Lekha Books

A+ A A-

ஆசை - Page 7

aasai

சைமனுக்கு உண்டான சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அவன் சொன்னான்: “போதும்...  போதும்... நன்றி ஐவான்.”

“சரி... இன்னும் வீரர்கள் உங்களுக்குத் தேவைப்பட்டா, திரும்பவும் வாங்க. நான் உருவாக்கித் தர்றேன். இந்த சீசன்ல நம்மக்கிட்ட ஏராளமான கதிர்கள் இருக்கே!”

சைமன் அந்த வீரர்கள் படைக்கு அந்த நிமிடத்திலேயே தலைமை தாங்க ஆரம்பித்தான். வீரர்களை ஒழுங்காக நிற்க வைத்து, கட்டமைப்புடன் அவர்களை வழி நடத்தியவாறு போர் புரிவதற்காகப் புறப்பட்டான்.

சைமன் அங்கிருந்து கிளம்பியவுடன், தடியனான தாராஸ் அங்கு வந்தான். முதல்நாள் நடைபெற்ற சம்பவத்தை அவனும் கேள்விப்பட்டிருந்தான். அவன் தன் சகோதரனைப் பார்த்துச் சொன்னான்: “உனக்கு எங்கேயிருந்து தங்கம் வந்ததுன்னு எனக்குக் காட்டு. என் கையில ஆரம்பத்துல கொஞ்சம் தங்கம் இருந்ததுன்னா, நான் அதை வெச்சு என்னென்னவோ செய்வேன். அதை வச்சு நான் உலகம் முழுக்க இருக்குற பணத்தை என் கைக்கு வர்றமாதிரி செய்திடுவேன்.”

அதைக்கேட்டு ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விட்டான் ஐவான்.

“உண்மையாகவா? இதை முன்கூட்டியே நீ சொல்லியிருக்கக் கூடாதா? எவ்வளவு வேணுமோ அவ்வளவு தங்கத்தை உனக்கு நான் உண்டாக்கித் தர்றேன்.”

அதைக்கேட்டு அவனுடைய சகோதரன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“ஆரம்பத்தில எனக்கு, மூணு கூடை நிறைய தங்கம் உண்டாக்கித்தா, போதும்...”

“சரி...” -ஐவான் சொன்னான்: “காட்டுக்கு என் கூட வா. ஆட்டை அங்கே மேயவிட்ட மாதிரியும் இருக்கும்.”

அவர்கள் காட்டை நோக்கி நடந்தார்கள். ஐவான் ஓக் இலைகளை கையில் வைத்து தேய்த்தான். ஒரு பெரிய குவியல் தங்கத்தை அவன் உண்டாக்கினான்.

“போதுமா?”

தாராஸ் அதைக்கண்டு மகிழ்ச்சியடைந்தான்.

“இப்போதைக்கு இதுபோதும். நன்றி ஐவான்.”

“சரி...” - ஐவான் சொன்னான்: “இன்னும் தங்கம் வேணும்னா எப்ப வேணும்னாலும் வா. நிறைய இலைகள் இங்கே இருக்கு.”

தாராஸ் ஒரு வண்டி நிறைய தங்கக்காசுகளை ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்வதற்காகப் புறப்பட்டான்.

ஐவானின் இரண்டு சகோதரர்களும் ஊரைவிட்டு சென்றுவிட்டார்கள். சைமன் போர் புரிவதற்காகவும் தாராஸ் பொருட்களை வாங்கி, விற்பதற்கும் போய்விட்டார்கள். சைமன் ஒரு நாட்டை போர் புரிந்து கடைசியில் வென்று தனக்கென ஆக்கிக் கொண்டான். தாராஸ் வியாபாரத்தில் ஏராளமான பணத்தைச் சம்பாதித்தான்.

இரண்டு சகோதரர்களும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். தான் போர் வீரர்களைப் பெற்ற விஷயத்தை சைமன் தாராஸிடமும், தான் பொற்காசுகளைப் பெற்ற விஷயத்தை தாராஸ் சைமனிடமும் கூறிக் கொண்டார்கள். சைமன் தன் சகோதரனைப் பார்த்து சொன்னான். “நான் ஒரு நாட்டைப் பிடிச்சிட்டேன். இப்போ உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். ஆனா, என் வீரர்களைக் காப்பாத்துற அளவுக்கு என்கிட்ட பணம் இல்லை...”

அதற்கு தாராஸ் சொன்னான்: “நான் ஏராளமான பணத்தைச் சம்பாதிச்சிட்டேன். ஆனா, தொந்தரவு என்னன்னா அந்தப் பணத்தைப் பத்திரமா பாதுகாக்குறதுக்கு என்கிட்ட ஆள் இல்லை.”

தொடர்ந்து சைமன் சொன்னான்: “நாம நம்ம தம்பிக்கிட்ட போவோம். நான் அவன்கிட்ட சொல்லி இன்னும் நிறைய வீரர்களைத் தயார் பண்ணித்தரச் சொல்றேன். அந்த வீரர்களை நான் உனக்குத் தர்றேன். அவங்களை வச்சு நீ உன்கிட்ட இருக்குற பணத்தைப் பாதுகாத்துக்கோ. தம்பிக் கிட்ட சொல்லி நிறைய பொற்காசுகளை உண்டாக்கச் சொல்லு. அதைவச்சு நான் என் வீரர்களுக்குச் சாப்பாடு போட்டு காப்பாத்திக்கிறேன்.”

அவர்கள் இருவரும் ஐவானிடம் சென்றார்கள். ஐவானிடம் சைமன் சொன்னான்: “அன்பு தம்பியே, என்கிட்ட இருக்கிற வீரர்கள் எனக்குப் போதாது. இன்னும் நிறைய வீரர்கள் வேணும்.”

அதற்கு ஐவான் தலையை ஆட்டினான்.

“மாட்டேன்... இனிமேல் நான் வீரர்களைப் படைக்கிறதா இல்ல.”

“வீரர்களைப் படைச்சு தர்றதா என்கிட்ட நீ சொன்னியே!”

“நான் அப்போ சொன்னேன். ஆனா, இனிமேல் வீரர்களைப் படைக்கிறதா இல்ல.”

“ஏன்டா முட்டாள்?”

“உன் வீரர்கள் ஒரு மனிதனைக் கொன்னுட்டாங்க. சாலையோரத்துல ஒருநாள் நான் உழுதுக்கிட்டு இருந்தேன். அப்போ ஒரு பொம்பளை வண்டியில ஒரு பொணத்தை வச்சு அழுதுக்கிட்டு போனா. செத்துப்போனது யாருன்னு அவளைப் பார்த்துக் கேட்டேன். அவ ‘சைமனோட வீரர்கள் என் புருஷனை போர்ல கொன்னுட்டாங்க’ன்னு சொன்னா. வீரர்கள் இசை மீட்டுவார்கள்னு மட்டும் தான் நான் நினைச்சிருந்தேன். ஆனா, அவங்க ஒரு ஆளையே கொன்னிருக்காங்க. அதுனால இனிமேல் உனக்கு நான் வீரர்களைத் தர்றதா இல்ல.”

இந்த விஷயத்தில் அவன் மிகவும் பிடிவாதமாக இருந்தான். இனிமேல் வீரர்களை உருவாக்குவதில்லை என்று உறுதியாக முடிவெடுத்திருந்தான்.

தாராஸ் ஐவானிடம் மேலும் தனக்கு பொற்காசுகள் வேண்டும் என்றான். அதற்கும் ஐவான் தலையை ஆட்டினான்.

“மாட்டேன்... நான் இனிமேல் பொற்காசுகள் உனக்கு தர்றதா இல்ல.” என்றான்.

“நீ எனக்கு வாக்குறுதி தந்தாயே?”

“வாக்குறுதி தந்தது உண்மைதான். ஆனா, இனிமேல் நான் பொற்காசுகள் உண்டாக்குறதா இல்ல.”

“ஏன்டா முட்டாளே?”

“உன் பொற்காசுகள் மைக்கேல் மகளோட மாட்டைக் கொண்டு போயிடுச்சு.”

“எப்படி?”

“கொண்டு போயிடுச்சு. அவ்வளவுதான். மைக்கேலோட மகள்கிட்ட ஒரு மாடு இருந்துச்சு. அவ குழந்தைங்க அந்த மாட்டுப் பாலைத்தான் குடிப்பாங்க. ஒருநாள் அந்தப் பசங்க என்கிட்ட வந்து பால் கேட்டாங்க. நான் அவங்களைப் பார்த்து ‘உங்க மாடு எங்கே போச்சு?’ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க சொன்னாங்க- ‘தாராஸோட வேலைக்காரங்க வந்து எங்க அம்மாகிட்ட மூணு பொற்காசுகளைக் கொடுத்தாங்க. எங்க அம்மா அவங்ககிட்ட பதிலுக்கு மாட்டைக் கொடுத்துட்டாங்க. இப்போ எங்களுக்குப் பால் குடிக்க மாடு இல்ல...’ன்னு. பொற்காசுகளை வச்சு நீ வியாபாரம் பண்ணுவேன்னு நான் நினைச்சேன். ஆனா, நீயோ சின்னப் பசங்களோட மாட்டை எடுத்துட்டுப் போயிட்டே. அதுனால இனிமேல் உனக்கு நான் பொற்காசு உருவாக்கித் தர்றதா இல்ல.”

இந்த விஷயத்தில் ஐவான் மிகவும் பிடிவாதமாக இருந்தான். நிச்சயமாக அவன் அதற்குமேல் பொற்காசுகளை உருவாக்க மாட்டான். அதனால் அவனுடைய இரண்டு அண்ணன்மார்களும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். போகும் வழியில் தங்களின் இந்த கஷ்டமான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி இருவரும் விவாதித்தார்கள். சைமன் சொன்னான்:

“இங்கே பாரு. என்ன செய்யணும்னு நான் சொல்றேன். நீ உன்கிட்ட இருக்கிற பணத்துல ஒரு பகுதியை எனக்குத் தா. நான் அதை வச்சு என் வீரர்களைப் பாத்துக்குறேன். அதேபோல் என்னோட நாட்டுல பாதியை வீரர்களோட உனக்கு நான் தர்றேன். அவங்க உன் செல்வத்தைப் பாதுகாப்பாங்க.”

சைமன் சொன்னதற்கு தாராஸ் சம்மதித்தான். அதன்படி சகோதரர்கள் இருவரும் தங்களிடமிருந்ததைப் பகிர்ந்து கொண்டார்கள். அந்த விதத்தில் இருவரும் அரசர்களாக ஆனார்கள். இருவரும் பணக்காரர்களாகவும் ஆனார்கள்.

8

வான் வீட்டில் இருந்துகொண்டு தன்னுடைய தந்தையையும் தாயையும் எந்தவித கவலையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். தன்னுடைய ஊமை சகோதரியுடன் சேர்ந்து வயலில் வேலை செய்தான். இந்தச் சூழ்நிலையில் ஐவானின் நாய்க்கு உடல்நலமில்லாமல் போனது. அது மிகவும் இளைத்துப்போய் மரணத்தின் வாயிலில் இருந்தது. அதன்மீது பரிதாபப்பட்ட ஐவான் தன் சகோதரியிடமிருந்து கொஞ்சம் ரொட்டியை வாங்கித் தன் தொப்பிக்குள் வைத்துக்கொண்டு போய் நாயிடம் தூக்கி எறிந்தான். தொப்பி அப்போது கிழிந்ததோடு அதிலிருந்து ரொட்டியுடன் சேர்ந்து ஒரு சிறு வேரும் நிலத்தில் விழுந்தது. அந்த வயதான நாய் ரொட்டியுடன் சேர்த்து அந்த வேரையும் தின்றது. அந்த வேரை அது தின்றதுதான் தாமதம். அந்தப் பெண் நாய் வேகமாக குதித்து விளையாடத் தொடங்கிவிட்டது. குரைத்துக் கொண்டே அது தன் வாலை ஆட்டியது. அந்த வேரைத் தின்றவுடன் அந்த நாயின் நோயெல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்து, அது நல்ல நிலைக்கு வந்துவிட்டது.

ஐவானின் தாயும் தந்தையும் அதைப் பார்த்து உண்மையிலேயே ஆச்சரியப்பட்டார்கள்.

“நீ எப்படி நாயைக் குணப்படுத்தினே?” - அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு ஐவான் சொன்னான்: “எந்த வலியையும் இல்லாம செய்யிற மாதிரி என்கிட்ட இரண்டு வேர்கள் இருந்துச்சு. அந்த நாய் அதுல ஒண்ணை சாப்பிட்டுச்சு. சரியாயிடுச்சு!”

இந்த நேரத்தில் அரசனின் மகள் நோய்வாய்ப்பட்டாள். ஒவ்வொரு நகரத்திலும் கிராமப் பகுதிகளிலும் கேட்கிற மாதிரி அரசன் ஒரு அறிவிப்பு செய்தான். தன்னுடைய மகளுக்கு வந்திருக்கும் நோயை குணப்படுத்தக் கூடிய மனிதன் தன் நாட்டில் யாராவது இருக்கிறார்களா என்றும்; அப்படி நோயைக் குணப்படுத்தக் கூடியவன் இன்னும் திருமணமாகாத இளைஞனாக இருக்கும்பட்சம், அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் அரசன் எல்லோரும் கேட்கும்வண்ணம் அறிவித்தான். எல்லா ஊர்களிலும் அந்தச் செய்தி அறிவிக்கப்பட்ட மாதிரி ஐவானின் கிராமத்திலும் அறிவிக்கப்பட்டது.

ஐவானின் தந்தையும் தாயும் ஐவானை அழைத்துச் சொன்னார்கள்: “அரசன் என்ன அறிவிச்சிருக்காருன்னு கேள்விப்பட்டியா? உன்கிட்ட எந்தவித நோயையும் குணப்படுத்தக்கூடிய ஒரு வேர் இருக்கிறதா சொன்னே. போ... போயி அரசோரட மகளுக்கு வந்த நோயை ஒண்ணுமில்லாமப் பண்ணி, அவளை அதுலயிருந்து காப்பாற்று. அரசன் உன் வாழ்க்கை ரொம்பவும் சிறப்பா இருக்கும்படி செய்திடுவார்.”

“சரி...” என்றான் ஐவான்.

ஐவான் புறப்படுவதற்குத் தயாரானான். இருப்பதிலேயே பார்க்க மிகவும் நன்றாக இருக்கக்கூடிய ஆடைகளை அவனுக்கு அணிவித்தார்கள். வீட்டின் வெளிவாசல் கதவைத் தாண்டி வெளியே வந்ததும், எதிரில் ஒரு பிச்சைக்காரப் பெண் மடங்கிய கைகளுடன் நின்றிருப்பதை ஐவான் பார்த்தான்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel