உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்... - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6345
"நோ... ஒரு பொண்ணான நான், வயித்துல கருவை சுமந்துக்கிட்டு எவ்வளவு கேவலப்பட்டேன்னு தெரியுமா? அக்கம்பக்கத்தினரும், ஊரும் உலகமும் காறித் துப்பாத குறை. மனசுல வேதனை சூழ, எதிர்காலம் சூன்யமா தெரிய ஒவ்வொரு விநாடி நேரமும் எப்படி துடிச்சேன் தெரியுமா? என் வயித்துல குழந்தை உருவாகலைன்னா செத்தாவது தொலைஞ்சிருப்பேன். உங்க கிட்ட என்னைத் தொலைச்சுட்டு ஊரெல்லாம் உங்களைத் தேடித் திரிஞ்சேன். பட்டினியால மயங்கி விழுந்த என்னை யாரோ ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க. அது யார்னு கூட எனக்குத் தெரியாது. பிறந்த குழந்தையை அங்கேயே விட்டுட்டு தற்கொலை செஞ்சுக்கப் போனேன். ஏன் தெரியுமா? ஒரு குழந்தைக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே இல்லைன்னா அனாதைன்னு அனுதாபப்படுவாங்க. அப்பா இல்லாம அம்மா மட்டுமே இருக்கற குழந்தை மேல ஆத்திரப்படுவாங்க. அப்பன் யார்னு தெரியாத தறுதலைன்னு திட்டித் தீர்ப்பாங்க. சமுதாயத்துல மரியாதையோ மதிப்போ இருக்காது. என் குழந்தை அந்த அவஸ்தையெல்லாம் படறதை நான் எப்படி தாங்கிக்க முடியும்? அதனால தற்கொலை பண்ணிக்கப் போனேன். என் தற்கொலை முடிவுக்குக் காரணம் நீங்க.
“தற்கொலை பண்ணிக்கப் போன என்னை ஒரு பணக்கார முதியவர் தடுத்தார். உடனே எனக்குக் குழந்தை பிறந்த ஆஸ்பத்திரிக்குப் போனேன் என் குழந்தையை தூக்கிட்டு வந்து வளர்க்கறதுக்கு. ஆனா... ஆனா... அங்கே என் குழந்தை இல்லை. வளர்க்கறதா சொல்லி யாரோ எடுத்துட்டுப் போயிட்டாங்க. என்னைக் காப்பாத்தின செல்வச்சீமான் சௌந்தர்ராஜன் தனக்கு வாரிசு இல்லைன்னு என்னை வாரிசாக்கினார். அவரோட சொந்தமும், உறவுக்கூட்டமும் அவரோட பணத்தையும் சொத்துக்களையும் அபகரிக்கறதுலதான் குறியா இருந்தாங்க. அதனால எனக்கு அவரோட நிறுவனங்களையும், சொத்துக்களையும் நிர்வகிக்கற உரிமையைக் குடுத்தார். ஏற்கெனவே ஆபீஸ் வேலை செஞ்ச அனுபவமும், அவரோட வழிகாட்டலும் சேர்ந்து அந்த நிறுவனங்களை முன்னுக்குக் கொண்டு வர உதவியா இருந்துச்சு. நானும் முன்னேறினேன்.
“அதிலயும் எனக்கு சிக்கல். 'எவளோ ஒருத்தி உள்ள நுழைஞ்சிட்டாளே’ன்னு அவரோட உறவுக் கூட்டம் எனக்குக் குடுத்த தொந்தரவு கணக்குல அடங்காது. எல்லா பிரச்சனையும் சமாளிச்சு இன்னிக்கு சமூகத்துல உயர்ந்த அந்தஸ்துல இருக்கேன். ஆனா என் மனசுக்குள்ள? இதயத்துல ஓராயிரம் தேள் கொட்டற மாதிரி ஒவ்வொரு நாளும் வேதனையில துடிச்சிக்கிட்டிருக்கேன். என் குழந்தையை யாரோ எடுத்துட்டுப் போயிட்டாங்கன்னு தெரிஞ்ச அந்த நிமிஷத்துல இருந்து ஏற்கெனவே எரிமலையாக் குமுறிக்கிட்டிருந்த என் மனசுல பழி வாங்கற வெறி வந்துச்சு. அதனாலதான் ரொம்பத் தீவிரமா உங்களைத் தேடினேன். சௌந்தர்ராஜன் ஐயாவோட உதவியினால உங்களைக் கண்டுபிடிக்க முடிஞ்சது. அன்னில இருந்து உங்க மேல பழிவாங்கற படலத்தை ஆரம்பிச்சேன். உங்க துக்கத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். என் வாழ்க்கை நிர்மூலமா ஆன மாதிரி உங்க வாழ்க்கையும் ஆகணும்னு முயற்சி செஞ்சு, அந்த முயற்சியின் விளைவுகள்தான் நீங்க சந்திச்ச பிரச்னைகள்..."
"போதும்... சுதா... போதும்... மண்ணில புதைஞ்சு போன..."
"நோ, உங்களோட விளக்கம் எதுவுமே எனக்குத் தேவையில்லை. நீங்க போகலாம்."
"என் மேல எந்தக் குற்றமும் இல்லைன்னு நிரூபிக்காம நான் இங்கே இருந்து போக மாட்டேன்..."
சுதா, இன்டர்காமை எடுத்தாள்.
"செக்யூரிட்டி... நீ அப்போ உள்ளே கூட்டிட்டு வந்த ஆளை வெளியே தள்ளு." அவள் கூறியதும் இரண்டு செக்யூரிட்டிகள் தடதடவென ஓடி வந்தனர். அவர்கள் பரத் மீது கை வைக்கும் முன், பரத் வேகமாக வெளியேறினான்.
23
"இந்தாங்க மாமா."
காதிலும், கழுத்திலும், கைகளிலும் இருந்த நகைகளைக் கழற்றி சோமசுந்தரத்திடம் நீட்டினாள் சிவகாமி.
"என்னம்மா இது."
"நீலுவை உடனே ஆஸ்பத்திரியில சேர்க்கணும் மாமா. டாக்டர் சொன்னதுக்கு மேல நாளாயிடுச்சு. என் குழந்தையோட உயிரை விட இந்த நகைகள் எனக்கு முக்கியம் இல்லை மாமா." வேறு வழி இல்லாமல் நகைகளை விற்று பணமாக்கினார் சோமசுந்தரம். சுதாவைப் பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்த பரத், நீலுவின் நிலைக்கண்டு பதறினாள். சுதாவைப் பார்த்துவிட்டு வந்ததால் ஏற்பட்ட உணர்வுகள் முற்றிலும் மறைந்து குழந்தையின் உயிரைக் காப்பது மட்டுமே தன் இப்போதைய வேலை என்று உணர்ந்தான்.
ஆம்புலன்ஸை வரவழைத்தான். பானு, சாய்ராம் இருவரும் அழுதுக் கொண்டிருக்க, நீலுவை ஏற்றிக் கொண்டு பறந்தது ஆம்புலன்ஸ்.
24
காற்றோட்டமானதாகவும், வெளிச்சமானதாகவும் இருந்த விசாலமான அறையில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் சௌந்தர்ராஜன். அவருக்கு ஆப்பிள் நறுக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் சுதா.
சௌந்தர்ராஜனின் முகத்தில் தென்பட்ட கவலை ரேகைகளைப் பார்த்து தானும் கவலை அடைந்தாள் சுதா.
"என்னங்கய்யா ஒரு மாதிரியா இருக்கீங்க? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?"
"உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லம்மா. உன்னைப் பத்திதான் கவலை..."
"எனக்கென்னங்கய்யா.. நான் நல்லாத்தான் இருக்கேன்..."
"அதை உன் உதடுதாம்மா சொல்லுது. உள்ளுணர்வு சொல்லலை. சுதாம்மா... உன்னோட பழி வாங்கற படலத்தை இதோட நிறுத்திக்கோ. தப்பு செய்றவங்களைக் கண்டிக்கலாம். தண்டிக்கக் கூடாது. பணம் இல்லாம அந்தக் குடும்பம் கஷ்டப்படுது. குழந்தைக்கு வேற பெரிசா உடம்புக்கு பிரச்னைன்னு சொன்னியே... பாவம் இல்லியாம்மா?"
"பரத் செஞ்ச பாவம் இப்ப அவரோட குடும்பத்தை ஆட்டுவிக்குது. இதுக்கு நான் என்னங்கய்யா பண்ண முடியும்?"
"மனுஷன் ஒவ்வொருத்தனும் செய்யற எல்லா செயல்களையும் கடவுள் பார்த்துக்கிட்டுதாம்மா இருக்காரு. தப்பு செய்றவங்களுக்கு அந்தக் கடவுள் தண்டனை குடுக்கட்டும்..."
"நான் என்ன தப்பு செஞ்சேன்னு கடவுள் எனக்கு தண்டனைக் குடுத்தார்...?"
"அதுக்குப் பேர்தான்மா விதி..."
அறையிலிருந்த போன் ஒலித்தது.
"மேடம், பரத்தோட குழந்தை ஆஸ்பத்திரியில இறந்து போச்சாம்."
எதிர்பாராத இந்தத் தகவலால், சுதா நெஞ்சம் கலங்கிப் போனாள். அவள் எதுவும் பேசாமல் ரிஸீவரைக் கையிலேயே வைத்திருப்பதைப் பார்த்து, அவளிடமிருந்து ரிஸீவரை வாங்கினார் சௌந்தர்ராஜன்.
"ஹலோ..." குரல் கொடுத்தார்.
"ஐயா... அம்மா சொன்னபடி பரத்தோட குழந்தைக்கு என்ன ஆச்சுன்னு அந்தக் குடும்பத்துக்குத் தெரியாம பார்க்கப் போனேன். ஆஸ்பத்திரியில சேர்த்த கொஞ்ச நேரத்துலயே அந்தக் குழந்தை செத்துப் போச்சுங்கய்யா..."
"சரி... போனை வை." கூறிய சௌந்தர்ராஜன், சுதாவிடம் திரும்பினார்.
"பார்த்தியாம்மா, உன்னோட பழி வாங்கற படலத்துனால ஒரு உயிர் பலியாயிடுச்சு..."
"நான்...நான்...நான்... இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலீங்கய்யா..." அழுதாள் சுதா.