கள்ளன் பவித்ரன் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7143
ஒருவேளை ஏதாவது புதையல் அவன் கையில் கிடைத்திருக்குமோ என்று அவள் நினைத்தாள். அவள் இந்த விஷயத்தை வேறு யாரிடமும் சொல்லவில்லை. அவள் சொல்லாமலே மற்றவர்கள் இதே விஷயத்தை தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எது எப்படியோ ஜானகி தன்னுடைய அரிசி வியாபாரத்தை சிறிதும் நிறுத்தவில்லை. தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் தேவைப்படுவதை முடிந்தவரை தானே சம்பாதித்துக் கொள்வதுதான் நல்லது என்று அவள் முழுமையாக நம்பினாள்.
தொழில் சம்பந்தமாக ஏதோ வெளியே கூற முடியாத சில பிரச்சினைகளில் பவித்ரன் உழன்று கொண்டு உறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான் என்று ஜானகி நினைத்தாள். ஆனால், பவித்ரனின் மனதிற்குள் அவனைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது தொழில்ரீதியான பிரச்சினைகள் இல்லை.
அவனுடைய மனதில் வேறொரு அமைதியைக் குலைக்கக்கூடிய சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.
தமயந்தியின் தங்கை பாமா என்றழைக்கப்படும் பாமினியைப் பற்றிய எண்ணம்தான் அப்போது பவித்ரனின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. மாமச்சனின் கண்கள் பாமாவின் மீது விழுந்திருக்கக் கூடாதே என்று பயந்தான் பவித்ரன்.
திருடன் பவித்ரன் தமயந்தியை விட்டுப் பிரிவதற்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்புதான் பாமினி பூப்பெய்தினாள். அதற்குப் பிறகு அவளுடைய உடம்பில் உண்டான வளர்ச்சி நல்ல உரம் போட்டு வளர்த்த செடியைப் போல படுவேகத்தில் இருந்தது என்பதை பவித்ரன் நினைத்துப் பார்த்தான். தமயந்திக்கே சவால் விடுகிற அளவிற்கு அவளின் அழகு பலமடங்கு கூடுதலாக இருக்கும் என்று அப்போதே பவித்ரன் கணக்குப் போட்டான். அவளால் ஏதாவது நடக்கக்கூடாதது நடந்துவிடுமோ என்று உண்மையாகவே பயந்தான் பவித்ரன்.
சுருக்கமாகச் சொல்லப்போனால் மாமச்சன் துணியைத் தலையில் கட்டியிருந்ததும், கையிலிருந்த டார்ச் விளக்கும், பாமினியின் உருவமும் எல்லாம் சேர்ந்து பவித்ரனைத் தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் பாமினி வளர்ந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் தமயந்தியை விட்டுத் தான் பிரிந்து வந்தது கூட முட்டாள்தனமான ஒரு காரியம்தானோ என்று கூட அவன் சிந்திக்க ஆரம்பித்து விட்டான். ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு மனப்போராட்டம்! பொழுது புலரும் நேரத்தில் பவித்ரன் தனக்குள் ஒரு முடிவெடுத்தான். பிரச்சினைகள் இல்லாமல் அவர்களை நிம்மதியாக வாழ விடக்கூடாது என்ற முடிவே அது.
8
தூரத்திலிருக்கும் நகரத்திலிருந்து வியாபாரி கொடுத்த முந்நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு ஒரு முட்டாளைப் போல ஊர் திரும்பிய பவித்ரன் எப்படி ஒரு வசதியான மனிதனாக ஆனான் என்பது யாருக்குமே தெரியாத ஒரு ரகசிய விஷயமாயிற்றே! இந்த ரகசியம் ஜானகிக்குக் கூட தெரியாது என்பதுதான் உண்மை.
இந்த ரகசியம் ஒரு புறம் அப்படியே இருக்க, திருடன் பவித்ரன் திருட்டு வேலைகளை முழுமையாக விட்டுவிட்டு, நாளடைவில் ஊரில் ஒரு பெரிய மனிதனாக மாறினான் என்பதுதான் எல்லோரும் ஆச்சரியப்பட்டு பார்த்த ஒரு விஷயம். யாருக்கும் தெரியாமல் ஜானகியின் பெயருக்கு பவித்ரன் ஐந்து ஏக்கர் நிலமும், பதினேழு செண்ட் வீட்டு மனையும் வாங்கிய நாளன்று ஜானகி கூட அதிர்ந்து போய்த்தான் நின்றாள். லட்சம் வீடு திட்டத்தில் வீடு வாங்கி வசித்துக் கொண்டிருந்த யாருக்குமே ஒரு வார்த்தைகூட சொல்லாமல்தான் பவித்ரன் அந்தக் காரியத்தைச் செய்தான். முன்கூட்டியே விஷயத்தைச் சொன்னால், அவனை ஒரு மாதிரி அவர்கள் பார்ப்பார்கள். பீடி பிடிப்பதற்குப் பதிலாக சிகரெட் பிடிப்பதையே மிகப்பெரிய விஷயமாக அவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு திரிந்தார்கள். புதிதாக நிலமும், இடமும் வாங்கிய விஷயம் தெரிந்தால், அவ்வளவுதான்- சொல்லவே வேண்டாம்.
ஒருநாள் ஜானகியே தனித்திருக்கும் வேளையில் அவனைப் பார்த்து கேட்டுவிட்டாள். இவ்வளவு பணம் எங்கேயிருந்து அவனுக்குக் கிடைத்தது என்று. அதற்கு "போடி முட்டாப் பய மகளே...!" என்று சிரித்துக் கொண்டே சொல்லி சமாளித்து விட்டான் பவித்ரன். அமைதியாகப் போய்க் கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் எதற்கு தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு குழப்பங்களை உண்டாக்க வேண்டும் என்று எண்ணிய ஜானகி அதற்குமேல் எதுவும் கேட்காமல் இருந்து விட்டாள். அதற்குப் பிறகு இந்த விஷயத்தைப் பற்றி அவள் ஒருநாளும் அவனிடம் கேள்விகள் கேட்டதே இல்லை.
ஜானகியின் எல்லா நடவடிக்கைகளும் பவித்ரனுக்கு மிகவும் பிடித்திருந்தன. ஒரே ஒரு விஷயம் தான் பிடிக்கவில்லை.
இப்போதும் தன்னுடைய மனைவி அரிசி வியாபாரம் பண்ணுவதில் அவனுக்குச் சிறிதுகூட விருப்பமில்லை. மற்ற எந்த விஷயத்தைச் சொன்னாலும், தான் கூறியபடி நடக்கத் தயாராக இருக்கும் ஜானகி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பிடிவாதமாக தான் செய்து கொண்டிருப்பதே சரி என்று நின்று கொண்டிருக்கிறாள்.
தன் கணவன் வேண்டாம் என்று சொன்னான் என்பதற்காக ஒரே ஒரு காரியம் மட்டும் அவள் செய்தாள். மாமச்சனிடம் நெல் அரைப்பதற்காகப் போவதை அவள் நிறுத்திக் கொண்டாள். ஏதாவது அரைக்க வேண்டுமென்றால் வேறு யாரையாவது அவள் மில்லுக்கு அனுப்பி வைப்பாள்- ஆனால், மனமே இல்லாமல் காரணம் யார் போனாலும் ஜானகிக்கு முழுமையாக நம்பிக்கை இல்லாததே! மில்லில் இருந்து திரும்பக் கொண்டு வரப்படும் அரிசியில் விரலை ஓட்டியவாறு தன் கணவன் காதுகளில் விழும் வண்ணம் அவள் கூறுவாள்; "யார் யாரையோ அனுப்புறதைவிட நான் போறதுதான் சரியா இருக்கும்."
அவள் இப்படி திரும்பத் திரும்ப பல நாட்கள் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்ட பவித்ரன் ஒருநாள் அவளைப் பார்த்து சொன்னான்; "நீ அங்க போகவே கூடாது. எனக்கு அதுல விருப்பமில்ல. அதுவும் அந்த நாசமாப் போன மனிதனோட மில்லுக்கு..."
"அதைவிட்டா இங்கே வேற மில்லு இருக்கா என்ன? நீங்க என்ன சொந்தத்துல மில்லா வச்சிருக்கீங்க, நான் கொடுத்து அனுப்பாம இருக்குறதுக்கு?"- ஜானகியும் அந்த விஷயத்தை விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.
இருவருக்கும் இந்த ஒரு விஷயத்தில் பயங்கர வாக்குவாதம் உண்டானது. யாரோ ஒரு கீழ்த்தரமான குணத்தைக் கொண்ட ஒரு பெண் காரணமாக ஆண்களுக்கு இடையில் உண்டான சண்டை இப்போது தன் தொழிலுக்கே தடையாக வந்து நிற்கிறதே என்ற உண்மையை அவள் தெளிவாக எடுத்துரைத்தாள். பவித்ரனும் அதை ஓரளவு புரிந்து கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவர்களுக்கிடையே நடைபெற்ற அந்த உரையாடல் பவித்ரனை ஒரு புதிய முடிவு எடுக்க வைத்தது. அவசரத்தில் எடுத்த முடிவு என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த முடிவால் நிறைய பலன்கள் இருந்தன என்பதென்னவோ உண்மை. பவித்ரனை ஒரு திருடன் என்ற எண்ணமில்லாமல், அவனை வேறு மாதிரி பார்க்க வைத்த சம்பவம் கூட அதுதான்.