
பவித்ரனின் ரகசியத்தை அவ்வளவு எளிதாக பாமினியால் தெரிந்து கொள்ள முடியவில்லை. காரணம்- இப்போது பவித்ரன் எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் அடிப்படையில் அவன் ஒரு திருடனாக இருந்தவனாயிற்றே! எந்தக் காரணத்தைக் கொண்டும் அவனிடம் அவள் எதையும் கேட்கக்கூடாது என்று முதலிலேயே அவனிடம் சொல்லியிருந்தாள் தமயந்தி. அதனால் பவித்ரனிடம் பாமினி எதையும் கேட்கவில்லை. அவனாகவே சொல்வான் என்று அவர்கள் எதிர்பார்த்தது பல மாதங்கள் கடந்து போன பிறகும் நடப்பதாகத் தெரியவில்லை. அவர்களுக்கே காலப்போக்கில் அந்த நம்பிக்கை போய்விட்டது. பவித்ரனுக்கு சந்தேகம் உண்டாகாத வண்ணம் விஷயத்தை அவனிடமிருந்து வாங்க வேண்டும் என்பது மிகவும் கஷ்டமான ஒரு காரியமென்றாலும், ஒருநாள் பாமினி அதைச் செய்யவும் துணிந்துவிட்டாள். அதைச் செய்வதைத் தவிர அவளுக்கும் வேறு வழியில்லாமல் போய்விட்டது. பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா?
பவித்ரனின் கார் அன்று நகரம் முழுக்க ஓடியது.
காருக்குள் எப்போதையும் விட அன்று பாமினி மிகவும் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். பவித்ரனின் செயல்கள் ஒவ்வொன்றையும் அவள் வெறுப்புடன், சிறிதும் பிடிக்காதது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாமினியை ஏதோவொரு பிரச்சினை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதை பவித்ரன் புரிந்து கொண்டான். பல முறைகள் அவள் அப்படி மவுனமாக இருப்பதற்கான காரணம் என்னவென்று அவன் கேட்டும், அவள் 'ஒன்றுமேயில்லை' என்று கூறினாளே தவிர, காரணத்தைக் கூறவேயில்லை. அவள் அப்படி இருப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தான் பவித்ரன்.
ஒருவேளை டிரைவர் இருப்பதால் அவள் சொல்லத் தயங்குகிறாள் போலிருக்கிறது என்று நினைத்த பவித்ரன் பாமினியை ஒரு ரெஸ்ட்டாரென்ட்டின் மூலையில் கொண்டுபோய் உட்கார வைத்து காரணம் என்னவென்று விசாரித்தான். அப்போதும் "ஒரு காரணமும் இல்லை" என்றுதான் கூறினாள் பாமினி. பவித்ரன் ஆர்டர் பண்ணி கொண்டுவரச் செய்த உணவுப் பொருட்கள் எதையும் அவள் கையாலேயே தொடவில்லை. அதைப் பார்த்ததும் பவித்ரன் அவளிடம் சொன்னான், "நாம எங்கேயாவது ஒரு அறை எடுப்போம். பாமா, உன்கிட்ட நான் சில விஷயங்களை மனம் திறந்து கேட்க வேண்டியிருக்கு..."
அதற்கு பாமினி எந்த பதிலும் கூறாமல் மவுனமாக இருந்தாள்.
அவளின் அந்த மவுனத்தைப் பார்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டான் பவித்ரன். திடீரென்று அவன் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. சாதாரணமாக அவன் நகரத்தில் அறை எடுத்துத் தங்கலாம் என்று சொன்னால் பாமினி அதை முழுமையாக மறுப்பதுதான் இதுவரை அவன் பார்த்து வந்தது.
இந்த முறை அவன் அப்படிக் கேட்டபோது அவள் எந்த பதிலும் கூறாமல் மவுனமாக இருந்தது அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதது.
"அறை எடுக்கட்டுமா?"- பவித்ரன் மீண்டும் அவளைப் பார்த்து கேட்டான்.
அப்போது பாமினி தலை குனிந்தபடியே உட்கார்ந்திருந்தாள். ஒரு மூலையில் உற்சாகம் பீறிட்டுக் கொண்டிருந்ததென்னவோ உண்மை.
அவன் கடைசி முறையாக ஒரு தடவை அதே கேள்வியை திரும்பக் கேட்டவுடன் அவள் இலேசாக தலையை ஆட்டினாள்.
மனதில் ஒருவித பதைபதைப்புடன் தான் பாமினியை அழைத்துக் கொண்டு ஹோட்டலில் அறை எடுக்கச் சென்றான் பவித்ரன். இதற்கு முன்பு இந்த மாதிரி ஹோட்டலில் அறை எடுத்த அனுபவம் அவனுக்கு இருந்தால்தானே!
எது எப்படியோ- நல்ல ஒரு அறை எந்தவித பிரச்சினையுமில்லாமல் அவர்களுக்குக் கிடைத்ததுதான் ஆச்சரியம். ஹோட்டலின் கவுண்ட்டரில் உட்கார்ந்திருந்த ஆள் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தவாறு ரெஜிஸ்டரை எடுத்து முன்னால் நீட்டினான்.
அறைக்குள் நுழைந்து சில நிமிடங்கள் ஆன பிறகுதான் பவித்ரனுக்கு நன்றாக மூச்சுவிடவே முடிந்தது. அவன் எழுந்து சென்று ஜன்னலைத் திறந்துவிட்டான். ஜன்னலுக்கு வெளியே தூரத்தில் சலவைத் தொழிலாளர்களின் குடியிருப்பு இருந்தது. அங்கிருந்து அவர்கள் துணிகளைத் துவைக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பல்வேறு வண்ணங்களில் உள்ள துணிகள் காற்றில் பறந்தவாறு சமாதானம் பரப்பிக் கொண்டிருந்தன. வயதாகிப் போன கழுதைகள் வெயிலில் நின்றவாறு தூங்கிக் கொண்டிருந்தன.
சிறிதுநேரம் அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த பவித்ரனுக்கு தன்னம்பிக்கை மீண்டும் வந்ததைப் போல் இருந்தது.
பாமினி அப்போது கட்டிலில் குப்புறப்படுத்தவாறு கிடந்தாள். அறைக்குள் நுழைந்ததும் அவள் அப்படிப் போய் படுத்தவள்தான். அதற்குப் பிறகு அவள் தலையை உயர்த்திக்கூட பார்க்கவில்லை. ஒரு வார்த்தைகூட பேசவும் இல்லை.
தவறான காரியத்தைச் செய்து விட்டோமோ என்று மனதிற்குள் நினைத்தான் பவித்ரன். விருப்பமில்லாத ஒரு விஷயத்திற்கு அவளை வற்புறுத்தி அழைத்து வந்துவிட்டோமோ என்று கூட அவன் நினைக்க ஆரம்பித்துவிட்டான்.
பவித்ரன் அவள் அருகில் அமர்ந்து மெதுவாக அவளைத் தொட்டு அழைத்தான். அவள் சிறிதுகூட அசையவில்லை.
தலையணையில் விழுந்திருந்த அவளின் கண்ணீரை அப்போதுதான் அவன் பார்த்தான். பாமினி இவ்வளவு நேரமும் அழுதுகொண்டு இருந்திருக்கிறாள் என்பதே அப்போதுதான் அவனுக்குத் தெரிய வந்தது. கண்ணீரைப் பார்த்ததும் அவனுக்கும் அழுகை வரும் போல் இருந்தது.
"பாமினி, உனக்கு விருப்பம் இல்லைன்னா நாம இப்பவே அறையை காலி பண்ணிடுவோம்"- தடுமாறிய குரலில் சொன்னான் பவித்ரன்.
அதற்கு பதில் சொல்லும் வகையில் உரத்த குரலில் தேம்பிக் கொண்டிருந்தாள் பாமினி.
"பாமினி, உனக்கு இதுல விருப்பமில்லையா?"- பவித்ரன் கேட்டான். "என்னை உனக்கு பிடிக்கலையா?"
அடுத்த நிமிடம் பாமினி அவனைத் தலையைச் சாய்த்து பார்த்தவாறு எழுந்து உட்கார்ந்தாள்.
"எனக்குப் பிடிக்காம இல்லை..."- அவள் மூக்கைச் சிந்தியவாறு தேம்பிக் கொண்டே சொன்னாள். "எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா..."
விஷயம் இவ்வளவுதானா என்று நினைத்த பவித்ரன் உரத்த குரலில் சிரித்தவாறு அவளின் தலையைச் செல்லமாக வருடினான். "உனக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னை நான் கைவிட்டுடுவேனா என்ன? என்னை நீ இவ்வளவுதான் புரிஞ்சிக்கிட்டியா? நினைக்கவே கஷ்டமா இருக்கு பாமா..."
அவன் மனதிற்குள் எழுந்த கேள்வி அவள் மனதிற்குள்ளும் எழுந்தது.
"அதில்ல விஷயம்..."- அவனைத் தடுத்துக் கொண்டு பாமினி சொன்னாள். இவ்வளவு நேரமும் மனதில் அடக்கி வைத்திருந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் வெளியே விடும் ஆவேசமும் உறுதியும் அவளின் வார்த்தைகளில் தெரிந்தன.
"அண்ணே... உங்களைப் பற்றி ஊர்ல இருக்குறவங்க என்னவெல்லாம் பேசுறாங்கன்னு உங்களுக்குத் தெரியாது. எல்லாரும் என்ன சொல்றாங்க தெரியுமா? கள்ள நோட்டு அடிச்சுத்தான் நீங்க பணக்காரரா ஆயிட்டீங்களாம். அவங்க இப்படிப் பேசுறத உங்களுக்குத் தெரிஞ்சா நீங்க மனசு சங்கடப்படுவீங்கன்னுதான் இதுநாள் வரை நான் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லல."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook