மண் விளக்கு - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
அம்புகளைப் பார்த்து பயந்து, யானைகள் தங்கள் பாகன்களை வீசி எறிந்துவிட்டுத் திரும்பி ஓடின. போர் செய்து கோட்டையை வெல்ல முடியாது என்ற விஷயத்தை சந்திரவர்மன் புரிந்துகொண்டான். தாக்குவதை நிறுத்திவிட்டு, கோட்டைக்கு ஒரு தடை போட்டான். கோட்டைக்கு வெளியே, பல மைல்கள் தூரத்திற்கு பகைவர் படை வீரர்கள் நிறைந்து நின்றிருப்பது தெரிந்தது. பாடலிபுத்திரத்தின் கோட்டைக்குள் ஒரு எறும்புகூட நுழைய முடியாது.
இந்த விஷயத்தை உயர் அதிகாரிகள் அரசியின் காதுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். “உடனடியாக ஆபத்து எதுவுமில்லை. ஆனால், வெளியே இருந்து வரக்கூடிய பொருட்களைத் தடுத்து நிறுத்தி, சந்திரவர்மன் எங்களை பட்டினி போட்டு சாகடிக்க முயற்சிக்கிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்'' என்றார்கள் அவர்கள்.
போர் விஷயங்களில் சந்திரவர்மன் மிகச் சிறந்த திறமைசாலி. அவனுக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. சிறிய, பலவீனமான பாடலிபுத்திரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் அவன் அவசரப் படவில்லை. மகத நாட்டின் வேறு பகுதிகளில் தன்னுடைய வெற்றிப் பதாகையைப் பறக்கச் செய்ய வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான்.
ஆனால் நாட்கணக்கிலும் மாதக்கணக்கிலும் போர்புரிந்த பிறகு, அவனுடைய படை மிகவும் களைத்துப் போனது. அவர்கள் தங்களுக்கு சிறிது ஓய்வு வேண்டும் என்று விரும்பினார்கள் அதைத் தொடர்ந்து, அவன் அந்த பலவீனமான நாட்டுக்குள்ளும், அதற்கு அருகிலும் அவர்கள் விரும்புகிற அளவிற்கு ஓய்வு எடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அளித்தான். அவனுடைய கப்பல் படை கங்கை நதியில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் அவனுடைய இரண்டு நோக்கங்களும் நிறைவேறின. பாடலிபுத்திரத்திற்கு பொருட்கள் செல்ல தடை உண்டாக்கப்பட்டது. படைக்கு ஓய்வு எடுக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.
தடை உண்டாக்கப்பட்ட ஐந்தாவது நாள், அதிகாரிகள் வந்து அரசியிடம் கோட்டைக்குள் உணவுத் தட்டுப்பாடு உண்டாகிவிட்டது என்ற செய்தியைக் கூறினார்கள். அதற்கு ஒரு வழி காணவேண்டும் என்பதையும் கூறினார்கள்.
அமைச்சர்களுடன் ஒரு நீண்ட கருத்துப் பரிமாற்றம் செய்து முடித்த பிறகு அரசி சொன்னாள்: “வெளியே இருந்து உணவுப் பொருட்களை உள்ளே கொண்டு வருவதற்கு ரகசிய வழி எதுவும் இல்லையா?''
அவர்கள் சொன்னார்கள்: “இருக்கலாம்... ஆனால் எங்களுக்கு அதைப் பற்றித் தெரியாது. நாங்கள் உணவுப் பொருட்களை ஆற்றின் வழியாகக் கொண்டு வந்துவிட முடியும். ஆனால், சந்திரவர்மன் அங்கும் கப்பல் படையைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.''
“அப்படியென்றால், நாம் என்ன செய்வது?''
“ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.''
அந்த கலந்துரையாடல் மேலும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அமைச்சர்கள் அங்கிருந்து கிளம்பிச்சென்ற பிறகு, அரசி வேறு யார் கண்களிலும் படாமல் மாடிக்குச் சென்றாள். அவள் தூது செல்லக்கூடிய ஒரு புறாவைத் தன்னுடைய ஆடைக்குள் இருந்து எடுத்து, அதை காற்றில் வீசினாள். அந்தப் புறா அரண்மனையை இரண்டு முறை சுற்றிவிட்டு, வடக்கு திசையை நோக்கிப் பறந்து சென்றது. குமாரதேவி அதை எவ்வளவு தூரம்வரை பார்க்கமுடியுமோ அவ்வளவு தூரம் பார்த்துக்கொண்டிருந்தாள். தொடர்ந்து ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டபடியே அவள் மாடியிலிருந்து மெதுவாகக் கீழே இறங்கி வந்தாள்.
மேலும் எட்டு நாட்கள் கடந்தன. சந்திரவர்மன் தாக்குதல் நடத்த முயற்சிக்கவேயில்லை. ஆனால், உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான தடையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். வெகு சீக்கிரம் உணவு என்பது சிறிதும் கிடைக்காத ஒன்றாகவும், கோட்டைக்குள் விலை மதிப்பு கொண்டதாகவும் ஆனது. மக்கள் நிம்மதி இழந்தவர்களாகவும், பதைபதைப்பு அடைந்தவர்களாகவும் ஆனார்கள். இந்த நிலைமை, மேலும் இரண்டு வாரங்கள் நீடித்தது. பல்குண மாதம் (பிப்ரவரி) முடிவுக்கு வந்தது.
3
இந்தப் பிறவியில் ஒரு ரயில்வே க்ளார்க்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நான் இரவு நேரத்தில் விளக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, வெட்கத்துடன் நினைத் துப் பார்த்தேன். அந்தக் காலத்தில் வெறுப்பை அளிக்கக்கூடிய, காமவெறி பிடித்த சக்ரயுத்த இஷான் வர்மனாக இருந்து கொண்டு, சுயஉணர்வு இல்லாத சோமதத்தையின் நிர்வாண கோலத்தில் கிடந்த அழகிய உடலைப் பார்த்து மோகத்துடன் நின்றிருந்ததை மனதில் திரும்பக் கொண்டுவந்து பார்க்கிறேன். சந்திரகுப்தனிடம் சோமதத்தையை எனக்குத் தந்துவிடு என்று தைரியமாகக் கேட்டவன் நான்தான். சந்திரகுப்தனின் தந்தையான கடோத்கச்சன் என்ற பலம் பொருந்திய நிலச்சுவான்தாருக்கு இணையான நிலச்சுவான்தாராக இருந்த ஒருவரின் மகன் நான். ஆனால், பாடலிபுத்திரத்தின் சிம்மாசனத்தில் உட்கார வைக்கக்கூடிய அளவிற்கு பலம் கொண்ட லிச்சாவி குடும்பத்தின் உதவியைப் பெறுகிற அளவிற்கு எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. போதாதற்கு, என் தந்தையின் மறைவிற்குப் பிறகு, அவர் எனக்கு விட்டுச்சென்ற சொத்தை வைத்துக்கொண்டு நான் கட்டுப்பாடற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்தேன். அரசனின் நெருங்கிய நண்பனாகவும் நான் ஆகிவிட்டேன்.
சோமதத்தையை அடைய வேண்டுமென்ற ஆசையில் நான் மதுவில் மிதந்தேன். அந்த ஆசை அர்த்தமே அற்றது, நியாயமற்றது; ஏற்றுக்கொள்ள முடியாதது. அது பைத்தியக்காரத்தனத்திற்கு நிகரானது. இதற்கு முன்பு நான் இந்த அளவுக்கு மனவேதனையுடன் இருந்ததே இல்லை. நான் எப்போதும் கட்டுப்பாடற்ற அரக்கத்தனம் நிறைந்த குதிரையாகவே இருந்திருக்கிறேன். நான் எதை அடைய வேண்டுமென்று ஆசைப்படுவேனோ, அதை எந்தச் சமயத்திலும் அடையாமல் விட்டதே இல்லை- அது பெண்ணாக இருந்தாலும், சொத்தாக இருந்தாலும்! நேர்வழியிலோ குறுக்கு வழியிலோ... எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் நான் கவலைப்பட்டதேயில்லை.
ஒரு கழுகு தன்னுடைய இரையைப் பறித்துச் செல்வதைப்போல, சந்திரகுப்தன் என்னுடைய காமவெறி நிறைந்த கண்களிடமிருந்து சோமதத்தையைப் பறித்துச் சென்றபோது, என் இதயம் முழுவதும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வெறுப்பாலும் கோபத்தாலும் நிறைந்தது. எந்த விதத்தில் பார்த்தாலும் சந்திரகுப்தன் என்னைவிட உயர்ந்தவன் என்று நான் நினைக்கவேயில்லை. பலம் கொண்ட மாமனாராலும் மாமியாராலும் உதவி செய்யப்பட்டிருக்கும்பட்சம், நான்கூடத்தான் அவனுடைய நிலையில் இருந்திருப்பேன். நான் எந்த விதத்திலும் அவனைவிட பலத்திலோ, போர்த் திறமையிலோ, வம்ச அளவிலோ தாழ்ந்தவன் என்று கூறுவதற்கில்லை. அப்படி இருக்கும்போது நான் ஆசைப்பட்ட ஒரு பொருளை என்னிடமிருந்து அவன் எப்படிப் பறித்துச் செல்லலாம்?
அந்த நாளில் என்னுடன் இருந்துகொண்டு நான் அரசனால் அவமானப்படுத்தப்படுவதைப் பார்த்த என்னுடைய மற்ற நண்பர்கள் தங்களுடைய கிண்டல் நிறைந்த, குத்தலான வார்த்தைகளால் எரிந்து கொண்டிருந்த நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் அடிக்கொருமுறை கூறிய குத்தல் வார்த்தைகள் என்னை வெறிகொள்ளச் செய்தன.
ஒருநாள், அரசவைக்கு சந்திரகுப்தன் வராமல் இருந்து, அவையில் இருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தபோது, அந்த மூன்று பேர்களில் ஒருவனான சித்தாபால் உரத்த குரலில் என்னைப் பார்த்துச் சொன்னான்: