ரஷ்யா - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6787
பல வகைப்பட்ட கால்கள் அவர் இருக்குமிடத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தன. எல்லாக் கால்களிலும் செருப்புகள் இருந்தன. இந்த விஷயம் அவருக்கு ஒருவித திருப்தியை உண்டாக்கியது. சுதந்திரத்திறகுப் பிறகு தன்னுடைய நாடு பெற்றிருக்கும் மிகப்பெரிய வளர்ச்சி என்று அவர் இந்த விஷயத்தை நினைத்தார். பசித்துக் கொண்டிருக்கும் வயிறுகளைவிட கால்களின் அழகுதான் முக்கியம் என்பதை அவர் புரிந்து கொண்டார். புகைவண்டி நிலையத்திலிருந்து கீழே இறங்கிச் செல்லும் படிகளுக்குக் கீழே கிடந்த ஆணியொன்றை கோவிந்தன் பார்த்தார். அந்த ஆணியிலிருந்து சரியாக ஏழரை அங்குல தூரத்தில் ஒரு சோடா மூடி கிடந்தது. அதன் பெரும்பகுதி நசுங்கிப் போயிருந்தது.
கோவிந்தன் (தனக்குள்): அவள் வருவா... வராம இருக்க மாட்டா....
4
கடினமான மன உழைப்பாலும் சரியாக உணவு சாப்பிடாததாலும் தொடர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்ததாலும் ஒரு நாள் இளைஞனான கோவிந்தன் பாதையோரத்தில் தலைசுற்றி கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசத்தால் (யாருடைய அதிர்ஷ்டவசத்தால்?) வாகனங்கள ஒன்றையொன்று முந்திக்கொண்டு போய்க்கொண்டிருந்த சாலையைக் குறுக்காகக் கடக்கும்போதல்ல- நடைபாதை வழியாக வாடகைக்கார்கள் நிறுத்துமிடத்திற்கு நடந்து போகும் போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. கால்களின் பலம் குறைந்து இடது பக்கம் சாயும்போது வலது பக்கமிருந்த பெரிய சாலையும் அதில் வேகமாகப் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த மோட்டார் வாகனங்களும் அதைத்தாண்டி அடுக்கடுக்காக நின்று கொண்டிருந்த வீடுகளும் திடீரென்று மேல்நோக்கி உயர்வதைப் போலவும் தலைகீழாக அவை கவிழ்ந்து தன்னுடைய உடல்மீது விழுவதைப் போலவும் கோவிந்தனுக்குத் தோன்றியது. ஒரு பக்கம் சாய்ந்து விழுந்த கோவிந்தன் எழுவதற்காக ஒரு முயற்சி பண்ணினாலும் அதில் அவர் தோல்வியடைந்து சுயநினைவில்லாமல் கிடந்தார். வெயில் காய்ந்து கொண்டிருந்த சில இளைஞர்களும் கால்நடையாக நடந்து சென்ற சிலரும் கோவிந்தனைச் சுற்றி நின்றிருந்தார்கள். அவருடைய கையிலிருந்த சிகரெட் பாக்கெட்டும் முகத்திலிருந்த வெயில் கண்ணாடியும் அவர்களின் கால்களுக்கு அருகில் தரையில் கிடந்தன. இப்படி ஒரு மனிதன் சுய நினைவில்லாமல் கிடப்பதைப் பார்த்தால் அவரை உடனே பாதையின் ஓரத்திற்குக் கொண்டு சென்று படுக்க வைத்து முகத்தில் சிறிது குளிர்ந்த நீரைத் தெளிக்க வேண்டும் என்று அவர்களில் யாருக்கும் படவில்லை. அதே நேரத்தில் ஒரு சைக்கிளில் வந்து இறங்கிய ஒரு வயதான கிழவர் சேறு படிந்திருந்த தன்னுடைய செருப்புகளில் ஒன்றைக் கழற்றி கோவிந்தனின் முகத்திற்கருகில் வைத்து மணம் பிடிக்க வைக்க மறக்கவில்லை. கோவிந்தனிடம் வலிப்பு நோய்க்கான அறிகுறி சிறிதுகூட காணப்படவில்லையென்றாலும், அதுவாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்குத் திடீரென்று அந்த வயதான கிழவர் வந்தார்.
ஒரு பத்திரிகையாளர் கோவிந்தனிடம்: உங்களின் தோழி அப்போ அங்கே வந்து சேராம இருந்திருந்தா உங்களுக்கு என்ன நடந்திருக்கும்ன்றதைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
கோவிந்தன்: இந்தக் கேள்விக்கு இங்கே அவசியமே இல்ல. காரணம்- அவளால அந்த நேரத்துல அங்கு வராம இருக்க முடியாது. எங்கே கோவிந்தன் இருக்கானோ, அங்கே ருஸ்ஸியும் இருப்பா.
பத்திரிகையாளர்: உங்க உயிரைக் காப்பாற்றியதால், நீங்க ருஸ்ஸிக்கு கடமைப்பட்டிருக்கீங்கன்னு நான் நினைக்கிறதுல தவறு எதுவும் இல்லையே!
கோவிந்தன்: இல்லை என்பது மட்டுமல்ல. இன்னொரு சூழ்நிலையிலும் அவள் என்னை அருகிலிருந்து பார்த்து, என்னோட உயிரைக் காப்பாற்றியிருக்கான்றதையும் நான் இங்கே சொல்ல விரும்புகின்றேன். எனக்கு அப்போ மஞ்சள் காய்ச்சல் வந்துருந்துச்சு.
“மஞ்சள் காய்ச்சல்னு சொன்னால்... அது என்னன்னு விளக்கமா சொல்ல முடியுமா?”
“இந்தியர்களான நமக்கு நம்ம பழைய காலனியலிஸ்ட் மொழியான ஆங்கிலத்தில் சொன்னா மட்டும்தான் பல விஷயங்களையும் புரிஞ்சிக்க முடியும் என்பதை என்னால அறிய முடியுது. மஞ்சள் காய்ச்சல்னா ஜான்டிஸ். உங்களுக்கு நல்லா புரியணும்ன்றதுக்காக இனிமேல் சொல்ல வர்றதை ஆங்கிலத்திலேயே நான் சொல்ல விரும்புறேன். எ யெல்லோயிஷ் கலர் ஆஃப் தி ஸ்கின் அன்ட் தி ஒயிட்ஸ் ஆஃப் தி ஐஸ் கால்ட் பை தி ப்ரஸன்ஸ் ஆஃப் டூ மச் பைல் இன் தி ப்ளட். இன் மெனி கேஸஸ் ஆஃப் ஜான்டிஸ் தி ஸ்டூல் (அமரும் நாற்காலி ஸ்டூல் அல்ல) பிகம்ஸ் லைட். அன்ட் தி யூரின் டார்க். ஜான்டிஸ் ஈஸ் நாட் இன் இட் ஸெல்ஃப் எ டிஸீஸ், பட் ராதர் எ ஸிம்டம் ஆஃப் அதர் டிஸீஸஸ் அன் டிஸார்டர்ஸ்...”
கோவிந்தனைப் பொறுத்தவரை சுயநினைவில்லாமல் விழுவது என்பது ஆர்வமான ஒரு நிகழ்ச்சி அல்ல. ஒருமுறை நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து பிறகு தனக்கருகில் அவர் எந்த அசைவுமில்லாமல் படுத்திருப்பதைப் பார்த்து, ஏதோ உறங்குகிறார் என்று அவள் முதலில் நினைத்தாள். உண்மையாகப் பார்க்கப்போனால் அவர் அப்போது சுயநினைவில்லாமல் இருந்தார்.
மருத்துவமனையில் கிடந்த கோவிந்தனின் உடலில் மஞ்சள் நிறம் படரத் தொடங்கியது. அடித்துக் கொன்றுபோட்ட ஒரு தவளையைப் போல அவர் கிடந்தார். இன்னும் மறையாமலிருக்கும் மஞ்சள் வண்ண சூரியனுக்குக் கீழே கஷாய நிறத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டு சுயநினைவு சிறிதும் இல்லாமல் கோவிந்தன் நான்கு நாட்கள் கிடந்தார்.
நகரத்தின் ஆங்கில பத்திரிகைகளிலும் வார இதழ்களிலும் கோவிந்தனின் புகைப்படம் அச்சடிக்கப்பட்டு வருவது என்பது ஒரு வாடிக்கையான விஷயமாக இருந்தது. அவரின் பேட்டி கட்டுரையொன்று அப்போது வெளியான முன்னணி பத்திரிகையொன்றின் ஞாயிற்றுக்கிழமை பதிப்பில் வந்தது. ஆட்கள் அவரை அடையாளம் கண்டு அருகில் வந்து கைகொடுப்பதோ அவரிடம் குசலம் விசாரிப்பதோ வழக்கமான ஒரு செயலாகிவிட்டது. அதை அவர் மனதிற்குள் மிகவும் விரும்பினார்.
அன்றாடம் வாழ்க்கையில் பயன்படும் பொருட்கள் விற்பனை ஆக எந்த அளவிற்கு விளம்பரங்கள் அவசியத் தேவையாக இருக்கின்றனவோ, அதே மாதிரி இப்போதைய மனிதர்களுக்கு தாங்கள் யாரென்று காட்டிக்கொள்ள விளம்பரங்கள் கட்டாயம் தேவைப்படுகிறது. ஆனால் தன்னைப் பற்றிய கட்டுரைகளோ பேட்டிகளோ புகைப்படங்களுடனோ அல்லது புகைப்படங்கள் இல்லாமலோ, அவை பத்திரிகைகளில் பிரசுரமாகி வரவேண்டுமென்பதற்காக அவர் பத்திரிகைக்காரர்களுக்குப் பின்னால் எப்போதும் அலைந்து திரிந்ததில்லை. அப்படிப்பட்ட செயல்களை அவர் முழுமையாக எதிர்த்தார்.
மனித நாகரீக வரலாற்றில் மனிதன் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இந்த அளவுக்கு ஆர்வத்தை இதற்கு முன்பு எப்போதும் காட்டியதேயில்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார் அவர்.
ருஸ்ஸி கோவிந்தனிடம்: இப்போதுள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நார்ஸிஸஸ்ஸாக மாறுவதைத் தான் நாம் பார்க்கிறோம். தன்னுடைய முகத்தைத் தானே பார்த்து மகிழ்ச்சியடைய கண்ணாடி தேடி அலையும் நார்ஸிஸஸ்களின் போக்குதான் இப்போ எல்லா இடத்துலயும் இருக்கு. அவர்களுக்குக் கண்ணாடி கொடுத்து பத்திரிகைக்காரர்கள் தங்களின் பாக்கெட்டை பெரிதாக்கிக் கொள்கிறார்கள்.