மண் விளக்கு - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
“சக்ரயுத்தா, இந்த நகையைப் பார். கோசலை நாட்டைச் சேர்ந்த ஒரு வியாபாரி இதை மன்னனுக்கு பரிசாக அளித்திருக்கிறான். இந்த நகை சுத்தமானதாக இருந்தால், இதை நான் வைத்துக் கொள்வதாகவும் இல்லாவிட்டால் இதை உனக்கு கொடுத்து விடப் போவதாகவும் அரசன் அவனிடம் கூறியிருக்கிறார். இந்த நகை உண்மையானதுதானா என்பதைப் பார்த்துக் கொள்!'' இதைக் கூறிவிட்டு, விலை மதிப்பே இல்லாத சிறிய கல்லை அவன் என் கண்களுக்கு அருகில் காட்டினான்.
அரசவையில் இருந்த ஆட்கள் அவனுடைய கிண்டல் கலந்த பேச்சைக் கேட்டு ஆரவாரம் எழுப்பிக் கொண்டு சிரித்தார்கள். அடிமைப் பெண்கள் அரசவையில் அமர்ந்திருந்த ஆட்களுக்கு சாமரம் வீசுவதைப்போல, கேலியாகச் சிரித்தார்கள். எனக்கு அவமானம் உண்டானதைப்போல உணர்ந்தேன். வெகு சீக்கிரமே . பாடலிபுத்திரத்தில் இருப்பவர்கள் எல்லாரும் என்னைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். நான் எந்த கொண்டாட்டத்திற்குச் சென்றாலும், சந்திப்பிற்குச் சென்றாலும் நான் அங்கு போய்ச் சேர்ந்ததுதான் தாமதமாக இருக்கும்- அங்கு இருப் பவர்கள். அர்த்தத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பிப்பார்கள். நான் அரசவைக்குள் நுழைந்தவுடன், அரசன்கூட தன்னுடைய முகத்தைச் சுளித்துக் கொள்வான். அதனால் நான் அரசவைக்குச் செல்வதையும், மக்கள் கூடியிருக்கும் எந்த இடத்திற்குப் போவதையும் மக்கள் ஒன்று சேர்ந்திருக்கும் எந்தவொரு நிகழ்ச்சிக்குச் செல்வதையும் நிறுத்திக்கொண்டேன். நான் அவமான உணர்ச்சியால் எரிந்து, கோபமுற்று, மக்களையே நிராகரித்தேன்.
அப்படிப்பட்ட நேரத்தில்தான் சந்திரவர்மன் பாடலிபுத்திரத்தைத் தாக்கினான். நான் ஒரு போர் புரியும் சத்திரியன். அதனால் நான் போருக்கு அழைக்கப்பட்டேன். படைத்தலைவரான விரோத்வர்மன் நூறு வீரர்களுக்கு என்னைத் தலைவனாக ஆக்கினார். பாடலிபுத்திரத்தின் மேற்குப் பக்க வாயிலான "கவுதம் துவா'ரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது.
4
அது ஒரு அமாவாசை இரவு. எப்போதும்போல நான் மட்டும் தனியே கோட்டையில் முகப்புப் பகுதியில் நடந்து கொண்டிருந்தேன். வசந்தகாலம் நெருங்கிக் கொண்டிருந்தது. காற்று மிகவும் கனமாக, மலர்களின் கசப்பு- இனிப்பு கலந்த நறுமணத்துடன் வீசிக்கொண்டிருந்தது. பகைவர்களின் முகாம்களில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் கோட்டைக்கு வெளியே கிட்டத்தட்ட அணைந்துவிட்டிருந்தன. கீழே, அகழியில் இருந்த தெளிவான நீரில் வானத்திலிருந்த நட்சத்திரங்கள் தெரிந்தன. கோட்டைக்குள் இருந்த நகரில் எந்தவொரு ஓசையும் இல்லை- வெளிச்சமும் இல்லை- கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டிருந்தன. இன்னும் சொல்லப் போனால்- பிரதான வீதியே இருளில் மூழ்கிக் கிடந்தது. மிகப்பெரிய, இரவின் இருண்ட இறக் கைகள் முழு உலகத்தையும் மூடி விட்டிருந்தன.
பாடலிபுத்திரம் தூங்கிக் கொண்டிருந்தது. போர் வீரர்களும்தான். கோட்டையின் வாயில்களில் இருந்த காவலாளிகள் மட்டும் தூங்காமல் கண் விழித்திருந்தார்கள். கோட்டையின் முகப்புப் பகுதி யில் அவர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. இரவு நேரத்தில் அவர்கள் மேலும் அதிகமான கவனத்துடன் இருந்தார்கள். இருண்டு போயிருக்கும் நேரத்தில் எங்கே பகைவர்கள் கோட்டைக்குள் நுழைந்துவிடப் போகிறார்களோ என்ற பயமே அதற்குக் காரணம்.
நள்ளிரவு நேரம் அரண்மனையிலிருந்து புறப் பட்டு வந்த இசையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் பாடலிபுத்திரத்தின் பத்து நுழைவாயில்களையும் காத்துக்கொண்டிருந்த காவலாளிகள் முரசை ஒலிக்கச் செய்து நேரத்தை அறிவித்தார்கள். இரவின் அமைதியை அந்தச் சத்தம் கலைத்தது. அது படிப்படியாக காற்றில் கரைந்து காணாமல் போனது. அந்த நகரம் எதிரியைப் பார்த்து எச்சரிக்கை விடுவதைப்போல இருந்தது: "கவனமாக இரு... நான் கண் விழித்திருக்கிறேன்.' தனிமையில் நடந்துகொண்டிருந்தபோது, நான் மிகவும் ஆழமான சிந்தனையில் மூழ்கினேன்.
என்னுடைய படுக்கையில் நிம்மதியாக படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, இந்த நள்ளிரவு நேரத்தில் இரவில் நடமாடும் பூச்சியைப்போல நான் ஏன் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்? பாடலிபுத்திரத்தின் கோட்டையைப் பாதுகாப்பதன் மூலம் எனக்கு என்ன நன்மை கிடைக் கப் போகிறது? இவையனைத்திற்கும் உரிமையாளனான மன்னன் தன்னுடைய காதலியின் கரங்களுக்குள் மிகவும் சந்தோஷமாக தூங்கிக் கொண்டிருக்கிறான். பாடலிபுத்திரம் சந்திரவர்மனின் கைகளில் சிக்கிக் கொண்டால் அதைப் பற்றி எனக்கு என்ன கவலை? கோட்டைக்குள் மக்கள் பட்டினி கிடந்து கொண்டிருக்கிறார்கள். நகரத்தின் சில பகுதிகளில் நோய்கள் பரவிவிட்டிருக்கின்றன. வெளியிலிருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு வரமுடியவில்லை. இரவு நேரத்தில் மட்டுமே பகைவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, சில மீனவர்கள் மீன்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறிய அளவில் பிடிக்கப்படும் அந்த மீன்களை வைத்து முழு நகரமும் சாப்பிட முடியாது. இதே நிலைமை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்? ஒருநாள் பாடலிபுத்திரம் பகைவனிடம் தலை குனியப் போகிறது. அது தவிர்க்க முடியாத ஒன்று. அப்படியென்றால், இப்போது நாம் ஏன் இந்த அளவுக்கு சிரமப்பட வேண்டும்? முழுநாடே சந்திரவர்மனிடம் சரணடைந்து விட்டது. பாடலிபுத்திரம் என்ற இந்த நகரம் மட்டும் எவ்வளவு நாட்கள் அவனிடம் சிக்காமல் இருக்கப் போகிறது? சந்திரகுப்தன் ஒரு தகுதியான அரசனாக இருந்திருந்தால், அவனே இந்த நகரத்தைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஏற்கெனவே ஈடுபட்டிருப்பான். இந்த நகரத்தைக் காப்பாற்றுவதற்கு நான் ஏன் இந்த உதவாக்கரை அரசனுக்கு உதவ வேண்டும்? அவன் எப்போதாவது ஏதாவது எனக்கு செய்திருக்கிறானா? நான் மனதில் ஆசைப் பட்ட பொருளை அவன் அபகரித்துக் கொண்டான். என் மக்கள் மத்தியிலேயே என்னை மற்றவர்கள் கிண்டல் செய்து சிரிக்கக் கூடியவனாக ஆக்கினான். சோமதத்தை- மனிதர்களின் காமவெறியைத் தணிப்பதற்காக படைக்கப்பட்ட தேவதை அவள். நான் அவளைச் சொந்தமானவளாக ஆக்காமல் இருந்தால், என்னுடைய தாகம் தீருமா? அவள் சந்திரகுப்தனின் காதலியாக இப்போது இருக்கிறாள். அவளை சந்திரகுப்தன் திருமணம் செய்து கொண்டானா? அது எனக்கு முக்கியமே இல்லை. நான் அவளை விரும்பினேன். நேர் வழியிலோ, குறுக்கு வழியிலோ அவளை நான் அடைந்தே தீருவேன். நான் வெற்றி பெறுவேனா? பெண்கள் பொதுவாகவே நிலையற்ற மனதைக் கொண்டவர்கள் என்று கூறுவார்கள். அவள் எவ்வளவு நாட்களுக்கு சந்திரகுப்தனிடம் நம்பிக்கைக்கு உரியவளாக இருக்கப் போகிறாள்? அதற்குப் பிறகு... சந்திரகுப்தா! உலகத்திற்கு முன்னால் உன்னை கிண்டலுக்குரிய பொருளாக ஆக்கப் போவதே நான்தான்... அதுதான் அவனை நான் பழிவாங்கும் சரியான வழியாக இருக்கும்.
இப்படிப்பட்ட சிந்தனைகளில் நான் முழுமையாக மூழ்கிப் போய் விட்டேன். அப்படியே கவுதம் துவாரிலிருந்து சிறிது தூரம் தள்ளி நடந்து வந்துவிட்டேன். கோட்டையில் இந்த முகப்புப் பகுதி இரவு நேரத்தில் மிகவும் தனிமைச் சூழலில் இருந்தது. கோட்டையின் இந்தப் பகுதிக்கு யாரும் வரமாட்டார்கள்.