
"அப்பிடின்னா இனி சுதாவைப பார்க்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் குடு. அவ வாழ்க்கையில இனி குறுக்கிட மாட்டேன்னு சத்தியம் பண்ணு..." "சுதாவோட டிஸிப்ளின் பத்தி உங்களுக்குத் தெரியாதா? ஆபிசுக்கு போன் பண்ணக் கூடாதுன்னு ஆபீஸ் போன் நம்பரே தரலை. உங்க வீட்லயும் போன் கிடையாது. என் வீட்லயும் போன் கிடையாது. என்னோட ஆபீஸ்ல தனிப்பட்ட போன் யாருக்கும் வரக்கூடாது. நாங்க இது வரைக்கும் போன்ல பேசினதே இல்லை. உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லாததுனாலதானே சத்தியம் கேக்கறீங்க? உங்க திருப்திக்காக சத்தியம் பண்றேன். இனி நான் சுதாவைப் பார்க்க மாட்டேன்... பேச மாட்டேன்… இது சத்தியம்" துக்கமும் அதை மீறிய கோபமும் சேர்ந்து சற்று குரல் ஒலிக்க பேசிவிட்டு, வெளியில் நடந்தான் பரத்.
'அப்பாவின் உடம்பு மோசமா இருக்கறதுனால இந்த முறை நம்ப காதல் விஷயத்தைப் பேச முடியலைன்னு சுதா கிட்ட சொல்ல வந்தா... ஆன்ட்டி இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டாங்க. பணக்காரங்களைப் பார்த்ததும் ஆன்ட்டி இப்படி மாறிட்டாங்களே... பத்து நாள் ஆபிசுக்கு லீவு போட்டுட்டு அப்பாவை நல்லா கவனிக்கணும்.’ சிந்தனைகள் துணைக்கு வர ரயில் நிலையத்தை அடைந்தான். செங்கல்பட்டு செல்லும் ரயிலில் ஏறினான். உட்கார்ந்தான். ரயில் புறப்பட்டது. 'சுதா... என் உயிர்... அவள் இல்லாம நான் இல்லைன்னு சொன்னேன். அவள் இல்லாமதான் இனி நான் வாழப் போறேன். என் அப்பாவுக்காக, படிச்சிக்கிட்டிருக்கற என் தம்பிக்காக நான் வாழ்ந்தே ஆகணும்’ ஜெயாவின் மாறிவிட்ட போக்கும், அவளது நிபந்தனையும் அவனது மனதை அலைக்கழித்தது. சில மணித் துளிகளில், விரக்தியான அவனது மனதில் வைராக்கியம் பிறந்தது. 'என் சுதா என்னை மறந்துட்டு எப்பிடி வாழ்வா? என்னைப் பத்தி தப்பா நினைப்பாளே... என் காதலை பொய்யா மதிப்பாளே... காதலிச்சுட்டு, அவளோட அழகை அனுபவிச்சுட்டு ஓடிப் போயிட்டானேன்னு நினைப்பாளே... ஐயோ... கடவுளே...’ மீண்டும் பரத்தின் மனதிற்குள் துயரப் பூகம்பம் உருவாகியது. கண்களில் கண்ணீர் வழிந்தது.
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய சுதாவிற்கு லேசாக தலை சுற்றியது. வாந்தி எடுப்பதற்காக குமட்டியது. வாந்தி எடுத்தாள். காலண்டரைப் பார்த்தாள். திடுக்கிட்டாள்.
'ஐயோ... அப்பிடின்னா... நான்... என்... வயித்துல... பரத்தின் குழந்தை உருவாகியிருக்கா?’ அவள் வாந்தி எடுப்பதைப் பார்த்த ஜெயா அவளருகே வந்தாள்.
"ஆபீஸ்ல மீட்டிங் கீட்டிங்னு ஹோட்டல் சாப்பாடு சாப்பிடற. அதுதான் உனக்கு ஒத்துக்கலை. எலுமிச்சம்பழம் பிழிஞ்சு தரேன், குடி."
"அம்மா" அலறியபடியே ஜெயாவின் காலில் விழுந்தாள் சுதா.
"என்னம்மா என்ன ஆச்சு?" அதிர்ச்சி பலமாகத் தாக்க நெஞ்சைப்பிடித்தபடி கேட்டாள் ஜெயா.
பரத்தின் உயிர் தன்னுள் உருவாகி இருப்பதைக் கூறி, மேலும் அழுதாள் சுதா.
'ஐயோ... அப்பிடின்னா... இன்னிக்கு அவங்க கம்பெனி முதலாளி பெண் கேட்ட விஷயமா பேசலாம்னு இருந்தேனே... எல்லாமே போச்சா? என் பொண்ணோட வாழ்க்கை இனி அந்த பரத் கூடத்தானா? அவங்கப்பாகிட்ட இவங்க காதலைப்பத்தி பேசினானா என்னன்னு கூட கேட்காம படபடப்பா பேசி அனுப்பிட்டேனே... சுதாவை பார்க்கக் கூடாதுன்னு வேற சத்தியம் வாங்கினேனே... கடவுளே...’ துன்பச் சுமை இதயத்தை அழுத்த, நெஞ்சு வலி வந்து துடித்தாள் ஜெயா. சில நிமிடங்களில் மயங்கிய அவளை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றாள் சுதா.
"உயிர் போய் ஒரு மணி நேரமாச்சும்மா" டாக்டர் கூறியதைக் கேட்ட சுதா அலறினாள். அழுதாள். அரற்றினாள். "நானே உலகமாக வாழ்ந்த என் அம்மா... நான் நல்லா இருக்கணும்னு இளமையில் கொடுமையான வறுமையுடன் போராடி என்னை படிக்க வைத்த என் அம்மா... தனக்கென்று எதுவும் நினைக்காம எனக்கென்று வாழ்ந்த என் அம்மா... உயிரோடு இல்லையா? எனக்கு அம்மா இல்லையா? நான் அநாதையா..." சுதா கதறி அழுததைப் பார்த்தவர்கள் பரிதாப உணர்வில் மூழ்கினார்கள்.
எல்லாம் முடிந்தது.
"ஸாரி சுதா. உங்கம்மாவோட இழப்பு ஈடு செய்ய முடியாதது..." விக்னேஷ் வந்து ஆறுதல் கூறினான்.
'சுதாவிடம் பேசிவிட்டு, பதில் கூறுவதாக ஒரு வாரம் டைம் கேட்டிருந்தாங்க. இவ கிட்ட பேசினாங்களா என்னமோ தெரியலையே... ஒரு வார காலம் அவகாசம் கேட்டாங்க. இப்பிடி அகாலமா இறந்துட்டாங்களே...’ பல நினைவுகளின் ஊடுருவலில் சுதாவிற்கு மேலும் சிறிது நேரம் ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டான் விக்னேஷ்.
ஜெயாவின் வாழ்வு முடிந்ததோடு சுதாவின் துன்பங்கள் துவங்கின.
'அப்பா கிட்ட பேசிட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போன பரத் வரவே இல்லை. அவனோட ஊர் செங்கல்பட்டுன்னு மட்டும்தான் தெரியும். அங்கே அவரோட அட்ரசும் தெரியாது. இங்கே அவர் வேலை செய்ற ஆபிசும் தெரியாது. ஐய்யோ கடவுளே... அவரை எங்கேன்னு போய் தேடுவேன்? காதல் என் கண்ணை மறைச்சுடுச்சா? பரத்தை நல்லவர்னு நம்பினேனே... நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டாரே… கல்யாணம் ஆகாம கர்ப்பத்தை சுமக்கறது களங்கமாச்சே. என் வயித்துல வளர்ற குழந்தைக்கு அப்பா யார்னு ஊரும் உலகமும் கேட்டா நான் என்ன சொல்வேன்? ஊர் உலகம் இருக்கட்டும். இந்தக் குழந்தையே பிறந்து வளர்ந்து விபரம் தெரிஞ்சதும் 'என் அப்பா யார்’ன்னு கேட்குமே. அப்ப நான் என்ன செய்வேன்...’ தனிமையில் புலம்பி அழுவதைத் தவிர வேறு வழியே தெரியவில்லை சுதாவிற்கு.
'இன்று வருவான்’ 'நாளை வருவான்’ என்று எதிர்பார்த்து, தினமும் காத்திருந்தாள். ஆனால் அவளது வயிற்றில் உருவான கரு காத்திருக்கவில்லை. அது மேலும் வளர்ந்தது. அதன் அடையாளமாய் சுதாவின் வயிறும் வளர்ந்து மேடிட்டது. மேடிட்ட வயிறை மூடி மறைக்க இயலாமல் தவித்த அவளைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் சிரித்தனர். அவமானப்படுத்தினர். வாய்க்கு வந்தபடியெல்லாம் கண்டபடி கேவலமாகப் பேசினார்கள். வெட்கமும் வேதனையும் அவளது இதயத்தைத் துளைத்தது. ஆபிஸிலும் அவளுக்கு இருந்த மரியாதை தேய்ந்தது. முதல் வேலையாக வேலையை ராஜினாமா செய்தாள். எத்தனை துன்பப்பட்டாலும் வெறுமையாகிப் போன மனது எதுவும் கேட்பதில்லை. ஆனால் வயிறு? அவள் வயிற்றில் வளரும் சிசுவிற்கும் சேர்த்து உண்ண வேண்டுமே? கையிலிருந்த பணம் குறைந்தது. கரைந்தது. இனி பரத் வர மாட்டான் என்று தோன்றியதும், அவனது ஊரான செங்கல்பட்டிற்குப் புறப்பட்டாள். பஸ் நிலையத்திலிருந்து பைத்தியக்காரி போல பரத்தைத் தேடினாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook