Lekha Books

A+ A A-

மண் விளக்கு - Page 8

mann-vilakku

சோமதத்தை மீண்டும் நடுங்கினாள்: “புத்த மதத்தைச் சேர்ந்த மடத்திற்கு வந்து, அங்கிருக்கும் ஏழை மக்களுக்குச் சேவை செய்ய நான் அரசரின் அனுமதியைப் பெற்றிருக்கிறேன்.''

“கோட்டையின் மேற்பகுதியில் இருந்துகொண்டு நீ ஏழைகளுக்கு அப்படியென்ன உதவியைச் செய்துவிட முடியும்?''

“கோட்டையின் மேற்பகுதியில் காயம்பட்ட போர் வீரர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்காக வந்தேன்.''

“அப்படியா? நான் இன்று இரவு உன்னை என் பொறுப்பில் பிணைக் கைதியாக வைத்திருக்கிறேன். நாளை நீ இந்த விளக்கங்களை சந்திரகுப்தனிடம் கூறிக்கொள்ளலாம். நான் காவலாளியை அழைக்கட்டுமா?''

சோமதத்தை மிகவும் அமைதியாக இருந்தாள்.

நான் மீண்டும் கேட்டேன்: “நான் காவலாளியை அழைக்கட்டுமா?''

பதைபதைப்பு கலந்த குரலில் சோமதத்தை சொன்னாள்: “உனக்கு எது வேண்டுமானாலும் அதை நான் தருகிறேன். தயவுசெய்து என்னைப் போக விடு.''

நான் சொன்னேன்: “ எனக்கு எது வேண்டுமோ, அதற்காக உன்னிடம் நான் கெஞ்ச வேண்டியதில்லை. நானே பலவந்தமாக அதை எடுத்துக் கொள்வேன்.''

பயந்துபோன குரலில் அவள் கேட்டாள்:  “உனக்கு என்ன வேண்டும்?''

“நீ .....''

மீண்டும் என்னிடமிருந்து விடுபடுவதற்கு அவள் போராடினாள். அவள் திரும்பத் திரும்ப என்னுடைய மார்பின்மீது அடித்தபடி சொன்னாள்: “என்னைப் போகவிடு.... என்னைப் போக விடு...... நான் இந்த நாட்டின் அரசி..... நீ என்னைத் துன்புறுத்தினால், மரணத்தைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.''

நான் சொன்னேன்: “நீ சந்திரவர்மனின் உளவாளி. நீ உன்னுடைய அழகைக் கொண்டு அரசனின் மனதை மயக்கி விட்டாய். அதை வைத்து அரண்மனைக்குள் நுழைந்தும் விட்டாய். நான் உன்னைத் துன்புறுத்தினால் குமாரதேவி எனக்கு பரிசுகள் தருவாள். ஞாபகத்தில் வைத்துக்கொள்.... நீ அரசனின் எஜமானி.''

“என்மீது இரக்கம் காட்டு.... நான் உன்னுடைய மன்னனின் மனைவி.''

“நீ ஒரு வேவு பார்க்கும் பெண்...'' தொடர்ந்து அவள் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதாள். அவளுடைய பரிதாபமான அழுகையைப் பார்த்து கல்கூட கண்ணீர் விட்டிருக்கும். நான் கொடூரமானவனாகவும், பேராசை நிறைந்தவனாகவும், காமவயப்பட்டவனாகவும் இருந்தேன். அவளுடைய கண்ணீரைப் பார்த்தும் நான் எந்தவித சலனமும் அடையாமல் இருந்தேன்.

சோமதத்தை மீண்டும் கேட்டாள்: “என்மீது உனக்கு இரக்கமே இல்லையா?''

நான் சொன்னேன்: “நான் எதை விரும்புகிறேனோ, அதை நீ தருவதாக இருந்தால் நான் உன்னை இத்துடன் விட வாய்ப்பிருக்கிறது. அதற்குப் பிறகு எந்த விஷயத்தையும் நான் சந்திரகுப்தனிடம் கூற மாட்டேன்.''

சோமதத்தை சொன்னாள்: “நான் அப்படிப்பட்ட பெண் அல்ல. சந்திரகுப்தன் என்னுடைய கணவர். நான் அவரைக் காதலிக்கிறேன். ஆமாம்.... நான் சந்திரவர்மனின் ஒற்றன்தான். நான் மகத நாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன்தான் வந்தேன்.

அப்போது காதல் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. நான் என்னுடைய கணவரின் நாட்டை இன்னொரு மனிதருக்குத் தருவதற்கு முயற்சிக்கிறேன். நான் ஏன் அதைச் செய்கிறேன்? உன்னால் அதை எந்தச் சமயத்திலும் புரிந்துகொள்ள முடியாது.

ஆனால், நான் உன்னிடம் சத்தியம் செய்து கூறுகிறேன்- நான் என் கணவர்மீது அன்பு வைத்திருக்கிறேன். என் வாழ்க்கையில் அவரைத் தவிர வேறு எந்த மனிதனுக்கும் இடமில்லை. என்மீது கருணை காட்டு. என்னை விடுவித்து, போக வை. சந்திரவர்மன் மகத நாட்டையும், பாடலிபுத்திரத்தையும் கைப்பற்றிய பிறகு, அவரிடம் காசி, கோசலை, சம்பா, கவுர் ஊர்களில் உனக்கு எது வேண்டுமோ, அதைத் தரும்படிக் கூறுகிறேன். நான் இந்த விஷயத்தை சத்தியம் செய்து உன்னிடம் கூறுகிறேன். என்மீது சந்திரவர்மனுக்கு ஏராளமான பாசம் இருக்கிறது. என்னுடைய விருப்பங்கள் எதையும் அவர் மறுக்கவேமாட்டார்.''

“சந்திரவர்மனால் பாடலிபுத்திரத்தைக் கைப்பற்ற முடியாமல் போனால்....?

“அது நடக்காத விஷயம்....''

“அப்படியா? நீ சந்திரகுப்தன்மீது அந்த அளவிற்கு காதல் வைத்திருந்தால், நீ ஏன் அவரையும், அவருடைய  நாட்டையும் அழிக்க வேண்டுமென்று நினைக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?''

“சந்திரவர்மன் என்னுடைய தந்தை.''

நான் அதிர்ச்சியடைந்தேன்: "நீ.... சந்திரவர்மனின் மகளா?''

வெட்கம் கலந்த குரலில் அவள் சொன்னாள்:

“ஆமாம்... ஆனால், ஒரு விலைமாதுக்குப் பிறந்தேன்.''

“இப்போது நான் புரிந்து கொள்கிறேன்.''

“நீ மனிதப் பிறவியே இல்லை.... உன்னால் எதையும் புரிந்துகொள்ள முடியாது. நான் சிறுவயதிலிருந்தே அரண்மனையில் வளர்க்கப்பட்டவள்''

“உன்னுடைய தந்தைக்காக உன்னுடைய கணவரை அழிப்பதற்கு நீ தயாராக இருக்கிறாய் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால், நீ.... சில விஷயங்களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு கவுர், சம்பா, வாரணாசி- எதுவுமே தேவையில்லை. எனக்குத் தேவை நீதான். எனக்கு எது வேண்டுமோ அதை மறுக்காதே. நீ அதை மறுத்தால், உன்னுடைய இரவு நேர சாகசங்களை நான்அரசனிடமும் அரசியிடம் கூறி விடுவேன்.''

நடுங்குகிற குரலில் சோமதத்தை சொன்னாள்: “நீ விருப்பப்பட்டால், என்னைக் கொன்று என்னுடைய உடலை அகழியின் நீருக்குள் எறிந்து விடலாம். ஆனால், அரசனிடம் எந்த விஷயத்தையும் கூறாதே. ஆண்கள் என்றாலே எப்போதும் சந்தேக குணத்துடன்தான் இருப்பார்கள். என்னுடைய உண்மையான உள் நோக்கங்களை அவரால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், என்மீது நம்பிக்கை அற்றவராக ஆகிவிடுவார். அவரிடம் எந்த விஷயத்தையும் கூற மாட்டேன் என்று நீ எனக்கு சத்தியம் செய்து கூறு.''

ஒரு பெண்ணின் மனம் எப்படியெல்லாம் செயல்படும் என்பதைப் புரிந்துகொள்வது சிரமமான விஷயம்தான். நான் சொன்னேன். “சரி... நான் அரசனிடம் எதைப் பற்றியும் கூற மாட்டேன்.

ஆனால், எனக்கு என்ன பரிசு?''

சோமதத்தை மிகவும் அமைதியாக இருந்தாள்.

நான் மீண்டும் கேட்டேன்: “என் பரிசு....?''

அதற்குப் பிறகும் அவள் அமைதியாகவே இருந்தாள்.

நான் அளவற்ற மோகம் கொண்டு பைத்தியம் பிடித்த நிலையில் இருந்தேன். நான் அவளை என்மீது இழுத்து நசுக்கியவாறு, முத்தம் கொடுத்து விட்டு சொன்னேன். “சோமதத்தை, உன்னுடைய அழகின் நெருப்பு ஜுவாலைக்கு என்னை நானே தியாகம் செய்து கொள்கிறேன்.''

சோமதத்தை ஒரு தீர்க்கதரிசியைப்போலவும் இதயத்தைத் தொடுகிற குரலிலும் சொன்னாள்: “நீ மட்டும் அல்ல- சந்திரகுப்தன், மகதநாடு, நான்.... நாம் எல்லாருமே எரிந்து சாம்பலாகப் போகிறோம்.''

5

கரத்தின் மையப் பகுதியில், பழமையான அந்த அரண்மனை இரண்டு கல் பரப்பளவிற்கு இருந்த நிலப் பகுதியில் கம்பீரமாக நின்றிருந்தது. அது எல்லா பக்கங்களிலும் உயர்ந்த கற்களாலான சுவர்களால் சூழப்பட்டிருந்தது. கிழக்குப் பக்கத்திலிருந்த பிரதான தெருவில், அழகான வேலைப்பாடுகள் அமைந்த உயரமான கல்லாலான கதவு இருந்தது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால்- வினோதமான முறையில் அமைந்த, இரண்டு மாடிகளைக் கொண்ட ஒரு கட்டடம் இருந்தது. நிறைய தூண்கள் அதைத் தாங்கிக் கொண்டிருந்தன. அதற்குப் பின்னால் ஒன்றுக்குப் பின் இன்னொன்றாக கட்டடங்கள்.....

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel