மண் விளக்கு - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
அந்த முழுப் பகுதியும் சிவப்பு நிறமாக ஆனது. தூரத்திலிருந்து அதைப் பார்க்க முடிந்தது. முதலில் மக்கள் அரண்மனையை நோக்கி ஓடினார்கள். அவர்கள் கத்திக்கொண்டே அதைச் சுற்றிலும் போய் நின்றார்கள். திடீரென்று சந்தோஷக் கூப்பாடுகளும் வெற்றி முழக்கங்களும் தூரத்தில் கேட்டன. கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் கத்தினான்: “ஓடுங்கள்! ஓடுங்கள்... பகைவன் நகரத்திற்குள் நுழைந்துவிட்டான்.'' உடனடியாக மக்கள் கூட்டம் கலைந்து தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. ஓடும் வழியில் இருந்த தடைக்கல்லில் மோதி பலர் தங்களின் கால்களை ஒடித்துக் கொண்டார்கள். பலர் மூச்சுவிட முடியாமல் இறந்தார்கள். துயரத்தால் உண்டான சலனமும் அழுகையும் கோட்டையிலும் அரண்மனையிலும் ஒலித்த வண்ணம் இருந்தது. இது இப்போது நகரமெங்கும் பரவிக் கொண்டிருந்தது.
அந்தச் சமயத்தில் சோமதத்தை எங்கே இருந்தாள்?
சோமதத்தை அரசி குமாரதேவியின் அரண் மனைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். அவளுடைய கூந்தல் சுதந்திரமாக கிடந்தது. அவளுடைய ஆடைகள் கலைந்து காணப்பட்டன. அரசியின் அரண்மனை அந்தச் சமயத்தில் நெருப்பிற்கு இரையாகாமல் இருந்தது. ஆனால், பணியாட்களும் பணிப்பெண்களும் காவலாளிகளும் தங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அரசியையும் அவளுடைய மகனையும் பாதுகாக்காமல் ஓடிவிட்டிருந்தனர். அரசி தன் மகனைத் தன்னுடைய கரங்களில் பிடித்த வண்ணம் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தாள்.
சோமதத்தை அவளைக் குலுக்கி எழுப்பிக் கொண்டே சொன்னாள்: “என் அரசியே! தயவு செய்து எழுந்திருங்கள். அரண்மனையில் நெருப்பு பிடித்திருக்கிறது.''
குமாரதேவி படுக்கையை விட்டு எழுந்து, தூக்கக் கலக்கத்துடன் கேட்டாள்: “யார் அது?''
“நான்தான் சோமதத்தை. இனிமேலும் தாமதிக் காதீர்கள். உடனடியாக எழுந்திருங்கள்.'' இதைக் கூறிக் கொண்டே அவள் தூங்கிக்கொண்டிருந்த இளவரசன் சமுத்திரகுப்தனை தன் கைகளில் தூக்கினாள்.
அதற்குள் குமாரதேவி எழுந்து விட்டிருந்தாள். அவள் சோமதத்தையை வெறித்துப் பார்த்துக் கொண்டே சொன்னாள்: “என் மகனைத் தொடதே, பணியாட்கள் எங்கே?''
“அவர்கள் எல்லாரும் ஓடிவிட்டார்கள்.''
“அரண்மனையில் எப்படி நெருப்பு பற்றியது?''
“நான்தான் அரண்மனைக்கு நெருப்பு வைத்தேன்.''
அதற்குமேல் இப்போது மறைத்து வைப்பதற்கு எதுவுமில்லை. சோமதத்தை குமாரதேவியையே தைரியம் நிறைந்த கண்களுடன் பார்த்தாள்.
குமாரதேவி உரத்த குரலில் கத்தினாள்: “நீ... வேசி! ஒருநாள் நீ இதைச் செய்வாய் என்று நான் எதிர்பார்த்தேன். நீ புத்தமதத்தைச் சேர்ந்த ஒரு துறவியை உன்னுடைய அறைக்குள் அழைத்துச் சென்றபோதே உன்னுடைய திட்டத்தை நான் புரிந்து கொண்டேன்.''
சோமதத்தை சொன்னாள்: “அரசியே! உங்களுடைய கோபத்தில் ஒரு அப்பாவி மனிதனின் மீது பழி கூறாதீர்கள். அந்த புத்த துறவியால்தான் இப்போது உங்களைக் காப்பாற்ற என்னால் முடிந் திருக்கிறது. இப்போது வாருங்கள்... பிரதான அரண்மனை முழுமையாக எரிந்து நாசமாகிவிட்டது. நீங்கள் தாமதித்தால், என்னால் உங்களைக் காப்பாற்ற இயலாமல் போய்விடும்.''
“நீ என்னைக் காப்பாற்றப் போகிறாயா? என்னை நானே காப்பாற்றிக் கொள்ள முடியாதா? நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?''
“இல்லை... என் அன்பான அரசியே! இன்று மட் டும் தான் என்னால் உங்களைக் காப்பாற்ற முடியும்.''
“நீ இதன் மூலம் என்ன சொல்ல வருகிறாய்?''
“இதற்கு அர்த்தம்- சந்திரவர்மனின் படை நகரத்திற்குள் நுழைந்துவிட்டது. இந்த நேரத்தில் அரண்மனையின் எரியாத பகுதிகளை அவர்கள் ஆக்கிரமித்திருப்பார்கள்.''
குமாரதேவியின் கண்கள் ஒளிர்ந்தன. “நீ... மாயஜாலக் காரி! நீதான் இதற்கெல்லாம் காரணம். உன்னால் மகத அரசே அழிந்துவிட்டது...''
சோமதத்தை அமைதியான குரலில் கூறினாள்: “நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், நீ இதற்கு மேலும் தாமதித்தால், இளவரசரைக் காப்பாற்ற முடியாமலே போய்விடும். அரண்மனையை நெருப்பு எப்படி சுற்றி வளைத்திருக்கிறது என்பதைப் பாருங்கள்.''
திறந்திருந்த சாளரத்தின் வழியாக புகை வேகமாக நுழைய ஆரம்பித்திருந்தது.
சோமதத்தை தன் கைகளில் இளவரசன் சமுத்திரகுப்தனை எடுத்துக் கொண்டே சொன்னாள்: “இன்று நான் என் கணவரின் வாரிசை காப்பாற்றுகிறேன். அதற்காகத்தான் நான் இங்கே வந்தேன். நீங்கள் இங்கே இருக்க விருப்பப்பட்டால் இருக்கலாம். நான் போகிறேன்.'' இந்த வார்த்தைகளைக் கூறிக்கொண்டே, அவள் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
குமாரதேவி ஓடிச்சென்று அவளுடைய கரங்களைப் பற்றினாள்: “நீ... பேயே! என் மகனை என்னிடம் கொடு.''
சோமதத்தை அரசியை தன் கோபமுற்ற பார்வையால் எரித்து விடுவதைப் போல பார்த்துக்கொண்டே சொன்னாள்: “மூளையற்ற பெண்ணே! உங்களுக்கு எது நல்லது என்பதையே புரிந்துகொள்ளத் தெரியவில்லையா? என் கணவரின் மகன் என்னுடைய மகனும்தானே? இந்த அரண்மனை என்னால் நெருப்பு வைக்கப்படவில்லை. அதே நேரத்தில் உங்களின் பிடிவாதத்தாலும் கர்வத்தாலும்... அதன் காரணமாக உங்களின் சொந்த கணவரையே நீங்கள் ஒதுக்கினீர்கள். இந்த நெருப்பில் நீங்கள் எரிய வேண்டும்.''
சோமதத்தை இளவரசனைத் தூக்கிக் கொண்டு புகை பரவிவிட்டிருந்த வாசல்கள் வழியாக ஓடிக்கொண்டிருந்தாள். குமாரதேவி தன்னையே அறியாமல் அழுதுகொண்டும், அவளைத் திட்டிக்கொண்டும் சோமதத்தையைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள்.
தன்னுடைய படுக்கையறைக்குத் திரும்பி வந்த சோமதத்தை அங்கு அரசன் குழப்பமான அமைதியுடன் படுக்கையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். தன்னைச் சுற்றிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையே அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அறை முழுவதும் புகை நிறைந்திருந்தது. அறையின் நான்கு பக்கங்களிலும் இருந்த நான்கு விளக்குகளும் மங்கலாகத் தெரிந்தன.
சோமதத்தை பதைபதைப்புடன் இளவரசனை அரசனின் மடியில் வைத்துவிட்டு, ஒரு வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வந்தாள். புகை மண்டலத்திற்கு மத்தியில்- தெளிவாகப் பார்க்க முடியவில்லையென்றாலும், அவள் தர்மசக்கரம் என்று அழைக்கப்படும் வழிபடும் சக்கரத்தின் மையத்தில் இருந்த துவாரத்தைக் கூர்ந்து பார்ப்பதற்கு முயற்சி செய்தாள். அவளுடைய கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. அவள் தன்னுடைய குறியைத் தவற விட்டாள். அம்பு சுவரின்மீது போய் மோதியது. அடுத்த அம்போ தரையில் விழுந்தது. சோமதத்தை நம்பிக்கையை இழந்து தேம்பி அழுதாள். ரகசிய கதவு எந்தச் சமயத்திலும் திறக்காதா? பிறகு தன்னுடைய அன்பான கணவனையும் அவனுடைய மகனையும் அவள் எப்படிக் காப்பாற்றுவாள்?
முன்னேறி வந்து கொண்டிருந்த நெருப்பால் அறை கொஞ்சம் கொஞ்சமாக வெப்பமாகிக் கொண்டிருந்தது. அரசனும் குமாரதேவியும் பேசும் சக்தியை இழந்து, பார்வையாளர்களைப்போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். சோமதத்தை தன்னுடைய உணர்வுகளை மிகவும் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டு, மீண்டும் மேற்கூரையின்மீது குறி வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். புகை, கண்ணீர் ஆகியவற்றுக்கு மத்தியில் குறி வைப்பது என்பது மிகவும் சிரமத்திற்குரிய விஷயமாக இருந்தது. அவள் மிகவும் அக்கறை எடுத்து முயற்சி செய்தாள்.