மண் விளக்கு - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
மிகப்பெரிய அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் உயிரியல் நிபுணர்களும், பூமிக்குக் கீழே புதைந்து கிடக்கும் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மிருகங்களின் எலும்புக் கூடுகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்த மிருகங்கள் கடந்தகாலத்தில் உண்மையாகவே எப்படி இருந்திருக்கும் என்பதை விவரித்துக் கூற முயற்சிக்கும்போது, அவர்கள் சில நேரங்களில் தங்களின் கற்பனையைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். அப்படி அவர்கள் கற்பனை செய்து கூறும் வடிவம் அந்த மிருகத்தின் உண்மையான தோற்றத்துடன் ஒத்துப் போகிறதா இல்லையா என்பது தொடர் விவாதத்திற்கும் முரண்படுவதற்குமான விஷயமாக மாறும்.
மண்ணுக்குக் கீழே புதையுண்டு கிடக்கும் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மிருகங்களின் எலும்புக்கூடுகளைப் போன்ற நிலையில் இருப்பதுதான் நம் நாட்டின் வரலாறும். பலவிதமான சிரமங்களுக்குப் பிறகு, முழு எலும்புக்கூடுமே கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், கடந்த காலத்தைப் பற்றிய முழு உண்மையையும் கண்டுபிடிப்பது என்பது இயலாத ஒரு விஷயமாக ஆகிவிடுகிறது. இந்த மாதிரியான உயர்ந்த விவாதங்களில் பங்குபெறும் மிகச்சிறந்த அறிவாளிகள் சில நேரங்களில் அரைகுறையான உண்மைகளைக் கூறி, பொதுமக்களை குழப்பத்திற்குள்ளாக்குவார்கள். எந்தவிதமான உறுதியான முடிவுக்கும் வராமலேயே, பாதியிலேயே கைவிடும் சூழ்நிலை வரும் வரை, பொதுமக்கள் அதில் சிறிதுகூட அக்கறை செலுத்துவதே இல்லை. அதனால், இந்த மாதிரியான எலும்புக்கூடுகளைப் போன்ற மேலோட்டமான உண்மைகளிலிருந்து என் நாட்டின் வரலாற்றை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும் என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம் என்றே நான் எப்போதும் உணர்கிறேன். மண் விளக்கின் கதை என்னுடைய பார்வையின் தன்மை என்பதைக் காட்டும்.
நடந்து செல்லும்போது, ஒரு கனவில் நடப்பதைப்போல, நான் பழைய நகரமான பாடலிபுத்திரத்தின் அகழ்வாராய்ச்சி செய்யும் இடத்தில் அந்த மண் விளக்கை ஒரு குப்பைக் குவியலில் கண்டுபிடித்தேன். அது மிகவும் சாதாரண பண்டைக்கால மண் விளக்கைப்போலவே காணப்பட்டது. கால மாற்றத்தால் அது தாளைப்போல மிகவும் மென்மையாக இருந்தது. ஆனால், பல வருடங்கள் கடந்து சென்ற பிறகும், அது எரிந்த இடத்தில் ஒரு கறுப்பு நிற புள்ளி காணப்பட்டது. அந்த பாழாய்ப்போன, மிகச் சாதாரணமான விளக்கிலிருந்து உண்டான நெருப்பு ஒரு சாம்ராஜ்ஜியத்தையே எப்படி அழித்தது- வரலாற்றின் போக்கையே வேறு பக்கம் எப்படித் திருப்பிவிட்டது. என்பதைக் கூறினால் யார் நம்புவார்கள்?
அந்த விளக்கிற்கு முக்கியத்துவம் அளித்து காட்சியகங்களில் வைத்திருப்பதற்கு பதிலாக, மிகப்பெரிய வரலாற்று அறிஞர்கள் அதை வெளியே விட்டெறிந்து விட்டார்கள். நான் அதை எடுத்து, வீட்டுக்குக் கொண்டு வந்து, மாலை நேரத்தில்- எண்ணெய்யை ஊற்றி என்னுடைய தனிமையான அறையில் அதை எரிய வைத்தேன். அது எவ்வளவு வருடங்களுக்குப் பிறகு ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது! இந்தக் கேள்விக்கு மிகவும் படித்த வரலாற்று அறிஞர்களுக்கு எப்படி விடை அளிக்கத் தெரியும்? அந்த சிறிய விளக்கு வரலாற்றின் எந்த இருண்ட பக்கத்திற்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்தது? அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருப்பவர்கள் வாசித்துக் கூறுவதற்கு அந்த விளக்கில் எந்த எழுத்துகளும் செதுக்கப்பட்டிருக்கவில்லை. அதனால், என்னுடைய கடந்தகால வாழ்க்கையைக் கண்டுபிடிக்கக்கூடிய சிறப்புத் திறன் கொண்ட, ஏழை ரெயில்வே க்ளார்க்கான என்னிடமே அது இருந்துவிட்டது. என்னுடைய புரிதல்களின் இருண்ட ஆழங்களுக்குள் மறைந்து கிடந்த வரலாற்றைத் தோண்டிப் பார்க்கக் கூடிய திறமை எனக்கு இருந்தது.
என்னுடைய அறையில் மூடப்பட்ட கதவுகளுக்குள் நான் விளக்கை எரியச் செய்தவுடன், ஒரே நிமிடத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மாறுதல் அங்கு உண்டானது. அதிர்ச்சியடைந்த என் மனம் தன்னுடைய பழைய நண்பனின்- அந்த எரிந்து கொண்டிருக்கும் மண் விளக்கின் செயலைத் தொடர்ந்து கடந்தகாலத்தை நோக்கித் திரும்பியது. ஒரே நொடியில், பாடலிபுத்திரம் என்ற அந்த மிகப் பெரிய நகரம், மகத நாட்டு அரசனின் முக்கியத்துவமே இல்லாத சாதாரண தலைநகரமாக மாறியது. சிறிய சிறிய நிகழ்ச்சிகளுடனும், எத்தனையோ வருடங்களுக்கு முன்பு பேசப்பட்ட முக்கியத்துவமற்ற வார்த்தைகளுடனும் என்னுடைய நினைவுகள் பசுமையாக இருந்தன. நிகழ்காலம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. என்னுடைய மனக்கண்ணுக்கு இன்னொரு பிறவியும் தோற்றமும்தான் தெளிவான உண்மைகளாகத் தெரிந்தன.
அந்த விளக்கின் வெளிச்சத்தில் இருந்துகொண்டு நான் இந்தக் கதையை எழுதுகிறேன்.
2
சுமார் பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஒரு சிறிய நிலாச்சுவான்தாரான கடோத்கச்ச குப்தர் என்பவரின் மகனாகப் பிறந்த சந்திரகுப்தன், மிகப்பெரிய செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்த லிச்சாவி குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டான். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் அவன் பாடலிபுத்திரத்தை தன் கைக்குள் கொண்டு வந்தான். அதை வெற்றி பெற்று, அந்த இடத்தில் அவன் தன் ஆட்சியை நிறுவினான். பிற்காலத்தில் மிகப்பெரிய நகரமாக விளங்கிய பாடலிபுத்திரம் அல்ல அது. ஒரு சிறிய- சாதாரண தலைநகரமாக அது இருந்தது. சந்திரகுப்தனின் அப்போதிருந்த அதிகாரத்தைப் பற்றி வரலாற்று அறிஞர்களுக்கு மத்தியில் பலவிதமான மாறுபட்ட சர்ச்சைகள் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தன. நான் அந்தக் காலகட்டத்தில்- வேறொரு பிறவியில்- உயிருடன் வாழ்ந்துகொண்டிருந்ததால்- சந்திரகுப்தன் அரசனாக ஆகிவிட்டிருந்தாலும், அவன் பெயரளவில் மட்டுமே அரசன் என்ற விஷயம் எனக்கு நன்கு தெரியும். லிச்சாவி குடும்பத்திலிருந்து வந்திருந்த அரசி குமாரதேவி மிகவும் சக்தி படைத்தவளாக இருந்தாள். அவள்தான் உண்மையாகவே ஆட்சி செய்பவளாக இருந்தாள். அரசாங்கத்தின் நாணயங்களில் கூட அவளுடைய உருவம்தான் அச்சிடப்பட்டிருந்தன. அவளுடைய உருவத்துடன் லிச்சாவி குடும்பத்தின் பெயரும் அதில் அச்சிடப்பட்டிருந்தது. ஒருமுறை சந்திரகுப்தன் தன்னுடைய பலம் என்ன என்பதைக் காட்டுவதற்கு முயற்சி செய்தான். ஆனால், தான் கூறியதை யாருமே மதிக்கவில்லை என்பதை அவன் கண்டுகொண்டான்.
அவன் ஒரு மிகப் பெரிய போர் வீரன். அதனால் இந்த விஷயம் அவனுடைய சுய மரியாதைக்குக் கிடைத்த பலத்த அடியாக இருந்தது. அவனுடைய பிரயோஜனமற்ற கோபமும், திருப்தியற்ற தன்மையும் அவனை பெண்களின்மீதும், மதுவின் பக்கமும், சூதாட் டத்தை நோக்கியும், அருகிலிருந்த காடுகளில் வேட்டையாடச் செல்வதிலும் திருப்பிவிட்டன.
மக்களைப் பொறுத்த வரையில் தங்களை அரசன் ஆட்சி செய்கிறானா அல்லது அரசி ஆட்சி செய்கிறாளா என்பதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை. நோயோ பஞ்சமோ போரோ இல்லாத வரையில் அவர்களுக்கு சந்தோஷமே. இதற்கு முன்பு, மகத அரசு சிறுசிறு அரசுகளாக உடைந்து, சிறிய சிறிய விஷயங்களுக்குக்கூட ஒன்றோடொன்று சண்டை போட்டுக் கொண்டிருந்தன. இந்த விஷயம் மக்களுக்கு ஏராளமான பிரச்சினைகளைத் தந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட நேரத்தில் சந்திர குப்தன் பாடலிபுத்திரத்தையும் அதனுடன் ஒட்டியிருந்த பகுதிகளையும் ஆக்கிரமித்து, அந்த இடங்களில் அமைதியான சூழ்நிலையை உண்டாக்கினான்.