ஒரு காதல் கதை - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6370
அவர்கள் பெண்கள் அல்ல என்பதையும், வேடம் மாறிய பட்டாளக்காரர்கள் என்பதையும் அல்லாஹுவின் அருளால் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் பட்டாளக்காரர்களைப்போல அடிகள் வைத்து நடக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு அரேபிய இளைஞன் இருக்கிறான்.’
அரேபியப் படைத் தலைவனும் பட்டாளத்தைச் சேர்ந்தவர்களும் சாப்பாட்டை நிறுத்திவிட்டு, வேகமாக எழுந்து துப்பாக்கிகளைக் கையில் எடுத்துக் கோட்டையின் கோபுரத்தை நோக்கி நடந்தார்கள்.
பர்தா கூட்டம் அப்போது கோட்டையில் இருந்து நூறடிகள் நகர்ந்திருந்தது.
அரேபியர்களின் படைத் தலைவன் கூர்ந்து கவனித்தான். அவர்கள் தெருவிற்குச் செல்லும் பாதையில் அல்ல - ஜீசஸ் கோட்டையை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். ஜீசஸ் கோட்டையில் இருக்கும் வெள்ளைப் பன்றிகளைக் காப்பாற்றுவதற்காக வந்திருப்பவர்கள்தான். தலைவனான அரேபிய இளைஞனும் மாறுவேடம் அணிந்திருக்கும் ஒரு வெள்ளைக்காரனாகத்தான் இருக்க வேண்டும். மொஸாம்பிக்கில் இருந்து வந்திருக்கும் கூட்டமாகத்தான் அது இருக்க வேண்டும்.
அரேபியப் படைத் தலைவன் விழுந்து விழுந்து சிரித்தான். ‘அப்பிராணிகள்! சகோதரர்களே, இன்று இரவு உணவுக்குப் பிறகு நமக்கு நன்கு பொழுது போவதற்கு விஷயம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தயாராக இருங்கள். காவலாளியே பள்ளத்தின் பாலத்தை இழுக்க உத்தரவிடு.’
ஜோசப் கோட்டையிலிருந்து தொடர்ந்து மூன்று முறை துப்பாக்கி சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து கோட்டைக்கு மேலே இருந்து ஒரு சிவப்பு நிற விளக்கு விசேஷமான முறையில் ஒளியை வீசிக் கொண்டிருந்தது- பாலத்தைத் திறப்பதற்கான தகவல்.
ஜோசப் கோட்டையில் இருப்பவர்களுக்குத் தெரிந்தோ அவர்களின் சம்மதமோ இல்லாமல் அந்த வழியே ஜீசஸ் கோட்டையை அடைய யாரும் ஆசைப்படக் கூடாது. அந்த வழியில், ஜோசப் கோட்டையில் இருந்து முந்நூறு அடி தூரத்தில் ஒரு பெரிய பள்ளத்தையும் அந்த பள்ளத்தை மூடி மறைத்துக்கொண்டு ஒரு மரப்பாலத்தையும் அரேபியர்கள் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். கடலில் இருந்து வெட்டி உண்டாக்கப்பட்ட பள்ளம் அது. பள்ளத்தில் கடல் நீர்தான் நிறைந்திருக்கிறது. ஜோசப் கோட்டையில் இருந்து ஆபத்தை அறிவிக்கும் எச்சரிக்கை கிடைத்தவுடன், பள்ளத்திற்கு அருகில் மறைந்திருக்கும் காவலாளி, சந்தேகத்திற்கு இடமான பயணிகள் அந்தப் பாலத்தில் வரும் நேரத்தைப் பார்த்து, பாலத்திற்கு அடியில் இருக்கும் இணைப்பைத் தளர்த்தி உருவுவான். கதவு திறப்பதைப் போல பாலத்தின் இணைப்புகள் இரண்டும் கீழே நீருக்குள் ‘ப்ளும்’ என்று தலைக்குப்புற விழுவார்கள். பள்ளத்தில் - நீர்ப்பரப்பில் இருந்து ஐந்தாறு அடிகளுக்குக் கீழே, ஒரு பெரிய வலையும் வைக்கப்பட்டிருந்தது. பாலத்திலிருந்து நடப்பவர்கள் தலைகுப்புற விழுவது அந்தப் பெரிய வலையில்தான். அந்த வகையில் எதிரிகளை பெரிய மீன்களைப்போல வலையில் விழ வைத்து கரைக்கு கொண்டு வருவது என்பது அந்த அரேபியர்களின் ஒரு விளையாட்டாக இருந்தது.
தலைவனும் பன்னிரண்டு முகமூடி அணிந்தவர்களும் பாலத்திற்கு மேலே நடந்து சென்றபோது, அந்த தந்திரப் பாலம் திடீரென்று பிளந்து எல்லோரும் தலைக்குப்புற நீருக்குள் விழுந்தார்கள். நூரி யூசுஃப்பின் தலைமையில் கோட்டையில் இருந்த ஓமான் அரேபியர்கள் அவர்களைப் பின் தொடர்ந்து அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். பாலத்திற்குப் பின்னால் நின்றிருந்த மீதமுள்ள பர்தா உருவங்களை அவர்கள் பின்னாலிருந்து தள்ளி நீருக்குள் விழ வைத்தார்கள்.
‘எலேலம் அல்லா’ என்று பாடியவாறு அரேபியர்கள் வலையை கரைக்கு இழுத்தார்கள். அதற்குள் இருந்த உருவங்கள் மொத்தத்தில் பயத்தாலும் நனைந்ததாலும் நடுங்கி கொண்டிருந்தன. சிலர் நீரைக் குடித்து வயிறு வீங்கியும், மூச்சுவிட முடியாமலும் வெறுப்புடன் அந்த தடிமனான முகமூடியை விட்டு வெளியே குதிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.
முகமூடிகளைப் பார்த்தபோது கண்ட காட்சி ஓமான் அரேபியர்களை ஆச்சரியப்படச் செய்தது. ஆயுதங்கள் ஏந்திய ஏதோ அரேபியப் போர் வீரர்கள் நனைந்த கோழிகளைப்போல கூனிக் குறுகி நின்றிருந்தார்கள். முகமூடி இல்லாத தலைவனின் நனைந்த உடலைப் பார்த்து அவர்கள் விழித்து நின்றார்கள். அந்த ‘தலைவ’னின் தலைக்கட்டு போய், கருநீலத் தலைமுடி இரண்டு மார்புக் கலசங்களிலும் நனைந்து ஒட்டிக் கிடந்தன. பெண்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் ஆண்களாகவும், ஆண் வேடத்தில் பார்த்த ஆள் பெண்ணாகவும் நீரிலிருந்து மேலே வந்தார்கள். என்ன ஒரு தமாஷ்!
சில ஓமான் அரேபியர்களுக்கு அந்தக் காட்சியை நம்ப முடியவில்லை. அவர்கள் ‘சைத்தான்! சைத்தான்!’ என்று உரத்த குரலில் சத்தமிட்டார்கள்.
வலையில் சிக்கிய எதிரிகளை, ஆடைகளை அவிழ்த்து, நிர்வாணமாக்கி, நடத்திக்கொண்டு செல்வதுதான் பொதுவாக நடப்பது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் ஓமான் அரேபியர்கள் திகைத்தார்கள். ஒரு பெண் அவர்களுடைய வலையில் விழுந்தது என்பது அதுதான் முதல் தடவை. ஆயுதங்களை வைத்திருந்தாலும், அக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எந்தவொரு எதிர்ப்பையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்த உண்மையும் ஓமான் அரேபியர்களை ஆச்சரியப்படச் செய்தது.
அந்த நனைந்த ஆடைகளுடனே அவர்கள் அனைவரையும் ஓமான் அரேபியர்கள் படைத்தலைவனான ஷேக் சம்சுதீனுக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினார்கள். அந்தப் பெண்ணையும் சேர்த்து அவர்கள் இருபத்தோரு பேர் இருந்தார்கள்.
ஷேக் சம்சுதீன் அந்த கறுத்த போர் வீரர்களையும், அந்த நீல அழகியையும் மாறி மாறிப் பார்த்தான். அவனுக்கு ஒரு பிடியும் கிடைக்கவில்லை. அவர்கள் எல்லோரும் அரேபியர்கள்.
‘நீங்கள் யார்? எங்கேயிருந்து வர்றீங்க?’
ஷேக் கர்ஜித்தான்.
பதில் இல்லை.
ஷேக் அந்தப் பெண்ணைப பார்த்தான். அவள் காலில் இருந்து தலை வரை நனைந்து நடுங்கிக் கொண்டிருந்தாள்.
ஷேக் உத்தரவிட்டான்: ‘இவர்களுக்கு மாற்றுவதற்கு ஆடைகள் கொடுங்க. அதற்குப் பிறகு மீண்டும் எனக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்க’
ஒரு அலி அவர்கள் எல்லோரையும் கோட்டைக்குள் குளிக்கும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றான். அரைமணி நேரம் தாண்டியதும் நீளமான ஆடைகளை அணிந்து அந்தப் போர் வீரர்கள் ஷேக்கிற்கு முன்னால் மீண்டும் கொண்டு வரப்பட்டார்கள். பெண்களுக்கான ஆடை அங்கு இல்லை. அதனால் ஆண்களைப்போல நீளமான ஆடையை அணிந்து கொண்டுதான் அந்த அரேபியப் பெண்ணும் நின்றிருந்தாள். அவளுடைய நீல நிற முடி மார்பின் இரண்டு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருந்தது.
‘நீங்க யார்? எங்கேயிருந்து வர்றீங்க?’
ஷேக் கேள்வியைத் திரும்பவும் கேட்டான்.
அப்போதும் பதில் இல்லை.
ஓமான் அரேபியப் படை வீரர்களும், கோட்டையின் பணியாட்களும், பண்டித கிழவனான அப்துல் கத்தீப்பும் விசாரணையைக் கேட்பதற்காகக் கூடி நின்றிருந்தார்கள். திடீரென்று பணியாட்கள் மத்தியில் இருந்து ஒருவன் முன்னால் வந்து ஷேக்கை வணங்கினான்.