கள்ளன் பவித்ரன் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7138
பவித்ரன் தலையை ஆட்டினான். சைக்கிள் சொந்தக்காரனிடம் என்ன சொல்ல வேண்டும் என்று எவ்வளவு அழகாகவும் விளக்கமாகவும் இந்த வியாபாரி சொல்லித் தருகிறார் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு ஆச்சரியம்தான் உண்டானது.
திடீரென்று என்ன நினைத்தாரோ, தன் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்த வியாபாரி இன்னொரு நூறு ரூபாய் நோட்டை வெளியே எடுத்தார். அது பாத்திரத்திற்கான விலை என்பதை இருவரும் ஒருவரையொருவர் சொல்லிக் கொள்ளாமலே புரிந்து கொண்டார்கள்.
"இது போதுமா?"
"போதும்"- பவித்ரன் மரியாதையுடன் தலையை ஆட்டினான். உண்மையைச் சொல்லப் போனால் பாத்திரத்திற்கு இவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லைதான்.
வியாபாரி மேலும் ஒரு பத்து ரூபாய் நோட்டை பாக்கெட்டிற்குள்ளிருந்து எடுத்தார். அதை பவித்ரனிடம் நீட்டினார். மற்ற ரூபாய் நோட்டுக்களை மேஜை மேல் வைத்த வியாபாரி இந்த நோட்டை மட்டும் பவித்ரனின் கையிலேயே நேரடியாகத் தந்தார். பவித்ரன் அதை கவனித்தான்.
"இந்தா... இதையும் வச்சுக்கோ"- அவன் கையில் அந்த ரூபாய் நோட்டை அவர் திணித்தார். கையை மடக்கியவாறு வியாபாரி சொன்னார். "உன்னோட ஒருநாள் உழைப்புக்கான பணம் இது..."
உண்மையாகச் சொல்லப்போனால் இந்தப் பணமெல்லாம் தனக்குக் கிடைக்கும் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய ஒவ்வொரு தேவையையும் மனதில் சிந்தித்துப் பார்த்துச் செயல்படும் இந்த வியாபாரி ஒரு கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும், இவர் ஒரு நல்ல மனிதரே என்று நினைத்தான் பவித்ரன்.
"எல்லாம் சரியாயிடுச்சா?"- ஒரு விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதைப் போல வியாபாரி அவனைப் பார்த்துக் கேட்டார்.
பவித்ரன் சொன்னான். "சரியாயிடுச்சு..."
வியாபாரி திறந்து பிடித்திருந்த பலகை வழியாக பவித்ரன் வெளியில் இறங்கினான். சாலையில் அவன் கால் வைத்தான்.
மார்க்கெட் ஆள் அரவமே இல்லாமலிருந்தது. எல்லா கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நள்ளிரவு நேரமாகியிருக்கம் என்று பவித்ரனுக்குப் பட்டது.
பவித்ரனை இறக்கிவிட்ட அதே வழியின் மூலமாக வியாபாரியும் கடையை விட்டு வெளியே வந்தார். அவர் மீண்டும் அந்தப் பலகையை பழைய இடத்தில் சரி பண்ணி வைத்தார்.
பவித்ரன் சிறிது தள்ளி நின்று பார்த்தான். தாழ்ப்பாள் போட்டு பூட்டியிருப்பதைப் போலவே வெளியிலிருந்து பார்க்கும் போது தெரிந்தது. எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகவும் சரியாக அந்தப் பலகை அந்த இடத்தில் பொருந்தியிருந்தது. வியாபாரியின் புத்திசாலித்தனத்தை மீண்டுமொருமுறை புகழ்ந்தால் என்ன என்று கூட நினைத்தான் பவித்ரன். இருப்பினும், இந்த நேரத்தில் அது எதற்கு என்று மவுனமாக இருந்துவிட்டான்.
பணத்தைத் தந்ததுடன் இதுவரை இருந்த எல்லா உறவுகளும் முடிந்துவிட்டன என்பது மாதிரி வியாபாரி நடந்து கொள்வது போல் பவித்ரனுக்குத் தோன்றியது.
இனிமேலும் அங்கு தான் நின்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்று அவன் மனம் அவனிடம் சொல்லியது. நின்றிருப்பதால் என்ன பிரயோஜனம் என்றும் அவன் நினைத்துப் பார்த்தான்.
அடுத்த நிமிடம் நேரத்தை வீணாக்காமல் வியாபாரியிடம் கூறிவிட்டு பவித்ரன் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். சம்பவங்கள் இப்படி வந்து முடிந்ததில், ஒரு பக்கம் அவனுக்கு மகிழ்ச்சியே உண்டானது. கடவுளின் கருணை என்றுதான் சொல்ல வேண்டும்.
5
திருடன் பவித்ரனுக்கு இரண்டு மனைவிமார்களாயிற்றே! மூத்த மனைவியின் பெயர் ஜானகி. அவன் சட்டபூர்வமாகத் திருமணம் செய்தது ஜானகியைத்தான்.
அடுத்தவள் தமயந்தி. திருடன் பவித்ரனின் இரண்டாவது மனைவி என்பதற்கு மேலாக தனக்கென்று ஒரு பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தாள் தமயந்தி. பவித்ரனுக்குக் குழந்தை பெறுவதற்கு முன்பே அவள் ஊர் முழுக்க எல்லோருக்கும் தெரிந்தவளாக இருந்தாள். அதற்கு முன்பே அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. ஒன்றுக்குப் பின் இன்னொன்று என்று பவித்ரனுக்கு இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும் அவளின் பெயருக்கு ஊரில் எந்தவித குறையும் உண்டாகவில்லை என்பது தான் உண்மை. இந்த உண்மையை பவித்ரனும் நன்கு உணர்ந்திருந்தான். பல விஷயங்களைப் பார்ப்பதில்லை, கேட்பதில்லை என்பது மாதிரி காட்டிக் கொண்டு இத்தனை நாட்களும் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான் பவித்ரன்.
இருந்தாலும், வியாபாரியிடமிருந்து முந்நூற்றுப் பத்து ரூபாயை வாங்கிக் கொண்டு ஊர் பக்கம் திரும்பிய பவித்ரன் அந்த உறவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான். தமயந்தியின் கரை கடந்த கெட்ட பெயருக்கு பலம் சேர்ப்பது போல் இருந்தன அவன் கண்கூடாகக் கண்ட காட்சிகள்.
திருடன் பவித்ரன் வீட்டில் கால் வைக்கும் போது, உள்ளே 'குசு குசு'வென்று மெதுவான குரலில் யாரோ பேசுவது கேட்டது. அவிழ்ந்த முடியை வாரிக் கட்டியவாறு தமயந்தி உள்ளேயிருந்து வந்தபோதே பவித்ரனுக்குப் புரிந்துவிட்டது, உள்ளே யாரோ மறைந்திருக்கிறார்களென்ற உண்மை.
"யார்டி உள்ளே இருக்குறது?"- பவித்ரன் உரத்த குரலில் கேட்டான். அதற்கு தமயந்தி எந்த பதிலும் சொல்லவில்லை. அதைப் பார்த்ததும் பவித்ரனுக்கு வந்த கோபம் இரு மடங்காகியது. அவன் தன்னுடைய கேள்வியை இன்னொரு முறை கேட்டான்.
"உள்ளே வந்து பாரு"- தமயந்தி சொன்னாள். "கட்டாயம் அதை தெரிஞ்சுக்கிணும்னா..."
பவித்ரன் உள்ளே நுழைந்து பார்த்தான். அங்கு மாமச்சன் இருந்தார்.
விரோதிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு நின்றிருந்தனர். பவித்ரனின் உதடுகள் நடுங்கின. கண்களில் நீர் அரும்பியது.
"இருந்தாலும் மாமச்சன்..."- பவித்ரன் சொன்னான்; "நீங்க இப்படிப்பட்ட ஆளுன்னு நான் நினைக்கவே இல்ல. ரொம்பவும் கவுரவமான மனிதர் நீங்கன்னு இதுவரை நான் நினைச்சிருந்தேன்."
அவன் அப்படிச் சொன்னதைக் கேட்டதும் மாமச்சனுக்கு வெட்கமும், கோபமும் உண்டானது. திருட்டு போன பொருட்களைத் திரும்ப பெறுவதற்கு வேறு எந்த வழியும் தோன்றாததால், அவர் இந்த வீட்டைத் தேடி வந்தார் என்பதே உண்மை.
"என் கிண்டியையும், அண்டாவையும் குடத்தையும் திருடிட்டுப் போனேல்ல...?"- அவர் கேட்டார்.
"இந்தா இருக்குது உங்க கிண்டியும், அண்டாவும், குடமும்..."- பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாய் நோட்டை உருவி மாமச்சனின் முன்னால் எறிந்தவாறு பவித்ரன் கத்தினான். "இனிமேல் இந்தப் பக்கம் வந்தா, நடக்குறதே வேற. போக்கிரித்தனத்துக்கும் ஒரு எல்லை இருக்கு."
மாமச்சன் அந்த ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறினார். பவித்ரனின் பாக்கெட்டிலிருந்து வெளியே வந்த நூறு ரூபாய் நோட்டைப் பார்த்து அவர் ஒரு மாதிரியாக ஆகிவிட்டார். எங்கேயோ நடக்கக்கூடாத ஒரு காரியம் நடைபெற்றிருக்கிறது என்பதை மட்டும் அவரால் தெளிவாக உணர முடிந்தது.
பவித்ரன் பின்னால் நின்றவாறு உரத்த குரலில் அழைத்து சொன்னான்; "போற வழியில ஒரு உதவி செய்யணும். அந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள நுழைஞ்சு, திருட்டுப் போன சாமான்கள் முழுசா கிடைச்சுடுச்சுன்னு சொல்லிடணும்..."