மண் விளக்கு - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6575
அகின்சான் சற்று புன்னகைத்துக் கொண்டே சொன்னார். “மடத்தின் வழியாக…”
“அதுவும் எனக்குத் தெரியும், மடத்தில் உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தனவா?”
“இல்லை…”
“பிறகு?”
“அது மிகப் பெரிய ரகசியம்… தீபன்விதா, என்னிடம் எந்தக் கேள்விகளையும் கேட்காதீர்கள். நான் அவற்றுக்கு பதில் கூற மாட்டேன்.”
“அப்படியென்றால், நான் கூறுகிறேன். மடத்திற்குள் ஒரு ரகசிய சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வெளியிலிருந்த அந்த சுரங்கப் பாதையின் வழியாக உணவுப் பொருட்கள் வருகின்றன. நான் கூறுவது சரியா?”
துறவி தயங்கிக் கொண்டே சொன்னார்: “ஆமாம்… உங்களுக்கு உண்மை தெரிந்திருக்கும்பட்சம், என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?”
“எனக்கு எதுவும் தெரியாது. அது நான் மனதில் நினைத்த விஷயம். சுவாமி, தயவுசெய்து உங்களுடைய மகளாகவும் பக்தையாகவும் இருக்கும் என்னிடம் கருணை காட்டுங்கள். அந்தச் சுரங்கப் பாதை எப்போது, எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?”
துறவி சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கினார். கண்களை மூடிக் கொண்டு தன்னைப் படைத்தவரிடம் உத்தரவு கேட்பதைப் போல இருந்துவிட்டு, பிறகு சொன்னார். “நான் கூறுவதை கவனமாகக் கேளுங்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை, அந்தச் சுரங்கப் பாதையைப் பற்றி எனக்கு சிறிதுகூட தெரியாது. எனக்கு முன்னால் இருந்த மடத்தின் தலைவர் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், தன்னுடைய மரணத்திற்கு முன்பு என்னிடம் எந்த விஷயத்தையும் கூறியதில்லை.”
சோமதத்தை கண்களை அகல விரிய வைத்துக் கொண்டு, சிறிதும் இமைக்காமல், அவரையே முழுக் கவனத்துடன் பார்த்தவாறு அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அகின்சான் தொடர்ந்து சொன்னார்: “மடத்தில் ஒரு பாதாள அறை இருக்கிறது. அங்கு நாங்கள் புத்தரின் பொருட்களை வைத்திருக்கிறோம்… அதற்கு மேலே இன்னொரு அறை இருக்கின்றது. அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த அறை அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. நான் சில நேரங்களில் அங்கு தியானம் செய்வதற்காகச் செல்வேன். கடந்த பெளர்ணமி நாளன்று இரவு, அந்த அறைக்குச் சென்றேன். அறை மிகவும் அழுக்காக இருந்தது. மேற்கூரையின் மையத்தில் ஒரு தேன் கூடு இருப்பதைப் பார்த்தேன். அந்த இடத்தில் வழிபடும் சக்கரம் செதுக்கப்பட்டிருந்தது. ஒரு மூங்கிலின் மேற்பகுதியில் நெருப்பைப் பற்ற வைத்து நான் தேனீக்களை விரட்ட முயற்சித்தேன். தேனீக்கள் அங்கிருந்து சென்றவுடன் தேன் கூட்டை அழிக்க வேண்டும் என்பதற்காக அதை ஒரு தள்ளு தள்ளினேன். நான் அதைச் செய்ய முயற்சித்தபோது, அங்கிருந்த வழிபாடு செய்யப் பயன்படும் சக்கரத்தின் மையத்தில் இருந்த சிறிய துவாரத்திற்குள் மூங்கில் மாட்டிக் கொண்டது. திடீரென்று சுவரின் ஒரு பக்கம் சற்று நகர்ந்தது. நான் மிகவும் ஆச்சரியப்பட்டு, சதுரமாக இருந்த வாய்ப்பகுதியைப் பார்ப்பதற்காகச் சென்றேன். இருட்டில் படிகள் கீழே இறங்கிச் செல்வதை நான் பார்த்தேன்.
மற்ற மனிதர்கள் அதைப் பார்த்து விடுவார்களே என்பதைத் தடுப்பதற்காக, நான் பிறகு… வேறு எதுவும் செய்யவில்லை. ஆனால், அந்த அறையின் கதவை மூடிவிட்டு வந்துவிட்டேன். இரவில் எல்லாரும் தூக்கத்தில் மூழ்கிக் கொண்டிருந்தபோது, நான் ஒரு விளக்கை கையில் எடுத்துக் கொண்டு அந்தப் படிகளில் இறங்கினேன். படிகள் கற்களால் அமைக்கப்பட்டிருந்தன. அவை மிகவும் குறுகலாக இருந்தன. மேற்கூரை மிகவும் தாழ்வாக இருந்தது. ஒரு ஆள் நிமிர்ந்து நிற்க முடியாது. ஆங்காங்கே தரையில் காற்று வருவதற்காக துளைகள் இருந்தன. முன்னோக்கி நடந்து செல்லும்போது, நடந்து செல்பவர்கள் அந்தத் துளைகளைத் தவிர்த்துவிட்டுச் செல்ல வேண்டும். நான் நீண்ட நேரம் சுரங்கப் பாதையின் இறுதிப் பகுதியை அடையவே இல்லை. என் விளக்கிலிருந்த எண்ணெய் முழுவதும் தீர்ந்து போய் விட்டது. அதனால், நான் திரும்பி வர வேண்டியதாகிவிட்டது. அடுத்த ஐந்து இரவுகளிலும் நான் சுரங்கப் பாதையின் இறுதிப் பகுதியை அடைவதற்காக முயற்சித்து, ஆறாவது இரவன்று அந்த முயற்சியில் இறுதியாக வெற்றி பெற்றேன். நான் சுரங்கப் பாதையின் இறுதிப் பகுதியை அடைந்தேன். அது ‘காகத்தின் பாதம்’ மடத்தின் வாசலில் போய் முடிந்தது.”
ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டே சோமதத்தை கேட்டாள்: “பிறகு?”
துறவி கவலை நிறைந்த குரலில் சொன்னார்: “ஒரு காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய அந்த மடம் தன்னுடைய செல்வாக்கை இழந்து விட்டது. அது அழிந்து போய் பாம்புகளின் இல்லமாகி மாறி, கேட்பாரற்ற நிலையில் இருந்தது. கவுதமரின் அளவற்ற அன்பு என்னை அந்தப் பாதையைக் காணச் செய்தது. நான் திரும்பி வந்து அரசுப் பொறுப்பில் இருந்த முக்கியமான அதிகாரிகளிடம், அந்த சுரங்கப் பாதையின் வழியாக கோட்டையில் பட்டினி கிடக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டுவர முடியும் என்று கூறினேன்.”
துறவி மிகவும் அமைதியாக இருந்தார். சோமதத்தை அமைதியாக அமர்ந்து, ஆழமான சிந்தனையில் மூழ்கியிருந்தாள். துறவி புறப்படுவதற்காக எழுந்தார். சோமதத்தை கைகளைக் குவித்துக் கொண்டே கேட்டாள்: “இன்னும் ஒரே ஒரு கேள்வி. இந்தக் கோட்டையைக் கட்டிய மனிதர், புத்த மதத்தை சேர்ந்த ஒருவரா?”
அகின்சான் சொன்னார்: “ஆமாம்… இந்த அரண்மனையைக் கட்டியவர் அசோக மன்னன் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போது கட்டப்பட்ட இந்த மடமும் அவருக்குச் சொந்தமானதே.”
சோமதத்தை எழுந்தாள். “தயவு செய்து எனக்கு உங்கள் ஆசீர்வாதத்தைத் தாருங்கள். என் மனதில் இருக்கும் விருப்பம் நிறைவேறட்டும்.”
வயதான துறவி சிரித்துக் கொண்டே சொன்னார்.
“புத்தர் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பாராக! அவர் அனைத்தையும் அறிந்தவர்.”
துறவி அங்கிருந்து நகர்ந்தவுடன், சோமதத்தை குழப்பமான மனதுடன் அறைக்குள் சிந்தனையில் மூழ்கியவாறு இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தாள். வழிபடும் சக்கரம்! வழிபடும் சக்கரம்! ஆனால் அரண்மனையில் வழிபடும் சக்கரங்கள் செதுக்கப்பட்டிருக்கவில்லை. புத்தருடன் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இந்து மதத்தில் ஆழமான ஈடுபாடு கொண்ட குமார தேவியால் நீக்கப்பட்டிருந்தன. அவற்றின் இடத்தில் அவள் ஆண் தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வங்களின் உருவங்களை இடம்பெறச் செய்திருந்தாள்.
அறையின் மேற்பகுதியையும் தரையையும் பார்த்துக் கொண்டிருந்த சோமதத்தை, திடீரென்று மேற்கூரையைக் கூர்ந்து பார்த்தாள். கூரையில் ஒரு வழிபடும் சக்கரம் செதுக்கப்பட்டிருப்பதை அவள் கவனித்தாள். அதன் மையப் பகுதியில் ஒரு சிறிய துவாரம் இருந்தது. அந்த வழிபடும் சக்கரம் நீக்கப்பட வேண்டிய ஒன்று ஒன்று குமாரதேவி நினைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால்- அதை எட்டுவது என்பது அந்த அளவிற்கு எளிதான விஷயமாக இல்லை. மிகவும் சிரமப்பட்டு பார்க்கக் கூடிய விதத்தில்தான் அது இருந்தது.