உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்... - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6345
பஸ்ஸிற்கு டிக்கட் எடுத்ததோடு கையிலிருந்த ஒரு சில ரூபாய்களும் முடிந்தது. மனதில் கனமான உணர்வுடனும், வயிற்றில் குழந்தையோடும், வாட்டி வதைத்த பசியோடும் அலைந்தாள். திரிந்தாள். ஓரளவிற்கு மேல் சக்தியின்றி மயங்கி விழுந்தாள்.
8
உடல்நிலை மோசமாக இருந்த பரத்தின் அப்பா சோமசுந்தரம், பரத்தின் கவனிப்பினாலும், நவீன மருத்துவத்தின் மகத்துவத்தினாலும் உடல் நிலை தேறினார். வழக்கம் போல் நடமாடினார். பரத்தின் தம்பி மோகன் மிக நன்றாகப் படிப்பான். அறிவாளி. ஸ்காலர்ஷிப் கிடைத்தபடியால் உயர் கல்வி கற்பதற்காக கல்லூரியில் சேர்ந்தான். அவன் படித்து முன்னேறி குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவான் என்று காத்திருந்தனர் குடும்பத்தினர்.
"பரத், இதுநாள் வரைக்கும் எப்படியோ குடும்பப் பொறுப்பை ஓட்டிட்டோம். எனக்கும் உடல் தளர்ந்துடுச்சு. அதனால உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். இனி உனக்கு மனைவியா வர்றவதான் நம்ப குடும்பப் பொறுப்பை எடுத்துக்கணும். உங்க அம்மா இறந்து போனப்புறம் இத்தனை வருஷம் ஒரு தைர்யத்துல வாழ்க்கையை ஓட்டிட்டேன். இனிமேல என்னால முடியாதுப்பா. உங்கம்மாவோட தூரத்து உறவுக்காரங்க மதுராந்தகத்துல இருக்காங்க. நம்பளை விட ஏழையான குடும்பம். ஆனா நல்லவங்க. அவங்க பொண்ணைத்தான் உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதா முடிவு பண்ணி, அவங்க கிட்டயும் பேசிட்டு வந்துட்டேன். இந்தப் பொண்ணுதான் நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா நம்பளை நல்லா பார்த்துக்கறவளா இருப்பா. அது மட்டும் உறுதி. அடுத்த மாசமே நாள் நல்லாயிருக்கு. கல்யாணத்தை முடிச்சுடலாம்."
'முடிவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்ட அப்பாவிடம் என்ன சொல்வது? காதலிச்ச சுதா நமக்கு இல்லைன்னு ஆயிடுச்சு. இனி கல்யாணம் யாரோட நடந்தா என்ன? வர்றவ அப்பா சொன்ன மாதிரி குடும்பத்தை பொறுப்பா பார்த்துக்கிட்டா போதும்’ சுதாவின் நினைவு தந்த வலியில் உள்ளம் துடித்தான் பரத்.
"என்னப்பா பரத்.. இவ்வளவு பேசறேன் உன் கல்யாணத்தைப் பத்தி.. பொண்ணோட பேரைக் கூட கேட்க மாட்டேங்கறியே?"
"பேர்ல என்னப்பா இருக்கு? நீங்க பார்த்து என்ன செஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும்..."
"இதைத்தாம்பா அந்தப் பொண்ணோட அம்மா, அப்பா கிட்டயும் சொல்லிட்டு வந்தேன்.
'என் மகன் பரத், என் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான். நான் எது சொன்னாலும் கேட்பான்னு சொல்லிட்டு வந்தேன். என்னோட நம்பிக்கையைக் காப்பாத்திட்டேப்பா…" அப்பா சந்தோஷமாகப் பேசிக் கொண்டே போனார்.
'உங்க நம்பிக்கையை காப்பாத்திட்டேன்பா. ஆனா... ஆனா... என் சுதாவுக்குக் குடுத்த நம்பிக்கையை காப்பாத்த முடியலையேப்பா... சுதா... சுதா...” சதா சர்வகாலமும் சுதாவின் நினைவு வாட்டியது.
"என்னப்பா பரத், உற்சாகமே இல்லாம ஏதோ யோசனையா இருக்க?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா." உடல்நிலை தேறி, மனதளவிலும் சற்று சந்தோஷமாக இருக்கும் அப்பாவை, தன் மௌனம் சங்கடப்படுத்தி விடக்கூடாது என்ற உணர்வில் பொய்யாக சிரித்து வைத்தான். கல்யாண விஷயம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பது போல் நடித்தான்.
9
முக்கியமான உறவினர் வீட்டில் ஒரு சாவு. துக்கம் விசாரிக்கவும், சாவு சடங்குகளில் கலந்துக் கொள்ளவும் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றார் சோமசுந்தரம். பஸ் நிலையத்தை நோக்கி நடந்தார். தெருவின் நடைபாதையோரம் கர்ப்பிணியான இளம் பெண்ணொருத்தி மயங்கிக் கிடப்பதைப் பார்த்தார். திடுக்கிட்டார். சாலை வழியே போய்க் கொண்டிருந்த ரிக்ஷாவைக் கூப்பிட்டார். அக்கம் பக்கம் இருந்த இரண்டு பெண்களின் உதவியோடு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார். அங்கு போன சில மணி நேரங்களில் சுதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. (ஆம். பரத்தைத் தேடி அலைந்து மயங்கிக் கிடந்த சுதாவைத்தான் அவள் யாரென்றே தெரியாமல் அவளுக்கு உதவி செய்தார் சோமசுந்தரம்.)
அயர்ச்சியிலும், மிக ஆழ்ந்த தூக்கத்திலும் இருந்த சுதாவைப் பார்க்கவே அவருக்குப் பரிதாபமாக இருந்தது. அங்கு பணியிலிருந்த நர்ஸை அழைத்தார்.
"இங்க பாரும்மா. இந்தப் பொண்ணு யார்னு எனக்குத் தெரியாது. தெருவோரமா மயங்கிக் கிடந்தா. இப்ப நல்லபடியா குழந்தையை பெத்துட்டா. ஆனா கண் முழிக்கலை. நான் கொஞ்சம் வேலையா வெளியூர் போகணும். ரெண்டு மூணு நாள்ல திரும்பி வந்துடுவேன். அதுவரைக்கும் இவளை பார்த்துக்கம்மா. என்னால முடிஞ்சது இதுதான்மா." நூறு ரூபாயை நர்ஸிடம் கொடுத்தார்.
"பால், பழம் வாங்கிக் குடும்மா. ரெண்டு நாள்ல்ல வந்துடுவேன்." சோமசுந்தரம் கிளம்பினார்.
10
கல்லூரியில் படிப்பதற்காக வெளியூர் சென்றிருந்த பரத்தின் தம்பி மோகன் படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தபடியாலும், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவனது பாட்டுப்பாடும் திறமையாலும், நடனமாடும் திறமையாலும் கல்லூரியின் மொத்த கவனத்தையும் ஈர்த்திருந்தான். குறிப்பாக மாணவிகளின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியிருந்தான். அவனது கருத்தைத் தன் பக்கம் திருப்பியவளும் இருந்தாள். அவள்தான் சரண்யா. பெரிய செல்வந்தர் சிதம்பரத்தின் ஒரே மகள். அழகென்றால் அழகு. அப்படியோர் அழகு. துடுக்குத் தனமான பேச்சும், குறும்புத் தனமான ஆட்டமுமாக கல்லூரியின் இளமை பொங்கும் மலர்ச்சியான வாழ்வை அனுபவித்து ரசிப்பவள்.
மோகனும், சரண்யாவும் காதலைப் பரிமாறிக் கொண்டனர். நாட்கள் வளர வளர அவர்களது காதலும் வளர்ந்தது.
11
சோமசுந்தரம் சொன்னது சொன்னபடி ஊரில் நிகழ்ந்த துக்க வீட்டின் சடங்குகளை முடித்துக் கொண்டு சுதாவை சேர்த்திருந்த மருத்துவமனைக்கு வந்தார். சுதாவை பார்த்துக் கொள்வதாக கூறியிருந்த நர்ஸ், சோமசுந்தரத்தைப் பார்த்ததும் அவரருகே வந்தாள்.
"ஐயா... அந்தப் பொண்ணு நேத்து ராத்திரி யார் கிட்டயும் சொல்லாம போயிட்டாங்க."
"என்ன போயிட்டாளா? அப்பிடின்னா குழந்தை?"
"குழந்தையை இங்கேயே விட்டுட்டு அவ மட்டும் சொல்லாம கொள்ளாம போயிட்டா..."
"குழந்தை எங்கேம்மா..?"
"அதோ அந்த தொட்டிலில தூங்குது பாருங்கய்யா."
தொட்டிலினருகே சென்றார் சோமசுந்தரம்.
"ஐயா, குழந்தைக்கு பால் வாங்கிக் குடுக்க எங்க யாருக்கும் வசதி இல்லய்யா. ஏதோ இங்க வேலை செய்றவங்க ஆளாளுக்கு காசு போட்டு பால் வாங்கிக் குடுக்கறோம். ரொம்ப கஷ்டமா இருக்குங்கய்யா..."
இதற்குள் குழந்தை கண் விழித்தது. திராட்சை போன்ற கண்கள். குழந்தையைப் பார்த்த சோமசுந்தரம் மனம் கலங்கினார். எதுவும் யோசிக்காமல் தன் கைகளில் அள்ளி எடுத்தார்.
"நான் எடுத்துட்டுப் போய் வளர்த்துக்கறேம்மா..."
"தாராளமா எடுத்துட்டுப் போங்கய்யா. பாவம் பெரும்பாலான நேரம் குழந்தை பட்டினியாத்தான்யா கிடக்குது."
குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வீட்டிற்குச் சென்றார் சோமசுந்தரம்.