மண் விளக்கு - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
சொல்லப்போனால்- இந்தப் பகுதியை கவனித்துக் கொள்வதற்கு காவலாளிகளேகூட தேவையில்லை. இங்குமங்குமாகப் பார்த்துக் கொண்டே, நான் ஏற்கெனவே இருந்த இடத்திற்குத் திரும்பிவர தீர்மானித்தேன். திடீரென்று, கோட்டையின் மேற்பகுதியின் மூலையில், ஒரு முட்கள் வளர்ந்திருந்த அடர்ந்த புதருக்குப் பின்னால் ஒரு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எதிரிகள் கோட்டைக்குள் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த முட்புதர்கள் அங்கு உண்டாக்கப்பட்டிருந்தன. சில நேரங்களில் அந்த முட்புதர்கள் மிகவும் உயரமாக வளர்ந்து, கோட்டையின் மேற்பகுதியையும் தாண்டிப் போயிருந்தன. இரண்டு உயரமான புதர்களுக்கு மத்தியில் அந்த விளக்கு எரிந்துகொண்டிருந்தது. விளக்கு மேலும் கீழுமாகவும் வட்டமாகவும் அசைந்து கொண்டிருந்தது. யாரென்று தெரியாத ஒரு கடவுளுக்கு ஒரு மறைவில் இருக்கும் கை பிரார்த்தனைகள் செய்வதைப்போல அது இருந்தது.
நான் என் காலணிகளைத் திறந்து, என்னுடைய இடுப்பிலிருந்த வாளை உருவி, அந்த அசைந்து கொண்டிருந்த விளக்கை நோக்கி மெதுவாக நடந்தேன். புதருக்குள் நுழைந்தபோது, அகழியின் அந்தப் பகுதியிலிருந்த எதிரிகளின் முகாமையே ஒரு பெண் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவள் மெதுவாக எரிந்து கொண்டிருந்த விளக்கை அசைத்துக் கொண்டிருந்தாள். பின்னால் இருந்துகொண்டு, அவளுடைய முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால், மலர்களாலும் நகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளுடைய கூந்தலை என்னால் பார்க்க முடிந்தது. உடனடியாக அந்தப் பெண் ஒரு ஒற்றனாகத்தான் இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன்- அவள் எதிரிக்கு விளக்கின் ஒளி மூலம் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறாள். நான் அவளுடைய தோள்களை மெதுவாகத் தொட்டேன். ஆழமாக ஒரு மூச்சை விட்டவாறு, அந்தப் பெண் பின்னால் திரும்பினாள். அவள் கைகளில் வைத்திருந்த அவளுக்குச் சொந்தமான அந்த விளக்கின் வெளிச்சத்திலிருந்தே அவளை யாரென்று நான் அடையாளம் தெரிந்து கொண்டேன்- சோமதத்தை!
இப்படியும் அப்படியுமாக அசைந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சம் அவளுடைய கலவர மடைந்த முகத்தின்மீது விழுந்து கொண்டிருந்தது. கண்களின் கறுப்பு மணிகள் மேலும் பெரியனவாகத் தெரிந்தன. ஒரு நிமிடம், அவள் உண்மையிலேயே சோமதத்தைதானா அல்லது என் தவறான கற்பனையின் மூலம் அப்படி நான் நினைத்து விட்டேனா என்றுகூட நினைத்தேன். நான் மனதில் ஆசைப்பட்ட ஒரு பொருளைப் பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்ததால், இப்படியொரு கற்பனையை நான் செய்து விட்டேனோ? சோமதத்தையின் நடுங்கிக் கொண்டிருந்த கைகளில் இருந்த விளக்கைப் பார்த்ததும், நான் நினைத்தது தவறானது அல்ல என்ற முடிவுக்கு வந்தேன்- அந்த விளக்கு கீழே விழும் நிலையில் இருந்தது. நான் மிகவும் வேகமாக என்னுடைய வாளை உறைக்குள் போட்டுவிட்டு, என் கைகளில் அந்த விளக்கை எடுத்து, அதை நன்கு பார்ப்பதற்காக உயர்த்திக் கொண்டே கிண்டலான குரலில் சொன்னேன். “என்ன வினோதம்? மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பெண்- சோமதத்தை!''
சோமதத்தை பயம் கலந்த அழுகையுடன், ஒரு கையை தன் மார்பின்மீது வைத்தாள். அப்போது ஒரு கத்தி அவளுடைய கையில் பிரகாசித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். கூர்மையான நுனிப் பகுதி என் மார்பின் மீது இருந்த கவசத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன்.
அதை மட்டும் அணியாமலிருந்தால், நான் நிச்சயம் அப்போது கொல்லப்பட்டிருப்பேன். நான் அந்த கத்தியைப் பிடுங்கி என் இடுப்பில் இருந்த கச்சையில் சொருகி வைத்தேன். தொடர்ந்து நான் என்னுடைய பலமான கைகளால் அவளைப் பற்றி னேன். நான் அவளுடைய செவியில் மெதுவான குரலில் சொன்னேன்: “சோமதத்தை, நீ... ஒரு சூனியக்காரி! இறுதியில் நீ எனக்கானவளாக ஆகிவிட்டாய்!'' விளக்கு தரையில் விழுந்து அணைந்தது. பிடிபட்ட பெண் புலியைப்போல அவள் என் கைகளில் சிக்கிக் கொண்டு திமிறிக் கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய நகங்களால் என் முகத்தைக் கிழித்தாள். நான் அவளை என் மார்பின்மீது பலமாக அழுத்திக் கொண்டே சொன்னேன்:
“நல்லது... நல்லது... நாளை நான் உன்னுடைய நகக் கீறல்களை சந்திரகுப்தனிடம் காட்டுகிறேன்.''
திடீரென்று, சோமதத்தை என் கைகளில் நிலைகுலைந்ததைப்போல தோன்றியது. அந்த இருளில் அவள் மயக்கமடைந்து விட்டாள் என்று நான் நினைத்தேன். தொடர்ந்து அவளுடைய தொண்டைக்குள்ளிருந்து வந்த ஒரு வகையான ஓசையை வைத்து, சோமதத்தை அழுதுகொண்டிருக்கிறாள் என்பதை உணரமுடிந்தது. அவள் அழட்டும் என்று நான் அனுமதித்தேன். என் கைகளில் இருந்தபடி ஒரு பெண் அழுவதென்பது இது முதல் முறை அல்ல. ஆரம்பத்தில், அவர்கள் எல்லாருமே இப்படித்தான் அழுவார்கள்.
கசப்புணர்வுடன் சிறிது நேரம் அழுதுவிட்டு, சோமதத்தை நேராக உட்கார்ந்து கொண்டு கண்ணீர் கலந்த குரலில் சொன்னாள்: “நீங்கள் யார்? நீங்கள் ஏன் என்னைப் பிடித்தீர்கள்? நான் உடனடியாக இங்கிருந்து செல்ல வேண்டும்.''
நான் அவள்மீது இருந்த என்னுடைய பிடியை விடவில்லை. “நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டுமா? என் பெயர் சக்ரயுத்த இஷான் வர்மன். உன் சந்திரகுப்தனின் நண்பர்களில் ஒருவன். இப்போதைக்கு நான் இந்த வாயிலுக்கு காவலாளியாக நின்று கொண்டிருக்கிறேன். இதற்கு மேலும் நீ தெரிந்துகொள்ள விரும்பினால் கூறுகிறேன். உன்மீது பைத்தியம் பிடிக்கிற அளவிற்கு மோகம் வைத்திருக்கக்கூடிய மனிதன் நான். அந்த ஓடையின் அருகில் சுய உணர்வற்று உன்னை என்றைக்குப் பார்த்தேனோ, அந்த நாளிலிருந்தே நான் உன் அழகை வழிபடத் தொடங்கிவிட்டேன்.''
சோமதத்தை நடுங்குவதைப்போல எனக்குத் தோன்றியது. நான் சொன்னேன்: “ம்... அப்படியென் றால், நீ என்னை அடையாளம் தெரிந்துகொண்டாய். ஆமாம்... சொர்க்கத்தின் தேவதையால் ஆட்கொள்ளப்பட்ட அதே மனிதன் தான் நான்...''
சோமதத்தை சொன்னாள்: “நீங்கள்... பாவம் செய்த மனிதர்! என்னைப் போகவிடுங்கள். இல்லாவிட்டால் அரசனிடம் உங்களின் தலையை வாங்கும்படி நான் கூறுவேன்.''
நான் சிரித்தேன். “நீ... பாவச் செயல் செய்தவள்! நான் உன்னைப் போக விடமாட்டேன். உன்னைப் போக அனுமதித்தால், மகாராணி என்னுடைய தலையை வெட்டி விடுவார்கள். நள்ளிரவு நேரத்தில் நீ அரண்மனையை விட்டு வெளியே வந்ததற்குக் காரணம் என்ன? அரண்மனை மேற்பகுதியில் இந்த விளக்கை வைத்துக்கொண்டு நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?''
சோமதத்தை சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். பிறகு அவள் சொன்னாள்: “நான் அரண்மனையை விட்டு வெளியே வருவதற்கு அரசரின் அனுமதியைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன்.''
நான் கிண்டல் கலந்த குரலில் சொன்னேன்: “எதிரியிடம் விளக்கை வைத்துக்கொண்டு தகவல் அனுப்பி வைக்கும்படி சந்திரகுப்தன் உன்னிடம் கூறியிருக்கிறாரா?''