கள்ளன் பவித்ரன் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7143
மாமச்சனின் தற்போதைய நடவடிக்கைகளை ஊர்மக்களால் எந்த விதத்திலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
எந்த விஷயத்திலும் வாக்களித்தபடி நடந்து கொள்ளும் மாமச்சன் தமயந்திக்குக் கொடுத்த வாக்குறுதியையும் தவறாமல் காப்பாற்றினார். ஒவ்வொரு வாரமும் தவறாமல் இரவு நேரத்தில் அவளை அவள் அவர் நேரில் போய்ப் பார்த்தார். அப்போது எதுவும் அவள் கையில் தராமல் அவர் திரும்பி வந்ததேயில்லை. அவர் தருவது பெரிதாக இல்லாமற்போனலுங்கூட, தமயந்தியைப் பொறுத்தவரை அவளுக்கு அது பெரிதுதான்.
தன்னைப் பார்த்து இந்த விஷயத்தைப் பற்றி கேள்விகள் கேட்ட தலைமுடி நரைத்த சில மனிதர்களிடம் மாமச்சன் சொன்னார், "எல்லாம் கடவுளோட விளையாட்டுன்றதைத் தவிர வேறு நான் என்னத்தை சொல்றது? என்னை வச்சு கடவுள் பல காரியங்களையும் செய்ய வைக்கிறாரு. நான் என்ன செய்ய முடியும்?"
தமயந்தி மாமச்சனின் தலைமீது ஏறி உட்கார்ந்திருக்கிறாள் என்று பலரும் சொன்னபோது, திருடன் பவித்ரன் உண்மையாகவே அதை நம்பவில்லை. மாமச்சன் அப்படியெல்லாம் நடக்கக்கூடிய ஒரு மனிதரில்லை என்று அவன் நினைத்ததே அதற்குக் காரணம்.
ஒரு நாள் பவித்ரன் மாமச்சனை நேரில் பார்த்தான். அப்போது இரவு நேரம். மாமச்சன் தன்னுடைய கடையைப் பூட்டிவிட்டு நீளமான டார்ச் விளக்கைக் கையில் பிடித்தவாறு தமயந்தியின் வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தார். அப்போது பவித்ரன் கொஞ்சம் கள்ளை உள்ளே ஏற்றியிருந்தான்.
திருடன் பவித்ரனைப் பார்த்ததும் மாமச்சன் ஒரு மாதிரி ஆகிவிட்டார். தமயந்திக்கும் அவனுக்கும் தற்போது எதுவுமே இல்லையென்றாலும் சில நாட்களாவது அவளுடன் படுத்துப் புரண்ட ஒரு மனிதனாயிற்றே அவன்!
மாமச்சன் பதறிப் போய் நிற்பதைப் பார்த்து பவித்ரனுக்கு சிரிப்புத்தான் வந்தது.
"என்ன காரியம் செய்றீங்க நீங்க?"- அவரின் செயல் பிடிக்காதது மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்டான்; "ஊருக்கே தெரியிற மாதிரி எல்லா காரியங்களையும் செஞ்சுக்கிட்டு இருக்கீங்களா?"
அவன் அப்படிக் கேட்டதும் மாமச்சனுக்கு சுருக்கென்று கோபம் வந்து விட்டது. "ஆமா... அதுக்கென்ன? ரகசியமா யாருக்கும் தெரியாம நான் ஏன் நடக்கணும்?"- அவர் சொன்னார். "எல்லாம் விதி, பவித்ரா. இதுல நாம திட்டம் போட்டு செயல்படுறதுக்கு என்ன இருக்கு? நடக்குறது நடக்கட்டும். வேறென்ன சொல்ல முடியும்?"
அவர் சொன்னது சரிதான் என்பதை பவித்ரனும் ஒப்புக் கொண்டான்.
இருவரும் பிரியும் போது ஒரு விஷயத்தை மாமச்சன் கவனித்தார். பவித்ரன் முன்பை விட பளபளப்பு ஏறி காணப்பட்டான். சலவை செய்த வெள்ளை வேஷ்டியும் சட்டையும் அணிந்திருந்தான். காலில் புதிய செருப்பு போட்டிருந்தான். மணிக்கட்டில் ஒரு கைக்கடிகாரம் அழகு காட்டியது.
தமயந்தி வாழ்க்கையை விட்டு நீங்கியபிறகு பவித்ரன் நல்ல நிலையை நோக்கி உயர்ந்திருக்கிறான் என்று ஊரில் உள்ளவர்கள் சொல்லிக் கொண்டிருப்பது உண்மைதான் என்பதை மாமச்சனும் புரிந்து கொண்டார். அப்படியென்றால், தமயந்தி வந்தபிறகு தன்னுடைய வாழ்க்கையிலும் ஏதாவதொரு விதத்தில் வீழ்ச்சி உண்டாகி இருக்க வேண்டுமல்லவா என்பதையும் அவர் நினைக்காமலில்லை. அப்படியொன்றும் தனக்கு வீழ்ச்சி உண்டானதாக மாமச்சனுக்கு தெரியவில்லை. மில்லுக்கு வருகின்ற பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பெண் பித்தனாக மாறியிருக்கும் மாமச்சனுக்கு பயந்துதான் தாங்கள் அவரின் மில் பக்கம் போவதில்லை என்று எல்லோரிடமும் பெண்கள் சொல்வதை நன்றாகவே அறிந்திருந்தார் மாமச்சன். மிகவும் திறமையாகத் தன்னுடைய வியாபாரத்தை நடத்தியதன் மூலம் காலணா கூட கடன் என்று தனக்கு இல்லாமல் இருந்த தான் எப்படி தமயந்தியின் வலையில் நேராகப் போய் மாட்டிக் கொண்டோம் என்பதை நினைக்க நினைக்க அதற்கான காரணமே புரியாமல் தவித்தார் மாமச்சன்.
திருடன் பவித்ரனைப் பற்றியும் அவனிடம் தான் கண்ட பளபளப்பைப் பற்றியும் மாமச்சன் தமயந்தியிடம் சொன்னார்.
தமயந்தி அதைக் கேட்டதும் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள். "அய்யோ... எல்லாம் திருடனதுனால வந்தது"- அவள் சொன்னாள்; "கடிகாரம், செயின்னு எதையாவது பெரிசா திருடியிருப்பாரு அந்த ஆளு. அதுனாலதான் அந்த மினுமினுப்பு. என்னைக்காவது ஒரு நாளு போலீஸ்காரங்க வந்து எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போகப் போறாங்க."
திருடன் பவித்ரன் முன்பு ஒரு முறை ஒரு வைரமாலையைத் திருடிக் கொண்டு வந்த விஷயத்தை மாமச்சனிடம் தமயந்தி சொன்னாள். அந்த மாலையைத் தன் வீட்டில் வைக்க தான் சம்மதிக்கவேயில்லை என்றாள் அவள்.
அவள் சொன்ன கதையை மாமச்சன் முழுமையாக நம்பினார். ஆனால், பவித்ரனிடம் இப்போது இருக்கும் பளபளப்பிற்குக் காரணம் வேறு ஏதோ ஒன்று என்று மட்டும் மாமச்சனுக்குப் புரிந்தது. வெளித் தோற்றத்தில் மட்டுமல்ல, பவித்ரனின் கண்களின் ஆழத்தில்கூட என்னவோ மாற்றங்கள் உண்டாகியிருந்தன. அங்கு முன்பிருந்தஆர்வம் கலந்த பரபரப்பு இல்லை. அதற்கு மாறாக வேறென்னவோ அங்கு நிழல் பரப்பி இருப்பதை மாமச்சனால் உணர முடிந்தது. திருப்தி கலந்த ஒரு அதிகார பாவனை அவனிடம் குடி கொண்டிருப்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
டார்ச் விளக்கைக் கையில் வைத்தவாறு தலையில் துணியை மூடிக்கொண்டு மாமச்சன் தமயந்தியின் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்த காட்சியை அன்று இரவு பார்த்த திருடன் பவித்ரனுக்கு தூக்கமே வரவில்லை. எது எப்படி இருந்தாலும், தன்னுடைய இரண்டு குழந்தைகளைப் பெற்ற ஒரு பெண்ணைத் தேடி இன்னொரு அன்னிய மனிதர் போகிறாரென்றால்...?
பவித்ரன் தூக்கம் வராமல் இப்படியும் அப்படியுமாய் புரண்டு கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவன் மனதிற்குள் என்னவோ பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டாள் அவனுடைய மனைவி ஜானகி. இருந்தாலும், பவித்ரனிடம் அவள் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்வல்லை. 'அப்படி ஏதாவது கேட்டு, புதிதாக ஏதாவது பிரச்சினை உண்டாகிவிட்டால்...' என்று நினைத்து அவள் அமைதியாக இருந்தாள். சமீபகாலமாக தன்னாலேயே புரிந்து கொள்ள முடியாத ஏதோ சில காரியங்களில் தன் கணவன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் ஜானகியால் உணர முடிந்தது. ஒரு பொறுப்பான மனைவி என்ற முறையில் இம்மாதிரியான விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் பொதுவாக அவள் ஆர்வம் காட்டுவதில்லை.
ஒரு விஷயத்தை மட்டும் ஜானகி நன்கு கவனித்தாள். முன்பு சிறு சிறு திருட்டு காரியங்களைச் செய்வதற்காக இரவு நேரங்களில் வெளியே செல்லும் தன் கணவன் இப்போதெல்லாம் திருடுவதற்கே செல்வதில்லை என்பதுதான் அது. முன்பு திருடிய பொருட்களையோ, அவற்றை விற்று கிடைத்த பணத்தையோ எடுத்துக் கொண்டு பாதி இரவில் வேகமாக ஓடிவரும் அந்தப் பழைய பவித்ரனில்லை இப்போதைய பவித்ரன். இப்போது அவன் கையில் பணம் எப்போதும் இருந்த வண்ணம் இருக்கிறது. இந்த விஷயம் மட்டும் அவளுக்கு நன்றாகத் தெரியும்.