Lekha Books

A+ A A-

கள்ளன் பவித்ரன் - Page 6

Kallan Pavithran

அது எங்கே இருக்குன்னு நீயே தேடி எடு. கெடைக்கலையின்னா என்கிட்ட வந்து சொல்லு. இதை மாதிரி வேற ரெண்டு கொடவுனுகளும் இருக்கு. எங்கே அந்தப் பாத்திரங்கள் கொண்டு போகப்பட்டிருக்குன்ற விஷயம் கைமளுக்கு மட்டும்தான் தெரியும்."

அவரின் குரல் அங்கிருந்த உலோகப் பாத்திரங்கள் மேல் மோதி எதிரொலித்தது.

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு முன்பே பவித்ரன் யாருமில்லாத ஒரு தனி மனிதனாக ஆகியிருந்தான்- அதுவும் இதற்கு முன்பு சிறிது கூட அறிமுகமே ஆகியிராத சில பாத்திரங்களின் உலகத்தில்.

4

பாத்திரங்களுக்கு மத்தியில் தான் சிக்கிக் கொண்டதன் அதிர்ச்சி மாறியபோது, பவித்ரனின் அறிவு இன்னொரு குறுக்கு வழியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. ஆனால்,  அவன் அதை உடனுக்குடன் செயல்படுத்தவும் தொடங்கினான்.

அவன் மனதில் தோன்றியது வேறொன்றுமில்லை. அங்கிருந்த பாத்திரங்களில் சிலவற்றைத் திருட வேண்டும் என்ற எண்ணம் அவனுடைய மூளையில் உதித்தது. கண்ணில் கண்ட பாத்திரங்கள் அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஏதாவதொரு திருட்டுப்பாதை வழியாக ஓடி மறைய வேண்டும் என்று அவன் மனதிற்குள் திட்டம் போட்டான்.

என்னதான் நேர்மையானவனாகவும், உண்மையானவனாகவும் இருந்தாலும், உள்ளுக்குள் பவித்ரன் கரை கடந்த ஒரு திருடன் என்பதுதானே உண்மை!

மாமச்சனின் பாத்திரங்கள் தன்னை எந்த அளவிற்கு கற்பனை பண்ணி பார்க்க முடியாத ஒரு மிகப் பெரிய உலகத்திற்குக் கொண்டு போய் சேர்த்த அதிர்ஷ்ட டிக்கெட்டுகளாக இருந்திருக்கின்றன என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தான் பவித்ரன்.

பிறகு, என்ன நினைத்தானோ, மனதில் தோன்றிய எண்ணத்தை அவன் அடக்கிக் கொண்டான். அப்படியொரு திருட்டுக் காரியத்தில் ஈடுபட்டால் தன்னுடைய உடம்பில் இருக்கும் ஒரு எலும்பு கூட மீதமிருக்காது என்ற விஷயம் அவன் இரண்டாவது முறையாக சிந்தித்துப் பார்த்தபோது, புரிய வந்தது. எண்பத்தேழாயிரம் ரூபாய் கையை விட்டுப்போன பிறகும், ஒரு பாறையைப் போல அசையாமல் உட்கார்ந்திருந்த வியாபாரியை நினைத்துப் பார்த்தான் பவித்ரன். அப்படிப்பட்ட ஒரு மனிதருக்கு பவித்ரனின் உயிர் என்பது பெரிய விஷயமா என்ன? அவனை எங்கிருந்தாலும் அந்த மனிதர் தேடிக் கண்டுபிடித்து ஒரு வழி பண்ணிவிட மாட்டாரா? நிச்சயமாக அப்படி செய்யக்கூடிய மனிதர்தான் அவர்.

தேவையில்லாத செயலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பதே புத்திசாலித்தனம் என்று பவித்ரன் அந்த நிமிடத்தில் நினைத்தான்.

அதே நேரத்தில் இந்த பாத்திரங்களின் குவியல்களுக்கு மத்தியில் தன்னுடைய கிண்டியையும், அண்டாவையும், குடத்தையும் தேடி எடுப்பது என்பது உண்மையிலேயே சாத்தியமில்லாத ஒரு காரியம்தான் என்பதையும் அவன் புரிந்து கொள்ளாமல் இல்லை. அவற்றை எங்கே தேடுவது? தேடினாலும், அவை கிடைக்கும் என்பது சந்தேகமே.

இருந்தாலும், தேடித்தான் பார்ப்போமே என்றெண்ணிய பவித்ரன் அந்தப் பாத்திரங்களின் கூட்டத்திற்கு மத்தியில் சில பாத்திரங்களை எடுத்து அவற்றைத் தட்டிப் பார்ப்பதும், தடவிப்பார்ப்பதுமாய் இருந்தான்.

தூக்கமுடியாத அளவிற்கு கனமாக இருக்கும் பெரிய பாத்திரங்கள், சின்னச் சின்ன பாத்திரங்கள், செம்பு பாத்திரங்கள், பழைய கோவில்களிலோ வேறெங்கோ இருந்திருக்கும் என்று எண்ணக்கூடிய அலங்கார வேலைப்பாடுகளமைந்த கலைச்சின்னங்கள், தூண்களின் துண்டுகள், சிலைகள், பாசி பிடித்த சிலம்புகள், பித்தளையால் ஆன கைப்பிடிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் துருப்பிடித்த வாட்கள், குத்துவிளக்குகள், வடக்கன்பாட்டு வீரர்கள் கையில் கொண்டு செல்லும் சில ஆயுதங்கள்... இப்படி பல்வேறு வகைப்பட்ட பொருட்களும் அங்கிருந்தன.

விதவிதமாக பாத்திரங்கள் அங்கு இருந்த விஷயம் பவித்ரனை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. அவன் அந்தப் பாத்திரங்களுக்கு மத்தியில் இருந்த இடைவெளி வழியாக பாத்திரங்கள் மேல் தட்டுத்தடுமாறியவாறு நடந்தான்.

ஒன்றிரண்டு திருப்பங்களைத் தாண்டியவுடன், ஒரு உண்மை அவனுடைய மனதில் உளியைப் போல குடைய ஆரம்பித்தது. இன்னொரு ஆளின் உதவி இல்லாமல், தன்னால் தான் வந்த பாதையைச் சரியாகக் கண்டுபிடித்து திரும்பிப் போக முடியுமா என்ற சந்தேகம் அவன் மனதில் எழுந்தது. பாத்திரங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் இந்த உலகத்தை விட்டு அவன் தப்பிக்க வேண்டுமென்றால், கட்டாயம் அவனுக்கு இன்னொருவரின் உதவி அவசியமே.

உண்ணியையோ இல்லாவிட்டால் அந்த ஆளைப் போல வேறு யாராவது வேலைக்காரர்களோ தன்னுடைய கண்களில் அங்கு படாதது குறித்து ஒருவித பதைபதைப்பு அவனுக்கு உண்டானதென்னவோ உண்மை. கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடிவரும் அளவிற்கு அவர்களை அந்த வியாபாரி எங்கு மறைத்து வைத்திருக்கிறார் என்பதை அவன் ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தான். ஒருவேளை அவர்கள் எல்லோரும் இதைப்போல வேறொரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பார்களோ என்று அவன் சந்தேகப்பட்டான். வயதாகிப் போன கிழவர்கள் நிறைந்திருக்கும் அறையாக இருக்கும் அது.

எது எப்படியோ, தன்னை அந்தக் கிழவர்கள் இருக்கும் அறைக்குள் கொண்டு போய் விடாத ஒரே காரணத்திற்காக வியாபாரியை பவித்ரன் நன்றியுடன் நினைத்துப் பார்த்தான்.

பல்ப் வெளிச்சம் திடீரென்று சற்று குறைந்தது. சில நிமிடங்களில் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. அதாவது - சற்று அதிக பிரகாசத்துடன் அது ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அந்தப் பாத்திரங்களின் கூட்டத்திலிருந்து ஒரு பழைய உலோகத்தால் ஆன சிலையை பவித்ரன் தேடி எடுத்தான். ஒரு நீளமான கம்பை ஊன்றிக் கொண்டு செல்வதைப் போல் அந்தச் சிலையைக் கையில் வைத்துக் கொண்டு அவன் ஊன்றியபடி நடக்கலாம். தூசி, அழுக்கு எல்லாம் படிந்த ஒரு பெண்ணின் சிலை அது. அதன் முன்னோக்கி நீட்டியிருந்த இரண்டு கைகளும் ஒடிந்து போய் காணப்பட்டன. மார்புப் பகுதியில் கரையான் புற்று இருந்தது.

பவித்ரன் அந்தச் சிலையைத் தரையில் தள்ளிவிட்டான். உலோகப் பாத்திரங்களுக்கு மத்தியில் அதன் ஓசை பயங்கரமாகக் கேட்டது. அதே நேரத்தில் அதற்குள்ளிருந்து ஒரு பாம்பு வேகமாக வெளியே வந்தது. ஒரு நிமிடம் பவித்ரனை நோக்கிப் படம் விரித்து நின்ற அந்தப் பாம்பு படுவேகமாக பாத்திரங்களுக்கு மத்தியில் ஓட ஆரம்பித்தது.

வியாபாரி சொன்னது பொய்யல்ல என்பதை பவித்ரன் புரிந்து கொண்டான். பாம்புகள் அங்கு சர்வ சாதாரணமாக ஓடிக் கொண்டிருக்கும் என்பதும் அவனுக்குத் தெரிந்தது. அதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு நடுக்கம் உண்டானது.

எப்படியாவது இந்த குகைக்குள் இருந்து தான் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் பவித்ரனுக்கு உண்டானது. கிண்டியும், குடமும், அண்டாவும் கிடைக்காமற் போனால் கூட பரவாயில்லை என்று அவன் நினைக்க ஆரம்பித்து விட்டான்.

மனதிற்குள் உயிரைப் பற்றிய பயம் எழ, பவித்ரன் உரத்த குரலில் அழைத்தான்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel