
அதே நேரத்தில் என் உடல் நலத்திற்குச் சில பிரச்சினைகள் உண்டாகிக் கொண்டிருந்தன. எங்களுக்கு முன்னாலிருந்த பாதை மிகவும் கடினமானதாக இருந்தது. ஷாக்ரோவுடன் உள்ள என்னுடைய உறவு கொஞ்சம் கொஞ்சமாகத் தலைவலி நிறைந்ததாக மாறிக் கொண்டிருந்தது. அவனுக்குச் சாப்பாடு கொடுத்துக் காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை என்பதைப் போல அவன் நடக்க ஆரம்பித்தான். "நீங்க என்னோட வழிகாட்டி. எனக்கு வழிகாட்ட வேண்டியது உங்க கடமை. இவ்வளவு தூரத்தை நான் தனியாக நடந்து கடக்க முடியுமா? எனக்கு இப்படியெல்லாம் நடந்து பழக்கமில்ல. நான் செத்தே போயிடுவேன். நீங்க ஏன் என்னை இப்படி கஷ்டப்படுத்துறீங்க? நான் செத்துப்போனா என்ன நடக்கும்னு தெரியுமா? என் அம்மா அழுவா. அப்பா அழுவாரு. நண்பர்கள் அழுவாங்க. இந்த இடமெல்லாம் கண்ணீரால நிறைஞ்சிடும்."
அவன் சொன்னது என் காதில் விழுந்தாலும், எனக்குக் கொஞ்சம் கூட கோபம் உண்டாகவில்லை. ஆனால், அவன் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்கும் அளவிற்கு எனக்குச் சக்தியைத் தந்த, நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மனநிலை எனக்கு அப்போது வாய்த்திருந்தது. அவன் தூங்கிக் கொண்டிருந்தபோது, கள்ளங் கபடமில்லாமல் மிகவும் சாந்தமாகக் காட்சியளித்த அவனுடைய முகத்தில் எதையோ தேடுவதைப்போல நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். 'இவன்தான் என் பயண நண்பன். என் பயண நண்பன்' என்ற சிந்தனை என்னையே அறியாமல் என் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. அந்த சிந்தனை என்னை மிகவும் பலமாக ஆக்கிரமித்துவிட்டிருந்தது.
ஷாக்ரோ என்னை அடிமையாக்கிக் கொண்டிருக்கிறான் என்று எனக்குத் தோன்றியது. அவனுடைய பிடிவாதத்தில் அவனுடைய வழக்கமான குணத்தின் பாதிப்பு இருந்தது. அவனுடைய வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து கொண்டு அவனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் சுகமாக உணவு உண்டு, தூங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய மனதை சைத்தான் ஆக்கிரமிக்கும்போது, அவன் என்னைப் பார்த்துக் கிண்டல் பண்ணுவான்.
சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட நாங்கள் ஒருவரையொருவர் பிரிந்து செல்வோம். அவனுக்குத் தேவையான உணவையும் பணத்தையும் கொடுத்துவிட்டு எனக்காகக் காத்திருக்க வேண்டும் என்று நான் அவனிடம் கூறுவேன். சந்தேகத்துடனும் கோபத்துடனும் என்னை வழியனுப்பி வைக்கும் அவன் மீண்டும் என்னைப் பார்த்ததும் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விடுவான். அப்போது மகிழ்ச்சியுடன் சிரித்தவாறு அவன் கூறுவான்: "என்னைத் தனியா விட்டுட்டு நீங்க ஓடிப்போயிட்டீங்கன்னு நான் நினைச்சேன்! ஹ...ஹ...ஹ..."
நான் அவனுக்கு உணவு அளித்தேன். பயணத்துக்கிடையில் சந்திக்கும் நல்ல மனிதர்களைப் பற்றியும் இடங்களைப் பற்றியும் சொன்னேன். பங்கிஸராய் என்ற இடத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தபோது, புஷ்கினைப் பற்றி நான் அவனிடம் கூறினேன். புஷ்கினின் சில கவிதைகளை அவனிடம் சொன்னேன். ஆனால், அது எதுவும் அவனிடம் எந்தவொரு விளைவையும் உண்டாக்கவில்லை.
"ஓ... கவிதைகள்! அப்படின்னா பாட்டுத்தானே? கவிதை இல்லையே! பாட்டு பாடத் தெரியிற ஒரு ஜார்ஜியாக்காரனை எனக்குத் தெரியும். நல்லா பாடுவான்! அவன் பாடுறதைக் கேட்கணுமே! ஆய் ஆய் ஆய்ன்னு சத்தம் போட்டுப் பாடுவான். அப்போ அவனைப் பார்க்குறப்போ அவனோட கழுத்துல கத்தியைக் குத்தி இறக்கினதைப் போல இருக்கும்... அவன் சத்திரம் நடத்திக் கொண்டிருந்த ஆளை குத்திக் கொன்னுட்டான். இப்போ அவன் ஸைபீரியாவுல இருக்கான்."
நான் அவனை நெருங்கிச் செல்லும்போது, அவன் என்னை அலட்சியமாகப் பார்த்தான். என்னிடமிருந்து அவன் எதையும் மறைத்து வைக்க முடியவில்லை. எங்களுக்குள் இருந்த உறவு மிகவும் மோசமாகிக் கொண்டிருந்தது. வாரத்திற்கு ஒன்றரை ரூபிள் கூட என்னால் சம்பாதிக்க முடியவில்லை. இரண்டு பேர் வாழ அந்தப் பணம் போதுமானதாக இல்லை. ஷாக்ரோவின் பிச்சைக்காசு எங்களின் உணவுக்குக்கூட போதுமானதாக இல்லை. எந்தப் பொருள் உள்ளே போனாலும், அக்கணமே மறைந்து போகிற ஒரு பாதாளமாக இருந்தது. அவனுடைய வயிறு. முந்திரி, தண்ணீர்ப்பழம், பக்குவம் செய்யப்பட்ட மீன், ரொட்டி, உலர்ந்த பழங்கள் இப்படி எதை வேண்டுமென்றாலும் அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நேரம் செல்லச் செல்ல அதன் அளவு கூடிக் கொண்டேயிருந்தது. முன்பு சொன்னதைவிட மேலும் அதிகமான உணவுப் பொருட்கள் மீது அவனுக்கு ஆர்வம் பிறந்து கொண்டிருந்தது.
மழைக்காலம் என்றும், இனியும் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது என்றும் சொல்லி க்ரிமியாவிலிருந்து வேறு எங்காவது போகலாம் என்றும் ஷாக்ரோ என்னை வற்புறுத்தினான். அவன் சொன்னது சரிதான் என்று எனக்கும் பட்டது. க்ரிமியாவில் நான் பார்க்கவேண்டிய எல்லா இடங்களையும் பார்த்து விட்டேன். அதனால் தியோடோவியாவில் கொஞ்சம் காசு பார்க்கலாம் என்ற எண்ணத்தில் நாங்கள் அங்கு சென்றோம்.
அலுஷ்டாயிலிருந்து கிட்டத்தட்ட இருபது மைல் நடந்து சென்ற பிறகு இரவாகி விட்டது. அந்த இரவில் நாங்கள் அங்கேயே தங்கினோம். சிறிது வளைந்த பாதையாக இருந்தாலும், கடற்கரையை ஒட்டி இருக்கும் பாதையில் போகலாம் என்று நான் ஷாக்ரோவிடம் கூறினேன். கடல்காற்றை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு. ஒரு நெருப்புக் குண்டத்தை உண்டாக்கி அதன் இரு பக்கங்களிலும் நாங்கள் படுத்து உறங்கினோம். மிகவும் சுகமான இரவாக அது இருந்தது. அடர்த்தியான பச்சை நிறத்திலிருந்த கடல் எங்களுக்குக் கீழே பாறைகளில் மோதிக் கொண்டிருந்தது. வெளிறிப்போய்க் காணப்பட்ட ஆகாயம் கம்பீரமான மவுனத்துடன் எங்களுக்கு மேலே விரிந்து கிடந்தது. எங்களைச் சுற்றிலும் மரங்களும் செடிகளும் காற்றில் அசைந்து ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்தன.
நிலவு உதித்துக் கொண்டிருந்தது. மரங்களின் நிழல்கள் சுற்றிலும் தெரிந்தன. ஏதோ ஒரு இரவுப் பறவை இனிமையாகக் பாடிக் கொண்டிருந்தது. அலைகள் உண்டாக்கிய சத்தத்துடன் அந்தப் பறவையின் இனிமையான பாடலும் சேர்ந்து ஒலித்தது.அந்தச் சத்தம் நின்றவுடன், வேறு ஏதோ ஒரு மெல்லிய சத்தம் கேட்க ஆரம்பித்தது.
நெருப்பு மகிழ்ச்சியுடன் எரிந்து கொண்டிருந்தது. அதன் நாக்குகள் சிவப்பு, மஞ்சள் நிற இதழ்களைக் கொண்ட பூக்களைப் போல மலர்ந்து காணப்பட்டன. அவற்றின் நிழல்கள் தங்களின் சக்தி எவ்வளவு பெரிது என்று வெளிக்காட்டும் விதத்தில் பரவித் தெரிந்தன. கடலுக்கு மேலே வானத்தின் விளிம்பு மேகங்களற்று அமைதியாகத் தெரிந்தது. ஆள் அரவமற்று ஏதோவொரு உலகத்தைப் பார்த்தவாறு நான் இந்த பூமியின் எல்லையில் இருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது. வார்த்தையால் விளக்க முடியாத, விசாலமான, ஆழமான ஏதோ ஒரு குரல் என் மனதை ஆக்கிரமித்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook