கள்ளன் பவித்ரன் - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7146
10
அன்று இரவு பவித்ரனைப் பொறுத்தவரை பலவித கஷ்டங்கள் நிறைந்த ஒரு இரவாக இருந்தது.
தேவையில்லாமல் குரைத்துக் கொண்டும் மோப்பம் பிடித்துக் கொண்டும் இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருந்த தெருநாய்களும், தெரு சுற்றிப் பையன்களும் பவித்ரனை ஒரு இடத்தில் நிம்மதியாக உட்காரவோ, படுக்கவோ விட்டால்தானே! பொறுமை ஒரு எல்லையை மீறிப் போனவுடன், அதை இழந்த பவித்ரன் கையிலிருந்த பொம்மையைக் கோபத்துடன் வீசியெறிந்தான்.
அந்த பொம்மையை வாய்கிழிந்த ஒரு பையன் எடுத்துக் கொண்டு ஓடினான். முதலில் அந்த பொம்மையை அவனே வைத்துக் கொள்ளட்டும் என்றெண்ணிய பவித்ரன், திடீரென்று உண்டான ஒரு உள்மன உந்துதலால் தாக்கப்பட்டு அதைப் பறிப்பதற்காக வேகமாக அந்தப் பையனை விரட்டிக் கொண்டு ஓடினான். பவித்ரன் தன்னை நெருங்கி வந்ததும் அந்தப் பையன் பொம்மையை அருகிலிருந்த ஓடையில் வீசி எறிந்துவிட்டு படுவேகமாக ஓட ஆரம்பித்தான்.
பொழுது புலரும் நேரத்தில் பவித்ரன் அந்தப் பொம்மையை எடுத்துக் கொண்டான். தெரு நாய்களும் ஊர் சுற்றிப் பையன்களும் களைத்துப் போய் உறங்க ஆரம்பித்திருக்கும் நேரத்தில், பவித்ரனும் இலேசாக உறங்கத் தொடங்கினான். சுற்றப்பட்ட துணி பொம்மையை தலையணையாக வைத்துக் கொண்டு ஒரு கடைத் திண்ணையில் அவன் சாய்ந்து படுத்துக் கிடந்தான். வீசிக் கொண்டிருந்த குளிர் காற்றுடன் சேர்ந்து மெதுவாக விழுந்து கொண்டிருந்த சிறு சிறு மழைத்துளிகள் சிறிது நேரத்தில் சாரல் மழையாக உருவெடுத்தது.
பவித்ரனுக்குத் தன்னுடைய நிலைமையை நினைத்து மனதிற்குள் கவலை உண்டாக ஆரம்பித்தது. வியாபாரியின் கடையைத் திறந்து உள்ளே நுழைந்து தான் செய்த காரியத்தின் பின் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், நிச்சயம் தான் அதைச் செய்திருக்கக் கூடாது என்று அப்போது அவன் நினைத்தான். தொடர்ந்து தான் பெரிதாக அப்படியொன்றையும் திருடிக் கொண்டு வரவில்லையே என்று தனக்குத்தானே சமாதானமும் கூறிக் கொண்டான். கையும் மார்பகமும் ஒடிந்து துருப்பிடித்திருக்கும் இந்த பாம்புப்புற்று காணாமல் போனதால் வியாபாரிக்கு பெரிய அளவில் நஷ்டமொன்றும் உண்டாகிவிட வில்லை என்று தன் மனதிற்குள் அவன் அப்போது நினைத்துக் கொண்டான்.
புதிதாக தான் பெய்த சிறுநீரை அவன் மறக்க முயற்சித்தான். இனிமேல் இந்தத் தவறை தான் செய்யக்கூடாது என்று அவன் முடிவெடுத்தான். அதற்குப் பிறகுதான் அவனால் நிம்மதியாக உறங்க முடிந்தது.
பொழுது விடிந்தபோதுதான் தன்னுடைய கையில் ஒரு தேனீர் குடிப்பதற்கான காசு கூட இல்லை என்ற விஷயமே பவித்ரனுக்குத் தெரியவந்தது. ஜானகியிடமிருந்து வாங்கிய இரண்டு ரூபாய்களும் தேநீர் குடித்த வகையிலும், பஸ்கூலி கொடுத்த வகையிலும் முற்றிலுமாகத் தீர்ந்து போயிருந்தன.
திரும்பவும் ஊருக்குப் போகும் விஷயத்தில் அப்படியொன்றும் சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை பவித்ரனுக்கு. எப்படியாவது தான் ஊர் போய் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஏதாவது லாரிக்காரர்களிடமோ ஆள் இல்லாமல் காலியாகப் போகும் பஸ்காரர்களிடமோ தன் நிலைமையைச் சொன்னால் அவர்கள் கொண்டு போய் ஊரில் சேர்த்து விடுவார்கள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் காலையில் தூக்கம் கலைந்து எழுந்தவுடன் ஒரு தேநீர் குடிப்பது என்பது அவனின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. எப்படியும் ஒரு தேநீர் குடிப்பதற்கான வழி வகை செய்தே ஆக வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான். அதற்காக, தேவைப்படும் பட்சம் ஒரு சிறு திருட்டு வேலை செய்வதற்குக்கூட அவன் தயாராக இருந்தான்.
ஆனால், எங்கு திருடுவது? தனக்கு இதற்கு முன்பு அறிமுகமே ஆகியிராத நகரம். ஒரு நிழல் கூட எங்குமில்லாமல் சுள்ளென்று எரிந்து கொண்டிருக்கும் காலை நேரம்.
மனதில் எந்தவித இலக்குமில்லாமல் பவித்ரன் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருந்தான். நடந்து நடந்து அவனுக்கு களைப்பு வந்துவிட்டது. தொண்டைக் குழியில் ஆவி கிளம்பி மேலே வருவதைப் போலவும், அங்கு ஒருவகை எரிச்சல் உண்டாவதையும் அவன் உணர்ந்தான். தனக்குப் பழக்கமான ஒரு ஆளாவது அங்கு தன் கண்களில் படும் சூழ்நிலை உண்டாகாதா என்று அவன் கண்கள் எல்லாப் பக்கங்களிலும் தேடின.
ஆனால், அவனை முழுமையாக ஏமாற்றமடையச் செய்தது அங்கு நிலவிய சூழ்நிலை. திருடுவதற்கோ, பழகுவதற்கோ எதற்குமே சரியாக வராமலிருந்த அந்த நகரத்தின் சூழ்நிலையை நினைத்து அவன் தன் மனதிற்குள் நொந்து கொண்டான்.
நேரம் செல்லச் செல்ல வெயில் அதிகரித்துக் கொண்டே இருந்தது. கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பவித்ரன் நடந்து கொண்டேயிருந்தான். ஒரு வேளை வியாபாரிக்கு தான் செய்த துரோகத்திற்கு கடவுள் தனக்கு அளித்த தண்டனை இதுவாக இருக்குமோ என்று கூட அவன் எண்ணினான்.
மிகவும் களைத்துப் போய் அதற்கு மேல் தன்னால் நடக்க முடியாது என்றொரு நிலை உண்டானபோது, பவித்ரன் ஒரு பாத்திரக் கடைக்கு முன்னால் போய் நின்றான்.
பழைய பாத்திரங்களை பழைய விலைக்கு வாங்குகிற ஒரு பழைய கடை அது. கடைக்காரர் கூட ஒரு பழைய மனிதர்தான். பெரிய ஒரு தராசின் முன்னால் அமர்ந்து, அதன் முள் இருக்குமிடத்தில் ஏதோ ஒரு திருட்டு வேலையை அவர் அப்போது செய்து கொண்டிருந்தார்.
சிறிது நேரம் அந்த ஆள் என்ன செய்கிறார் என்பதையே உற்று பார்த்துக் கொண்டிருந்த பவித்ரன் இலேசாகக் கனைத்தான்.
அதைக் கேட்டு கடைக்காரர் திரும்பிப் பார்த்தார். தன்னுடைய திருட்டுத்தனத்தை யாரோ தனக்குத் தெரியாமல் பார்த்துவிட்டார்கள் என்ற பதைபதைப்பு அவர் முகத்தில் தெரிந்தது.
"என்ன?"- கடைக்காரர் கோபத்துடன் கேட்டார்.
"ஒரு பழைய சாமானை விற்கணும்."
கண்களைச் சுருக்கி வைத்துக் கொண்டு கடைக்காரர் பவித்ரனையே சந்தேகக் கண்களுடன் பார்த்தார். பிறகு டிராயருக்குள் கையை விட்டு ஒரு பழைய மூக்குக் கண்ணாடியைத் தேடி எடுத்து அணிந்து கொண்டு அவர் பவித்ரனை நெருங்கி வந்தார்.
கையிடுக்கில் இருந்த துணிப் பொட்டலத்தை மேஜை மேல் வைத்த பவித்ரன் அதை மெதுவாக அவிழ்த்தான்.
கடைக்காரர் துணியால் கட்டியிருந்த பொருள் என்ன என்று ஆர்வத்துடன் பார்த்தார். "இதுதான் சாமானா?"- அவர் கேட்டார்.
அவரின் குரலில் கிண்டலோ வெறுப்போ அல்லது இரண்டுமோ கலந்திருப்பதை பவித்ரனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் கூறவில்லை.
"என்ன வேணும்?"
கடைக்காரரின் குரலில் ஒரு வகை அலட்சியம் இருப்பதை பவித்ரனால் புரிந்து கொள்ள முடிந்தது.
"ஏதாவது..."- பவித்ரன் சொன்னான்."நியாயமான விலை எதுவோ அதைக் கொடுங்க."
கடைக்காரர் ஒரு விரலால் சிலையை இப்படியும் அப்படியுமாய் உருட்டிப் பார்த்தார். தொடக்கூடாத அசிங்கமான விஷயமொன்றைத் தேவையில்லாமல் தொட்டுவிட்டதைப் போல் அவரின் முகத்திலும் விரலிலும் ஒருவகை வெறுப்பு தெரிந்தது. சிலையைத் தொட்ட விரலை தோளில் கிடந்த துணியில் அவர் துடைப்பதைப் பார்த்ததும் பவித்ரனுக்கு கோபம்தான் வந்தது.
"இதுக்கு என்ன விலை தர்றது?"- அவர் கேட்டார். "காப்பி குடிக்கிறதுக்கான காசு வேணும்னா தரலாம்."