மண் விளக்கு - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6575
இந்த முறை அம்பு சரியான இடத்தில் போய் மோதியது- மேற்கூரையிலிருந்த சக்கரத்தின் மையப் பகுதியில் இருந்த துவாரத்தில்! உடனடியாக சுவரில் ஒரு ரகசியக் கதவு திறந்தது. அப்போது இருண்ட சுரங்கப் பாதைக்குள் செல்லும் படிகள் தெரிந்தன. சோமதத்தை உணர்ச்சிவசப்பட்டு நின்றாள். சிறிது நேரம் அவள் தரையில் படுத்து அழுதாள். பிறகு வேகமாக எழுந்து குமாரதேவியிடம் சென்று சொன்னாள்: “என் அரசியே! இப்போது உங்கள் கணவருடனும் மகனுடனும் இந்த சுரங்கப் பாதைக்குள் செல்லுங்கள். இது மிகவும் பழமையான, நகரத்திற்கு வெளியே எதிரிகளின் பார்வையிலிருந்து விலகி, கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் ஒரு மடத்தில் போய் முடியும். நீங்கள் அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பிச் சென்றுவிடலாம்.''
சந்திரகுப்தன் சுரங்கப் பாதையின் ஆரம்பப் பகுதியையே வெறித்துப் பார்த்தான். அவன் சொன்னான்: “தப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?''
“எதிரிகள் நகரத்தை ஆக்கிரமித்துவிட்டார்கள்.''
அரசனும் அரசியும் இளம் இளவரசனுடன் சுரங்கப் பாதைக்குள் நுழைந்தார்கள். சோமதத்தை அரசனுக்கு கண்ணீர் மல்க ஒரு பிரியா விடை கொடுத்தாள். திடீரென்று சந்திரகுப்தன் தன்னுடைய சுயஉணர்விற்கு வந்தான். “நீ எங்களுடன் வர வில்லையா, சோமதத்தை?''
சோமதத்தை தன்னுடைய முகத்தை கைகளைக் கொண்டு மறைத்துக் கொண்டாள். “இல்லை, என் அன்பிற்குரிய அரசே! நான் உங்களுடன் வரும் நிலையில் இல்லை. அரசி உங்களிடம் எல்லா விஷயங்களையும் கூறுவார். சந்திரவர்மன் என்னுடைய தந்தை. இதைத் தெரிந்துகொண்டு, என்னை மன்னித்துவிடும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் புறப் பட்டாக வேண்டும்... நான் இன்னொரு பாதையில் செல்கிறேன்.''
சோமதத்தை பலவந்தமாக சுரங்கப் பாதையின் கதவை மூடியதும், இதயமே நொறுங்கிப் போகும் அளவிற்கு உரத்த குரலில் சந்திரகுப்தன் அழுதான். சோமதத்தை அழுது கொண்டே கூறினாள்: “நான் இறந்து விட வேண்டும்... நான் உங்களை இந்த வாழ்வுக்குப் பிறகு சந்திப்பேன். நாம் இருவரும் இந்தப் பிறவியில் இனி எப்போதும் சந்திக்க மாட்டோம்.''
தரையில் உட்கார்ந்து கொண்டு, சோமதத்தை மனதில் கசப்பு உண்டாக தேம்பித் தேம்பி அழுதாள். ஆனால், அவளுடைய கண்ணீரால் அரண்மனையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைக்க முடியவில்லை.
9
சந்திரவர்மனின் போர்ப்படை கவுதம் துவாரின் வாயிலின் வழியாக, அதன் தளபதி சந்திரவர்மனே முன்செல்ல கோட்டைக்குள் நுழைந்தது. நான் அங்கிருந்த காவலாளிகள் எல்லாரையும் அங்கிருந்து அகன்றுவிடும்படிக் கூறிவிட்டேன். அப்படியென்றால்தான் அங்கு ரத்தம் சிந்தாமல் இருக்கும்.
சந்திரவர்மன் என்னைப் பார்த்துக் கேட்டான்: “நீதான் துரோகியா?''
அவனுடைய குரலின் தன்மையே எனக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய நன்மைக்காகத்தான் நான் என்னுடைய அரசனுக்கே துரோகம் செய்தேன். எது எப்படி இருந்தாலும், நான் பணிவான குரலில் சொன்னேன்: “ஆமாம்... என் அரசரே! வெற்றி உங்களுக்குக் கிடைக்கட்டும்.''
சந்திரவர்மன் தன் கொடூரமான கண்களால் என்னையே பார்த்தான். பிறகு சொன்னான்: “எங்களை அரண்மனைக்குள் அழைத்துச் செல்.''
நெருப்பில் எரிந்து கொண்டிருந்த அரண் மனைக்குள் அவனை அழைத்துச் செல்வதென்பது சிரமமான விஷயமாக இல்லை. அரண்மனையில் வாசலுக்குள் நுழைவதற்கு எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாததால், அரசவை இருந்த இடத்திற்குச் சென்றோம்.
அந்த இடத்திற்கு இன்னும் நெருப்பு பரவாமல் இருந்தது. அந்த அறை மிகவும் இருண்டதாகவும் ஆட்கள் யாருமே இல்லாமலும் இருந்தது. அரசனின் சிம்மாசனத்திற்கு அருகில் சோமதத்தை மட்டும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அவள் ஒரு மின்னல் கலந்த இடியைக் கொண்ட மேகத்தைப்போல காணப்பட்டாள்.
அவளுடைய நீளமான கறுத்த கூந்தல் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. அவள் தன் நெற்றியில் சிவப்பு நிறத் தில் குறி வைத்திருந்தாள். அவளுடைய கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. இருண்ட அரசவை படைவீரர்களால் விளக்கேற்றப்பட்டு வெளிச்சம் நிறைந்ததாக ஆனது. சோமதத்தை வேகமாக முன்னோக்கி வந்து, சந்திரவர்மனின் பாதத்தைத் தொட்டாள். சந்திரவர்மன் மிகுந்த பாசத்துடன்அவளையே பார்த்தான். பிறகு, மென்மையான குரலில் “என் அன்பு மகளே!'' என்றான்.
சோமதத்தை தழுதழுத்த குரலில், “தந்தையே, நான் உங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றி விட்டேன்.'' என்றாள்.
சந்திரவர்மன் சொன்னான்: “என் மகளே! நான் உனக்கு ஒரு பரிசு தர இருக்கிறேன். இந்த விலைமதிப்பற்ற கழுத்தில் அணியும் பதக்கத்தை நீ பெற்றுக்கொள்ள வேண்டும்.'' அவன் ஒரு பதக்கத்தை தன் மார்பிலிருந்து எடுத்து சோமதத்தையிடம் கொடுத்தான்.
சோமதத்தை கழுத்தில் அணியும் அந்தப் பதக்கத்தை வீசி எறிந்துவிட்டுக் கூறினாள்: “எனக்கு எந்தப் பரிசும் வேண்டாம். என் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் முடிந்துவிட்டன.''
சந்திரவர்மன் ஆச்சரியம் மேலோங்க கேட்டான்: “சந்திரகுப்தன் எங்கே?''
“உங்களால் என் கணவரைப் பார்க்க முடியாது. அவர் அரண்மனையை விட்டு வெளியேறிவிட்டார்.''
“அவன் எங்கே சென்றிருக்கிறான்?''
“ஒரு ரகசிய சுரங்கப் பாதையின் வழியாக அவர் தப்பித்துச் செல்ல நான் உதவினேன்.''
“நீ ஏன் அதைச் செய்தாய்?''
“எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவர் இதற்கு மேலும் இங்கு இருந்தால், எல்லா விஷயங்களையும் அவர் தெரிந்துகொள்ள நேரிடும். அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை தந்தையே! நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். ஒரு பெண்ணுக்கு மதிப்புள்ளவையாக என்னவெல்லாம் இருக்கின்றனவோ, அவை எல்லாவற்றையும் ஒரு கொடூரமான மிருகம் என்னிடமிருந்து அபகரித்துக் கொண்டது.''
அவள் வெறுப்பு நிறைந்த கண்களுடன் என் பக்கம் திரும்பினாள். அவள் என்னை நோக்கி விரலை நீட்டியவாறு சொன்னாள்: “நான் எவற்றையெல்லாம் மதிப்பு உள்ளவையாக நினைத்தேனோ, அவற்றையெல்லாம் தனக்குத் தந்து விடும்படி இந்த கொடூரமான மிருகம் என்னை பலவந்தம் செய்தது.''
என் மூளைக்குள்ளும் இதயத்திற்குள்ளும் ரத்தம் வேகமாகப் பாய்ந்தது. நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். என்னைச் சுற்றியிருக்கும் உலகமே நின்றுவிட்டதைப்போல உணர்ந்தேன். ஒரு உறுமலுடன் சந்திரவர்மன் என்னை நோக்கி வந்து, என் தலைமயிரைப் பற்றி, தன்னுடைய இன்னொரு கையின் விரல்களைக் கொண்டு என் கண்களைப் பிடுங்குவதற்குத் தயாரானான்.
குரூரமான ஒரு சிரிப்புடன் சோமதத்தை சொன்னாள்: “தந்தையே! சற்று பொறுங்கள். நான் என்னுடைய பரிசைப் பெற விரும்புகிறேன். இந்த அரக்கனை இப்போது கொல்ல வேண்டாம். இவன் படிப்படியாக, வேதனை அடைந்து சாகட்டும். விஷத் தன்மை கொண்ட- முட்கள் முழுமையாக நிறைந் திருக்கும் கிணற்றுக்குள் கிடந்து இவன் மெல்ல மெல்ல சாகட்டும். புழுக்கள் தின்று கொண்டிருக்கும் அழுகிப்போன பன்றி மாமிசத்தை மட்டுமே இவன் சாப்பிடட்டும்...
இவன் இறப்பதற்கு முன்னால், இவனுடைய கைகள் ஒரு குஷ்ட ரோகியின் கைகளைப்போல கீழே விழட்டும்... அதற்குப் பிறகுதான் என்னுடைய ஆன்மாவுக்கு சாந்தி உண்டாகும்.''