ஒரு காதல் கதை - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6370
மிகப்பெரிய சுறா மீன்கள் கடலில் கூட்டமாகத் தலைக்குப்புற விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன.
முகமூடி அணிந்த ஒரு எலும்புக்கூடு கழுத்தில் ஒரு பழந்துணி மூட்டையைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு சுல்தானின் கப்பல்களைப் பின் தொடர்ந்தவாறு கடலில் நீந்திக் கொண்ருந்தது. அந்த எலும்புக்கூடு அவ்வப்போது உரத்த குரலில் சத்தம் போடுவதும், இடையில் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதுமாக இருந்தது. அரேபியர்களின் பாடல் கொண்டாட்டத்தில் அந்தச் சத்தம் காணாமல் போனது.
கரையில் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு இரண்டு உருவங்கள் நின்றுகொண்டிருக்கின்றன.
ஷேக்கும் கத்தீப்பும்”
கதை சொல்லியின் கதை
அந்த நிலையில் நிலவு வெளிச்சத்தில் ரத்தினத்தைப் போல பிரகாசித்துக் கொண்டிருந்த இரண்டு உருவங்களைக் கடற்கரையில் விட்டதுடன், ஹஸ்ஸன் கதையை முடித்துக் கொண்டான்.
நான் ஜீசஸ் கோட்டையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். நிலவு ஒளியில் அந்தக் கோட்டை ஒரு கெட்ட கனவு உலகத்தில் கறுத்து முகமூடி அணிந்து நின்று கொண்டிருக்கும் ஒரு எலும்புக்கூட்டைப்போலத் தோன்றியது.
ஹஸ்ஸன் என்னுடைய தோளை மெதுவாகத் தொட்டுக் குலுக்கி, பலவந்தமாக என்னுடைய கவனத்தைத் திருப்பி ஒரு மெல்லிய குரலில் இப்படிச் சொன்னான்:
“இயாகோவின் ஆவி- ரத்தின மூட்டையை கக்கத்தில் வைத்துக் கொண்டு நடக்கும், கறுத்த முகமூடி அணிந்த, எலும்புக்கூடு - சில இரவு வேளைகளில் கடலில் இருந்து வந்து இந்தக் கோட்டை இருக்கும் பகுதியில் சுற்றித் திரிவது உண்டு. நீங்கள் தனியாக இங்கே ஏதாவதொரு இடத்தில் காற்று வாங்கிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது கறுத்த முகமூடி அணிந்த ஒரு உருவம் எங்கிருந்தோ உங்களுக்கு நேராக வந்து கொண்டிருக்கிறது. சுற்றிலும் கறாம்பூவின் வாசனை பரவி இருக்கிறது. காதலைத் தேடி நடக்கும் ஒரு மொம்பாஸா காதலியைப் பார்த்த இனிய எதிர்பார்ப்புகள் உங்களுடைய இதயத்தில் உண்டாகும். அந்த முகமூடி மெதுவாக நகர்ந்து வந்து உங்களுக்கு முன்னால் அமைதியாக நிற்கிறது. பிறகு அது மெல்ல தன்னுடைய முகமூடியை அகற்றுகிறது. ஒரு எலும்புக்கூடு முன்னால் நிற்கிறது. தன்னுடைய எலும்புக்கூட்டைக் காட்டி, அந்த ரத்தினக் கற்கள் கொண்ட பழந்துணி மூட்டையை உங்களுடைய முகத்திற்கு அருகில் வைத்து ஆட்டி, குலுங்கிச் சிரித்துவிட்டு, அது மறைந்து விடுகிறது.”
ஹஸ்ஸன் அவ்வளவையும் சொன்னபோது, என் உடலில் இருந்த நரம்புகள் அனைத்தையும் கூர்மை இல்லாத ஒரு கத்தியால் யாரோ அறுப்பதைப்போல எனக்குத் தோன்றியது. என்னுடைய உணர்ச்சிகளைச் சோதித்துப் பார்ப்பதைப்போல ஹஸ்ஸன் தன்னுடைய ஒற்றைக் கண்ணை ஒரு தேடும் விளக்கைப்போல என் முகத்தில் பிரகாசிக்கச் செய்தான். அப்போது சற்று தூரத்தில் மரங்களின் மறைவில் ஒரு நிழல் நாங்கள் அமர்ந்திருந்த கல் திண்ணையை நோக்கி வந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அது மேலும் நெருங்கி வந்தது. ஒரு கறுத்த முகமூடி!
ஹஸ்ஸன் அசையாமல் தன்னுடைய வசீகரப் பார்வையை என் முகத்தில் பதிய வைத்துக் கொண்டிருந்தான். அந்த முகமூடி மேலும் நெருங்கி வந்தது. எங்களுக்கு முன்னால் அது வந்தது.
‘அதோ!’ - என்று சுட்டிக் காட்டுவதற்காக நான் என்னுடைய கையைத் தூக்க முயன்றேன். கையை உயர்த்த முடியவில்லை. என் வாயில் பாலைவனத்தில் வெப்பமாக இருக்கும் மணலை நிறைத்ததைப் போல இருந்தது. குரல் வரவில்லை.
திடீரென்று கோட்டையின் தென்கிழக்கு மூலையில் சில அற்புத வெளிச்சங்கள் தெரிவதைக் காண முடிந்தது. மெல்லிய முனகல்களும் பேச்சுக்களும் கலந்து கேட்டன. தொடர்ந்து சில சீட்டியடித்தல்கள்.
எங்களுக்கு முன்னால் நின்றிருந்த கறுத்த முகமூடி காற்றில் கரைந்து விட்டதைப்போல காணாமல் போனது. கதை சொல்லிக் கொண்டிருந்த ஹஸ்ஸனும் ஒரு மந்திர சக்தியைப்போல மறைந்து போனான்.
எனக்கு அங்கிருந்து எழுந்து ஓட வேண்டும்போல இருந்தது. எழ முடியவில்லை. கால்கள் தரையோடு ஒட்டிக் கொண்டிருந்தன. என்னுடைய உடலில் இருக்கும் நரம்புகள் அனைத்தையும் யாரோ அறுத்து ஒன்று சேர்த்துக் கட்டியதைப்போல இருந்தது. என்னுடைய மூளையில் ஏதோ மாய அசைவுகள் நடக்கின்றன. கறுத்த முகமூடிகளும், ரத்தினங்களும், எலும்புக்கூடும், ஸாஞ்சிபார் கப்பல்களும், கறாம்பூ பேகமும் என் மூளையில் குழு நடனத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். சுமையைத் தாங்க முடியாமல் என் மூளை நொறுங்கி இறங்குகிறது. சீட்டியடித்தல்கள் அதற்குப் பிறகும் கேட்கின்றன. தேடும் விளக்குகள் சுற்றிலும் வெளிச்சத்தைப் பரப்புகின்றன. ஒரு பட்டாசு வெடிப்பதைப் பார்ப்பதுபோல அந்தக் காட்சியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘டெ...டெ...டெ...’ ? மூன்று குண்டுகள் முழங்கின. என் சிந்தனைகள் அப்போதும் பதினேழாம் நூற்றாண்டிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தன. பள்ளத்தின் பாலத்தை இழுக்க ஓமான் அரேபியர்கள் கொடுத்த கட்டளையை வெளிப்படுத்தும் வெடிகளா? நிழல்கள் நடனமாடுகின்றன. ஒரு கறுத்த முகமூடி கிடைத்தால் அதை அணிந்து கொண்டு அந்த நிழல்களுக்கு மத்தியில் மறைந்து நிற்க... நான் ஆசைப்படுகிறேன்.
என் காதில் யாரோ ஒரு அடி அடித்தார்கள். ஒரு கறுத்த உருவம். நான் வேகமாக எழுந்தேன். அந்த குளிர்ச்சியான கை என் நரம்புகளைத் தட்டி எழுப்பியது என்று தோன்றுகிறது. இறுகிப் போய் வெடிக்கும் நிலையில் இருந்த என் நரம்புகளுக்கு ஒரு விடுதலை கிடைத்தது!
அந்தக் கோட்டை மூலையில் என்னவோ ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த சத்தங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் கோட்டை கோபுரம் மணி நாதத்தை முழக்கியது. மணி பதினொன்று. அந்த மணிச்சத்தம் என்னுடைய மூளையைச் சற்று வருடியபோது எனக்கு சுய உணர்வு வந்தது.
‘ஓடுங்க! ஓடுங்க!’ - என்று இதயத்தின் உரத்த துடிப்புச் சத்தத்தை என்னால் கேட்க முடிந்தது. நான் அந்த நிழல்களுக்கு மத்தியில் ஓடினேன். முன்னால் முதலில் காணும் வழி மிகவும் எளிதான வழி என்ற முடிவுடன் நான் ஓடினேன்.
ஒரு அகலம் குறைவான பாதை வழியாக ஓடிப்போய்ச் சேர்ந்தது விசாலமான கடற்கரையில்...
அங்கு, கரையில் வயிறு வீங்கிய ப ஓபாப் மரங்கள் தனியாக நின்று கொண்டிருந்தன. சாம்பல் நிறத்தில் இருந்த கடலும், கடலில் கூட்டமாக நங்கூரமிட்டு நின்று கொண்டிருக்கும் அரேபிய பாய்மரக் கப்பல்களின் நிர்வாணமான தூண்களும் நெருப்பு எரிந்து முடிந்த ஒரு பெரிய வானத்தை மனதில் தோன்றச் செய்தன.
நான் கடற்கரை வழியாக எவ்வளவு தூரம், எத்தனை மணி நேரங்கள் ஓடினேன் என்று நிச்சயமில்லை. சற்று தூரத்தில் தெரு வெளிச்சங்களைப் பார்த்து நான் என்னுடைய கால்களை அந்தப் பக்கமாகத் திருப்பினேன்.