ஒரு காதல் கதை - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6370
சிறிது நேரம் கடந்த பிறகு, இரண்டு உருவங்கள் பனைகளின் நிழல்களைத் தாண்டி அந்த வீட்டிற்கு நேராக நடந்து வருவதைப் பார்க்க முடிந்தது. பின்னால் வந்து கொண்டிருந்தது ஒரு பர்தா அணிந்த உருவம். எறும்பு நகர்வதைப்போல அது வந்து கொண்டிருந்தது.
‘நம்முடைய தந்திரம் பலித்துவிட்டது!’ - ஷேக் அப்துல் கத்தீப்பின் காதில் முணுமுணுத்தான்.
ஆமாம்... இரண்டு உருவங்களும் வீட்டின் வாசலில் ஏறி நேராக கறாம்பூ இருக்கும் அறையை நோக்கி நடந்தன. முகமூடி அணிந்த உருவத்தை அறையில் இருக்கச் செய்துவிட்டு, உடன் வந்த தூதுவன் வெளியே சென்றான்.
அந்த உருவம் தன்னுடைய முகமூடியை நீக்கியது. துணியில் மூடப்பட்டிருந்த ஒரு எலும்புக்கூடு தோன்றியது!
‘இயாகோ... இயாகோ... என் உயிர் நாயகனான இயாகோ...’- கறாம்பூ அந்த எலும்புக் கூட்டைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள்.
ஷேக், அப்துல் கத்தீப் ஆகியோரின் கவனம் அந்தக் காதல் வயப்பட்ட செயல்களில் இல்லை. அந்த எலும்புக்கூட்டின் கையில் இருந்த துணி மூட்டையில்தான் அவர்களுடைய பார்வை பதிந்திருந்தது.
கறாம்பூவின் அணைப்பு கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் அந்த எலும்புக்கூடு அந்தத் துணி மூட்டையைக் கையில் இறுகப் பிடித்திருந்தது.
ஷேக், அப்துல் கத்தீப் ஆகியோரின் முகங்கள் மலர்ந்தன. ‘இந்தியாவைச் சேர்ந்த ரத்தினம் அந்த பழந்துணி மூட்டையில் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. அது... இதோ... நம்மைத் தேடி வந்திருக்கு’ - கத்தீப் புன்னகைத்தான்.
ஷேக் சொன்னான்: ‘இப்படி ஒரு வழியைச் செயல்படுத்தாமல் இருந்திருந்தால் இந்த ரத்தினங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.’
திடீரென்று கடற்கரையில் இருந்து சில சத்தங்களும் கூக்குரல்களும் கேட்டன. ஷேக்கும் அப்துல் கத்தீப்பும் சற்று அதிர்ச்சியடைந்தார்கள். அந்த ஆரவாரம் அதிகமாகி... அதிகமாகிக் கொண்டே வந்தது. அவர்கள் வேகமாக எழுந்து அறையின் மேற்குப்பக்க சுவரில் இருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார்கள். கடலில் நான்கைந்து கப்பல்கள். படைகள் கரையில் குதித்து வருகிறார்கள். மொஸாம்பிக்கில் இருந்து வரும் வெள்ளைக்காரர்களாக இருக்குமோ? இல்லை. அரேபியர்கள். ஸாஞ்சிபாரைச் சேர்ந்த அரேபியர்கள். ஸாஞ்சிபார் சுல்தானின் கப்பல்கள்.”
கடலில் போன ரத்தினங்கள்
“கரைக்கு வந்து சேர்ந்த கப்பல்கள் ஸாஞ்சிபார் சுல்தானின் கப்பல்கள்தான் என்பதை ஷேக்கால் நம்பவே முடியவில்லை. கடற்கரையில் என்னவோ ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. சற்று பதைபதைப்புடனும் பயத்துடனும் ஷேக் கடற்கரையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அங்கு பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. சத்தமும் அழைப்புகளும் கேட்டுக் கொண்டிருந்தன. போர்தான். யார் யாருடன் போர் செய்கிறார்கள் என்பது புரியவில்லை. வெள்ளைக்காரர்ளுடைய படைக் கப்பல்களும் கூட்டத்தில் இருக்குமோ? சொல்ல முடியாது.
அடுத்த அறையிலிருந்து அந்த எலும்புக்கூடு செய்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து அமைதியற்ற மனிதனாகி விட்டான் ஷேக். அந்தக் குலுங்கல் சிரிப்பின் அர்த்தம் என்ன? ரத்தின மூட்டையைக் கக்கத்தில் வைத்து இறுகப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் அந்த எலும்புக் கூட்டின் அருகில் இருந்து போவதற்கு ஷேக்கிற்கு மனமே வரவில்லை. கடந்த சில மாதங்களாக ஜீசஸ் கோட்டையில் இருக்கும் ரத்தினங்களைப் பற்றிய சிந்தனைகள் ஷேக்கின் மனதில் ஆழமான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. ஜீசஸ் கோட்டையை ஆக்கிரமித்து, அங்குள்ள வெள்ளைக்காரர்கள் அனைவரையும் பரலோகத்திற்கு அனுப்பியருக்க முடியும். அந்த ரத்தினங்கள் மறைந்து போய் விடுமே என்ற சிந்தனைதான் ஷேக்கை அந்தக் கூட்டக் கொலையிலிருந்து பின்வாங்க வைத்தது. இப்போது அந்த ரத்தினங்கள் எல்லாம் இதோ வெளியே வந்திருக்கின்றன. கையை நீட்டினால் கிடைக்கக்கூடிய நிலையில் அவை இருக்கின்றன. கண் தவறினால் அவை மீண்டும் மறைந்து விடும். மின்னல் வேகத்தில் இந்த சிந்தனைகள் அனைத்தும் ஷேக்கின் மனதில் ஓடிக் கொண்டிருந்தன.
கிலிந்தினி கடற்கரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் என்ன என்பதைப் பார்த்து வருவதற்காக ஷேக் கத்தீப்பை அனுப்பினான்.
அடுத்த அறையில் கறாம்பூவும் எலும்புக்கூடும் முகத்தோடு முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும் கோலாகலங்கள் அவர்களுடைய - அவர்களின் கவனத்தில் படவே இல்லை என்றே தோன்றுகிறது.
ஷேக்கின் பார்வைகள் பதிந்து நின்றிந்தது எலும்புக் கூட்டின் கக்கத்தில் இருக்கும் பழந்துணி மூட்டையில்தான். அந்த மூட்டையில் இருப்பவற்றை வைத்து சாம்ராஜ்ஜியங்களை விலைக்கு வாங்க முடியும். இந்து ஆண், பெண் கடவுள்களின் கண்களில் இருந்தும், கழுத்தில் இருந்தும், காதில் இருந்தும், மார்பில் இருந்தும் கொள்ளையடித்த அற்புத ரத்தினங்கள்... இந்தியாவில் இருக்கும் ரத்தினங்களைப் பற்றி ஷேக் பல நேரங்களில் கனவு கண்டிருக்கிறான். அங்கே போய்வரக்கூடிய அதிர்ஷ்டம் ஷேக்கிற்குக் கிடைக்கவில்லை. எனினும் இந்தியாவின் ரத்தினங்கள் இதோ ஷேக்கையே தேடி வந்திருக்கிக்கின்றன. அது ஒரு பெரிய அதிர்ஷ்டமல்லவா?”
அந்த மூட்டைக்குள் இருப்பவற்றைப் பார்க்க ஷேக்கின் கண்கள் ஏங்கிக் கொண்டிருந்தன. அந்தக் காதலியையும் காதலனையும் ஷேக் பொறுமையை இழந்து கோபத்துடன் பார்த்தான். அவர்கள் பிரிவது மாதிரி தெரியவில்லை.
ஷேக் மனதிற்குள் கூறிக் கொண்டான்: ‘பாவம் கறாம்பூ... அவள் நினைத்திருக்கலாம் - அந்த வெள்ளைக்காரனுக்காக அவள் செய்த தியாகத்தைவிட மிக்பபெரிய தியாகத்தை அவளுக்காக அவன் செய்யத் தயாராக இருப்பான் என்று. நாம் பார்ப்போம்.’
அந்தக் காதல் சோதனைக்காக தான் தீட்டிய தந்திரங்களை நினைத்து ஷேக் தன்னைத்தானே பாராட்டிக் கொண்டான். ஒரு குறிப்பு தந்தால், உடனடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து கறாம்பூவை பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போவதற்கு தன்னுடைய ஒரு கூட்டம் படை வீரர்களை ஷேக் ஏற்பாடு செய்து வைத்திருந்தான். (ஜோசப் கோட்டையில் இருந்து புறப்பட்டு அந்தப் படை வீரர்கள் வீட்டில் இருந்து அழைக்கும் தூரத்தில் காத்து நின்றிருக்க வேண்டும்). அரேபியர்கள் பிடிக்கும்போது கறாம்பூ தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சத்தம் போடாமல் இருக்க மாட்டாள். தன்னுடைய கண்களுக்கு முன்னால் நடக்கக்கூடிய இந்த அவமானச் செயலை - ஆக்கிரமிப்பை - இயாகோ எப்படிப் பார்க்கிறான் என்பதைப் பார்க்கலாமே! அது மட்டுமல்ல; அந்தச் சூழ்நிலையில் ‘கப்பலை மொஸாம்பிக்கிற்கு விடுவதற்காக ஏறிக் கொள். எதிரிகள் கப்பலைப் பிடிப்பதற்கு முன்னால் ஏறிக்கொள்’ என்று அழைத்துக் கூறுவதற்கு ஸாஞ்சிபார் கப்பலில் ஷேக் நிறுத்தியிருக்கும் இருபது ஓமான் அரேபியர்களின் தலைவனான நூரி யாக்குப்பை ஏற்கெனவே தயார் நிலையில் வைத்தாகிவிட்டது. இயாகோ இந்தச் சூழ்நிலையில் என்ன தீர்மானிப்பான்? தன்னுடைய காதலி இல்லாமல் தான் கப்பலில் ஏற முடியாது என்று உறுதியான முடிவு எடுத்து அங்கேயே நின்று கொண்டிருப்பானோ?