ஒரு காதல் கதை - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6370
‘நம்பிக்கை உன்னக் காப்பாற்றட்டும்! அது வேறு விஷயம் வெள்ளைக்காரர்களுக்காக ஒற்றர் வேலை செய்யக்கூடிய ஒரு ஆளாகவே உன்னை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.’
ஷேக், அப்துல் கத்தீப்பை அருகில் அழைத்து உட்காரச் செய்தான். இருவருக்கும் இடையில் சிறிது நேரம் தனிப்பட்ட முறையில் பேச்சு நடந்தது. அது முடிந்தவுடன், ஷேக் கறாம்பூவை நோக்கிச் சொன்னான்:
‘ஸாஞ்சிபார் சுல்தானின் பேகமாகிய கறாம்பூ, கவனமாகக் கேள். போர் சட்டப்படி நீ மரண தண்டனை அனுபவிக்க வேண்டியதுதான். அந்த தண்டனையிலிருந்து உன்னை விலக்குவதற்கு வழியில்லை.’
ஷேக், ஸாஞ்சிபார் படைவீரர்கள் பக்கம் திரும்பினான். ‘ஸாஞ்சிபார் படைவீரர்களான உங்கள் எல்லோருக்கும் நான் மன்னிப்பு அளிக்கிறேன். நீங்கள் நிரபராதிகள். உங்கள் அனைவரையும் நான் என்னுடைய படையில் எடுத்துக் கொள்கிறேன்.’
ஷேக் கம்பீரத் தன்மையை விட்டு, புன்னகை புரிந்தவாறு கறாம்பூவின் முகத்தைப் பார்த்துச் சொன்னான்: ‘கறாம்பூ பேகம், நான் ஓமான் அரேபியர்களின் படைத்தலைவனான ஷேக் சம்சுதீன் பின் முராத், உங்களுடைய தைரியத்தைப் பாராட்டுகிறேன். உங்களுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். உங்களுடைய காதல் தியாகத்தை வரவேற்கிறேன். அந்த விஷயங்களைப் பரிசீலனையில் எடுத்துக் கொண்டு நான் இதைக் கூறுகிறேன். நீங்கள் இறப்பதற்கு முன்னால் ஒரு இரவு இயாகோவுடன் இருப்பதற்கு அனுமதி தருகிறேன்’
ஷேக் கூறிய தீர்ப்பைக் கேட்டு கறாம்பூ சிறிது நேரம் திகைப்படைந்து நின்றுவிட்டாள். பிறகு அவள் கேட்டாள்:
‘நீங்கள் சொன்னதற்கான அர்த்தம் புதியவில்லை. ஜீசஸ் கோட்டைக்குப் போக நீங்கள் என்னை அனுமதிப்பீர்களா? இயாகோவை நான் எப்படி சந்திப்பேன்?’
ஷேக் சொன்னான்: ‘நீ எப்படி இயாகோவைச் சந்திக்க நினைத்தாயோ அப்படித்தான் செய்தியுடன் ஒரு தூதுவனை இயாகோவிடம் அனுப்பு. கிலிந்தினி கடற்கரையில் ஆட்கள் யாரும் இல்லாத ஒரு கட்டிடம் இருக்கிறது. அங்கு வரச்சொல்லி இயாகோவிற்கு ஒரு செய்தி அனுப்பு.’
சிறிது நேரத்திற்கு மவுனம்.
கறாம்பூ பரிதாபமான குரலில் கேட்டாள்:
‘நீங்கள் ஏமாற்றி விடுவீர்களா? நீங்கள் இயாகோவக் கொன்றுவிடுவீர்களா?’
ஷேக் சொன்னான்: ‘அந்தச் சேந்தேகமே வேண்டாம். அழைத்து வர வைப்பவர்களுக்கும் அபயம் தேடி வந்தவர்களுக்கும் அரேபியர்கள் நம்பிக்கை துரோகம் செய்வது இல்லை. அது மட்டுமல்ல: (ஷேக் அர்த்தம் நிறைந்த புன்சிரிப்புடன் அப்துல் கத்தீப்பின் முகத்தைப் பார்த்தவாறு) உனக்கு இயாகோமீது இருக்கும் காதலைப் போலவே, பலமான காதல் இயாகோவிற்கும் உன்மீது இருக்கிறது என்பது தெரியும் பட்சம், அந்தச் சோதனையில் இயாகோ வெற்றி பெற்றால்- உன்னுடைய உயிர் திரும்பத் தரப்படும் என்பதற்கும் நான் வாக்களிக்கிறேன்.’
கறாம்பூ சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கியிருந்தாள். ஷேக்கின் வார்த்தைகளை அவள் பல கோணங்களிலும் ஆராய்ந்து பார்த்தாள். ஷேக்கின் நோக்கம் என்னவாக இருக்கும்? அவளுக்கு அது புரியவே இல்லை. இறுதியில் அவள் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டாள். வருவது வரட்டும். மரணத்தில் இருந்து விடுதலை கிடைத்த ஒவ்வொரு நாளும் விலைமதிப்பு உள்ளதுதான். இறப்பதற்கு முன்பு இயாகோவை ஒருமுறை பார்க்க முடிந்தால், அதுதான் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று நினைக்கலாம்.
ஷேக் கறாம்பூவிடம் சொன்னார் : ‘எழுது இயாகோவிற்கு அனுப்ப வேண்டிய செய்தியை...’
அப்துல் கத்தீப் ஒரு பேனா தூவலையும் தாளையும் கறாம்பூவின் முன்னால் வைத்தான்.
ஷேக் அனுப்ப வேண்டிய செய்திக்கான வார்த்தைகளைச் சொன்னான்:
‘உங்களுடைய கடிதம் கிடைத்தது. அதன்படி நானும் இருபது ஸாஞ்சிபார் படைவீரர்களும் கப்பலில் இதோ கிலிந்தினியை அடைந்திருக்கிறோம். இந்த தூதுவருடன் உடனடியாக முகமூடி அணிந்து புறப்படுங்கள். நாங்கள் கோட்டைக்கு வருவது ஆபத்தான விஷயம். ஓமான் அரேபியர்கள் கண்டுபிடித்து விடலாம். நீங்கள் முதலில் காப்பாற்றப்பட்டு விட்டால், பிறகு வெள்ளைக்காரர்கள் ஒவ்வொருவரையும் முகமூடிக்குள் காப்பாற்றி கொண்டு வந்து விடலாம். நாம் இன்று இரவே மொஸாம்பிக்கிற்குப் புறப்பட்டு விடுவோம்.
கிலிந்தினி கடற்கரையில் இருக்கும் ஆள் அரவமற்ற ஒரு கட்டடித்தில் நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்.
உங்களுடைய சொந்தம்’
கறாம்பூ.’
தகவலை எழுதி முடித்தவுடன், ஷேக் கறாம்பூவிடம் கேட்டான்: ‘தகவலுடன் சேரத்துக் கொடுத்தனுப்ப அடையாளம் ஏதாவது இருக்கிறதா?’
கறாம்பூ, இயாகோ முன்பு பரிசாகத் தந்த ரத்தின மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தாள்.
ஷேக் தன்னுடைய நம்பிக்கைக்குரிய படைவீரர்களில் ஒருவனை அழைத்து, சில தனிப்பட்ட கட்டளைகளைச் சொன்னான். பிறகு கறாம்பூ எழுதிய கடிதத்தையும் அடையாள மோதிரத்தையும் ஜீசஸ் கோட்டையில் இருக்கும் கேப்டன் இயாகோவிற்குக் கொண்டு போய் கொடுக்கும்படி அவனை அங்கு அனுப்பி வைத்தான்.
தூதுவன் ஜீசஸ் கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றவுடன், ஷேக் தன்னுடைய படையைச் சேர்ந்த இருபது வீரர்களையும் அப்துல் கத்தீப்பையும் கறாம்பூவையும் அழைத்துக்கொண்டு கிலிந்தினிக்கு நடந்தான். அங்கு ஸாஞ்சிபாரில் இருந்து கறாம்பூவும் மற்றவர்களும் வந்த கப்பல் இருந்தது. ஷேக் தன்னுடைய படை வீரர்களை அந்தக் கப்பலில் ஏற்றினான். கப்பல் புறப்படுவதற்கான தயார் நிலையில் நிறுத்தும்படி அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான். தொடர்ந்து அப்துல் கத்தீப்பையும், கறாம்பூவையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு அருகில் இருந்த ஒரு பழைய வீட்டிற்குள் நுழைந்தான். அங்கிருந்த ஒரு அறையில் கறாம்பூவைக் கொண்டுபோய் உட்காரச் செய்துவிட்டு ஷேக் அவளிடம் சொன்னான்:
‘நானும் அப்துல் கத்தீப்பும் பக்கத்து அறையில் இருப்போம். இந்த வீட்டில் வேறு ஒரு மனிதப் பிறவி இருக்கிறது என்பதற்கான அறிகுறியைக்கூட நீ இயாகோவிடம் பேசும்போது கூறிவிடக் கூடாது. உன்னுடைய ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு அங்கத்தின் அசைவுகளையும் நாங்கள் பக்கத்து அறையிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். சந்தேகப்படும் விதத்தில் ஏதாவது நீ சொல்லவோ, நடக்கவோ செய்தால் உன்னுடைய உயிரும், உன் காதலனுடைய உயிரும் ஆபத்தில் முடிந்துவிடும் என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்.’
கறாம்பூ பணிவுடன் தலை குனிந்தாள்.
அந்த ஆள் அரவமற்ற வீட்டின் - அது அடிமைக் கூட்டங்களை கட்டி வைப்பதற்கு பயன்படும் ஒரு பிரம்மாண்ட கட்டிடம் - தெற்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய அறையில், சுவரின் துவாரத்தின் வழியாக ஆர்வத்துடன் வெளியே பார்த்துக்கொண்டு ஷேக் சம்சுதீனும் அப்துல் கத்தீப்பும் அமர்ந்திருக்கிறார்கள். நேரம் நள்ளிரவு தாண்டியிருக்கிறது. நிலவு வெளிச்சத்தில் கிலிந்தினி கடற்கரை பொன் நிற மண்ணால் மெழுகிய முற்றத்தைப் போல பிரகாசமாக இருக்கிறது. அவ்வப்போது அலைகளின் தெளிவான சத்தம் கேட்கிறது. ஓர் அரக்கன் படுத்திருப்பதைப் போல பனங்குலைகளின் நிழல்கள் பரவிக் கிடக்கின்றன.