என் பயண நண்பன் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6371
அப்போது அவன் அமைதியாக இருந்தான். அவன் முகம் தாளைப்போல வெளிறிப்போய் காணப்பட்டது. படகின் ஒரு பக்கத்தை விடாமல் அவன் இறுகப் பற்றியிருந்தான். இருவரும் இடம் மாறி உட்காருவதற்கான நேரம் எங்களுக்கு இல்லாமலிருந்தது. படகில் சற்றுத் தள்ளி உட்காருவதற்குக் கூட நாங்கள் பயந்தோம். படகு எந்தத் திசையில் போக வேண்டும் என்று நான் அவனிடம் கூறினேன். பிறந்ததிலிருந்தே தான் ஒரு படகோட்டி என்பதைப் போல, மிகவும் திறமையாக அவன் படகைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
துடுப்புக்குப் பதிலாக நாங்கள் பயன்படுத்திய பலகைகள் எந்தவிதத்திலும் உபயோகமாக இல்லை. எங்களுக்குப் பின்னால் காற்று பலமாக மோதிக் கொண்டிருந்தது. நாங்கள் எந்தப் பக்கம் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை நான் கவனிக்கவேயில்லை. ஆனால், படகின் முன்பக்கம் கரைக்கு நேர் எதிர் திசையில் இருக்கும்படி மட்டும் நான் பார்த்துக் கொண்டேன். கெல்ஷியெ விளக்குகள் இருந்ததால், அந்த வேலை கஷ்டமாக இருக்கவில்லை.
அலைகள் படுவேமாகப் படகிற்குள் வந்தது. கடலுக்குள் அதிகமாகப் போகப்போக எங்களின் படகு அதிக உயரத்திற்குச் சென்றது. அடர்த்தியும், பலமும் கொண்ட அலைகளின் ஆரவாரம் கேட்டுக் கொண்டேயிருந்தது. படகு மேலும் அதிக வேகத்துடன் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. படகின் திசையை ஒழுங்குபடுத்துவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாக இருந்தது.
இப்போது பெரிய பெரிய வெள்ளை நிறக் குழிகளுக்குள் நாங்கள் விழுந்து கொண்டேயிருந்தோம். குன்றென உயர்ந்து நின்ற நீரின் உச்சியை நோக்கி நாங்கள் படகுடன் வீசி எறியப்பட்டோம். இரவு மேலும் அடர்த்தியாகிக் கொண்டு வந்தது. மேகங்கள் அதிகமாகக் கீழே இறங்கிக் கொண்டு வந்தன. படகில் இருந்த வெளிச்சம் இல்லாமல் போனது. அப்போதிருந்த சூழ்நிலை உண்மையாகவே எங்களை அச்சப்பட வைக்கும் நிலையில் இருந்தது. கோபம் கொண்ட அந்தக் கடலுக்கு ஒரு முடிவே இல்லை என்று தோன்றியது. இருட்டைக் கிழித்துக் கொண்டு எங்களுக்கு நேராகப் பாய்ந்தோடி வரும் அலைகளைத் தவிர வேறெதுவும் எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. பெரிய அலையொன்று என் கையிலிருந்த மரப்பலகையைத் தட்டிப் பறித்துக்கொண்டு சென்றது. அப்போது கையிலிருந்த இன்னொரு மரப்பலகையை படகிற்குள் போட்டுவிட்டு, இரண்டு கைகளாலும் படகின் இரு பக்கங்களையும் பலமாகப் பிடித்துக்கொண்டு நான் நின்றேன். ஒவ்வொரு முறையும் படகு மேலே உயர்கிறபோதும், ஷாக்ரோ உரத்த குரலில் சத்தம் போட்டான். அலைகளின் கோபமும் அவற்றின் காதுகளை அடைக்கும் சத்தமும் சேர்ந்து அந்த இருட்டில் என்னை முழுமையாகச் செயல்படவிடாமல் ஆக்கின.
என்னுடைய நம்பிக்கைகளெல்லாம் தகர்ந்து விட்டன. உப்புச் சுவை கொண்ட வெள்ளை நுரை தவழும் அலைகளைத் தவிர வேறெதையும் என்னால் பார்க்க முடியவில்லை. அலைகளைப் போல மேலே ஆகாயத்தில் திரண்டு நின்றிருந்த ஆக்ரோஷமான கருமேகங்கள்... ஒரு விஷயம் எனக்குப் புரிந்துவிட்டது. என்னைச் சுற்றிலும் நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பவங்கள் மிகவும் ஆக்ரோஷம் கொண்டவையாக இருந்தன. எனினும், அதன் முழுமையான பலத்தை அது வெளிக்காட்டவில்லை. மரணம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. நெருப்பில் சிக்கி இறப்பது, சேற்றில் சிக்கி இறப்பது... இந்த இரண்டில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், முதலில் இருப்பதைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். அதுதான் கண நேரத்திற்குள் நடக்கும் மரணமாக இருக்கும்.
"நம்மோட துடுப்பு போயிருச்சே!"- ஷாக்ரோ உரத்த குரலில் அலறினான். "இனிமேல் துடுப்பு எங்கேயிருந்து கிடைக்கும்?" நான் கேட்டேன்.
"என் கோட்டைப் பிடிங்க..."
"அதை இங்கே எறி. படகை ஆட்டாதே. பிடியை விடாம பார்த்துக்கோ."
ஷாக்ரோ அமைதியாகத் தன் முயற்சியைத் தொடர்ந்தான்.
"இந்தாங்க... பிடிங்க..."
அவன் அந்தக் கோட்டை என்னை நோக்கி வீசி எறிந்தான். படகின் அடியிலிருந்து தேடி வேறொரு பலகையை நான் துழாவி எடுத்தேன். கோட்டின் கைக்குள் அதை நுழைத்துவிட்டு, நான் கோட்டின் அடுத்த கையைப் பிடிப்பதற்காக முயன்றேன். அப்போது சிறிதும் எதிர்பார்க்காமல் மிகவும் உயரத்திற்குச் சென்ற அந்தப் படகு கீழ்நோக்கி வந்தது. ஒரு கையில் கயிறும் மறு கையில் கோட்டுமாக நான் நீரில் விழுந்தேன். அலைகள் என்னுடைய தலைக்கு மேலே காதுகளைச் செவிடாக்கும் சத்தத்துடன் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. நான் உப்பு நீரைக் குடித்தேன். என் காதுகளுக்குள்ளும், வாய்க்குள்ளும் மூக்கிற்குள்ளும் நீர் புகுந்தது. கயிறை இறுகப் பிடித்தபோது படகின் மீது என் தலை மோதியது. கோட்டை படகில் போட்ட நான் படகின் மீது ஏற முயன்றேன்.
பலமுறை முயற்சி செய்ததில் ஒருமுறை வெற்றி கிடைத்தது. தொடர்ந்து நான் படகை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன். அப்போது ஷாக்ரோ நீரில் தலைகுப்புற விழுந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். நான் தூக்கிப் போட்ட கயிறைப் பிடிக்க அவன் முயற்சித்துக் கொண்டிருந்தான்.
"இதோ இங்கே!"- நான் உரத்த குரலில் கூவினேன்.
அவன் உயர குதித்துப் படகைப் பிடிக்க முயற்சி செய்தான். அவனைக் காப்பாற்றுவதற்காக நான் என் கைகளை முன்னால் நீட்டினேன். நாங்கள் முகத்தோடு முகத்தை வைத்துக்கொண்டு நெருக்கமாக இருந்தோம். ஒரு குதிரையின் மீது அமர்ந்திருப்பதைப் போல நான் அந்தப் படகின் மீது அமர்ந்திருந்தேன். இரு பக்கக் கயிறுகளிலும் நான் என் காலை வைத்திருந்தேன். ஆனால், நான் அமர்ந்திருந்தது வசதியில்லாமல் இருந்தது. அவை என்னை அந்த இடத்திலிருந்து தள்ளின. ஷாக்ரோ என் முழங்காலைப் பிடித்திருந்தான். தலையை என் மார்பின் மீது வைத்திருந்தான். அவன் கீழிருந்து மேல்வரை நடுங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய பற்கள் கிடுகிடுப்பதை நான் கேட்டேன்.
ஏதாவது உடனடியாகச் செய்தாக வேண்டும். எண்ணெய் தேய்த்ததைப் போல படகின் அடிப்பகுதி வழுவழுப்பாக இருந்தது. ஷாக்ரோவிடம் கயிறைப் பிடித்துக் கொண்டு நீரில் குதிக்கும்படி நான் சொன்னேன். படகின் மறுபக்கத்தில் அதே போல விழுந்து கிடப்பது என் திட்டமாக இருந்தது. அதற்கு பதில் கூறுவதற்குப் பதிலாக அவன் தன் தலையால் என்னை அடிக்க ஆரம்பித்தான்.
ஒவ்வொரு முறையும் அலைகளின் ருத்ரதாண்டவம் படகை எங்களின் தலைக்கு மேலே கொண்டு போனது. எங்களின் பிடி தளர்ந்து கொண்டிருந்தது. கயிறில் ஒன்று என் காலில் பட்டு காயத்தை உண்டாக்கியது. ஓங்காரமிட்டு வந்து கொண்டிருந்த அலைகளின் குவியல்களைத் தவிர என் கண்களுக்கு வேறு எதுவுமே தெரியவில்லை.
முன்பு சொன்ன விஷயத்தை நான் மீண்டும் செய்தேன். ஷாக்ரோ தன்னுடைய தலையால் பலமாக என் மார்பின் மீது இடித்துக் கொண்டிருந்தான்.