மண் விளக்கு - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6575
சோமதத்தை பணிப் பெண்ணை அழைப்பதற்காக வெளியே வேகமாக ஓடினாள். ஆர்வத்துடன் அவள் பணிப் பெண்ணிடம், போர்க் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து வில்லையும் அம்பையும் எடுத்து வரும்படி சொன்னாள். “உன்னிடம் யாராவது கேள்வி கேட்டால், அவர்களிடம் அரசனின் மனைவி சோமதத்தை போர் பற்றிய விஷயங்களில் பயிற்சி பெற விரும்புகிறாள் என்று கூறு.” அவள் பணிப் பெண்ணிடம் கூறினாள்.
7
இரவு முழுவதும் புல்லாங்குழலின் ஆக்கிரமிப்பு நிறைந்ததாக இருந்தது. சோமதத்தை மிகவும் அமைதியாக விளக்கிற்கு முன்னால் உட்கார்ந்திருந்தாள். அவள் இசையை மிகவும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள். நான் கோட்டையின் சுவரின்மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். புல்லாங்குழல் முதலில் வசந்த காலத்தைப் பற்றிய ராகத்தில் இருந்தது- வசந்த பஹார் என்பது அந்த ராகத்தின் பெயர். பிறகு அது குர்ஜாரி ராகத்திற்கு மாறியது. மீண்டும் அது வசந்த பஹாருக்கு வந்தது. இறுதியாக மால்கோஷ் என்ற ராகத்தில் முடிந்தது. இசை பலவித ஆழமான திருப்பங்கள் கொண்டதாக இருந்தது. வேகமாகவும் இருந்தது. ஒவ்வொரு மாற்றமும் வேறுபட்ட பாதிப்பையும் வேறுபட்ட அர்த்தத்தையும் கொண்டதாக இருந்தது. பிறகு புல்லாங்குழல் அமைதியானது.
“புல்லாங்குழலின் இசை உனக்கு என்ன சொன்னது?”
சோமதத்தை ஒரு குழப்பத்திலிருந்து விடுபடுவதைப் போல இருந்தாள். அவள் நீண்ட பெருமூச்சு விட்டபடி சொன்னாள்: “நீ எதை விரும்பினாயோ, அது உனக்குக் கிடைக்கும். நீ மகத நாட்டின் மன்னனாக ஆவாய். அடுத்த அமாவாசை நாளன்று, இரண்டாவது ஜாமத்தின்போது இந்த விளக்கைக் கொண்டு நான் அரண்மனைக்கு நெருப்பு வைப்பேன். நெருப்பு பரவிக் கொண்டிருக்கும்போது, நீ வாயில் கதவைத் திறக்க வேண்டும்- கவுதம் துவாரின் கதவை! அரண்மனையில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்புதான் சந்திரவர்மன் வந்து தாக்குதலை நடத்தலாம் என்பதற்கான சைகை. நீ கதவைத் திறந்ததும், அவர் தன்னுடைய படைகளுடன் உள்ளே நுழைவார். எல்லாரும் நெருப்பை அணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அதையே பாடலிபுத்திரத்தைக் கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பமாக சந்திரவர்மன் பயன்படுத்திக் கொள்வார்.”
நான் ஆர்வத்துடன் சொன்னேன்: “அமாவாசை இரவு! அப்படியென்றால்… நாளை மறுநாள்…”
“ஆமாம்… நாங்கள் தாமதப்படுத்த விரும்பவில்லை. இல்லாவிட்டால் லிச்சாவி போர்ப்படை வந்தாலும் வந்துவிடும். அது நம் திட்டத்தையே நொறுக்கிவிடும்.”
தொடர்ந்து சோமதத்தை மீண்டும் அமைதியில் மூழ்கிவிட்டாள். கண்களை சிறிதும் இமைக்காமல் அவள் விளக்கின் வெளிச்சத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
நான் பேசுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவனாக இருந்தேன். “புல்லாங்குழலின் இசையை உன்னால் அந்த அளவிற்கு சரியாக எப்படிப் புரிந்து கொள்ள முடிகிறது? என்னால் வேறுபட்ட ராகங்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது” என்றேன்.
சோமதத்தை சொன்னாள்: “வேறுபட்ட மெட்டுகளுக்குள் மறைந்திருக்கும் வர்த்தைகளையும், ராகத்தில் இருக்கும் உணர்வுகளையும் என்னால் கண்டுபிடித்துவிட முடியும். புல்லாங்குழலை எந்த நபர் வாசிக்கிறாரோ, அதே மனிதர்தான் எனக்கும் கற்றுத் தந்திருக்கிறார்.”
மீண்டும் ஒரு நீண்ட மவுனம் நிலவியது. என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த அமைதியை இல்லாமல் செய்ய விரும்பிய நான் சொன்னேன்: “நீ எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்?”
சோமதத்தை தன்னுடைய முகத்தை உயர்த்திக் கொண்டு சொன்னாள்: “இந்தச் சிறிய விளக்கு எந்த அளவிற்கு சக்தி படைத்ததாக இருக்கிறது என்பதைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது மிகவும் சிறியது. இதை தரையில் வீசி எறிந்தால், துண்டு துண்டாகச் சிதறி விடும். அதே நேரத்தில்- ஒரு அரசையே அழிக்கக் கூடிய சக்தி இதற்கு இருக்கிறது. நானும் என்னைப் போன்ற பலரும் இந்த விளக்கைப்போல சிறியவர்கள்- முக்கியத்துவம் அற்றவர்கள். ஆனால், நம்முடைய புற அழகின் சபிக்கப்பட்ட வெளிச்சத்தைக் கொண்டு, நாம் பல தலைமுறைகளை அழிக்கலாம்.”
அவள் என்ன உணர்கிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன். நான் அவளுடைய கையைப் பற்றிக் கொண்டு சொன்னேன்: “உன்னை ஒரு மண் விளக்குடன் ஒப்பிட்டுப் பேசாதே. நீ ஒரு பொன் விளக்கு. நீ முழு மகத நாட்டையும் வெளிச்சத்தில் குளிக்க வைப்பாய்.”
சோமதத்தை எழுந்து கொண்டே சொன்னாள்: “நான் எரிந்து கொண்டிருக்கும் இடத்திற்கு- ஒரு சுடுகாட்டிற்கு விளக்காக இருந்து கொண்டிருப்பவள். நான் இப்போது புறப்படுகிறேன். அமாவாசை நாளன்று இரவு வேளையில் மீண்டும் நாம் சந்திப்போம். சந்திரவர்மனை அரசவைக்கு அழைத்துக் கொண்டு வா. அந்த நாளன்று நான் உனக்காக இங்கு காத்துக் கொண்டிருப்பேன்.”
நான் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டே சொன்னேன்: “நம்முடைய விருப்பம் அந்த நாளன்று நிறைவேறப் போகிறது.”
சோமதத்தை மெல்ல சிரித்துக் கொண்டே சொன்னாள்: “ஆமாம்… அன்றுதான் என்னுடைய ஆசை நிறைவேறப் போகிறது.”
8
அரசன் சந்திரகுப்தன் சோமதத்தையின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். திடீரென்று அவன் பலமாக மூச்சுவிட முடியாத அளவிற்கு வந்த புகையின் வாசனையால் எழுந்தான். தன்னுடைய கண்களைத் திறக்காமலே, அவன் சோமதத்தையை அழைத்தான். எந்த பதிலும் வரவில்லை. பாதி மூடியிருந்த- தூக்கக் கலக்கத்துடன் இருந்த கண்களால் அவன் பார்த்தபோது, படுக்கையில் சோமதத்தை இல்லை என்பதைத் தெரிந்து கொண்டான். அவன் அறையைச் சுற்றிலும் பார்த்தான். ஆனால், அவன் கண்களில் அவள் தென்படவில்லை.
அப்போது முழு அரண்மனையும் எழுந்து விட்டிருந்தது. பயந்துபோன பெண்கள் உரத்த குரலில் அழுது கொண்டிருந்தார்கள். வீடுகளில் வளரும் பிராணிகளும் பறவைகளும் பயத்தால் கத்திக் கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்தையும் விழுங்கிக் கொண்டிருந்த நெருப்பின் ஓசை மற்ற எல்லா சத்தங்களையும் அடக்கி, சுற்றிலும் இருந்த காற்றை வெப்பமாக்கிக் கொண்டிருந்தது. அந்த மரத்தாலான அரண்மனையில் எதையும் காப்பாற்றுவது என்பது இயலாத விஷயமாக இருந் தது. ஒருவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஒரே வழி- அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடுவதுதான். அங்கிருந்த மக்கள் எல்லாரும் தங்களுடைய பொருட்களை வேகவேகமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அரசனோ அல்லது அரசியோ பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதைப் பற்றியோ- உயிருடன் இருக்கிறார்களா என்பதைப் பற்றியோ யாரும் கவலைப் படவில்லை. அவர்களுடைய முழுக் கவனமுமே அவர்கள் தப்பித்துச் செல்வதில்தான் இருந்தது.
நெருப்பு மிகவும் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அது ஒரு இடம் முடிந்ததும் இன்னொரு இடத்திற்குப் பரவிச் சென்று கொண்டிருந்தது. காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. நெருப்பின் வெளிச்சத்தில் அமாவாசை இரவு கிழிந்து அழிந்து கொண்டிருந்தது.