கள்ளன் பவித்ரன் - Page 25
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7143
ஒரு பெரிய ஹோட்டலுக்கு அழகாக இருக்கும் ஒரு பெண்ணை அழைத்துச் சென்று அறை எடுப்பதற்கான தைரியமும், முன் அனுபவமும் அவனுக்கு இல்லை. இரண்டாவது காரணம்- இந்த விஷயத்திற்கு பாமினி சம்மதிக்காதது. ஹோட்டலில் அறை எடுத்து தங்கிவிட்டு, சாயங்காலம் திரும்பி வரலாம் என்று பவித்ரன் அவளிடம் சொன்னபோது, பயந்து போய் அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். தன்னுடைய மனதிற்குள்ளேயே ஒரு வகை பயத்துடன் இருந்த பவித்ரனுக்கு பாமினி இந்த விஷயத்தில் சம்மதிக்காதது ஒரு விதத்தில் நல்லதாகவே பட்டது. அழுது கொண்டிருந்த பாமினியை தட்டிக் கொடுத்து தடவியவாறு பவித்ரன் தந்திரமாக தான் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிற மாதிரி சொன்னான்.
"சரி... அப்படின்னா வேண்டாம். இன்னொரு நாளு பார்த்துக்கலாம்."
அடுத்த நிமிடம் பாமினி அழுகையை நிறுத்தினாள்.
இந்த ஒரு காரியம் நடக்காமல் போய்விட்டதை நீக்கிவிட்டு பார்த்தால், அந்த நாள் ஒரு மகிழ்ச்சியான நாளாகவே பவித்ரனுக்கு இருந்தது.
பாமினிக்கு அவன் இரண்டு நல்ல புடவைகள் வாங்கிக் கொடுத்தான். அதற்குப் பொருத்தமான ப்ளவ்ஸ்களையும், உள்ளாடைகளையும்கூட வாங்கித்தந்தான். அவற்றை வாங்க ஆரம்பத்தில் அவள் சிறிது தயங்குவது போல் காட்டினாலும், கடைசியில் அவற்றை அவள் வாங்கிக் கொள்ளவே செய்தாள். ஒரு ஜோடி செருப்பும் ஒரு நல்ல கைக்கடிகாரமும் அவளுக்கு வாங்கித்தர வேண்டுமென்று பவித்ரன் தீர்மானித்திருந்தான். ஆனால், எவ்வளவு வற்புறுத்தியும் பாமினி அவற்றை வாங்கிக் கொள்ள சம்மதிக்கவில்லை. இதற்கு மேல் வற்புறுத்தி பிரயோஜனமில்லை என்பது தெரிந்தவுடன் பவித்ரன் சொன்னான். "சரி... அப்படின்னா இன்னொரு நாளு பார்த்துக்கலாம்."
நகரத்திலேயே ஆடம்பரமாக இருக்கும் ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டில் அவர்கள் காப்பி குடித்தார்கள். ரெஸ்ட்டாரெண்ட்டின் மங்கலான வெளிச்சத்தில் பணியாள் இல்லாத நேரம் பார்த்து யாருக்கும் தெரியாமல் பவித்ரன் பாமினியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான். ஏதோ நெருப்புதான் அங்கு பட்டுவிட்டதைப் போல் நீண்ட நேரம் தன் கன்னத்தையே பாமினி தடவிக் கொண்டிருந்ததை பவித்ரன் ரசித்துப் பார்த்தான்.
திரும்பி வரும்போது பாமினிக்கும் தமயந்திக்குமிடையே இருக்கும் உறவைப் பற்றி பவித்ரன் விசாரித்தான். பவித்ரனுக்கு துரோகம் பண்ணிய அந்த நிமிடத்திலேயே தானும் தன் சகோதரியை வெறுத்துவிட்டதாகச் சொன்னாள் அவள். இப்போது அவர்கள் இருவருக்குமிடையில் சொல்லிக் கொள்கிற மாதிரி பேச்சு வார்த்தை கூட இல்லை என்றாள் பாமினி.
"அக்காவுக்கு பேராசை"- பாமினி வெறுப்பு கலந்த குரலில் சொன்னாள். "பேராசை அதிகமா ஆயிட்டதுனாலதான் இப்போகெடந்து கஷ்டப்படுறாங்க. ஒழுங்கா இருந்திருந்தா இப்போ மகாராணியைப் போல வாழ்ந்துக்கிட்டு இருக்கலாம்ல..."
"அந்த அதிர்ஷ்டம் அவளுக்கு இல்ல..."- பவித்ரன் சிரித்தான். "யாருக்குத் தெரியும்? ஒருவேளை அந்த அதிர்ஷ்டம் உனக்காக இருக்கலாம்..."
பாமினி பவித்ரனின் தொடையில் இலேசாகக் கிள்ளினாள். ட்ரைவர் கேட்டுவிடப் போகிறான் என்று சைகை காட்டினாள்.
இதுவரையுள்ள பவித்ரனின் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த காலகட்டம் என்றால் இப்போதிருப்பதைத்தான் சொல்ல வேண்டும். புதுவகையான ஒரு உணர்வும், உற்சாகமும் அவனிடம் வந்து ஒட்டிக் கொண்டிருந்தன. முகத்திலிருந்த சுருக்கங்கள் மாறி இளமையின் வெளிப்பாடு முகமெங்கும் பிரகாசித்தது.
இடையில் மதியத்திற்குப் பிறகு பவித்ரன் ஓய்வாக இருக்கும் நேரத்தில் பாமினி மில் பக்கம் வருவாள். வாரத்தில் ஒரு நாளோ இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ பவித்ரன் அவளை அழைத்துக் கொண்டு போய் நகரத்தின் எல்லா இடங்களிலும் சுற்றினான்.
ஒவ்வொரு தடவையும் தான் செய்வது தவறு என்றும் ஏற்கெனவே திருமணமான பவித்ரன் தன்னை மறக்கவே கூடாது என்றும் பாமினி அவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். ஆனால், பவித்ரன் அவள் சொன்னதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
காலப்போக்கில் பவித்ரனின் இந்தப் புதிய உறவைப் பற்றிய கதைகள் ஊர் முழுக்க எல்லோராலும் பேசப்பட்டது. மாமச்சனுக்குச் சொந்தமான மில்லை தமயந்தி பூட்ட வைத்ததைப் போல் அவளின் தங்கை பவித்ரனின் மில்லை முழுமையாக மூட வைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள் என்று நெல் அரைப்பதற்காக வரும் பெண்கள் தங்களுக்குள் ரகசியமாக பேசிக் கொண்டனர்.
தன்னுடைய இந்தப் புதிய உறவைப் பற்றி ஊரில் உள்ள பலரும் பல்வேறு வகைகளில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் பவித்ரனுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தாலும் ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னைப் பற்றி அப்படிப் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் அவனுக்கு சிறிது கூட கோபமோ வெறுப்போ உண்டாகவில்லை. அதையும் மீறி, ஒரு வகையான பாசம்தான் அவர்கள் மீது அவனுக்கு உண்டானது. மாமச்சன் மீது தான் அடைந்த ஒரு வெற்றியாகத்தான் பவித்ரன் இந்த புதிய உறவை நினைத்தான். மாமச்சன் சமீப காலமாக தன்னைப் பார்க்கும்போது முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு நடந்து போகிறார் என்று ஒருமுறை பாமினி சொன்னபோது, தன்னுடைய வெற்றி ஒரு உண்மையான வெற்றி என்பதைப் புரிந்து கொண்டான் பவித்ரன்.
சமீப காலமாக பாமினி தான் இருக்குமிடத்தில் இருந்தாலே, மாமச்சன் அர்த்தமே இல்லாமல் ஏதாவது புலம்பிக் கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது.
இந்தப் புதிய உறவைப் பற்றி ஜானகியும் அறிந்தாள். எனினும், அவள் தனக்கு இந்த விஷயம் தெரியும் என்றே காட்டிக் கொள்ளவில்லை. அதைப்பற்றி கேட்டு தேவையில்லாமல் சண்டையும் சச்சரவும் உண்டாவதைவிட, ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது என்று புத்திசாலியாக ஜானகி எண்ணினாள். தமயந்தியைத் தூக்கியெறிந்தது போல ஒரு நாள் இந்தப் பெண்ணையும் தன் கணவன் விட்டெறிவான் என்று வம்பு பேச வந்த பெண்களிடம் சொன்னாள் ஜானகி. ஒவ்வொரு நாளும் ஊரில் பேசப்பட்டுக் கொண்டிருந்த கதைகளில் சிறிதளவு மட்டுமே உண்மை இருக்கும், மற்றவை எல்லாம் தன் கணவன் பணவசதி படைத்த மனிதனாக இருப்பதால், பலரும் பொறாமையால் உண்டாக்கிய கட்டுக்கதைகளாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்பினாள் ஜானகி.
ஒரு நாள் மில்லுக்குள் பாமினி கொண்டு வந்து கொடுத்த உண்ணி அப்பத்தை பவித்ரன் தின்று கொண்டிருப்பதை தான் கண்ணால் பார்த்ததாக நெல் அரைக்க வந்த சரஸ்வதி சொன்னாள். மதிய நேரத்திற்குப் பிறகு இருக்கும் ஓய்வு நேரத்தில் பாமினி அங்கு வருகிறாள் என்பதைக் கேள்விப்பட்டு, அது உண்மைதானா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே அந்த நேரம் பார்த்து அங்கு போனாள் சரஸ்வதி. அப்போது பவித்ரன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு உண்ணியப்பத்தைத் தின்று கொண்டிருந்தான். பாமினி தரையில் அமர்ந்து பாத்திரத்தில் இருந்து ஒவ்வொரு அப்பமாக எடுத்து பவித்ரன் கையில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.