உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்... - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6345
"இப்ப அழுது என்னம்மா பிரயோஜனம்? ஆரம்பத்துல இருந்து உன்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தேன் இந்த விபரீத விளையாட்டு வேண்டாம்னு. இந்த ஒரு விஷயத்துல மட்டும் என் பேச்சை நீ கேட்கலை... முகம் தெரியாத அந்நியக் குழந்தைகளுக்குக் கூட இதய ஆப்ரேஷன் அது இதுன்னு பேப்பர்ல வர்ற அறிவிப்பைப் பார்த்துட்டு பணம் அனுப்பறோம். ஆனா..."
அவர் பேசி முடிப்பதற்குள் அழுகை வெடிக்க, அந்த அறையை விட்டு தன் அறைக்கு வந்தாள் சுதா. மேலும் அழுதாள். கல்லாகிப் போன அவளது நெஞ்சம் கலங்கியது.
25
நீலு இறந்து போன சேதி கூட குறித்த நேரத்தில் கிடைக்காமல் டெல்லியில் ஒரு மீட்டிங்கில் இருந்த மோகன் விமானம் பிடித்து சென்னை வந்தான்.
சிவகாமியைப் பார்த்து அவனும் அழுதான். ஆறுதல் கூறினான். வழக்கம்போல சரண்யா மௌனமாக இருந்தாள். அந்த நிலையிலும் மனம் கலங்கவில்லை. துக்கவீட்டு சூழ்நிலையில் குடும்பப் பிரச்சனைகள், சரண்யாவின் அலட்சியம் எதைப்பற்றியும் யாராலும் பேச இயலவில்லை. மோகனும், சரண்யாவும் புறப்பட்டனர்.
26
துக்க வீட்டின் சம்பிரதாங்கள் முடிந்தன. சோறு, தண்ணி இறங்காமல் துவண்டு கிடந்தாள் சிவகாமி. முதுமையின் தளர்ச்சியில், பேத்தியை இழந்த துக்கத்தில் சோமசுந்தரம். பானுவும், சாய்ராமும் தாயின் காலடியில். தலையைத் தாங்கிப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தான் பரத்.
'இவனோட மனசுல வேற ஏதோ பிரச்சனை இருக்கு. ஒரு வாரமாகவே இவன் சரி இல்லை’ யோசித்த சோமசுந்தரம், பரத்தைக் கூப்பிட்டார்.
"பரத்."
"என்னப்பா. வாசல் பக்கம் கொஞ்சம் வாப்பா."
"பரத்... தாய் அறியாத சூல் இல்லைம்பாங்க. அது போல ஒரு தாய் ஸ்தானத்துல இருந்து உன்னை வளர்த்திருக்கேன். உன்னோட வேலை நீக்கம், பணப்பிரச்சனை, நீலுவோட இழப்பு இதையெல்லாம் தாண்டி, உன் மனசுக்குள்ள ஏதோ ஒரு துன்பம் ஒளிஞ்சிக்கிட்டிருக்கு. இல்லைன்னு நீ சொன்னா அது பச்சைப் பொய். உன்னோட பிரச்சனை என்ன? அப்பா கிட்ட சொல்லுப்பா. என்னால முடிஞ்சதை செய்யறேன்...." அப்பா அழ ஆரம்பித்ததும் அவர் காலடியில் சரிந்து உட்கார்ந்தான் பரத். தான் சுதாவைக் காதலித்தது முதல் அவள் அவனைப் பழி வாங்குவது வரை அத்தனையையும் சொல்லி முடித்தான்.
"பெண் குலமே பழிச்சுப் பேசற அளவுக்குப் பழி வாங்கற மனப்பான்மையை வளர்த்துக்கிட்ட அந்தப் பொண்ணு எங்கே இருக்கா?"
சுதாவின் வீடு இருக்கும் அட்ரஸைத் தெளிவாகச் சொன்னான் பரத்.
27
"நீ... நீ... நீயா..."
சுதாவை சந்தித்துப் பேசுவதற்காக அவளது வீட்டிற்குப் போன சோமசுந்தரம் திடுக்கிட்டார். மங்கலான நினைவலைகளில் சுதாவின் முகம் மறக்காமல் இருந்தது அவருக்கு.
"நீங்க யார்னு சொல்லுங்க."
சொன்னார்.
"ஓ... பரத்துக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கீங்களா?"
"இல்லம்மா. உங்கம்மாவோட பணப்பேராசை பத்தி சொல்லி உன் பாவ மூட்டையோட சுமையைக் குறைக்க வந்திருக்கேன்."
"பாவ மூட்டையை சுமக்க வச்சதே உங்க மகன்தானே? உங்கக்கிட்ட பேசிட்டு வர்றதா சொல்லிட்டு போனார். பேசி இருப்பார். நீங்க மறுக்க, உங்க சொந்தக்காரப் பொண்ணைக் கட்டி வச்சுட்டீங்க."
"நீயாவே 'அப்படி இருக்கும்’ 'இப்படி நடந்திருக்கும்’னு யூகிச்சு, அதுதான் நிஜம்னு தப்புக் கணக்கு போடாதே..."
"என் கணக்கு எப்பவும் தப்பாது. நான் ஜெயிச்சுட்டேன்..."
"குடும்பம்ங்கறதும் வாழ்க்கைங்கறதும் ஓட்டப்பந்தயம் இல்லை ஜெயிக்கறதுக்கும், தோல்வி அடையறதுக்கும். இது ஒட்டி உறவாடும் பந்தம். புரிஞ்சுக்க..."
"நீங்கதான் ஒட்டவிடாம வெட்டி விட்டுட்டீங்களே..."
"நடந்த உண்மையை பரத், சொல்ல முயற்சித்தப்ப, அவன் வாயை அடக்கி கண்டபடி பேசி வெளியே அனுப்பிட்ட. அவனுக்கு தன் நிலையை விளக்கறதுக்கு சந்தர்ப்பமே நீ குடுக்கலை. நடந்ததை சொல்றதுக்கு இப்ப எனக்காவது வாய்ப்புக் குடு. உன் அம்மாவை நீ இழந்ததுக்குக் காரணமே என் மகன் பரத்தான்னு சொன்னியாமே. நீ, பரத்தை அடைய முடியாம தவிச்ச தவிப்புகளுக்கெல்லாம் காரணமே உங்க அம்மாதான்..."
"என்ன உளர்றீங்க?..."
"நான் உளறல. உண்மையைத்தான் சொல்றேன்" என்று சொல்ல ஆரம்பித்தவர், தன் மகள் பணக்கார வாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசையில் பரத்திடம் சத்தியம் வாங்கியதிலிருந்து, தனக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால்தான் அந்த சந்தர்ப்பத்தில் அவர்களது காதல் பற்றி பரத் எதுவும் பேசவில்லை என்பது வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.
"உங்க அம்மாவுக்கு குடுத்த சத்தியத்தைக் காப்பாத்தினான் என் மகன். காரணம்? உங்க அம்மா ஆசைப்பட்டபடி நீ செல்வச்சீமான் வீட்டு மருமகளா வாழணும்னு. நீ என்னடான்னா பழி வாங்கறேன்... குழி பறிக்கறேன்னு... எங்களை வேதனைப்படுத்திக்கிட்டிருக்க."
அம்மா, தன்னிடம் பணம்தான் அனைத்துக்கும் பிரதானம் என்று பேசியது நினைவில் தோன்ற, சுதாவின் சிந்தை தெளிந்தது. தன் அம்மா தவறு செய்திருக்க, பரத்திற்கு தண்டனை வழங்கிய குற்ற உணர்வில் வேதனைப்பட்டாள் சுதா.
"என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு அம்மா இல்லை, கணவன் இல்லை, குழந்தையும் இல்லை, எனக்குன்னு யாருமே இல்லைங்கற சுயபச்சாதாப உணர்வுலயும், சில உண்மைகளை புரிஞ்சுக்காம பழி வாங்கற மனப்பான்மையை வளர்த்துக்கிட்டேன். ஆனா இப்பவும் சொல்றேன்... எனக்கே எனக்குன்னு யாருமே இல்லை..."
"இல்லைம்மா. இருக்காங்கம்மா. எங்க பானுதான்மா உன்னோட பொண்ணு. நீ மயங்கிக் கிடந்தப்ப உன்னை யாரோ ஆஸ்பத்திரியில சேர்த்தாங்கன்னு நினைச்சுக்கிட்டிருக்கியே அந்த யாரோ வேற யாரும் இல்லம்மா நான்தான் அது. நீ விட்டுட்டுப் போன உன் குழந்தையை நான்தாம்மா தூக்கிட்டு வந்து வளர்த்துக்கிட்டிருக்கேன். அந்தக் குழந்தைதான் பானு. உன் மகள். இதோ வந்துடறேன்மா." என்றவர் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்று பானுவை அழைத்து வந்தார்.
"என்னை மன்னிச்சுடுங்க. இனி பரத் வாழ்க்கையில நான் குறுக்கிட மாட்டேன். எனக்கு என் மகள் இருக்கா. அது போதும்" கோழி, தன் குஞ்சுகளை அணைப்பது போல பாசத்துடன் பானுவை அணைத்துக் கொண்டாள் சுதா.
பானுவிற்கு சுதாதான் தன்னைப் பெற்ற தாய் என்பதைப் புரிய வைத்தார் சோமசுந்தரம்.
பரத் மீது சுதாவின் மனதில் ஏற்பட்டிருந்த களங்கத்தைத் துடைத்ததுடன், தன் உண்மையான தாயிடம் பானுவை சேர்ப்பித்து விட்ட சோமசுந்தரம் அமைதி அடைந்தார்.