என் பயண நண்பன்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6370
ஒடெஸ்ஸா துறைமுகத்தில்தான் நான் அந்த மனிதனைப் பார்த்தேன். கிழக்குத் திசையில் இருப்பவர்களின் முக அமைப்பையும், அழகான தாடியையும் வைத்திருந்த அந்த உயரம் குறைவான மனிதன் கடந்த மூன்று நாட்களாக என் கவனத்தை ஈர்த்திருந்தான்.
பல சமயங்களிலும் அவன் என் கண்பார்வையில் வந்து பட்டுக்கொண்டேயிருந்தான்.
தன் கையிலிருந்த குச்சியின் நுனியைக் கடித்து மென்றவாறு பாதாமின் அளவில் இருந்த கறுப்பான கண்களால் துறைமுகத்தின் கலங்கிய நீரைப் பார்த்துக்கொண்டு அந்தக் கருங்கல்லால் ஆன தூணின் மீது சாய்ந்தவாறு அவன் நின்று கொண்டிருப்பதை நான் பல தடவைகள் பார்த்திருக்கிறேன். இந்த உலகத்தைப் பற்றிய எந்த நினைப்பும் இல்லாத மனிதனைப் போல தினமும் பன்னிரண்டு தடவையாவது அவன் எனக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருப்பான். அவன் யாராக இருக்கும்?
நான் அந்த மனிதனை கவனிக்கத் தொடங்கினேன். என்னுடைய கவனத்தை ஈர்ப்பதற்கென்றே அவன் பல சமயங்களிலும் எனக்கு முன்னால் தோன்றினான். அதன்மூலம் அவனுடைய இளம் நிறத்தில் கோடுகள் போட்ட ஃபாஷன் பேன்ட்டும், கறுப்பு பூட்ஸும், அலட்சியமான நடையும், சோர்வைத் தரும் பார்வையும் எனக்கு நன்கு பழக்கமாகி விட்டன. தூரத்திலிருந்து பார்த்தால் கூட அவனை எனக்கு அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும் என்ற அளவிற்கு ஆகிவிட்டது. கப்பல்களின் ஓசையும் இயந்திரங்களின் சத்தமும் சங்கிலிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஓசைகளும், கப்பல் தொழிலாளிகளின் ஆரவாரமும்- எல்லாம் கலந்த சத்தங்களும் ஆரவாரங்களும் நிறைந்த அந்தத் துறைமுகத்தின் எந்தச் சிறப்பு அம்சங்களும் அவனைச் சிறிதும் பாதிக்கவில்லை. அங்குள்ள மனிதர்களில் எந்நேரமும் தீவிரமாக வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், களைத்துப்போய் காணப்படுபவர்கள், கடுமையாக உழைப்பவர்கள், வியர்வை ஒழுகிக் கொண்டிருப்பவர்கள், அழுக்கில் புரண்டவர்கள், உரத்த குரலில் கத்துபவர்கள், பிறரை வாய்க்கு வந்தபடி திட்டுபவர்கள் என்று பல தரப்பட்டவர்களும் இருந்தார்கள். அந்த ஆரவாரங்களிலிருந்து அமைதியாக இருந்த அந்த மனிதன் வேறுபட்டுத் தெரிந்தான். எல்லாவற்றிலிருந்தும் விலகி கள்ளங்கபடமற்ற முகத்துடன் இருந்தான் அவன்.
கடைசியில் நான்காவது நாள் மதிய உணவு நேரத்தில் அவனை நான் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. எப்படியும் அவன் யாரென்று கண்டுபிடித்தாக வேண்டும் என்று நான் மனதில் முடிவெடுத்தேன். அவனிடமிருந்து மிகவும் தூரத்தில் இல்லாமல் ஒரு கை நிறைய ரொட்டியும் இன்னொரு கையில் ஒரு தண்ணீர் பழத்தின் பாதியையும் வைத்துக்கொண்டு நான் அவனை கவனித்துக்கொண்டு நின்றிருந்தேன். அந்த மனிதனுடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் உருவாகுவதற்கான சூழ்நிலையை மனதில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
தேயிலைப் பைகள் அடங்கிய பெட்டிகள் மீது சாய்ந்து நின்றவாறு புல்லாங்குழலைப் பிடித்திருப்பதைப் போல தன் கையிலிருந்த குச்சியில் விரல்களை அசைத்தவாறு எங்கேயோ அலட்சியமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அவன்.
தெருவில் சுற்றிக்கொண்டிருப்பவன் என்பதைப் பறைசாற்றுகிற மாதிரி கரிபடிந்த ஆடைகளை அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்த அவனைப் பார்ப்பது என்பது எனக்கே சற்று சிரமமான காரியமாக இருந்தது.
ஆனால், நானே ஆச்சரியப்படுகிற மாதிரி அவன் தன் கண்களால் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். மிருகத்தனமான பார்வையும் ஆர்வமும் அந்தக் கண்களில் இருந்தன. அவனுக்குப் பசி எடுத்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுற்றிலும் பார்த்துக்கொண்டு நான் அவனிடம் கேட்டேன்: "சாப்பிடுறதுக்கு ஏதாவது வேணுமா?"
பரபரப்படைந்து, ஆர்வத்துடன் அவன் என்னையே பார்த்தான். அவனுடைய பற்கள் பிரகாசித்தன.
யாரும் எங்களைப் பார்க்கவில்லை. கோதுமை ரொட்டியின் ஒரு துண்டையும், தண்ணீர்ப் பழத்தின் பாதியையும் நான் அவனுக்குக் கொடுத்தேன். அதை வாங்கிய அவன் பிரம்புக் கூடைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியின் பின்னால் போய் ஒதுங்கி நின்றான். இங்கிருந்து அவனுடைய தலை தெரிந்தது. தொப்பி சற்று மேலே வைக்கப்பட்டிருந்ததால் வியர்வை அரும்பிய சிவந்த நெற்றி தெரிந்தது. அவனுடைய முகத்தில் மலர்ந்த புன்சிரிப்பு இருந்தது. அவனுக்கு மட்டும் தெரியக்கூடிய ஏதோ காரணத்தால், அவன் என்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான். ஆனால், அப்போதும் உணவு உண்ணும் விஷயத்தை ஒரு நிமிடம் கூட அவன் நிறுத்தி வைக்கவில்லை. அவனிடம் சிறிது காத்திருக்கும்படி சைகை செய்த நான் கொஞ்சம் மாமிசம் வாங்கிக்கொண்டு வந்தேன். அதை அவனுக்கு நேராக நீட்டினேன். அவன் அதைச் சாப்பிடும்போது, அந்த வழியாக கடந்து சென்றவர்கள் அவனைப் பார்க்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, நான் அந்தக் கூடைகளின் ஓரத்தில் அவனை மறைத்துக்கொண்டு நின்றேன்.
தன்னுடைய உணவை வேறு யாராவது தட்டிப் பறித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று பயந்த ஒரு மிருகத்தைப் போல அவன் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தான். இப்போது அவன் முன்பிருந்ததைவிட அமைதியாக உணவைச் சாப்பிடத் தொடங்கினான். எனினும் வேகவேகமாகச் சாப்பிட்டான். அவனுடைய பசியை நினைத்து எனக்கு மனதில் சங்கடம் உண்டானது. நான் அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பி நின்றேன்.
"ரொம்ப நன்றி. ரொம்ப நன்றி"- அவன் என் தோளைப்பிடித்துக் குலுக்கினான். பிறகு என் கைகளைச் சேர்த்துப் பிடித்து அவை வலிக்கும் அளவிற்குக் குலுக்கினான்.
ஐந்து நிமிடங்களில் அவன் தன்னுடைய கதையின் மீது ஏறி சவாரி செய்ய ஆரம்பித்தான்.
குற்றைஸியைச் சேர்ந்த ஒரு நிலச்சுவான்தாரின் ஒரே மகனான 'ப்ரின்ஸ்' ஷாக்ரோடாட்ஸெ ஒரு ஜார்ஜியாக்காரன். ட்ரான்ஸ் காஸ்பியன் ரெயில்வேயில் க்ளார்க்காக வேலை பார்த்துக்கொண்டிருந்த அவன் தன் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து வசித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஷாக்ரோவின் பணத்தையும் விலை மதிப்புள்ள மற்ற பொருட்களையும் திருடிக்கொண்டு அந்த நண்பன் ஓடிவிட்டான். அவனைக் கண்டுபிடிப்பதற்காகப் புறப்பட்டான் ஷாக்ரோ. பற்றூமிற்குச் செல்வதற்காக அந்த நண்பன் பயணச்சீட்டு எடுத்திருந்ததாக அவனுக்குத் தகவல் கிடைத்தது. ப்ரின்ஸ் ஷாக்ரோ அவனைப் பின் தொடர்ந்தான்.
பற்றூமியை அடைந்தபோது அந்த நண்பன் ஒடேஸ்ஸாவிற்குப் போயிருப்பதாக அவனுக்குத் தகவல் கிடைத்தது. அப்போது ஷாக்ரோ தன்னுடைய இன்னொரு நண்பனான வானெ ஸ்வானிஸ்டெ என்ற முடிவெட்டும் தொழில் செய்பவனைப் பார்த்தான். அவனுக்கு ஷாக்ரோவின் வயதுதான். ஆனால், உடல் ரீதியான அளவுகளும், உயரமும் அவனை மாதிரி இல்லை. அவனைப் போய்ப் பார்த்த ஷாக்ரோ அவனுடைய பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு ஒடேஸ்ஸாவிற்குப் புறப்பட்டான். ஒடேஸ்ஸாவை அடைந்ததும் அவன் தன் பொருட்கள் திருடு போன விஷயத்தை போலீஸ்காரர்களிடம் சொன்னான். திருடிய மனிதனைக் கண்டுபிடிப்பதாக போலீஸ்காரர்கள் அவனுக்கு உறுதியளித்தனர். அவன் இரண்டு வார காலம் அதற்காக அங்கே தங்கியிருந்தான். அதற்குள் அவன் கையிலிருந்த பணம் முழுவதும் தீர்ந்து விட்டது.