
மாமச்சன் அதற்கு 'சரி' என்று தலையை ஆட்டினார்.
"சொல்லலைன்னா..."- பவித்ரன் முன்னெச்சரிக்கை விடுகிற மாதிரி சொன்னான்."உங்க குடலை நான் எடுப்பேன்." இதற்கு மேல் அங்கு இருந்தால் நடக்கக்கூடாதது ஏதாவது நடந்துவிடும் என்று அஞ்சிய மாமச்சன் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடி மறைந்தார். மூன்று பாத்திரங்களுக்கும் சேர்த்து நூறு ரூபாய் தனக்குக் கிடைத்தது எந்த வகையில் பார்த்தாலும், அது ஒரு நல்ல விலைதான் என்று அவர் மனதிற்குப் பட்டது.
பொதுவாக இந்த விஷயத்திற்காக தன்னுடைய மனைவியை அவன் கடுமையாக தண்டிக்க வேண்டும். இதைவிட சிறு குற்றங்களுக்குக்கூட அவளுக்குக் கடுமையான தண்டனைகளை அவன் தரவே செய்திருக்கிறான். ஆனால், என்ன காரணத்தினாலோ இந்த முறை அவன் அவளை ஒன்றுமே செய்யவில்லை. சிறிது நேரம் அமர்ந்து நகத்தைக் கடித்தவாறு என்னவோ சிந்தித்தான். அப்போது அவனுக்குப் பின்னால் வந்து நின்ற தமயந்தி வாய்விட்டு அழுதாள். எல்லாவற்றிற்கும் காரணம் பவித்ரன்தான் என்றாள் அவள்.
"நீங்க பாத்திரத்தைத் திருடினதுனாலதான் அவர் அதிகாரமா வீட்டுக்குள்ள நுழைஞ்சாரு..."- அவள் சொன்னாள்.
"புருஷன் திருடினதுக்கு பரிகாரம் செய்றதுக்காக, மனைவி அவன் கூட படுக்கணுமா என்ன?"
திரும்பத் திரும்ப அவன் மீது அவள் குற்றம் சுமத்தவே, அவளைப் பார்த்து கேட்டான்; "சரி... அப்படியே வச்சுக்குவோம். ஆனா, அந்த ஆளுக்கு என் இன்னொரு பொண்டாட்டிக்கிட்ட போகணும்னு தோணலியே! அப்போ, அதோட அர்த்தம் என்ன? நீ ஒரு தேவிடியா... அதுதானே அர்த்தம்?"
அவன் அப்படிச் சொன்னதும் உரத்த குரலில் அழ ஆரம்பித்துவிட்டாள் தமயந்தி. அவள் அழுவதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லாத பவித்ரன் வெளியே செல்வதற்காக, இருந்த இடத்தைவிட்டு எழுந்தான். அன்றைய உழைப்பிற்காக வியாபாரி தந்த பத்துரூபாய் நோட்டை எடுத்து சுருட்டி அவளின் திறந்த வாய் மீது எறிந்து விட்டு அவன் அந்த வீட்டை விட்டு வெளியேறினான். வாசலில் நின்றவாறு அவன் உரத்த குரலில் சொன்னான்.
"நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த உறவு இதோட முடிஞ்சிடுச்சு. இந்த ரூபாயை பிள்ளைங்க செலவுக்கு வைச்சுக்கோ."
அதற்கு தமயந்தி சொன்ன பதிலைக் கேட்பதற்கு அங்கு நிற்க விரும்பாத பவித்ரன் நேராக ஜானகியின் வீட்டை நோக்கி நடந்தான்.
அவனுடைய அமைதியான முதல் மனைவியான ஜானகி, பவித்ரன் அங்கு சென்றபோது தான் அரிசி விற்ற கணக்கை எழுதிக் கொண்டிருந்தாள். அவளின் நடத்தையைப் பற்றி பவித்ரனுக்கு துளி அளவு கூட சந்தேகமில்லை. கணவன் வேலைக்குச் செல்லும் போது, அவன் உயிர் அவனுடைய மனைவியின் கற்பு களங்கமடையாமல் இருப்பதில்தான் இருக்கிறது என்பதை அந்தத் திருடனின் மனைவி நன்றாகவே அறிந்திருந்தாள்.
அவள் பவித்ரனைப் பார்த்ததும் அழ ஆரம்பித்து விட்டாள். கண்ணீருடன் ஓடி கடவுள் படத்தின் முன்னால் போய் நின்று கற்பூரம் ஏற்றத் தொடங்கினாள்.
அதைப் பார்த்ததும் பவித்ரனின் கண்கள் கலங்கிவிட்டன.
சாதாரணமாக இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் தான் இதுவரை எங்கிருந்தேன் என்பதை பவித்ரன் தன் மனைவியிடம் கூறும் பழக்கமே இல்லை. அதனால் இந்த முறையும் அவன் வாய் திறக்கவே இல்லை. ஜானகியும் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவனிடம் கேட்கவில்லை.
குளித்து முடித்து சாப்பிட்ட பவித்ரன் நிம்மதியாக உறங்கினான். சாயங்காலம் ஆனதும் சைக்கிள் கடையைத் தேடிப் போனான்.
பவித்ரனைப் பார்த்ததும் சைக்கிள் கடைக்காரன் ஒரு மாதிரி ஆகிவிட்டான். அவனைத்தான் பார்க்கவே இல்லை என்று போலீஸ்காரர்களிடம் அவன் சொல்லியிருந்தான். போலீஸ்காரர்களின் கவனம் இப்போதும் தன் கடையைச் சுற்றி இருக்கவே செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்தான் அவன்.
"இருந்தாலும், பவித்ரா... நீ செய்தது சரியா?" என்றான் சைக்கிள் கடைக்காரன்.
அதற்கு எந்த பதிலும் கூறாமல் தன்னுடைய பாக்கெட்டிற்குள்ளிருந்து நூற்றைம்பது ரூபாயை எடுத்து கடைக்காரனிடம் கொடுத்தான் பவித்ரன். சைக்கிள் கடலுக்குள் மூழ்கிப் போய்விட்டதென்றும் அதற்கு நஷ்டஈடாக இந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டுமென்றும் சொன்னான் அவன்.
கடைக்காரன் பொதுவாக அதை நம்பவில்லை. தன்னுடைய சைக்கிள் காணாமல் போய் விட்டதென்பதையும், பவித்ரனுக்கு நூற்றைம்பது ரூபாய் வேறெங்கோயிருந்து கிடைத்திருக்கிறது என்பதையும் மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் பவித்ரன் தந்த பணத்தை வாங்கிக் கொண்டான். அதற்கு மேல் அவன் வேறு எதுவும் கேட்கவில்லை. பவித்ரன் உடனடியாக அந்த இடத்தைவிட்டு நீங்கினால் நன்றாக இருக்கும் என்ற ஒரே சிந்தனைதான் அப்போது அவனுடைய மனதில் இருந்தது.
இப்படித்தான் பவித்ரன் பாத்திரங்கள் திருடிய சம்பவமும் அவனின் வேறுபல திருட்டு சம்பவங்களில் ஒன்றாக ஆகிப் போனது. மாமச்சன் இது பற்றி மேலும் எதுவும் வற்புறுத்தாமல் இருக்கவே, போலீஸ்காரர்களும் இந்த விஷயத்தை அதற்கு மேல் குடைந்து கொண்டிருக்கவில்லை. ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகு பவித்ரனே ஹெட் கான்ஸ்டபிளைப் பார்த்து விஷயத்தைச் சொன்னான்.
பவித்ரனுக்கு இந்த சம்பவத்தால் ஒரு லாபம் கிடைக்கவே செய்தது என்று அவனுடைய எதிரிகள் கூட சொன்னார்கள். இதன் மூலம் தமயந்தியை அவனால் தலை முழுக முடிந்தது. அதோடு அவளுடைய மூன்று குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் அவனுக்கு இல்லாமற்போனது.
மாமச்சனின் நிலைமையும் இப்போதும் மிகவும் மோசமடையத் தொடங்கயிது. அவருடைய மில்லுக்குத் தனியாக நெல் அரைக்கப் போக பெண்கள் உண்மையாகவே பயந்தார்கள்.
'அவர், மில்லுக்கு நெல் அரைக்க இனிமேல் நாம போகக்கூடாது' என்று பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
தமயந்தி தன்னை விட்டு நீங்கியது நிச்சயமாக தனக்கு ஒரு நல்ல விஷயமே என்று பவித்ரனும் நினைத்தான். இந்தச் சம்பவத்தின் மூலம் தனக்கு ஐம்பது ரூபாய் கிடைத்தது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தச் சம்பவத்தால் தனக்கு இருந்த சுமை எவ்வளவு தூரம் குறைந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கே ஒருவிதத்தில் மகிழ்ச்சியாக இருந்தது.
"இங்கே பாருங்க..."- கள்ளு குடித்துக் கொண்டிருக்கும் போது, பவித்ரன் எல்லோரையும் பார்த்துச் சொன்னான்."அந்தத் தேவிடியா போனது என்னோட நல்ல நேரம்னுதான் நான் சொல்லுவேன்..."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook