ரஷ்யா - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6787
வயதான கோவிந்தன் இப்போதும் தன்னுடைய தோழியை எதிர்பார்த்து புகைவண்டி நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
இளைஞனான கோவிந்தனுக்கு ஆடிக்கொருதரம் சுயநினைவு இல்லாமற்போவதைப் பற்றி நாம் மேலே சொன்னோம். அது அவரின் ஆன்மிக வளர்ச்சியின் ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாக இருந்தது. கோவிந்தன் நடுத்தர வயதை அடைந்தபோது மற்றொரு முக்கியமான விஷயமும் அவர் வாழ்க்கையில் நடந்தது. அதைப் பற்றித்தான் நாம் இப்போது இங்கு கூறப்போகிறோம்.
ஒருநாள் ஒரு குழந்தை காணாமல் போவதைப் போல நடுத்தர வயது மனிதரான கோவிந்தன் காணாமல் போனார். வெள்ளை வெளேர் என்று இருக்கும் சுவர்களும், பிரம்பு நாற்காலிகளும் மட்டும் கொண்டு அலங்காரப் பொருட்கள் எதுவுமில்லாமல் ஜன்னல் திரைச்சீலைகள் கூட இல்லாத தன்னுடைய அறையில் பின்னோக்கி சாய்ந்து அமர்ந்து அவர் இசையைக் கேட்டுக் கொண்டிருந்தார். இசையைக் கேட்கும்பொழுது அவர் பேசுவதோ, உடம்பை இலேசாக அசைப்பதோகூட இல்லை. சமையலறையில் கட்வாள் மலையிலிருந்து வந்த அவருடைய சமையல்காரன் அவருக்காக சப்பாத்தி சுடுவதிலும் பருப்பு வேக வைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். அப்போதுதான் அவர் காணாமல் போனார். மறுநாள் அதே நேரத்தில் காணாமல் போனதைப் போலவே அவர் திரும்பி வரவும் செய்தார். அவர் எங்கே போனார் என்று கேட்க அவருக்கு அங்கு யாருமில்லை. அவரின் அந்தப் பெரிய வீட்டில் அவர் தனியாகத்தான் இருக்கிறார். சமையல்காரன் காலையில் வந்து மதியத்திற்குப் பிறகு போய்விடுவான். உணவுமேல் அந்த அளவிற்கு நாட்டமில்லாத கோவிந்தனுக்குச் சிறிது ஆகாரம் இருந்தாலே போதும். சமையல்காரன் என்ன சமையல் பண்ணிக் கொடுத்தாலும் பசியிருந்தால் அவர் சாப்பிடுவார். அழகுக்கலை போல உணவு விஞ்ஞானம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையும், உணவு உண்பது என்பது புத்தகம் படிப்பதைப்போலவோ இசையைக் கேட்பது போலவோ உள்ள ஒரு இனிமையான அனுபவம் என்பதையும் அவர் அறியாமலில்லை என்பதையும் நான் இங்கு கூற விரும்புகிறேன். உடலுறவு கொள்வது தன்னுடைய சொந்த வம்சத்தை நிலை நிறுத்துவதற்காக மட்டுமே என்று கூறுவதைப்போல சாப்பிடுவது உயிர் வாழ்வதற்காக மட்டுமே என்று கருதக்கூடிய அளவிற்கு முட்டாள்தனம் நம் கோவிந்தனிடம் இருக்கிறது என்று நாம் நினைத்தோமானால் அது அவருக்கு அவமானம் தேடித்தரும் ஒரு செயலாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
திரைச்சீலைகள் இல்லாத கண்ணாடி ஜன்னல்கள் இருக்கும் கோவிந்தனின் அறையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் தூரத்தில் நின்றவாறு பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் பார்க்கும் அளவிற்கு ஈர்க்கக்கூடிய எந்தவொரு செயலும் அவரின் அறையில் நடப்பதில்லை என்ற உண்மை அவர்களை வெறுப்படையச் செய்திருக்க வேண்டும். எந்த நேரமும் தன்னுடைய பிரம்பு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து இசையைக் கேட்டுக் கொண்டோ புத்தகத்தைப் படித்துக் கொண்டோ அல்லது ஏதாவது தீவிரமாக சிந்தித்துக் கொண்டோ இருக்கும் அவர் தன்னைப் பற்றி முழுக்க முழுக்க வெறுப்படையச் செய்யும் ஒரு கருத்தைத்தான் மற்றவர்களுக்கு வழங்கினார்.
கற்பனைக்கெட்டாத காலம் தொட்டு உலகில் இருந்துவரும் கற்கள் மீது ஆர்வம் பிறப்பதற்கு முன்பு கோவிந்தனுக்கு ஆர்வம் உண்டானது கண்ணாடிகள் மீதுதான். ஐதீகங்களிலும் கட்டுக் கதைகளிலும் மற்ற கதைகளிலும் வரும் கண்ணாடி மாளிகைகளைப் பார்த்து அவருக்கு இப்படிப்பட்ட ஒரு ஆர்வம் உண்டாகவில்லை. நாம் சுற்றிலும் பார்க்கும் ஒவ்வொரு பொருளுக்கு உள்ளேயும் அதற்கென்று இருக்கும் புதர்களில் சொந்த விஷயங்களும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. பாய்ந்து செல்லும் ஒளி தனக்குள் இருப்பதையெல்லாம் வெளிச்சம் போட்டு வெளியே காட்டும். அதேநேரத்தில் உள்ளே எதுவுமே இல்லாத கண்ணாடிகளுக்கு எந்தவித ரகசியமும் இல்லை. கண்ணாடியின் இந்த புனிதத் தன்மையும், வெளிப்படையான குணமும், எளிமையும்தான் கோவிந்தனின் கவனத்தை அதை நோக்கி திரும்பச் செய்தது. ஒரு கண்ணாடியைப் போல எந்தவித மறைவும் இல்லாத ஒரு வாழ்க்கையைத்தான் அவர் தனக்கென்று தீர்மானித்தார். ஆனால், அவருக்குக் கிடைத்ததோ வினோதமும், துக்கங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கைதான். இல்லாவிட்டால் அவரின் தோழி அவளுடைய படுக்கையறையில் அவரை எதிர்பார்த்து காத்திருக்கும்போது அவர் எதற்காகப் போய் மறையவேண்டும்? நடுத்தர வயதைக் கொண்ட கோவிந்தன் நான்காவது முறையாக காணாமற் போனார்.
அலங்காரப் பொருட்களோ ஆடம்பரங்களோ இல்லாத வெளுத்துப்போன சுவர்களும் பிரம்பு நாற்காலிகளும் உள்ள அவருடைய அறை மிகவும் எளிமையானது என்று நாம் நினைத்து விடக்கூடாது. அழகைத்தேடி அலையும் ஒரு மனிதனின் வெளிப்பாடு அந்த அறையின் ஒவ்வொரு விஷயத்திலும் இருப்பதை நம்மால் உணரமுடியும். பிரம்பு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும் விதமும் அவற்றுக்கு இடையில் இருக்கும் தூரமும் அந்த நாற்காலியில் உட்கார்ந்தால் கிடைக்கக்கூடிய அறையின் காட்சியும் மிகவும் நடைமுறையில் இருக்கும் ஒரு அழகுணர்வுத் தன்மையை சட்டென்று பறைசாற்றக்கூடியவையாக இருக்கும். நான்கு வெண்மையான சுவர்களும் நான்கு பிரம்பு நாற்காலிகளும் மட்டும் வைத்து ஒட்டு மொத்தத்தில் தனிமை நிறைந்த ஒரு அருமையான இடமாக அதை அவர் ஆக்கியிருந்தார்.
கோவிந்தன் நான்காவது முறையாகக் காணாமல் போனது குறிப்பாக அவருடைய தோழிக்கு ஒருவகை ஆர்வத்தை உண்டாக்கியது. மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை அவரிடம் கூறவேண்டும் என்பதற்காகவும் அதைப்பற்றி அவருடைய கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவும் அவருடன் அதைப்பற்றி நீண்டநேரம் விவாதிக்க வேண்டுமென்பதற்காகவும் அவள் அவரைத் தன்னுடைய படுக்கையறைக்கு அழைத்ததே. கோவிந்தனின் படுக்கையறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் அமைந்திருந்தது அவளுடைய படுக்கையறை. குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்த அந்தப் பெரிய அறைக்கு இரண்டு பெரிய ஜன்னல்கள் இருந்தன. கனவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும், தூக்கத்தை வரவழைக்கக் கூடியதாகவும்- இன்னொரு வார்த்தையில் கூறுவதாக இருந்தால்- அதற்கேற்ற முறையில் அமைந்த ஒரு காமரசம் சொட்டும் படம் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. குளிர்ந்த நீரும் டின் பீர்களும் வைக்கப்பட்டிருக்கும் சிறிய ஃப்ரிட்ஜைக்கூட நாம் அங்கு பார்க்கலாம். நகரத்தில் இன்னும் பிரபலமாகாத வெளிநாடுகளில் புதுமையானது என்று பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காம்ப்பேக்ட் டிஸ்க் ப்ளேயரும், டிஸ்க்குகளும் இருப்பதை நாம் அங்கு பார்க்கலாம். பழமையான பாணியில் அமைக்கப்பட்ட அருமையான புத்தக அலமாரியும் அதில் நிறைய புத்தகங்கள் இருப்பதையும் நாம் பார்க்கலாம். பித்தளைக் கைப்பிடி கொண்ட ட்ராயர் உள்ள எழுத்து மேஜையும் அதன் மீது சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் தாள்களும் இங்க் பேனாக்களும் (அவளுக்கு பால்பாயிண்ட்களைப் பிடிக்காது) இருப்பதை நாம் அங்கு பார்க்கலாம்.