
"கவனமாக இருக்கணும் ஜானகி"- சரஸ்வதி எச்சரித்தாள். "மூத்தவளோட வித்தைகள் இந்தப் பொண்ணுக்கிட்டயும் இருந்தாலும் இருக்கலாம். செய்வினை வச்சுத்தான் அவள் ஆண்களைக் கைக்குள்ள போடுறதே..."
தன்னுடைய தீட்டுத்துணியை இருபத்தேழு நாட்கள் காயப்போட்டு அதை நன்றாக தீயில் போட்டுக் கருக வைத்து, அந்தச் சாம்பலை உணவுப் பொருளில் கலக்கி அதைத் தன்னுடைய கைகளால் ஊட்டித்தான் தமயந்தி பொதுவாக ஆண்களை மயக்குகிறாள் என்று சரஸ்வதி சொன்னாள்.
"ரெண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தது"- சரஸ்வதி சொன்னாள். "அதனாலதான் நான் சொல்றதே..."
அதுவரை எந்தவித கலக்கமும் இல்லாமல் இருந்த ஜானகியின் மனம் இலேசாக சலனமடையத் தொடங்கியது. செய்வினை வைக்கப்பட்டுள்ளவர்கள் தூக்கத்தில் வாய்க்கு வந்தபடி உளறுவார்கள் என்றும், அடி விழுந்தவர்களைப் போல இப்படியும் அப்படியுமாக புரண்டு கொண்டிருப்பார்கள் என்றும் அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். அன்று இரவு அவள் சிறிதுகூட தூங்காமல் தன் கணவனையே பார்த்தபடி படுத்துக்கிடந்தாள். பவித்ரன் ஒன்றுமே தெரியாத குழந்தைபோல அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தான். வாயில் விரல் வைத்துச் சப்பவில்லை என்பது மட்டுமே வித்தியாசம்.
ஜானகிக்கு அதைப் பார்த்த பிறகுதான் நிம்மதியே வந்தது.
தேவையில்லாமல் தன்னுடைய மனதில் நெருப்பை அள்ளிக் கொட்டியது சரஸ்வதியின் குசும்புத்தனமான மனம்தான் என்று அவள் எண்ணினாள்.
இப்படி சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து மனதில் துன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த ஒரே மனிதன் மாமச்சன்தான். தான் சொல்கிறபடி கேட்டு நடக்க வேண்டிய ஒரு பெண் கயிறை அவிழ்த்தெறிந்து விட்டு நடப்பது மாதிரி நடக்கிறாள் என்றால் அது தனக்கு எதிராக இருக்கும் ஒரு மிகப் பெரிய சவால் என்றே அவர் எண்ணினார். தமயந்தியை உட்கார வைத்து தனிப்பட்ட முறையில் அறிவுரை சொல்லியும் எந்தவித பிரயோஜனமும் உண்டானதாகத் தெரியவில்லை. அவள் அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.
"நீங்க என்ன சொல்றீங்கன்னே என்னால புரிஞ்சிக்க முடியல. பேசாம இருங்க..."- அவள் எப்போது பார்த்தாலும் இப்படித்தான் சொன்னாள். "சில விஷயங்களை நான் கவனிச்சிக்கிட்டுத்தான் இருக்கேன்."
"இப்படியே கவனிச்சிக்கிட்டு இருந்து... கடைசியில ஒரு நாளும் இந்தப் பொண்ணு வயிறை வீங்க வச்சிக்கிட்டு வந்து நிப்பா. அப்போ..."
அப்போதும் தமயந்தி சிரிக்கவே செய்தாள். "அப்படி முட்டாள்தனமா நடக்குறதுக்க அவ இன்னொருத்தியோட தங்கச்சியா இருக்கணும். தலைகீழா நின்னு பார்த்தும் இதுவரை உப்பு பார்க்கக்கூட அந்த ஆளால முடியல. பிறகு எப்படி வயிறு வீங்கும்?"
அதற்கு மேல் மாமச்சனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அக்காவும் தங்கையும் சேர்ந்து பெரிய அளவில் திட்டம் போட்டு ஏதோவொரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், எதற்காக அதை அவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக காரணத்தை மட்டும் அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. வீட்டில் காணப்படும் உற்சாகத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் பார்க்கப் பார்க்க அவருக்கு மேலும் ஒரு வகை சோர்வுதான் உண்டானது. தன்னுடைய இப்போதைய வீழ்ச்சியைப் புரிந்துகொண்டு தமயந்தி என்னவோ ரகசியமாக செய்து கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ அவர் தன்னுடைய நாவை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தார். என்றாவதொரு நாள் பாமினி பவித்ரனின் ரகசியத்தை தோண்டியெடுத்துக்கொண்டு வருவாள் என்ற திடமான நம்பிக்கை அவர் மனதிலும் தோன்றிவிட்டிருந்தது.
அவ்வப்போது இந்த விஷயத்தில் அவருக்கு சந்தேகம் தோன்றினாலும், தமயந்தியின் வார்த்தைகள் அவருக்கு மேலும் உறுதியையும், உற்சாகத்தையும் அளித்துக் கொண்டிருந்தன.
"எல்லாம் முடிஞ்ச பிறகு, என்னை அம்போன்னு விட்டுடமாட்டேன்னு என்ன நிச்சயம்?"- பொறுமையும் கவலையும் ஒரு எல்லையை மீறியபோது ஒரு நாள் மாமச்சன் அவளைப் பார்த்து பயமுறுத்துகிற மாதிரி சொன்னார். "ஊமத்தங்காயை அரைச்சு உனக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்துட்டு, நானும் உங்களோட சேர்ந்து செத்துப் போவேன்."
அப்போது கூட தமயந்தி விழுந்து விழுந்து சிரிக்கவே செய்தாள்.
பவித்ரனை உப்பு பார்க்கக் கூட பாமினி அனுமதிக்கவில்லை என்ற தமயந்தியின் வார்த்தைகள் உண்மைதான். பவித்ரன் பாமினி தொடர்பைப் பற்றி ஊரே பேசிக் கொண்டிருந்தாலும் அவன் அவளைத் தொடவும், பிடிக்கவும்தான் முடிந்ததே தவிர, அதைத் தாண்டிச் செல்ல பாமினி அவனை அனுமதிக்கவேயில்லை. மில்லுக்குள்ளிருக்கும் சில மறைவிடங்களிலும், ஓடிக் கொண்டிருக்கும் காருக்குள்ளும், ஒரு நாள் நகரத்திலிருக்கும் திரை அரங்குக்குள்ளும் இப்படி நான்கைந்து முறைகள் மட்டுமே இலேசாக அவன் தன்னைக் கட்டிப்பிடிக்க அவள் அனுமதித்தாள். அதுவும் எரிந்தெரிந்து விழுந்தவாறு.
இப்படி அவள் நடந்து கொண்டதன் மூலம் பவித்ரனிடம் உற்சாகமும், ஆர்வமும் அதிகரித்தன என்றுதான் சொல்ல வேண்டும். பாமினிக்கு தன்மீது உள்ளது வெறும் உடல் ரீதியான விருப்பம் அல்ல என்ற விஷயம் பவித்ரனை மேலும் சந்தோஷம் கொள்ளச் செய்தது. தன்னுடைய திறமை, கம்பீரம், குணம் ஆகியவற்றைப் பார்த்துத்தான் அவள் தன்னிடம் ஈடுபாடு கொண்டிருக்கிறாள் என்பதை நினைக்க நினைக்க அவனுக்கே பெருமையாக இருந்தது. அவளுடன் உடலுறவு கொள்ள தான் விரும்புவதை சூசகமாக அவள் புரிந்து கொள்ளும்படி ஒரு முறை சொன்னான் பவித்ரன். அதற்கு அவள் அவனைப் பார்த்து பயங்கரமாக கோபித்தாள். இப்படியொரு எண்ணம் அவன் மனதில் இருந்தால், இனிமேல் தான் அவனைப் பார்ப்பதற்கு வரப்போவதே இல்லை என்றாள் அவள். அன்று அவளை சமாதானப்படுத்தி மீண்டும் முன்பிருந்த நிலைக்கு கொண்டு வருவதற்கே பவித்ரனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. அதற்குப் பிறகு அவன் அவளிடம் இந்த விஷயத்தைப் பற்றி வாய் திறக்கவே இல்லை.
எதற்கு தேவையில்லாமல் வாய் திறந்து அவளின் கோபத்துக்கும் வெறுப்பிற்கும் ஆளாக வேண்டும் என்று அமைதியாக இருந்துவிட்டான்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமிருக்கிறது என்ற சிந்தனைக்கு மாறியிருந்த பவித்ரன் தன் எண்ணத்தை நேரத்தின் கையில் ஒப்படைத்தான். ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் அது தானாகவே நடக்கும். அதற்கு முன்பு என்னதான் முயற்சி பண்ணினாலும், அது நடக்கவே நடக்காது. சில நேரங்களில் தேவையில்லாமல் அவசரம் காட்டும் பட்சம், அது ஆபத்தில் போய் முடிந்தாலும் முடியலாம்.
பவித்ரன் முன்பிருந்ததைவிட எதையும் சிந்தித்துச் செயல்படும் மனிதனாக மாறினான்.
மிகவும் நெருக்கமாய் பழகினால் ஆண்களின் மனதை எளிதாக ஒரு பெண்ணால் அறிந்து கொள்ள முடியும் என்றுதான் தமயந்தியும் அவள் மூலமாக பாமினியும் நினைத்திருந்தார்கள். ஆனால், அது உண்மையல்ல என்பதை தன்னுடைய அனுபவத்தின் மூலம் பாமினி புரிந்து கொண்டாள். பெண்ணின் மனதை அறிந்து கொள்வதற்கு எப்படி ஒரு ஆண் மிகவும் சிரமப்படுகிறானோ, அதே சிரமம் பெண்ணுக்கும் இருக்கிறது என்பதை பாமினி புரிந்து கொண்டாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook