என் பயண நண்பன் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6371
இதற்கு மேல் நேரத்தைக் கடத்தினால் நன்றாக இருக்காது என்று நான் நினைத்தேன். அவனுடைய கைகளை என் உடம்பை விட்டு விடுவித்து, கயிறைப் பிடிக்கச் செய்து, நான் அவனை நீரில் தள்ளிவிட முயற்சி செய்தேன். ஆனால், என்னை மிகவும் பதைபதைப்புக்குள்ளாக்கிய ஒரு சம்பவம் தான் அடுத்து நடந்தது.
"நீங்க என்னை நீர்ல மூழ்கடிச்சு கொல்லப்போறீங்களா?"- என் முகத்தைப் பார்த்தவாறு அவன் கேட்டான்.
அந்தக் காட்சி உண்மையாகவே அச்சம் உண்டாகக்கூடிய ஒன்றாக இருந்தது. அவனுடைய அந்தக் கேள்வியைக் கேட்டு நான் நடுங்கிவிட்டேன். உயிர் தப்புவதற்கான கடைசி முயற்சியும் தோல்வியடைந்த ஒரு மனிதனின் புலம்பலாக, கெஞ்சுகிற குரலாக இருந்தது அது. அதே நேரத்தில் என்னை மிகவும் பயமுறுத்தியது. அந்தக் குளிர்ச்சியில் உறைந்து போன முகத்திலிருந்த மரணத்திற்கு நிகரான வெளிறிப் போன கண்கள்தான்.
"பிடியை விட வேண்டாம்"- நான் அவனிடம் உரத்த குரலில் அழைத்துச் சொன்னேன். நான் நீரில் குதித்தேன். கயிறிலிருந்த என் பிடியை நான் விடவில்லை. கனமாக இருந்த ஏதோவொன்றில் என் கால் இடித்தது. காலில் தாங்க முடியாத அளவிற்கு வேதனை உண்டானதை முதலில் நான் உணர்ந்தேன். அப்போது எனக்கு வேறொரு விஷயமும் புரிந்தது. என் மூளையில் சந்தோஷம் படர்வதை உணர்ந்தேன். முன்பு இல்லாத புத்துணர்ச்சி எனக்கு அப்போது உண்டானது. மகிழ்ச்சியின் உச்சியில் நான் இருந்தேன்.
"கரைக்கு வந்துட்டோம்"- நான் உரத்த குரலில் சத்தமிட்டேன்.
ஒருவேளை புதிய இடங்களைப் பார்க்க நேரும் கப்பல் மாலுமிகள் என்னைவிட உணர்ச்சிவசப்பட்டு மேலும் அதிக சத்தத்தில் கத்தியிருக்கலாம். என் அளவிற்கு அவர்கள் உரத்த குரலில் கத்தியிருக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். உரக்கக் கத்தியவாறு ஷாக்ரோ நீருக்குள் குதித்தான். ஆனால், நாங்கள் மீண்டும் வேறொரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருந்தோம். எங்களின் மார்புகள் வரை நீர் இருந்தது. நீரில்லாத இடம் அங்கு எங்கும் இல்லை. அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நான் படகைக் கைவிடவில்லை. ஷாக்ரோவும் நானும் படகின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டோம். கயிறு கையில் இருந்ததால் அந்தப் படகை இழுத்தவாறு நாங்கள் எந்தவித இலக்கும் இல்லாமல் நடந்தோம்.
ஷாக்ரோ என்னவோ முணுமுணுத்தவாறு சிரித்தான். நான் உள் ஆர்வத்துடன் சுற்றிலும் பார்த்தேன். சுற்றிலும் ஒரே இருட்டாக இருந்தது. எங்களுக்குப் பின்னாலும் வலது பக்கத்திலும் அலைகளின் சத்தம் பலமாகக் கேட்டது. முன்னாலும் இடது பக்கத்திலும் அலைகள் அந்த அளவிற்குப் பலமில்லாமல் இருந்தன. அதன் சத்தம் மிகவும் குறைவாக இருந்தது. நாங்கள் இடது பக்கத்தை நோக்கி நடந்தோம். கீழே மணல் இருந்தது. அதே நேரத்தில் ஆழமான குழிகளும் படகின் கயிறைப் பிடித்தவாறு மிகவும் கவனமாக நாங்கள் முன்னோக்கி நடந்தோம். இப்போது நீர் எங்களின் முழங்கால் வரை இருந்தது. ஆழமான இடத்தை அடையும்போது ஷாக்ரோ உரத்த குரலில் அலறினான். நான் பயந்து போய் நடுங்கினேன். அதே நேரத்தில் எதிலிருந்தோ தப்பித்து விட்டதைப் போல் ஒரு தோணல் எங்கள் மனதில் உண்டானது. எங்களுக்கு முன்னால் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
ஷாக்ரோ தன்னால் முடிந்த வரைக்கும் உரத்த குரலில் அழுதான். ஆனால், அந்தப் படகு அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்ற விஷயம் என்னுடைய ஞாபகத்தில் வந்தது. சிறிதும் தாமதப்படுத்தாமல் நான் இந்த விஷயத்தை அவனிடம் சொன்னேன். அவன் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் சென்ற பிறகு அவன் அழ ஆரம்பித்தான். அவனை என்னால் தேற்ற முடியவில்லை. தேற்றும் வழி தெரியாமல் நான் தவித்தேன்.
கடலின் ஆழம் குறைந்து கொண்டு வந்தது. நீர் முழங்கால் அளவிலிருந்து பாதம் அளவிற்கு வந்தது. அப்போதும் நாங்கள் படகை இழுத்துக்கொண்டு நடந்தோம். இழுத்துக்கொண்டு நடக்க முடியாமல் போனபோது நாங்கள் அதை வெறுமனே விட்டோம். எங்களுக்கு முன்னால் இருட்டு நிறத்தில் பெயர் தெரியாத ஒரு மரத்தின் கிளை கீழே விழுந்து கிடந்தது. அதைக் குதித்துத் தாண்டி நாங்கள் கால்களைக் குத்தும் புற்கள் நிறைந்த ஒரு பூமியில் கால் வைத்தோம். அந்தப்புல்லின் மீது கால்களை வைத்தபோது எங்களுடைய கால்கள் பயங்கரமாக வலித்தன. எங்களுக்கு அது வசதியாக இல்லை. ஆனால், அதைப் பெரிதாக எண்ணாமல் அந்த வெளிச்சம் கண்ட திசையை நோக்கி நாங்கள் ஓடினோம். சுமார் ஒரு மைல் தூரத்தில் சந்தோஷத்துடன் எங்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறு அந்த வெளிச்சம் நின்று கொண்டிருந்தது.
மூன்று உயரமான நாய்கள் இருட்டிலிருந்து எங்களை நோக்கி தாவிக் குதித்தன. பைத்தியம் பிடித்தவனைப் போல அழுது கொண்டிருந்த ஷாக்ரோ உரத்த குரலில் கூப்பாடு போட்டவாறு தரையில் தலை குப்புற விழுந்தான். என் கையிலிருந்த ஈரமான கோட்டை நான் அந்த நாய்கள் மீது எறிந்தேன். அவற்றை விரட்டுவதற்கு வேறு ஏதாவது கிடைக்குமா என்று நான் கீழே தேடினேன். ஆனால், கூர்மையான புற்கள் மட்டுமே அங்கு இருந்தன. அவை என் கைவிரல்களைப் பதம் பார்த்தன என்பது மட்டும்தான் மிச்சம். அந்த நாய்கள் ஒன்றாகச் சேர்ந்து என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கின. இரண்டு விரல்களை வாய்க்குள் வைத்து நான் உரக்க விசில் அடித்தேன். அதைக்கேட்டு அவை பின்னால் ஓடின. அப்போது அங்கு எங்களை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்த ஆட்களின் பாத ஒலிகளை நான் கேட்டேன்.
ஒரு நெருப்பு குண்டத்தின் சுற்றிலும் அமர்ந்து தீ காய்ந்து கொண்டிருந்த செம்மறியாட்டின் தோலை அணிந்த ஆட்டிடையர்களுக்கருகில் நாங்கள் இருந்தோம். மொத்தம் அங்கு நான்கு பேர் இருந்தார்கள். இரண்டு பேர் தரையில் அமர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். உயரமான, கறுத்த தாடியைக் கொண்ட கோஸாக்குகளைப் போல உரோமத்தால் ஆன தொப்பி அணிந்த மனிதன் முனையில் பெரிய கைப்பிடியைக் கொண்ட ஊன்றுகோலை ஊன்றியவாறு எங்களுக்குப் பின்னால் குனிந்து நின்றிருந்தான். மண்ணின் நிறத்தில் தலைமுடியைக் கொண்ட நான்காவது ஆள் தரையில் படுத்துக் கொண்டு கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த ஷாக்ரோவின் ஆடைகளைக் கழற்ற உதவிக் கொண்டிருந்தான். அங்கிருந்து சிறிது தூரத்தில் வசந்த காலத்தின் பனிப்படலத்தை ஞாபகப்படுத்துகிற மாதிரி சாம்பல் நிறத்தில் ஒரு படலம் பூமிக்கு மேலே மூடிக் கிடந்தது. கூர்மையாகப் பார்த்தபோதுதான் தெரிந்தது. பலவகைப்பட்ட செம்மறி ஆடுகள் ஒன்றாகச் சேர்ந்து அங்கு இருக்கின்றன என்ற உண்மையே. அவை ஆயிரக்கணக்கில் இருக்கும்.