கள்ளன் பவித்ரன் - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7146
முதல்தடவை வந்தபோதே அந்தப் பலகைத் துண்டு இருக்கும் இடம் பவித்ரனின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருந்தது. திட்டம் போட்டு அப்படியொரு காரியம் நடக்கவில்லை. சாதாரணமாகவே அப்படிப் பதிந்து போய்விட்டது என்பதே உண்மை. இடது ஓரத்திலிருந்து இரண்டாவது பலகையின் கீழ் பகுதிதான் அது.
பவித்ரன் அந்த இடத்தைத் தன்னுடைய காலால் இலேசாகத் தட்டினான். முதல் தடவை தட்டியபோது, பலகை அசையவில்லை. பலமாக மீண்டுமொருமுறை காலால் தட்டியவுடன், பலகைத் துண்டு மெதுவாக அசைந்தது. உள்ளே எங்கோ இழுத்து கட்டப்பட்டிருந்த ஸ்பிரிங்குடன் அது ஆடியது.
பவித்ரன் அடியில் கையை விட்டு அந்த பலகைத் துண்டைத் தனியாக எடுத்தான். இப்போது கதவு திறந்திருந்தது. சுற்றிலும் ஒரு பார்வை கூட பார்க்காமல் அவன் வேகமாக கடைக்குள் நுழைந்தான். உள்ளே போனதும், மீண்டும் பலகையை அது முன்னாலிருந்த இடத்திலேயே வைத்தான்.
பீடியையும் தீப்பெட்டியையும் தவிர பவித்ரனிடம் அப்போது வேறு எந்தக் கருவியும் இல்லை. திருட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவன் அங்கு வரவில்லையே!
தீப்பெட்டியை உரசி அவன் ஸ்விட்ச் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தான். இருட்டில் பல்ப் 'மினுக் மினுக்'கென்று எரிந்தது. பவித்ரனின் இடத்தில் வேறு எந்த அறிவில்லாத திருடனிருந்தாலும், இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கமாட்டான். இந்த மாதிரியான செயல்கள்தான் மற்ற திருடர்களிடமிருந்து பவித்ரனை முழுமையாக வேறுபடுத்திக் காட்டுவன. பவித்ரன் ஒரு தீக்குச்சியை உரசி தரையை ஆராய்ச்சி செய்தான். இப்படியே நீண்ட நேரம் அந்த ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. எரிந்து முடிந்த தீக்குச்சிகளைக் கீழே போடாமல், அவை எல்லாவற்றையும் பத்திரமாக மடியில் வைத்துக் கொள்வதில் அவன் மிகவும் கவனமாக இருந்தான். வியாபாரி அமர்ந்திருக்கும் மேஜையைச் சுற்றியிருந்த தரைப்பகுதியை ஆராய்ந்தான். நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு, அவன் தேடிய விஷயம் அவன் கண்களில் பட்டது.
தூசியும், அழுக்கும் படிந்த தரையில் ஒரு துளி தண்ணீர் காய்ந்து போய் இருக்கும் அடையாளம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் பவித்ரனின் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டானது. அந்தத் தண்ணீர் துளி அடையாளமாக இருந்த இடத்திலிருந்து பல பக்கங்களிலும் அவன் ஆராய்ந்து பார்த்ததைத் தொடர்ந்து பாத்திரக்குவியல்கள் இருக்கும் இடத்திற்குப் போகும் வழி அவனுக்குத் தெரிய வந்தது. காய்ந்து போன துளிகள் வளைந்தும் நெளிந்தும் போகும் ஒரு பாதை அது.
உள்ளறையிலிருந்து பவித்ரனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு வியாபாரி அவனை வெளியே கொண்டு வந்தாரல்லவா? பாத்திரங்கள் நிறைந்திருக்கும் அந்த அறைக்குப் போகும் பாதை பவித்ரனுக்கு இன்னொரு முறை தெரியக்கூடாது என்ற மறைமுக எண்ணமும் வியாபாரியின் அந்தச் செயலுக்குப் பின்னால் மறைந்திருந்தது. அப்போதே புத்திசாலியான பவித்ரனால் அந்த உண்மையைப் புரிந்து கொள்ளவும் முடிந்தது. அதை மனதில் வைத்துக் கொண்டு பவித்ரன் என்ன செய்தான் தெரியுமா? தன்னுடைய கழுத்தில் வியாபாரி கையை வைத்த நிமிடத்திலிருந்து மேஜைக்கருகில் தான் வந்து நிற்கும் வரை பவித்ரன் தொடர்ந்து தரையில் விழும் வண்ணம் சிறுநீர் கழித்தான்.
சிறுநீர் தரையில் விழுந்து அது காய்ந்து போய் காணப்படும் அடையாளம் பின்னால் தனக்கு ஒரு வழிகாட்டியாகப் பயன்படும் என்றெல்லாம் சிறுநீர் கழிக்கும் நிமிடத்தில் நிச்சயமாக பவித்ரன் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால், அவனே கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அப்படி நிகழ்ச்சிகள் நடந்ததுதான் உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்.
சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு பவித்ரன் அந்த சிறுநீர் காட்டிய பாதை வழியே நடந்து சென்று பாத்திரங்கள் நிறைந்து கிடந்த உள்ளறையைக் கண்டுபிடித்தான். உள்ளே இருந்த அறையில் ஆள் என்று ஒருவர் கூட இல்லை. பவித்ரனின் நல்லநேரம் என்றுதான் சொல்ல வேண்டும். அங்கிருந்த ஒவ்வொரு பொருளும் அவன் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தன.
சிறுநீர் அடையாளம் தொடங்கும் இடத்துக்கு அருகில் இருந்தது. உள்ளே இருக்கும் பல்ப்பிற்கான ஸ்விட்ச். அதனால் பவித்ரனுக்கு எந்தவித கஷ்டமும் தோன்றவில்லை.
உலோக பாத்திரங்களின் குவியல் முன்பிருந்த மாதிரியே இருந்தது. அமைதியாகவும் எவ்வித ஆள் நடமாட்டமும் இல்லாமல் அங்கிருந்த பாத்திரக் குவியல் பவித்ரனை உணர்ச்சி வசப்பட செய்தது. அவனுடைய கண்களில் இனம்புரியாத ஒரு பிரகாசம் தெரிந்தது.
வியாபாரி அந்த இடத்தைத் தனக்குக் காட்டியது எவ்வளவு பெரிய தப்பு என்பதை அப்போது அவன் நினைத்தான். தன்னை முழுமையாக நம்பி ரகசிய வாசல் கதவு வரை தன்னிடம் சொன்ன வியாபாரியைத் தான் வஞ்சித்திருப்பதாக எண்ணியபோது, அவனுடைய மனதில் ஒரு நடுக்கம் உண்டானது. தன்னையும் மீறி இங்கிருந்து எந்தப் பொருளையும் திருடிக் கொண்டுபோய் விடக்கூடாதே என்று கடவுளிடமே வேண்டிக் கொண்டான்.
சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்த பவித்ரன் திரும்பிப் போவதற்கு முயன்றான். ஒரு கோவிலில் நின்று கொண்டிருக்கும் பக்தனின் மனநிலையில் அப்போது அவன் இருந்தான். திருட வேண்டும் என்ற எண்ணமோ இல்லாவிட்டால் அத்தகைய வேறு ஏதாவது கெட்ட சிந்தனையோ அவனுடைய மனதில் அந்த நிமிடத்தில் குடிகொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.
திரும்பிப் போக அவன் நினைத்தபோது அந்தப் பழைய பொம்மை பவித்ரனின் கண்களில் பட்டது. கைகளும், மார்புப் பகுதியும் ஒடிந்து போன அந்த பழமையான உலோக பொம்மை அவன் பாதையில் கிடந்தது.
காலால் இலேசாக உதைத்துப் பார்த்த பிறகுதான் அந்த பொம்மையைத் தொடுவதற்கான தைரியமே அவனுக்கு வந்தது. முன்பு பார்த்த மாதிரி ஏதாவது பாம்பு அதற்குள் மறைந்து இருக்கக்கூடாதே என்ற பயம்தான் காரணம்.
இருந்தாலும் இந்த முறை அவன் பயந்த மாதிரி அப்படி எதுவும் பொம்மைக்குள் இல்லை. துருப்பிடித்துக் காணப்பட்ட அந்தப் பழைய பொம்மையிடம் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈடுபாடு உண்டானது பவித்ரனுக்கு.
பாத்திரங்கள் மட்டுமே இருக்கும் இந்த தனித்துவமான உலகத்தின் ஞாபகத்திற்காக இருக்கட்டும் என்ற எண்ணத்துடன் அந்த பொம்மையைத் தன் கையில் எடுக்கத் தீர்மானித்தான் பவித்ரன்.
திரும்பிச் செல்லும்போது, மீண்டுமொருமுறை சிறுநீர் கழித்து தன்னுடைய பாதையை உறுதி செய்து கொள்ள பவித்ரன் மறக்கவில்லை. பொம்மையை ஒரு துணியில் சுற்றி கையில் வைத்துக் கொண்டு திரும்பிய பவித்ரனின் கண்கள் குற்ற உணர்ச்சி காரணமாக நனைந்தன.