ஒரு காதல் கதை - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6370
அவள் காப்பாற்றுவதற்கான வழிகள் பலவற்றையும் பற்றி சிந்தித்தாள். வெள்ளைக்காரர்களுக்காக ஓமான் அரேபியர்களுடன் போர் செய்ய ஸாஞ்சிபார் சுல்தான் தன்னுடைய படையை அனுப்பி வைப்பார் என்ற விஷயத்தைப்பற்றி சிந்தித்துக்கூட பார்க்கக்கூடாது. ஓமான் அரேபியர்களுடன் போரிடாமல் ஜிசஸ் கோட்டையில் இருந்து இயாகோவைக் காப்பாற்ற வேண்டுமென்று சுல்தானிடம் கேட்டுக் கொள்வதும் ஆபத்தான விஷயமே. கறாம்பூவின் காதலனாக இயாகோ என்றொரு போர்வீரன் இருக்கிறான் என்ற கதையை சுல்தான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறார். அந்தக் கடிதத்தில் இருக்கும் விஷயங்களை சுல்தான் அறிய நேர்ந்தால் கறாம்பூவின் தலைக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். இப்படி ஒவ்வொரு விஷயங்களையும் சிந்திக்கச் சிந்திக்க கறாம்பூ பேகத்தின் தலை சுற்ற ஆரம்பித்தது. பழைய காதலன்மீது கொண்டிருக்கும் காதல் என்பதை விட, ஒரு ஆண் - அதுவும் ஒரு ஐரோப்பிய போர்வீரன் - உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வழியைத் தேடி தன்னை தொடர்பு கொண்டிருக்கிறான் என்ற உண்மைதான். அந்தக் கறுப்பினப் பெண்ணை அதிகமாக உணர்ச்சிவசப்படச் செய்தது. அந்தக் கடிதத்தில் ஜீசஸ் கோட்டையில் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய இனத்தைச் சேர்ந்தவர்களை அவள் பார்க்கவில்லை. மற்ற வெள்ளைக்காரர்களை அவள் பார்ப்பவில்லை. இயாகோவின் முகத்தை மட்டுமே அவள் பார்த்தாள். உணர்ச்சி வசப்பட்டு தன்னுடைய கன்னத்திலும் கண்களிலும் மார்பிலும் முத்தங்களைத் தந்த அந்த உதடுகள் தாகமெடுத்து வறண்டுபோய் இருப்பதை அவள் எப்படிப் பொறுத்துக் கொள்வாள்? காதல் வேட்கையுடன் தன்னைப் பார்த்த அந்த நீலநிற கண்கள் மரணத்தை எதிர்பார்த்து மயங்கிக் கிடக்கின்றன. அந்தக் கண்களில் இருந்த ஆசைகளில் எஞ்சியிருந்த ஓர் ஒளிக்கீற்று - கறாம்பூ மட்டும்தான்.
யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கறாம்பூ சற்று அதிர்ச்சியடைந்தாள். சுல்தான் வருகிறார் என்பதை அவள் உடனடியாகப் புரிந்துகொண்டாள்.
சத்தம் உண்டாக்கக் கூடாது என்று சைகை செய்தவாறு, அவள் அந்தக் கறுப்பு நிறப் பணியாளை அறையின் ஒரு மூலையில் திரைச்சீலைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். இயாகோவின் கடிதத்தைத் தலையணைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு, வேகமாக முகத்தைப் பிரகாசமாக ஆக்கி, சந்தோஷமாக இருப்பது மாதிரி காட்டிக்கொண்டு நடனம் ஆடியவாறு அவள் கதவைத் திறந்தாள்.
கறாம்பூவின் நடனத்தைப் பார்த்து சுல்தான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
‘ஸாஞ்சிபார் சுல்தானுக்கு மிகவும் பிரியமான பேகத்தை நடனப் பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுவிக்கிறதே! என்ன இது?’ சுல்தான் கறாம்பூவின் தோள்களைப் பிடித்துக் குலுக்கியவாறு கேட்டார்.
சுல்தானின் விரிந்த மார்பை வருடியவாறு அவரை மெத்தையை நோக்கி அழைத்துச் சென்று கொண்டே கறாம்பூ இப்படிச் சொன்னாள்:
‘நான் உறங்கிக் கொண்டிருந்தேன். தூக்கத்தில் ஓர் அற்புதமான கனவு கண்டேன். ஓர் அழகான பூந்தோட்டம். அங்கு நீங்களும் நானும் மட்டுமே இருக்கிறோம். ஒரு புல்வெளியில், ஒரு சந்தனத்தாலான மேஜை மீது பொன்னாலான குவளைகளில் மது நிறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. மதுவை அருந்தியவாறு நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள் - ‘கறாம்பூ, உன்னால் எவ்வளவு நேரம் நடனம் ஆட முடியும்?’ என்று.
நான் சொன்னேன். - ‘நீங்கள் நிறுத்தும்படி கூறுவதுவரை என்னால் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் நடனம் ஆட முடியும். சோதித்துக் கொள்ளுங்கள்’ என்று.
‘அப்படியென்றால் அதையும் பார்ப்போம்!’ என்று சொன்ன நீங்கள் என்னிடம் நடனம் ஆடும்படிக் கூறினீர்கள். நான் அந்த புல்வெளியில் நடனமாட ஆரம்பித்தேன். நீங்கள் மதுவை அருந்தியவாறு என்னுடைய நடனத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தீர்கள். உங்களுடைய மது அருந்தும் செயலும் என்னுடைய நடனமும் ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருந்தது. சற்று நேரம் ஆனதும், நீங்கள் மதுவின் போதையில் கண்ணயர்ந்து தூங்கிவிட்டீர்கள். நடனத்தை நிறுத்தலாம் என்ற உங்களின் உத்தரவை எதிர்பார்த்து நான் நடனத்தைத் தொடர்ந்து கொண்டே இருந்தேன். அப்போதுதான் நீங்கள் கதவைத் தட்டினீர்கள். நான் கண் விழித்து நடனத்தைத் தொடர்ந்து கொண்டே உங்களை வரவேற்கிறேன்.
அந்த கனவு கதையைக் கேட்டு சுல்தான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். ‘உண்மையிலேயே இது ஓர் அற்புதமான கனவு. உன் கனவின் ஒரு காட்சி இன்று உண்மையிலேயே நடக்கப் போகிறது. மது அருந்தியவாறு உன்னுடைய நடனத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.’
கறாம்பூ சுல்தானின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே சொன்னாள்: “அப்படியென்றால் நீங்கள் நிறுத்தும்படிக் கூறுவது வரையில் நான் நடனம் ஆடுவேன்.”
சுல்தான் மதுக் கோப்பையைத் தனக்கு முன்னால் வைத்துக் கொண்டு பருக ஆரம்பித்தார். கறாம்பூ நடனத்தைத் தொடங்கினாள்.”
ஹஸ்ஸன் சிறிது நேரம் கதை கூறுவதை நிறுத்தினான். யாரோ வருவதை எதிர்பார்ப்பதைப்போல அவன் நான்கு பக்கங்களிலும் பார்த்தான். அப்போது ஜீசஸ் கோட்டையில் மணிகள் ஒலிக்க ஆரம்பித்தன.
ஒன்று .... இரண்டு...
ஹஸ்ஸனின் முகம் பயங்கரமாக ஆவதையும், அவன் இரண்டு கைகளையும் தூக்கித் தன் காதுகளை மூடிக் கொள்வதையும் நான் கவனித்தேன்.
மூன்று... நான்கு.... ஐந்து.... ஆறு.... ஏழு.... எட்டு.... ஒன்பது.... பத்து.
மணி பத்து அடித்தது.
ஹஸ்ஸன் ஒன்பது மணிக்கு ‘கொலைகார’னைப் பார்ப்பதற்குப் போக வேண்டும் என்ற விஷயத்தை மறந்துவிட்டான் என்று நினைக்கிறேன். மறந்துவிட வேண்டும் என்று நான் வேண்டிக் கொண்டேன். அந்தக் கதையை அங்கே அப்படியே நிறுத்திவிட்டு ஓடிப்போக அவனை நான் அனுமதிக்க மாட்டேன்.
ஒரு நிமிட நேரத்திற்கு அமைதி நிலவியது. அது ஒரு யுகத்தைப் போல எனக்கு இருந்தது. நிலவு வெளிச்சத்தில் ஜீசஸ் கோட்டையின் நிழல் ஒரு சாய்ந்த யானையைப்போல எங்களுக்கு முன்னால் தெரிந்தது. மரங்களுடைய நிழல்கள் ஒன்றோடொன்று கட்டிப் பிடித்துக் கொண்டு, நீர்ப்பாம்புகளைப்போல எங்களின் இரு பக்கங்களிலும் நெளிந்து கொண்டிருந்தன. கறுத்த முகமூடி அணிந்த அரேபியப் பெண்களைப்போல வவ்வால்கள் தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தன. நிழல்களின் அமைதியான காட்சி. அங்கு பிரகாசித்துக் கொண்டிருந்தது ஒன்றே ஒன்று மட்டும்தான். ஹஸ்ஸனின் ஒற்றைக் கண்! அந்தக் கண், நிழலில் புலியின் கண்ணைப்போல ஒரு பச்சை வெளிச்சத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது.
“மிஸ்டர் ஹஸ்ஸன், நீங்கள் கறாம்பூவை சுல்தானுக்கு முன்னால் நடனம் ஆடுவதோடு நிறுத்தியிருக்கீங்கல்ல...” நான் ஹஸ்ஸனுக்கு கதை விஷயமாக ஞாபகப்படுத்தினேன்.
“ஓ... ஆமாம்... ஆமாம்....” - ஹஸ்ஸன் ஏதோ சிந்தனையிலிருந்து விடுபட்டது மாதிரி என்னுடைய முகத்தைப் பார்த்தான். பிறகு தன்னுடைய ஒற்றைக் கண்ணைச் சிறிது நேரம் மூடியவாறு உட்கார்ந்திருந்தான்.