என் பயண நண்பன் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6373
"இல்ல... எனக்குப் பாடணும் போல இருக்கு."
"இங்க பாருங்க. நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?" - ஷாக்ரோ கோபத்துடன் சொன்னான்: "நீங்க யாரு? உங்களுக்கு வீடு இருக்கா? உங்களுக்கு அம்மா இருக்காளா? அப்பா இருக்காரா? சொந்தக்காரங்க இருக்காங்களா? சொத்துன்னு ஏதாவது இருக்கா? இந்த பூமியில நீங்க யாரு? நீங்க பெரிய ஆள்னு மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா? இங்க பாருங்க... நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? எனக்கு எல்லாமே இருக்கு..." - அவன் தன் மார்பில் அடித்துக்கொண்டு சொன்னான்: "நான் ராஜகுமாரன்! ஆனா, நீங்க? நீங்க யாருமே இல்ல... யாருமே இல்ல... குதைஸில் இருப்பவங்களுக்கு என்னைத் தெரியும். டிஃப்லிஸில் இருப்பவர்களுக்கு என்னைத் தெரியும். புரியுதா? என்னை உங்களால ஒண்ணுமே செய்ய முடியாது. நான் சொல்றதை நீங்க கேட்டா போதும். தெரியுதா? தேவையில்லாத காரியங்களையெல்லாம் செய்யக்கூடாது. கூலிக்கு ஆசைப்படாமலே வேலை செய்யணும்னு கடவுள் சொன்னதா நீங்கதான் ஒரு தடவை சொன்னீங்க. நான் இதோ உங்களுக்குக் கூலி தர்றேன். பிறகு எதுக்கு என்னை கஷ்டப்படுத்தணும்? நீங்க என்ன மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? எதுக்கு பயமுறுத்தணும்? நான் உங்களைப் போல ஆகணும்ன்றது உங்க நினைப்பா? அது நல்லது இல்ல... தெரியுதா? ஹ...ஹ....ஆஹ்...ஹ...ஹ..."
இந்த வார்த்தைகளைக் கூறுவதற்கிடையில் அவன் தன்னுடைய உதடுகளைக் குவித்து, விரித்து எச்சிலைத் தெறிக்கும்படி துப்பினான். மூக்கைச் சிந்தினான். கடைசியில் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.
சிறிது ஆச்சரியம் உண்டாக வாயைத் திறந்து கொண்டு நான் அவனுடைய முகத்தைப் பார்த்தேன். பயணத்தின் ஆரம்பம் முதல் என்னிடமிருந்து சகித்துக்கொண்டு வந்த கஷ்டங்களுக்கும், அவமானங்களுக்கும் எதிரான அவனுடைய கோபம் பெருமழையைப் போல் என்மீது பெய்தது. தன்னுடைய வார்த்தைகளுக்குப் பலம் சேர்ப்பதற்காக அவன் தன் சுட்டு விரலை எனக்கு நேராக உயர்த்தி, என் தோளைப் பிடித்துக் குலுக்கினான். அவனுடைய உடல் முழுவதும் என் உடல் மீது சாய்ந்தது. மழை எங்கள் மீது பெய்து கொண்டிருந்தது. இடி, மின்னல் ஆகியவை தொடர்ந்து தங்களை எங்களுக்கு மேலே வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. என் கவனத்தை ஈர்ப்பதற்காக ஷாக்ரோ தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தான்.
என் தர்ம சங்கடமான நிலையைப் பற்றி நினைத்தபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஷாக்ரோ காறித் துப்பி விட்டு நடையைத் தொடர்ந்தான்.
டிஃப்லிஸை நெருங்க நெருங்க ஷாக்ரோ அமைதியானவனாகவும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பவனாகவும் மாறிவிட்டான். அவனுடைய கள்ளங்கபடமற்ற சோர்வடைந்த முகத்தில் புதியதாக ஏதோவொன்றை அடைந்த உணர்ச்சி வெளிப்பட்டது. வ்ளாடிக்காவ்காஸிலிருந்து சற்று தூரத்திலிருந்த ஸிர்காஸியன் கிராமத்தை நாங்கள் அடைந்தோம். இனிப்பு சோளம் அறுவடை செய்யும் காலமது. அறுவடைக்காக நாங்களும் வயலில் இறங்கினோம்.
ரஷ்ய மொழி தெரியாத அந்த கிராமத்து மக்கள் எங்களைக் கிண்டல் பண்ணியதுடன், திட்டவும் செய்தார்கள். இரண்டு நாட்கள் சென்ற பிறகு, நாங்கள் அந்த கிராமத்தை விட்டு புறப்பட்டோம். சுமார் பத்து கிலோ மீட்டர் தாண்டிய பிறகு, ஷாக்ரோ தன் சட்டைக்குள்ளிருந்து விலைமதிப்புள்ள ஒரு பட்டுத் துணியை வெளியே எடுத்து வெற்றிக் களிப்பை வெளியிட்டான். "இனிமேல் நாம வேலை எதுவும் செய்ய வேண்டாம். இதைவிற்றால் போதும். நமக்குத் தேவைப்படுறதையெல்லாம் வாங்கிக்கலாம். புரியுதா?" என்று வெற்றி பெற்ற குரலில் அவன் சொன்னான்.
அதைக்கேட்டு எனக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. நான் அந்தத் துணியை வாங்கி வயலில் எறிந்தேன். ஸிர்க்காஸிலிருக்கும் மனிதர்களைச் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. கோஸாக்குகளிடமிருந்து அவர்களைப் பற்றி தெரிந்து கொண்ட ஒரு கதை இது. ஒரு நாடோடி, அவன் வேலை செய்த வீட்டில் ஒரு வெள்ளித் தட்டைத் திருடி விட்டான். ஸிர்க்காஸைச் சேர்ந்த ஆட்கள் அவனை விரட்டிக்கொண்டு பின்னால் ஓடினார்கள். அவர்கள் அவனிடமிருந்த அந்த வெள்ளித்தட்டைக் கண்டுபிடித்த பிறகு, அவனுடைய வயிறைப்பிளந்து அந்த வெள்ளித்தட்டை அதற்குள் வைத்து மூடி, அவனை அங்கிருந்த வயலுக்குள் வீசி எறிந்து விட்டு போய்விட்டார்கள். சாகும் நிலையில் கிடந்த அவனை கோஸாக்குகள் பார்த்திருக்கிறார்கள். அவன் அவர்களிடம் தனக்கு உண்டான அனுபவத்தைக் கூறியிருக்கிறான். ஆனால், கிராமத்தை அடைவதற்கு முன்பு அந்த நாடோடி இறந்து விட்டான்.
இப்படிப்பட்ட கதைகளைச் சொன்ன கோஸாக்குகள் எங்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தார்கள். அதை நம்பாமல் இருப்பதற்கான காரணம் எதையும் நான் பார்க்கவில்லை.
இந்த விஷயங்களைச் சொல்லி நான் ஷாக்ரோவை எச்சரித்தேன். அவன் திடீரென்று ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் பற்களை வெளியே காட்டியவாறு கண்களைச் சிமிட்டிக்கொண்டு ஒரு பூனையைப் போல அவன் எனக்கு நேராகப் பார்த்தான். ஐந்து நிமிடங்கள் நாங்கள் ஒருவரோடொருவர் கட்டிப் புரண்டோம். கடைசியில் ஷாக்ரோ கோபத்துடன் "போதும்..." என்று கத்தினான். சோர்வடைந்து போய், அமைதியாக ஒருவரையொருவர் பார்த்தவாறு நாங்கள் உட்கார்ந்திருந்தோம். நான் அந்தத் துணியை வீசியெறிந்த திசையைப் பார்த்தவாறு ஷாக்ரோ சொன்னான்: "நாம எதுக்கு சண்டை போடணும்? ஹா... நாம எப்படிப்பட்ட முட்டாளுங்க! நான் உங்ககிட்டயிருந்து எதையாவது திருடினேனா? என் கையில அந்தத் துணியைப் பார்த்ததுனாலதானே உங்களுக்கு என்னவோ மாதிரி ஆயிடுச்சு? உங்க மேல எனக்குப் பரிதாபம் தோணினதுனாலதான் நான் அந்தத் துணியைத் திருடவே செய்தேன். நீங்க வேலை செய்றீங்க... நான் செய்யல... பிறகு நான் என்ன செய்யிறது? உங்களுக்கு நான் உதவணும்..."
திருட்டு என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்பதை அவனுக்கு விளக்கிச் சொல்ல நான் முற்பட்டேன்.
"பேசாம இருங்க நீங்க ஒரு மரத்தலையன்"- அவன் என்னிடம் தனக்கு இருக்கும் வெறுப்பை வெளியிட ஆரம்பித்தான்.
எங்கே அவனுக்குக் கோபம் அதிகமாக வந்துவிடப்போகிறதோ என்று நினைத்து நான் எதுவும் கூறவில்லை. அவன் இரண்டாவது முறையாக இப்போது திருடுகிறான். கருங்கடலை நெருங்குவதற்கு முன்னால் க்ரீக் நாட்டைச் சேர்ந்த ஒரு மீனவனிடமிருந்து அவன் சில பொருட்களைத் திருடினான். அந்த முறை எங்கள் இருவருக்குமிடையே அடி, உதையே நடந்தது.
"சரி... நாம போகலாமா?"- சிறிது நேர ஓய்விற்குப் பிறகு சாதாரண நிலைக்கு வந்ததும் அவன் கேட்டான்.
நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். ஒவ்வொரு நாள் முடியும்போதும் அவனுடைய முகம் இருண்டு கொண்டே வந்தது. புருவங்களை உயர்த்திக்கொண்டு அறிமுகமில்லாத மனிதனைப் போல அவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.