கள்ளன் பவித்ரன் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7146
இடைவிடாமல் இது விஷயமாக விசாரித்துக் கொண்டிருந்தால், நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கவே செய்யும் என்று முழுமையாக நம்பினார் மாமச்சன். அப்படி அவர் நினைப்பதற்கு ஒரு காரணம் கூட இருந்தது. தன்னுடைய அண்டாவையும், கிண்டியையும், குடத்தையும் திருடிவிட்டு திரும்பி வந்த பிறகுதான் பவித்ரனின் வளர்ச்சியே ஆரம்பித்திருக்கிறது என்பதை உறுதியாக நம்பினார் மாமச்சன். அப்போதுதானே பவித்ரன் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக நூறு ரூபாய் நோட்டுக்களை சர்வ சாதாரணமாக பாக்கெட்டிற்குள்ளிருந்து எடுத்தான்!
எவ்வளவு கீழே போனாலும் பரவாயில்லை. மாமச்சன் உறுதியான ஒரு முடிவு எடுத்தார். அது - எப்படி பவித்ரன் பணக்காரனாக ஆனான் என்ற ரகசியத்தைக் கண்டு பிடிப்பதுதான்.
9
பவித்ரன் எப்படி பணக்காரனாக ஆனான் என்ற ரகசியத்தைக் கண்டுபிடிப்பதென்பது மாமச்சனுக்கு அவ்வளவு எளிதான ஒரு காரியமாக இருக்கவில்லை. காரணம்- அந்த ரகசியம் பவித்ரனுக்கு மட்டுமே தெரியக்கூடிய ஒன்று. அனுபவப்பட்ட ஒரு பழைய திருடன் என்ற முறையில் ரகசியத்தை ரகசியமாகவே எப்போதும் வைத்திருப்பதென்பது பவித்ரனுக்கு ஏற்கனவே நன்கு பழகிப்போன ஒன்றுதான்.
தான் பணக்காரனாக ஆனது கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நடைபெற்றது தான் என்றாலும், அது வெறுமனே அதிர்ஷ்டத்தின் காரணமாக மட்டுமே என்பதை பவித்ரன் நிச்சயமாக ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. தன்னுடைய புத்திசாலித்தனமும்,அனுபவமும் இவற்றையெல்லாம்விட தன்னிடமிருக்கும் நேர்மை குணமும் என எல்லாம் சேர்ந்துதான் தன்னை இப்படிப்பட்ட ஒரு நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றன என்பதை முழுமையாக நம்பினான் அவன்.
மாமச்சனின் பாத்திரங்களைத் திருடியதன் மூலம் பவித்ரனின் கையில் மீதமிருந்தது மொத்தமே ஐம்பது ரூபாய்கள்தானே! அந்தப் பணம் செலவழியும்வரை அவன் ஒரு சிறு திருட்டு காரியத்திற்குக் கூட போகவில்லை. அப்படி எதுவுமே செய்யாமலிருந்த நாட்களில் அவன் கள்ளு குடிக்கவில்லை. திருடியது மூலம் கிடைக்கும் பணத்தில் கள்ளு குடிக்கும் வழக்கம்தான் அவனுக்கு எப்போதும் கிடையாதே!
கள்ளு குடிக்காமலே இருந்ததால் உண்டான புத்தி தெளிவும், தமயந்தி தன்னை விட்டுப் போனதால் உண்டான மனமகிழ்ச்சியும் பவித்ரனைப் பல்வேறு விஷயங்களையும் சிந்திக்கச் செய்தன.
வியாபாரியும், வியாபாரியின் பாத்திரக்கடையும் அவனுடைய மனதில் பெரிய ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது. எந்த நேரத்திலும் அவன் அதே சிந்தனையிலேயே உழன்று கொண்டிருந்தான். எண்பத்தேழாயிரம் ரூபாய் கையைவிட்டு போன பிறகும் அந்த மனிதர் சிறிதுகூட சலனமில்லாமல் சிலையென அமர்ந்திருந்ததையும், பாத்திரங்களுக்கு மேலே சூரியனைப் போல பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த பல்பையும், சிலைக்குள்ளிருந்து வேகமாக பாய்ந்தோடிய பாம்பையும் இப்போது நினைத்துப் பார்த்தபோது அவனுக்குச் சிலிர்ப்புதான் உண்டானது. தன்னால் தாங்க முடியாத அளவிற்கு ஆச்சர்யம் தரும் அதிர்ச்சிகளாக இருந்தன அவை ஒவ்வொன்றும் வியாபாரியின் சிறிய பெட்டிக்குள்ளிருந்து சர் சர்ரென்று குடலைப் போல வெளியே வந்து கொண்டிருக்கும் நூறு ரூபாய் நோட்டுக்கள் பவித்ரனுக்குப் புதிய ஒரு உலகத்தைப் பற்றிய வாசலைத் திறந்து விட்டன.
அதற்குப் பிறகு பவித்ரன் தவமிருக்கும் ஒரு மனிதனைப் போல ஆகிவிட்டான். அந்த நாட்களில் அவன் மனைவி, குழந்தைகள் யாரிடமும் சரியாகப் பேசுவது கூட இல்லை.
தமயந்தியை விட்டு பிரிந்திருக்கும் காரணத்தால்தான் தன்னுடைய கணவன் யாரிடமும் ஒரு வார்த்தைகூட பேசாமல் மவுனமாக இருக்கிறான் என்று நினைத்தாள் ஜானகி. தன் கணவனைப் பார்க்கும்போது அவளுக்குப் பாவமாக இருந்தது.
கையிலிருந்த ஐம்பது ரூபாய் தீருவதற்கு சரியாக ஒரு வாரம் ஆனது. சாதாரணமாக கையிலிருக்கும் பணம் கிட்டத்தட்ட செலவாகி முடியும் கட்டத்தை நெருங்குகிற போதுதான் பவித்ரன் அடுத்து பணம் சம்பாதிப்பதற்கான வழியில் இறங்குவான். இந்த முறை அதற்கான ஆர்வமே அவனிடம் உண்டாகவில்லை. ஜானகியைப் பொறுத்தவரை அவள் ஒருபோதும் இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றி அவனிடம் கேட்பதுமில்லை. சொல்வதுமில்லை.
ஐம்பது ரூபாய் முற்றிலுமாகத் தீர்ந்ததும் ஒருநாள் மாலையில் தன் மனைவியின் கையிலிருந்து இரண்டு ரூபாயை வாங்கிக் கொண்டு எங்கு போகிறோம் என்றே தெரியாமல் வீட்டை விட்டு பவித்ரன் வெளியேறினான்.
தன் கணவன் மது அருந்துவதற்காகப் போயிருப்பான் என்று ஜானகி நினைத்தாள். இல்லாவிட்டால் ஏதாவதொரு சிறு திருட்டுச் செயலை முடிக்கக் கிளம்பியிருப்பான் என்றும் நினைத்தாள்.
ஆனால், பவித்ரன் இந்த இரண்டு விஷயங்களுக்குமே போகவில்லை. அவன் வெறுமனே கால்போனபடி நடந்து கொண்டிருந்தான்.
நடக்கும்போது, எங்கு போவது என்பதைப் பற்றிய ஒரு தெளிவான தீர்மானமும் அவனிடம் இல்லை என்பதே உண்மை. இருந்தாலும் நடக்க நடக்க அவனையும் மீறி ஒரு இலக்கு அவனுடைய மனதில் உதயமாகவே செய்தது.
அப்படியே நடந்தும், பஸ்ஸில் ஏறியும் நள்ளிரவு நேரம் தாண்டியபோது தூரத்திலிருந்த நகரத்தில் இருக்கும் வியாபாரியின் கடையின் முன்னால் போய் நின்றிருந்தான் திருடன் பவித்ரன்.
மார்க்கெட் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. தூரத்தில் காவலுக்கு இருந்த போலீஸ்காரர்களின் சத்தம் கேட்டபோது பதுங்கியும் தெருநாய்களைப் பார்த்தபோது கல்லை எறிந்தும் சிறிது நேரம் நடந்து சென்ற பிறகுதான் அவன் வியாபாரியின் கடையைக் கண்டுபிடித்தான்.
கடை அடைக்கப்பட்டிருந்தது. கடைக்கு முன்னால் தொங்கிக் கொண்டிருந்த பெரிய பூட்டைப் பார்த்ததும் பவித்ரனுக்குச் சிரிப்பு வந்தது. அதே வேகத்தில் அவனின் நெஞ்சு அடித்துக் கொண்டது. அந்தப் பூட்டையே பார்த்தவாறு அவன் நீண்டநேரம் அங்கேயே நின்றிருந்தான். அப்போது கூட அவனுடைய மனதில் எந்தவிதமான கெட்ட எண்ணங்களும் உண்டாகவில்லை. பூட்டிக் கிடப்பதாகத் தோற்றம் தந்த அந்த பூட்டப்படாத கதவிற்கருகில் நின்று கொண்டிருந்தபோது அவனுடைய மனதில் கவலைதான் நிறைந்திருந்தது. காரணம்- வியாபாரி அப்போது அங்கு இல்லையே என்ற மனக்குறை தான். வியாபாரி மட்டும் அப்போது அங்கு இருந்திருப்பாரேயானால், தன்னுடைய பாராட்டை அவரிடம் நேரடியாகக் கூறிவிட்டு, அந்த நிமிடமே அவன் திரும்பிச் சென்றிருப்பான். அவர் மேல் அவனுக்கு அப்படியொரு பிரியம் உண்டாகியிருந்தது. அளவே இல்லாத அபிமானம் வியாபாரி மீது அவனுக்கு ஏற்பட்டிருந்தது.
ஆனால், வியாபாரி அங்கு இல்லையே! திரும்பிப் போகலாம் என்று தீர்மானித்தான் பவித்ரன்.
திடீரென்று, கடையின் ரகசியக் கதவைத் திறந்து பார்த்தால் என்ன என்று அவன் நினைத்தான். அவனையும் மீறி அவனுடைய மனதில் அப்போது அப்படியொரு எண்ணம் உதித்தது. இப்போதும் அந்தக் கதவு அப்படியேதான் இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்த்தால் என்ன என்ற குழந்தைத்தனமான ஆசை அவனிடம் உண்டானது.