கள்ளன் பவித்ரன் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7138
தொலைபேசியைத் திரும்பவும் அதற்குரிய இடத்தில் வைக்கும் போது, வியாபாரியின் நடவடிக்கையில் லேசான தடுமாற்றம் தெரிந்தது.
"உண்ணி..."- அவர் உரத்த குரலில் அழைத்தார்.
உள்ளே பாத்திரங்களின் சத்தம் கேட்டது. தொடர்ந்து உண்ணி வெளியே வந்தான்.
உண்ணிக்கு வயது கிட்டத்தட்ட எழுபது தாண்டியிருக்கும். கிழவனின் வளைந்து போன உடம்பைப் பார்த்து தனக்குள் என்னவோ முணுமுணுத்தான் பவித்ரன்.
"மற்ற பணம் போச்சுடா"- வியாபாரி சொன்னார்.
அதைக்கேட்டு உண்ணியின் முகத்தில் ஒரு அதிர்ச்சி வெளிப்பட்டது.
"என்ன? தெற்கே இருந்து வரவேண்டிய பணமா?"- அந்த மனிதனின் குரலில் ஒருவித நடுக்கமும் பயமும் தெரிந்தன.
"இல்ல... தெற்கே நாம வச்சிருந்த பணம்..."
உண்ணி மேலும் கொஞ்சம் அதிகமாக அதிர்ச்சியடைந்து போய் நின்று கொண்டிருப்பதை பவித்ரனால் உணர முடிந்தது. அவன் தன் நெஞ்சின் மீது கையை வைத்துக் கொண்டிருந்தான். அந்த அதிர்ச்சியிலிருந்து சற்று நேரத்தில் மீண்டதைப் போல் அவன் கேட்டான்,
"வச்சிருந்த பணம் எவ்வளவு? எழுபத்தி ஏழா? எண்பத்தி ஏழா?"
"எண்பத்தி..."- வியாபாரி வெறுப்பு கலந்த குரலில் சொன்னார், "எல்லாம்தான் போயிருச்சே! அது எண்பத்தி ஏழாயிரமா இருந்தா என்ன, எழுபத்தி ஏழாயிரமா இருந்தா என்ன?"
அதற்கு உண்ணி எந்த பதிலும் கூறவில்லை. நீண்ட நேர மவுனத்திற்குப் பிறகு வியாபாரி தாழ்ந்த குரலில் தனக்கு மட்டும் கேட்கும் வண்ணம் சொன்னார். "ஹா... அதைப் பற்றி இப்போ நினைச்சுப் பார்த்து என்ன பிரயோஜனம்? என் பணம் போனது போனதுதான்..."
அதைக்கேட்டதும் உண்ணியின் கண்கள் கலங்கியதை பவித்ரன் பார்த்தான். அதற்குப் பிறகு அங்கு நின்று கொண்டிருக்க மனமில்லாததைப் போல கிழவன் உள்ளே சென்றான்.
வியாபாரி மீண்டும் பென்சிலை எடுத்தார்.
அந்த மனிதரைப் பற்றி பவித்ரனின் மனதிற்குள் ஒருவித மதிப்பு அப்போது உண்டாக ஆரம்பித்தது. எண்பத்தேழாயிரம் ரூபாயை இழந்துவிட்டு எந்த அளவிற்கு திடமான மனதுடன் அந்த மனிதர் உட்கார்ந்திருக்கிறார் என்பதை அவன் ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தான். 'சரியான திருடன்!' என்று தன் மனதிற்குள் அவன் கூறிக் கொள்ளவும் செய்தான்.
இந்தச் சூழ்நிலையில் தான் ஒரு கிண்டியையும் அண்டாவையும் சிறிய ஒரு குடத்தையும் பெரிதாக நினைத்துக் கொண்டு கேட்டது எவ்வளவு முட்டாள்தனமான ஒரு காரியம் என்பதை அவன் அப்போது நினைத்துப் பார்த்தான்.
"உன் சாமான்களுக்கு நானே ஒரு விலையைப் போட்டு தரவா? இல்லாட்டி சரியான எடையைப் பார்த்துட்டு அதற்குப் பிறகு விலையைப் பற்றி பேசலாமா?"- திடீரென்று வியாபாரி பவித்ரனைப் பார்த்துக் கேட்டார்.
"உங்களுக்குத் தெரியாததா?"- பவித்ரன் எதையும் யோசிப்பதற்கே நேரம் ஒதுக்காமல் சொன்னான், "உங்களுக்கு என்ன தரணும்னு தோணுதோ அதைக் கொடுங்க. நீங்க என்ன தந்தாலும் எனக்கு சந்தோஷம்தான்."
வியாபாரி பவித்ரனை தலையிலிருந்து கால்வரை ஒருமுறை அலசிப் பார்த்தார். அவரின் நெற்றியின் நரம்புகள் துடித்துக் கொண்டிருப்பதை பவித்ரன் கவனித்தான். தன்மீது அந்த மனிதனுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஈடுபாடு உண்டாகியிருப்பதை அவனால் உணர முடிந்தது. அப்படி நினைத்துப் பார்ப்பதே அவனுக்கொரு சுகமான விஷயமாக இருந்தது.
"ஏதாவது தந்து உன்னை அனுப்பி வைக்க எனக்கு மனசு வரல..."- வியாபாரி மீண்டும் பேசத் தொடங்கியபோது, அவரின் குரலில் ஒரு வித்தியாசம் இருப்பதை உணர்ந்தான் பவித்ரன். அன்போ, பாசமோ...ஏதோ ஒன்று- "ஆனா நான் அதைச் செய்ய மாட்டேன். நேர்மையில்லாத வியாபாரம் செய்ய என்னால முடியாது. எவ்வளவு எடைன்றதை தெரிஞ்சு, மார்க்கெட்ல அந்தப் பொருளுக்கு என்ன விலை இருக்கோ, அந்த விலையைக் கணக்குப் போட்டு நான் தர்றதுதான் முறை. திருடிட்டு வந்த பொருள்தானேன்னு நினைச்சுக்கிட்டு வேணும்னே பொருளோட விலையைக் குறைச்சுத் தர்ற நாய் புத்தி நமக்கு வேண்டாம். நான் சொல்றது புரியுதா?"
அதைக் கேட்டு திருடன் பவித்ரன் தலையை ஆட்டினான். இந்த அளவிற்கு உண்மையான, நேர்மையான ஒரு மனிதரை இதற்கு முன்பு அவன் வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் சந்தித்திராததால், இனிமேல் தான் எப்படி நடந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்பதைப் பற்றிய சிந்தனையில் அவன் ஆழ்ந்தான்.
3
பவித்ரன் அந்த இடத்திலேயே சிறிதும் அசையாமல் நின்றிருந்தான். தான் சொன்னதைக் கேட்டு, எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் அவன் நின்று கொண்டிருந்தான். தான் அதைக் கவனித்ததை அவன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவனிடம் அவ்வப்போது ஏதாவது ஒரு கேள்வியை வியாபாரி கேட்டுக் கொண்டிருந்தார். இப்படிப் பல கேள்விகளையும் கேட்டுக் கேட்டு பவித்ரனின் பெயர், ஊர், குடும்பம் - எல்லா விஷயங்களையும் அவர் தெரிந்து கொண்டார். எப்போதும் உண்மை பேசக்கூடிய மனிதன் என்பதால், வியாபாரி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் எந்தவிதமான மறைவுமில்லாமல் பதில் சொன்னான் பவித்ரன். தான் ஒரு திருடனாக இருந்தாலும், இந்த மாதிரி விஷயங்களைச் சொல்வதற்கு அவன் எப்போதும் தயங்கியதேயில்லை.
நேரம் கடக்கக் கடக்க, அந்த இடத்தைப் பற்றி ஒருவித நம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வும் அவன் மனதில் உண்டானாலும், தன்னுடைய பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போன கைமள் இதுவரை திரும்பி வரவேயில்லையே என்ற சிந்தனையும் அவன் மனதில் ஆட்சி செய்து கொண்டுதான் இருந்தது.
மாலை மயங்கத் தொடங்கிய நேரத்தில் வியாபாரி தன்னுடைய இருக்கையில் இலேசாக அசைந்தார். மெதுவாகத் தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து, கடைக்கு முன்னால் வந்து நின்று ஒரு நீண்ட பெருமூச்சை விட்டார். மார்க்கெட்டில் அப்போதும் கூட்டமிருந்தது. கடந்து போய்க் கொண்டிருப்பவர்களில் சிலர் வியாபாரியைப் பார்த்து மரியாதை நிமித்தமாக சலாமிட்டார்கள்.
வெளியே வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருப்பதை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த வியாபாரி தனக்குத்தானே கூறிக் கொள்வதைப் போல சொன்னார்.
"ம்... சாயங்காலம் ஆயிடுச்சே!"
பவித்ரன் அதற்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருநதான்.
"கைமளை இன்னும் காணோமே!"
அதற்கு பவித்ரன் எந்த பதிலும் சொல்லவில்லை.
"நீ வேணும்னா போயி காப்பியோ வேற எதாவதோ சாப்பிட்டு வாயேன். எவ்வளவு நேரமாத்தான் நட்சத்திரத்தைப் போல ஒரே இடத்துல அசையாம நின்னுக்கிட்டு இருப்பே!"
பவித்ரன் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. அவன் அமைதியாக இருப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டதைப் போல் வியாபாரி கேட்டார்.
"என்ன, கையில காசு எதுவும் இல்லையா?"
அதற்கும் பவித்ரன் எந்த பதிலும் கூறாமல் மௌனமாக நின்றிருந்தான். வியாபாரியின் முகத்தில் அன்பு கலந்த ஒரு கள்ளத்தனமான புன்சிரிப்பு தோன்றி மறைந்ததை அவன் பார்த்தான்.