மண் விளக்கு - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
சந்திரவர்மன் சொன்னான்: “நீ சந்தோஷப்படும் வண்ணம், நான் அதைச் செய்வேன் என் மகளே!''
சில மனிதர்கள் என்னை தரையில் வீசி எறிந்து பிறகு கயிற்றால் கட்டினார்கள். சோமதத்தை எனக்கு அருகில் வந்து என் முகத்தில் மிதித்தாள். பிறகு அவள் சந்திரவர்மனை நோக்கித் திரும்பி, “தயவு செய்து இப்போது ஒரு தந்தையின் கடமையைச் செய்யுங்கள்'' என்றாள்.
சந்திரவர்மனின் குரல் இடறியது. “நான் எதைச் செய்ய வேண்டுமென்று நீ விருப்பப்படுகிறாய்?'
சோமதத்தை சொன்னாள்: “என்னுடைய பிறப்பிற்கு நீங்கள்தான் பொறுப்பு. இப்போது நீங்கள் இந்த உடலை அழியுங்கள்.''
சந்திரவர்மன் ஒரு சிலையைப்போல நின்று விட்டான். சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் மெதுவான குரலில் சொன்னான்: “சரி...''
“என் ஆன்மா புனிதமானது- அதை இந்த அசுத்தமான உடலிலிருந்து தயவுசெய்து விடுதலை செய்யுங்கள்'' என்றாள் சோமதத்தைஅவள் தன் தந்தைக்கு முன்னால் தலையைக் குனிந்து கொண்டு நின்றாள். சந்திரவர்மன் உறுதியான குரலில் சொன்னான்: “என்னையே பாருங்கள்! என் மகளின் உடல் அசுத்தமானதாக ஆகி வெறுப்பிற்கு இலக்காகிவிட்டது. நான் அதை அழிக்கிறேன்.''
அவன் தன்னுடைய ஈட்டியை அவளுடைய மார்பைக் குறி வைத்துக் கொண்டே பின்னோக்கி நகர்ந்தான். சோமதத்தை பயமே இல்லாத கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
நான் பயந்துபோய் கண்களை மூடிக்கொண்டேன்.
நான் மீண்டும் கண்களைத் திறந்தபோது- அங்கிருந்த வெள்ளை நிற பளிங்குத் தரையில் சோமதத்தையின் உயிரற்ற உடல் ரத்தத்தில் தோய்ந்து கிடப்பதைப் பார்த்தேன்.
பின்கதை
பாடலிபுத்திரத்தின் அரண்மனைக்கு அருகில் இருந்த பாதி வறண்டு போயிருந்த ஒரு கிணற்றில் நான் வீசி எறியப்பட்டேன். கிணற்றின் வாய்ப் பகுதி ஒரு பலமான இரும்பு வலையால் மூடப்பட்டிருந்த என்னுடைய இடுப்புப் பகுதி வரை கிணற்றின் வழவழப்பான நீருக்குள் மூழ்கியிருக்க, நான் அடுத்த மூன்று மாதங்களும் அங்கேயே வாழ்ந்தேன். பாம்புகளும் தவளைகளும் மட்டுமே என்னுடைய நண்பர்களாக இருந்தார்கள். ஒரு உயர்நிலை பணிப் பெண் ஒரு தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த சுத்திகரிப்புப் பெண்ணுடன் வருவாள். அந்த தாழ்ந்த இனப் பெண் புழுக்கள் தின்று கொண்டிருக்கும் பன்றியின் மாமிசத்தை நான் சாப்பிடுவதற்காக கிணற்றுக்குள் எறிவாள். நான் அந்தப் பெண்ணுடன் ஒரு வினோதமான நட்பை உண்டாக்கிக் கொண்டேன். தான் அவளுக்கு லஞ்சம் தருவதாகக்கூட கூறினேன். இங்கிருந்து நான் தப்பிப்பதற்கு எனக்கு அவள் உதவினால், அவளுக்கு பத்தாயிரம் பொற்காசுகளைத் தருவதாகக் கூறினேன். ஆனால் பயந்துபோன அந்தப் பணிப்பெண் என்னைத் திட்டிவிட்டு ஓடிவிட்டாள். அதற்குப் பிறகு அவள் அங்கு வரவே இல்லை.
நான் இந்த நரகத்தில் இருந்துகொண்டு சோமதத்தையை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தேன். அவள் சந்திரவர்மனால் ஒரு ஒற்று வேலை செய்யும் பெண்ணாக அமர்த்தப்பட்டாள். சந்திரகுப்தனின் அரண்மனைக்குள் அவள் எப்படியோ நுழைந்துவிட்டாள். அவன் அவளைத் திருமணம் செய்துகொண்டான். அவள் தன் கணவன்மீது இந்த அளவுக்கு ஆழமான காதல் கொண்டவளாக ஆவோம் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
அவளுடைய தந்தை கோட்டையைக் கைப்பற்றப் போகும் செயலுக்கு உடந்தையாக இருப்பதன் மூலம் தன் கணவனுக்கு துரோகம் செய்வது என்பது அவளைப் பொறுத்தவரையில் மிகவும் சிரமமான விஷயமாக இருந்தது. குமாரதேவி தன் கணவன் மீது மிகுந்த வெறுப்புடன் இருக்கிறாள் என்பதும், எல்லா வகையிலும் அவனை அவள் பொருட்படுத்தவே இல்லை என்பதும் அவளுக்குத் தெரியும். சோமதத்தையால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தான் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி கோட்டையை தன் தந்தையிடம் ஒப்படைத்தே ஆகவேண்டும் என்பதில் தெளிவான முடிவை மனதில் எடுத்திருந்தாள்.
ஆனால், தன்னுடைய சேவைகளுக்கான பரிசாக தன் தந்தையிடம் அதைத் திரும்பவும் கேட்டுப் பெறவேண்டும் என்று அவள் தீர்மானித்திருந்தாள்.
அதற்குப் பிறகு பாடலிபுத்திரத்தின் அரசனாக தன் அன்பிற்குரிய கணவனை ஆக்குவது என்று அவள் முடிவெடுத்திருந்தாள். குமாரதேவியின் பலமும் கர்வமும் அழிந்துவிடும். அதற்குப் பிறகு சந்திரகுப்தனுடன் சேர்ந்து கமாராணியாக சோமதத்தையே ஆட்சி செய்வாள்.
ஆனால், என்னுடைய காமவெறி அவளுடைய திட்டங்களை அழித்துவிட்டது. அவள் மிகப்பெரிய தொல்லையில் சிக்கிக் கொண்டாள். அவள் ஒரு ஒற்று வேலை பார்த்த பெண் என்ற உண்மை தெரிந்தால், அவளுடைய அன்பிற்குரிய கணவனிடம் உண்டாகும் வெறுப்பையும் நம்பிக்கையற்ற தன்மையையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது. தன்னைப் பற்றிய எந்த விஷயமும் சந்திரகுப்தனுக்குத் தெரியக்கூடாது என்பதுதான் அவளுடைய முழு எண்ணமும். அப்படியென்றால் மட்டுமே, அவள்மீது அவன் கொண்டிருக்கும் காதல் சிறிதும் பாதிப்படையாமல் இருக்கும்.
அவள் என்னுடைய திட்டத்தின்படி நடந்தாள். ஆனால் சந்திரகுப்தன், குமாரதேவி, அவர்களுடைய மகன் சமுத்திரகுப்தன் ஆகியோர் ரகசிய சுரங்கப் பாதையின் வழியாக தப்பித்துச் செல்வதற்கு அவள் உதவினாள். தன்னுடைய உண்மையான காதலி அவள் என்ற தெளிவான தீர்மானத்துடன் எப்போதும் சந்திரகுப்தன் இருக்கும்வரை, சோமதத்தை இறப் பதற்கு பயப்படவில்லை. எப்படியெல்லாம் புரிந்துகொள்ள முடியாத வழிகளில் ஒரு பெண்ணின் மனம் செயல்படுகிறது என்பதே வினோதமான விஷயம்தான்! தன்னுடைய அன்பிற்குரிய கணவனின் கண்களில் தான் எப்போதும் காதல் தேவதையாக நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காக அவள் தன்னைத்தானே தியாகம் செய்துகொண்டாள்.
நம்முடைய முந்தைய பிறவிகளில் நமக்குத் தெரிந்தவர்களை, இந்தப் பிறவியில் நாம் சந்திக்க நேர்வதுண்டு என்பதை நான் நம்புகிறேன். சோமதத்தையை நான் மீண்டும் சந்திக்க நேர்ந்தால், நான் உடனடியாக அவளை அடையாளம் கண்டுகொள்வேன். ஒருகாலத்தில் அவள் எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் அவள்மீது கொண்டிருந்த அளவற்ற வெறியை அவளுடைய புதிய வாழ்க்கையின் புதிய தோற்றம் சிறிதும் தணித்துவிடாது.
ஆனால், அவள் என்னை அடையாளம் தெரிந்துகொள்வாளா? அவள் முகத்தைச் சுளிக்கமாட்டாளா? இப்போது அவள் என்னைச் சந்திக்க நேர்ந்தால், அவளுடைய உதடுகள் வெறுப்பால் இறுகாதா? நான் எதை விரும்புவேன் என்பது எனக்குத்தான் தெரியும்!