைக்க மாட்டேங்குதே பவித்ரா..."
அவ்வளவுதான் - எதுவுமே பேசாமல் பவித்ரன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். மறுநாள் காலையில் அவருடைய வீட்டிலிருந்த மூன்று பாத்திரங்கள் காணாமல் போய்விட்டன.
பொழுது புலரும் நேரத்திற்கு முன்பு ஒரு சைக்கிள் 'கிடு கிடு'வென ஓசை எழுப்பிக் கொண்டு போனதை தேனீர் கடைக்கு முன்னால் வராந்தாவில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் நல்ல தூக்கத்தில் இருந்ததால் அதற்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் தராமல் இருந்து விட்டார்கள். இப்போதுதான் அவர்களுக்கே தெரிகிறது தாங்கள் அப்போது பாதி தூக்கத்தில் கேட்டது செம்பு பாத்திரங்கள் உண்டாக்கிய சத்தம்தான் என்று.
எல்லாவற்றையும் சேர்த்து வைத்து பார்க்கும் போது திருட்டைச் செய்தது பவித்ரன்தான் என்ற முடிவுக்கு போலீஸ்காரர்கள் வந்து விட்டார்கள். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லையே!
தற்போது சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் கோபிநாத குரிக்கள் ஒவ்வொரு சைக்கிள் கடையாக ஏறி இறங்கி விசாரணை செய்தார். எந்த இடத்திலும் யாரும் வாடகைக்கு சைக்கிள் எடுத்ததாக தகவல் இல்லை. சில கடைக்காரர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் குரிக்களுக்கு சந்தேகம் இருக்கவே செய்தது. அவர்களில் சிலர் எட்டு அல்லது ஒன்பது சைக்கிள்களைச் சொந்தத்தில் வைத்திருந்தனர். பவித்ரன் ஏதாவது செய்து விடுவானோ என்ற மனபயம் காரணமாகக்கூட அவர்கள் உண்மையைச் சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று அவர் சந்தேகப்பட்டார். தான் சந்தேகப்படும் கடைகள் இருக்கும் பகுதிகளில் அதற்கென ஆட்களை நிறுத்திவிட்டு நகரத்தில் இருக்கும் பாத்திரக்கடைகளை நோக்கி குரிக்கள் போனார். பழைய பொருட்களை விலைக்கு வாங்கக்கூடிய சில பாத்திரக்கடைக்காரர்கள் நகரத்திலும் மார்க்கெட்டிலும் இருக்கும் விஷயம் போலீஸ்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் கையில் பாத்திரங்கள் மட்டும் கிடைத்தால், அதற்குப் பிறகு அதைப்பற்றி கேட்கவே வேண்டாம்.
சப்-இன்ஸ்பெக்டர் குரிக்களையும் அவருடன் வந்த போலீஸ்காரர்களையும் பார்த்து பயந்து நடுங்கிய கடைக்காரர்கள் தங்களின் கடைகளையும் அதற்குள் இருக்கும் அறைகளையும் தாராளமாகத் திறந்து காட்டினார்கள். இது ஒரு புறமிருக்க, மாமச்சன் தனிப்பட்ட முறையில் பின்னால் நின்றவாறு நீண்ட நேரம் கடைக்குள் சோதனை நடத்திப் பார்த்தார். ஆனால், திருட்டுப் போன பொருட்கள் அங்கிருப்பதற்கான அடையாளமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். திருடன் பவித்ரனைப் பார்த்தே எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன என்று அங்கிருந்த கடைக்காரர்கள் ஒவ்வொருவரும் சத்தியம் பண்ணி சொன்னார்கள். திருடிய பொருட்களுடன் தங்கள் கடைகளுக்கு வருவதற்கு பொதுவாகவே அவனுக்கு பயம் என்றார்கள் அவர்கள். முன்பு ஒன்றிரண்டு தடவைகள் திருடிய பொருட்களுடன் பவித்ரன் அங்கு வந்த நேரங்களில், அவனைப் பற்றி போலீஸுக்குத் தகவல் தந்ததே தாங்கள்தான் என்றார்கள் அவர்கள்.
இப்படி அவர்கள் சொன்னாலும், அவர்களை போலீஸ் முழுமையாக நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை.
அதே நேரத்தில், இந்தப் பகுதியில் இதற்கு மேலும் சுற்றித்திரிவதால் எந்தவித பிரயோஜனமும் இருக்கப் போவதில்லை என்பதை இருபத்து ஏழு வருடங்களாக காவல் துறையில் பணியாற்றி வரும் குரிக்கள் நன்கு அறிந்தே இருந்தார்.
மாமச்சனிடமிருந்து கிடைக்க வேண்டிய லஞ்சப்பணம் கைக்கு வந்ததும், குரிக்களும் பவித்ரனைத் தேட வேண்டிய வேலையை விட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
மாமச்சனுக்குச் சொந்தமான மில்லிற்குள் சாக்குகளுக்கப் பின்னால் மறைந்து உட்கார்ந்து கொண்டு மதுவை அருந்திக் கொண்டிருந்த குரிக்கள் சொன்னார்: "மாமச்சன், தேவையில்லாம ஏன் கவலைப்படுறீங்க? பவித்ரனை நாங்க பார்த்துக்குறோம். இன்னைக்கு இல்லேன்னாலும் நாளைக்கு அவன் இந்த ஊருக்குள்ள வந்துதான் ஆகணும். என்ன, நான் சொல்றது சரிதானா?"
"நிச்சயமா..."- மாமச்சன் கண்களில் நீர்வழிய, கைகளால் தொழுதவாறு சொன்னார்.
மாமச்சனின் முகத்தைப் பார்த்து குரிக்களுடன் நின்றிருந்த ஒரு போலீஸ்காரன் அவரைச் சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கி விட்டான். அவன் சொன்னான்: "நீங்க ஏன் வீணா கவலைப்படணும்? பவித்ரன் வர்றதா இருந்தா, நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவான். திருடனா இருந்தாலும், நேர்மையான ஆளு அவன்!"
2
அப்படியென்றால் திருடன் பவித்ரனுக்கு என்னதான் நேர்ந்தது?
குரிக்களும் மற்ற போலீஸ்காரர்களும் எங்கெல்லாம் தன்னைப் பற்றி விசாரிப்பார்கள் என்பதைப் பற்றி அவர்களை விட அவனுக்கு நன்றாகத் தெரியுமே! அதனால் அவர்கள் போகக்கூடிய எந்த இடத்திற்கும் அவன் போகவில்லை.
பொழுது புலரும் நேரத்தில் ஆரம்பித்த சருவம், கிண்டி, பானை ஆகியவை சைக்கிளுக்குப் பின் பக்கத்தில் இருந்து ஓசை எழுப்பிக் கொண்டிருந்த விஷயம் ஒரு முடிவுக்கு வந்தது. அன்று மதிய நேரம் தாண்டிய பிறகுதான்.
தனக்குப் பின்னால் போலீஸ்காரர்கள் விரட்டிக் கொண்டு வருகிறார்கள் என்பது மாதிரி தான் ஏறிவந்த சைக்கிளை படுவேகமாக மிதித்தான் பவித்ரன். இடையில் சிறுநீர் கழிப்பதற்காக கொஞ்சம் சைக்கிளை நிறுத்தினான், அவ்வளவுதான். அதற்குமேல் சைக்கிளை அவன் நிறுத்தவேயில்லை.
படுவேகமாக சைக்கிளை ஓட்டிய அவன், வெகு தூரத்தில் இருந்த மார்க்கெட்டை அடைந்தான்.
இருந்தாலும், மார்க்கெட்டை அடைந்துவிட்டோம் என்பது மட்டும் பவித்ரனைப் பொறுத்தவரை மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு விஷயமாக இருக்கவில்லை. மார்க்கெட்டை விட்டு எப்படி திரும்பப் போகிறோம் என்பது தெரிந்தால்தானே மார்க்கெட்டை அடைந்தது சந்தோஷமான ஒரு விஷயமாக இருக்க முடியும்?