மண் விளக்கு - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
“நீ என்னிடம் கூறுவது உண்மையா? நீ என்னிடம் பொய் கூறவில்லை என்று உன்னால் உறுதியாகக் கூறமுடியுமா?''
“நான் உண்மையைத்தான் கூறுகிறேன். நான் இந்தத் தகவல்கள் அனைத்தையும் இன்று விரோத்வர்மனிடம் இருந்து தெரிந்து கொண்டிருக்கிறேன்.''
சோமதத்தை வெறுப்புடன் தன்னுடைய தலையின் முன்பகுதியில் அடித்துக் கொண்டாள். “இந்த விஷயம் எனக்கு ஏன் நேற்று தெரியாமல் போனது? எனக்குத் தெரிந்திருந்தால், என் வாழ்க்கையையே நான் கொடுத்திருப்பேன். ஆனால், எந்தச் சமயத்திலும்....''
சோமதத்தை என்னை கோபமுற்ற கண்களுடன் பார்த்தாள். நீண்ட நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். பிறகு சொன்னாள்: “எது விதிப்படி நடக்க வேண்டுமோ, அது நடந்திருக்கிறது. ஒருவரின் தலைவிதியை யாராலும் மாற்றவே முடியாது. ஒரு வேசியின் மகளுக்கு என்னதான் விதிக்கப்பட்டிருக்கும்?''
நான் அவளை என் கரங்களில் எடுத்தேன். பிறகு சொன்னேன்: “சோமதத்தை, நீ எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். நீ எனக்குச் சொந்தமானவள். சக்ரயுத்த இஷான் வர்மனாகிய நான் உனக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன். நான் நெருப்புக்குள் இறங்குவேன். ஆழமான நீருக்குள் குதிப்பேன். உனக்காக சந்திரகுப்தனை அழிப்பேன்- அவனுடைய நேரம் வந்துவிட்டது.''
“நீ சந்திரகுப்தனை அழிப்பாயா?''
“ஆமாம்... உன்னால் அவனை அழிக்க முடிகிறது என்றால், என்னால் ஏன் முடியாது? எனக்கு அவன் யார்?''
“உன்னுடைய நண்பர்!''
“என்னுடைய உண்மையான நண்பன் அல்ல! அவனுடைய தவறான செயல்களுக்கு நானும் உடந்தையாக இருந்திருக்கிறேன். நான் அவனைப் புகழ்ந்து பேசக்கூடியவன். அதற்குமேல் எதுவுமில்லை. அவன் ஒரு சமயம் என்னிடமிருந்து உன்னைப் பறித்துக் கொண்டான். நான் இப்போது அதே காரியத்தைத்தான் செய்திருக்கிறேன். அவனுடன் எனக்கு என்ன நட்பு? அவனை அழித்து, இந்த நாட்டை விட்டே வீசி எறிவதில் உன்னுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்.''
சிறிது நேரத்திற்கு சோமதத்தை மிகவும் அமைதியாக இருந்தாள். பிறகு சொன்னாள்: “நீ என்ன செய்ய விரும்புகிறாய்?''
“நான் உன்னிடம் கூறுகிறேன். இன்று காலையில் விரோத்வர்மனிடமிருந்து தெரிந்து கொண்டதன் மூலம் லிச்சாவியிலிருந்து பாடலிபுத்திரத்தை நோக்கி ஒரு போர்ப்படை அடுத்த பத்து நாட்களுக்குள் வந்துசேர இருக்கிறது என்ற தகவலைப் பெற முடிந்திருக்கிறது. தூது வரும் புறாக்களின் மூலம் இந்தச் செய்தி இங்கு வந்திருக்க வேண்டும். சந்திரவர்மன் பாடலிபுத்திரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டால், அந்த போர்ப்படை வந்து சேர்வதற் குள் அவர் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பாடலிபுத்திரத்தை அவரால் கைப்பற்ற முடியாமல் போய் விடும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவருக்கே அது ஆபத்தானதாகக்கூட ஆகிவிடும். அந்த ஆக்கிரமிப்பிலிருந்து அவரால் தப்பிக்க முடியாமல்கூட போகலாம். நாளையிலிருந்து கிடைக்கப் போகும் உணவுப் பொருட்களால் கோட்டைக்குள்ளிருக்கும் மக்கள் பலசாலியாகிவிடுவார்கள். வேறு என்ன மாற்று வழி?''
“என்ன?''
“சதித்திட்டம் தீட்ட வேண்டியதுதான்.''
“சதித்திட்டத்திற்கு யார் ஒப்புக் கொள்வார்கள்?''
“நான் செய்வேன்... அதற்கு பிரதிபலனாக சந்திரவர்மன் எனக்கு என்ன தருவார்?''
“உனக்கு ஏற்கெனவே கிடைத்திருப்பதில் திருப்தி இல்லையா?''
“இல்லை... எனக்கு அரச சிம்மாசனம் தேவையில்லை என்று நேற்று நான் உன்னிடம் சொன்னேன். ஆனால் அது தவறு. ஆளுவதற்கு எனக்கு ஒரு நாட்டைப் பெறாமல் உன்னுடன் மட்டும் என்னால் திருப்தியடைந்துவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால்- நீ அரச வாழ்க்கையின் செல்வத்தை ருசி பார்த்தவள். குறைவான வசதிகளில், நீயும் சந்தோஷமாக இருக்க முடியாது.''
“உண்மைதான்.... குறைவான வசதிகளில், நான் சந்தோஷம் கொள்ள மாட்டேன். அப்படியென்றால், உன்னுடைய சதித்திட்டத்திற்கு நீ என்ன வேண்டும் என்று விரும்புகிறாய்?''
“நான் ஏற்கெனவே எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு விட்டேன். எல்லா செய்திகளையும் நீ உன்னுடைய விளக்கின் மூலம் சந்திரவர்மனுக்கு தெரியப்படுத்து. சதித்திட்டத்தின் மூலம் மட்டுமே இந்தக் கோட்டையைக் கைப்பற்ற முடியும் என்ற விஷயத்தை அவருக்குத் தெரியப்படுத்து. அவருக்காகவும் அவருடைய படைக்காகவும் கோட்டையின் கதவுகளைத் திறந்து வைப்பதற்கு ஒரு படைத் தலைவர் தயாராக இருக்கிறார் என்பதையும் அவரிடம் கூறு. அந்தப் படைத் தலைவருக்கு மகத நாட்டை ஆளக்கூடிய உரிமையை அதற்குப் பரிசாகத் தரவேண்டும் என்பதையும் கூறு.''
சோமதத்தை சிறிது நேரம் ஒரு சிலையைப்போல நின்று விட்டு, உரத்த குரலில் வாய்விட்டுச் சிரித்தாள். அசைந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில், அவளுடைய சிரித்துக் கொண்டிருக்கும் முகம் வேறொரு முகமாகத் தெரிந்தது. அவள் சொன்னாள்: “நல்லது... நல்லது... நானே அதை விரும்பினேன். என் தந்தையை சந்தோஷப்படுத்தி, மகத நாட்டை ஆளும் உரிமையை ஒரு மனிதனுக்காக கேட்டுப்பெற்று, திமிர் பிடித்த அந்த பெண்ணின் கர்வத்தை அடக்க வேண்டுமென்று நான் நினைத்தேன். அதனால் இந்த திட்டம் என்னைப் பொறுத்தவரை சரிதான். நாம் இருவரும் சேர்ந்து திட்டமிடுவோம். என் தந்தை இந்தக் கோட்டையை ஆக்கிரமிப்பார். மகத நாட்டின் சிம்மாசனத்தில் நீ உட்கார். நான் உன் அரசியாக ஆவேன். நல்ல விஷயம்!'' சோமதத்தை வினோதமான ஒரு சிரிப்பை மீண்டும் வெளிப்படுத்தினாள்.
நான் சொன்னேன்: “சந்திரகுப்தன் கொல்லப்பட வேண்டும். அவன் உயிருடன் இருந்து எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. இல்லையென்றால் பின்னர் தொந்தரவுகள் உண்டாகும். ஒரு நல்ல விஷயம் இருக்கிறது- சந்திரகுப்தனால் இங்கிருந்து தப்பித்துச் செல்ல முடியாது. ஏனென்றால், கோட்டையை விட்டு வெளியே செல்லக்கூடிய ரகசியமான சுரங்கப் பாதைகளின் கதவுகள் எங்கே இருக்கின்றன என்று அவனுக்குத் தெரியாது.''
இன்னும் சோமதத்தைக்கு சந்திரகுப்தன்மீது ஏதாவது பலவீனம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே, வேண்டுமென்றே நான் இந்த விஷயங்களை அவளிடம் சொன்னேன். அவளுடைய முகத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருப்பதைப் பார்த்தேன். அவள் ஒரு முடிவு எடுத்ததைப்போல தன் இரண்டு உதடுகளையும் ஒன்று சேர்த்து அழுத்தினாள். கண்களை இமைக்காமல் என்னை வெறித்துப் பார்த்த அவள் கேட்டாள்: “ரகசிய சுரங்கப் பாதைகள் என்றால் என்ன?''
நான் விளக்கிக் கூறியதைக் கேட்டு, அவள் சந்தோஷப்பட்டாள். என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டே அவள் சொன்னாள்: “என் காதலுக்கு உரியவரே, எங்கே சந்திரகுப்தன் தன் மனைவி குமாரதேவியுடனும் மகனுடனும் தப்பித்துச் சென்று விடுவாரோ என்பதை நினைத்து நான் கவலைப்பட்டேன். இப்போது எனக்கு நிம்மதி உண்டாகி விட்டது. கவலையே படாதே. நாம் இருவரும் மகத நாட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்து இன்பம் காணுவோம்.''
“சந்திரகுப்தனை என்ன செய்வது?''
“அதைப் பற்றி கவலைப் படாதே. எதைச் செய்ய வேண்டுமோ, அதை நான் செய்கிறேன்.''