ஒரு காதல் கதை - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6370
ஜீசஸ் கேட்டையின் மணிச் சத்தம் கேட்டு அந்த மனிதனின் முக வெளிப்பாடு மாறுவதை நான் கவனித்தேன். நான்குமுறை மணி அடித்தவுடன் எதையோ கேட்கக் கூடாததைக்கேட்பதைப்போல அவன் தன் காதுகளை மூடிக்கொண்டான்.
“எத்தனை முறை அடித்தன?” காதில் இருந்து கைகளை எடுத்துக்கொண்டு நிலையற்ற தன்மையுடன் அவன் கேட்டான்.
‘’ஒன்பது அடிச்சது” - நான் சொன்னேன்.
மணியோசையைக் கேட்டு பயப்படக் கூடிய அந்த மனிதன் மீது எனக்கு பரிதாபம் தோன்றியது.
“மணியோசையைக் கேக்குறப்போ ஏன் ஒரு பதைபதைப்பு?” - நான் இரக்கத்துடன் கேட்டேன்.
அவன் என்னுடைய கேள்வியைக் காதில் வாங்கியதாகவே காட்டிக் கொள்ளவில்லை. சிறிது நேரம் சென்றதும், அவன் மெதுவான குரலில் சொன்னான்: “ஒன்பதரை மணிக்கு நான் திரைப்படம் பார்க்கப் போகணும்.”
இந்த அரேபியன் யாராக இருப்பான்? அவன் தன்னை அறிமுகம் செய்யவில்லை என்ற விஷயத்தை நான் நினைத்துப் பார்த்தேன். என்னிடம் சொல்ல விருப்பமில்லையென்றால் நானே கேட்க வேண்டியதுதான்.
“சரி... மிஸ்டர். உங்களைப் பற்றி நீங்க எதுவும் சொல்லலையே? பெயர் என்ன?”
அவன் உடனடியாக பதில் தரவில்லை. அரை நிமிடம் கடந்ததும் அவன் உரத்த குரலில் சொன்னான்.
“ஹஸ்ஸன் பின் அலி.”
மோதிரத்தின் புன்சிரிப்பு
ஹஸ்ஸன் பின் அலி! அந்த அரேபியனின் பெயரை நான் மனதில் திரும்பத் திரும்பக் கூறிப் பார்த்தேன். போர்த்துக்கீசியர்கள் முந்நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்னால் மொம்பாஸாவின் மன்னராக இருக்கச் செய்து, பின்னர் சதி செய்து கொலை செய்த பழைய மலிந்தி மன்னரின் பெயர்தான் அது. ஹஸ்ஸன் பின் அலி!
நான் ஹஸ்ஸனுக்கு ஒரு சிகரெட்டைக் கொடுக்தேன். அவன் தலையைக் குலுக்கி வேண்டாம் என்று சொன்னான். “நான் புகை பிடிப்பதில்லை.”
நான் சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையை விட்டுக்கொண்டே ஹஸ்ஸனிடம் கேட்டேன்: “மிஸ்டர் ஹஸ்ஸன், நீங்கள் மொம்பாஸாவில் என்ன செய்றீங்க?”
உடனடியாக பதில் வரவில்லை.
ஒரு நிமிடம் கழித்து பதில் கிடைத்தது.
“கப்பலுக்கு உணவுப் பொருட்கள் சப்ளை செய்யும் ஏஜெண்டாக நான் இருக்கிறேன்.”
கப்பலுக்கு உணவுப் பொருட்கள் சப்ளை செய்யும் அந்த ஏஜெண்டிற்கு இங்கு இப்போது கோட்டையின் மூலையில் என்ன வேலை என்று கேட்க எனக்கும் தோன்றியது. ஆனால் கேட்கவில்லை.
ஹஸ்ஸனின் முகத்தில் இருந்த பயம் சற்று குறைந்து விட்டிருந்தது. அமைதியற்ற தன்மை மாற ஆரம்பித்திருந்தது. அவனுடைய உதடுகளில் இருந்து ஒரு அரேபியப் பாடல் மெதுவாகப் புறப்பட்டு வந்தது.
கேட்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அரேபிய சங்கீதத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அர்த்தம் புரியவில்லையென்றாலும், அந்த பாடலின் இனிமை என் இதயத்தில் இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்குவதுண்டு. இதயத்தின் அடித்தளத்தில் இருந்து தொண்டை வழியாக வெளியே பாய்ந்து வரும் அந்த அபூர்வ சங்கீதத்திற்கு ஒரு மந்திரசக்தி இருக்கத்தான் செய்கிறது.
“ஹா! என்ன ஓர் இனிமையான பாடல்?” - நான் ஹஸ்ஸனின் பாடும் ஆற்றலைப் பாராட்டினேன். ஹஸ்ஸன் ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு தலையை ஆட்டியவாறு ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் என்னுடைய பாராட்டை ஏற்றுக்கொண்டான்.
“மிஸ்டர் ஹஸ்ஸன், அந்தப் பாடலின் அர்த்தம் என்ன? கொஞ்சம் சொல்ல முடியுமா?”
ஹஸ்ஸனின் ஒற்றைக் கண்ணில் வெட்கத்தின் வெளிப்பாடு தடை செய்ததைப்போல தோன்றியது.
அது ஒரு காதல் பாடல். அதன் அர்த்தம் இதுதான். ‘ஸாஞ்சிபாரில் கறாம்பூ மணம் கமழ
சாயங்கால காற்று பயணிக்க
குதிக்கின்றன காதல் ஜுரத்தால்
ஹா இளம் இதயங்கள், ஆப்பிரிக்காவில்!
ஸாஞ்சிபாரில் புல்லாங்குழல் இசைக்க,
தேன் சொரிய, கரைகளில்
ஹா... அழகிகள் கிழக்கு ஆப்பிரிக்கா
எங்கும் நடனமாடுகின்றனர்!’
அந்த அரேபியப் பாடலின் குரல் இனிமையைக் கேட்டு நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஆச்சரியப்படுகிறேன் என்று நான் சொன்னதும், ஹஸ்ஸன் மீண்டும் ஒருமுறை அந்தப் பாடலை எனக்குப் பாடிக் காட்டினான்.
ஹஸ்ஸன் சொன்னான் : “ஹ! கறாம்பூவின், கறுத்த அழகிகளின், காதல் பாடல்களின் நறுமணம் வீசும் ஸாஞ்சிபார்... நான் ஸாஞ்சிபாரில் பிறந்தவன்.”
“ஓ... நீங்கள் ஸாஞ்சிபார் தீவைச் சேர்ந்தவரா?”
நான் ஆர்வத்துடன் கேட்டேன்.
“ஆமாம்... நான் ஷிராஸி”.
சிறிது நேரத்திற்கு மவுனம் நிலவியது.
“இரண்டு விஷயங்களை நான் மிகவும் விரும்புகிறேன்” - ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு உதட்டை ஒரு பக்கமாக சுளித்துக் கொண்டு, ஒரு குறும்புத்தனமான சிரிப்பை உண்டாக்கிக் கொண்டு, அந்த ஷிராஸி என் காதில் சொன்னான்.
“அந்த இரண்டு விஷயங்கள் என்ன?” நான் ஆர்வத்துடன் கேட்டேன். “ஒன்று - காதல் பாடல்கள்.”
“இன்னொன்று?”
ஹஸ்ஸன் ஒற்றைக் கண்ணால் என்னுடைய முகத்தில் ஏதோ அர்த்தம் நிறைந்த ஒரு பார்வையைப் பதித்தான்.
“இன்னொன்று?” - நான் மீண்டும் கேட்டேன்.
“கொலை?” அவன் என் காதில் முணுமுணுத்தான்.
நான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன். ஹஸ்ஸன் திரைப்படத்தைப் பற்றிப் பேசுகிறான் என்பதை நான் புரிந்து கொண்டேன். மொம்பாஸாவில் இருந்த ராக்ஸி திரைப்பட அரங்கில் ‘கொலைகாரன்’ என்றொரு அடிபிடிகள் நிறைந்த கொலைகள் செய்யும் படம் ஓடிக்கொண்டிருப்பதை நான் நினைத்துப் பார்த்தேன்.
நான் சொன்னேன் : “அப்படிப்பட்ட அடிபிடிகளும் கொலைகளும் நிறைந்த படங்களை நான் விரும்புவது இல்லை. எனக்குப் பிடித்தவை காதல் கதைகள்தான்.”
ஹஸ்ஸன் எதுவும் பேசவில்லை. அவன் அமைதியற்ற மனதுடன் நான்கு பக்கங்களிலும் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஓ... காதல் கதைகள் உங்களுக்குப் பிடிக்குமா?”- சிறிது நேரம் சென்றதும் அவன் கேட்டான்.
“ஆமாம்... ஸாஞ்சிபாரில் இருக்கும் அழகிகளைவிட நான் விரும்புவது ஆயிரத்தொரு இரவுகளில் வரும் காதல் கதைகளைத்தான்.”
“அற்புதமான ஒரு காதல் நாடகம், இந்த ஜீசஸ் கோட்டையில் நடந்த கதை உங்களுக்குத் தெரியுமா?” - ஹஸ்ஸன் என்னிடம் கேட்டான்.
“இல்லை. எனக்குத் தெரியாது. ஜீசஸ் கோட்டையில் நடந்த கூட்டக் கொலைகளைப் பற்றிய சில கதைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”
“ஸாஞ்சிபார் சுல்தானின் பேகம் ஒரு வெள்ளைக்காரப் படைவீரன்மீது காதல் கொண்ட கதை அது.”
“அதை நான் கேட்கிறே.” - நான் ஹஸ்ஸனிடம் சினேகத்துடன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன.