ஒரு காதல் கதை - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6370
‘அல்லாஹுவின் அருளால் ஷேக் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்! ஒரு விஷயத்தைச் சொல்ல இந்த அடிமையை அனுமதிக்க வேண்டும்!’
‘சொல்லு! என்ன?’- ஷேக் கேட்டான்.
‘இங்கு நின்று கொண்டிருக்கும்’ இந்த அரேபிய மங்கையை எனக்குத் தெரியும். இவங்க ஸாஞ்சிபார் சுல்தானின் புதிய பேகம். பெயர்... கறாம்பூ. சுல்தான் இவங்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் இவங்க ஸாஞ்சிபாரிலேயே மிகவும் புகழ்பெற்ற நடனப் பெண்ணாக இருந்தார்கள்.
‘ஸாஞ்சிபார் சுல்தானின் பேகமா?’ - ஷேக் வாயைப் பிளந்து, வயிறைத் தடவியவாறு விழித்துக் கொள்ணடிருந்தான்.
‘இவன் கூறுவது உண்மையா?’ - ஷேக் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்துக்கொண்டே சாந்தமான குரலில் கேட்டான்.
‘ஆமாம்... உண்மைதான். நான் ஸாஞ்சிபார் சுல்தானின் பேகம்தான்? கறாம்பூதான்’.
அவளுடைய மணிநாதம் அங்கு முழங்கியது.
‘இவர்களெல்லாம்?’ - அவளுடன் வந்தவர்களைச் சுட்டிக்காட்டிய வாறு ஷேக் கேட்டான்: ‘ஸாஞ்சிபார் சுல்தானின் படை வீரர்கள்... அப்படித்தானே?’
‘ஆமாம்... ஸாஞ்சிபார சுல்தானின் படை வீரர்கள் தான்’ - அவள் எந்தவித தயக்கமும் இல்லாமல் சொன்னாள்.
‘எதற்காக நீங்கள் மொம்பாஸாவிற்கு வந்திருக்கிறீர்கள்? வெள்ளைக்காரப் பன்றிகளுக்கு உதவுவதற்கு... அப்படித்தானே?’
‘நீங்கள் சொன்னது முற்றிலும் சரி என்று கூறுவதற்கில்லை’ - கறாம்பூ சற்று கோபத்துடன் சொன்னான்.
‘பிறகு உங்களுடைய நோக்கம்தான் என்ன?’
சற்று நேர மவுனத்திற்குப் பிறகு கறாம்பூ பதில் சொன்னாள்:
‘ஜீசஸ் கோட்டையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் என்னுடைய ஒரு பழைய நண்பரைப் பார்ப்பதற்காக நான் வந்திருக்கிறேன்’
‘உங்களுடைய அந்த நண்பர் யார்?’
கறாம்பூ முகத்தைக் குனிந்தாள். சற்று நேரத்திற்கு அவள் எதுவும் பேசவில்லை. ஷேக் சிறிது கோபத்துடன் குரலை உயர்த்தி மீண்டும் கேட்டான்: ‘அந்த நண்பர் யார்?’
கறாம்பூ தடுமாறிய குரலில் அவனுடைய பெயரைச் சொன்னாள்: ‘கேப்டன் இயாகோ’
சுடுகாட்டில் ரத்தினங்கள்
புல்வெளியில் ஜீசஸ் கோட்டையின் நிழலின் வடிவம் பயத்தை வரவழைக்கக்கூடிய அளவிற்கு இருந்தது. கடற்காற்று சற்று கோபித்தது. ஹஸ்ஸன் திடீரென்று எழுந்து மீண்டும் அங்கேயே உட்கார்ந்தான்.
அவன் அந்த ஒற்றைக் கண்ணை என்னுடைய முகத்தில் பதித்து ஆண்மைத் தனமான குரலில் கேட்டான்: “நாம் எங்கே கதையை நிறுத்தினோம்?”
நான் சொன்னேன். “ஷேக் ஜோசப் கோட்டையில் பேகம் கறாம்பூவை விசாரணை செய்கிறார். அவள் பார்ப்பதற்காக வந்த நண்பரின் பெயர் இயாகோ என்று அவள் ஷேக்கிடம் கூறுகிறாள்”.
ஹஸ்ஸன் சொன்னான்: “சரி சரி... ஷேக் அவளை விசாரணை செய்யட்டும். நாம் ஜீசஸ் கோட்டையில் இயாகோ என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் போய் பார்ப்போம். ஜீசஸ் கோட்டையில் வெள்ளைக்கார போர் வீரர்களில் இயாகோவும் வேறு பதினேழு பேர்களும் மட்டுமே இறக்காமல் எஞ்சியிருக்கிறார்கள். உயிருடன் இருந்த வெள்ளைக்காரர்கள் தங்களுக்கிடையே நல்ல நட்புணர்வுடன் இருக்கவில்லை. அங்கு நட்புணர்வுடன் இருந்தது பட்டினியும் நோயும் மரணமும்தான்.
இந்தியாவில் உள்ள ஆலயங்களிலிருந்து கொள்ளையடித்துக் கிடைத்த ஏராளமான ரத்தினங்கள் ஜீசஸ் கோட்டையில் இருந்த வெள்ளைக்காரர்களின் கையில் இருந்தன. மிகவும் விலைமதிப்பு கொண்ட ரத்தினங்கள் இயாகோவின் கையில்தான் இருந்தன. அவனுடைய நண்பர்களுக்கு இந்த ரகசியம் நன்றாகத் தெரியும். அந்த ரத்தின மூட்டை முழுவதும் இயாகோவிற்குச் சொந்தமானவை அல்ல. மனிதர்கள் பொன்னின் மீதும் ரத்தினங்கள் மீதும் வைத்திருக்கும் ஆசை உலகம் ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்தப் பொருட்களுக்காக உலகத்தில் எத்தனையோ சண்டைகளும் போர்களும் கூட்டக் கொலைகளும் நடந்திருக்கின்றன. இப்போதும் நடந்து வருகிறது. அதற்காக மனிதர்கள் அழிகிறார்கள். ஆனால், பூமியில் இருக்கும் பொன்னும் ரத்தினங்களும் எந்தச் சமயத்திலும் அழிவதில்லை. மனிதர்கள் ஒருவரையொருவர் அழித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த உலோகத் துண்டுகளும் கற்களும் கண்ணாமூச்சு விளையாட்டு விளையாடுகின்றன. ஒரு மனிதனின் கையில் இருந்து இன்னொரு மனிதனின் கைக்கு, ஒரு பெட்டியில் இருந்து இன்னொரு பெட்டிக்கு, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இந்தப் பயண வேளைகளுக்கு மத்தியில் அவை ஏராளமான உயிர்களை பலி வாங்குகின்றன. மேற்கு இந்தியாவில் உள்ள ஆலயங்களில் இருந்த கடவுள் சிலைகளை அலங்கரித்துக் கொண்டிருந்த விலை மதிப்பற்ற ரத்தினங்களை வெள்ளைக்காரப் படைவீரர்கள் அபகரித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். அவற்றைக் தங்களுடைய நாட்டிற்குக் கொண்டு செல்வதற்கு முன்னால் அவர்கள் மொம்பாஸாவில் - ஜீசஸ் கோட்டையில் சிக்கிக் கொண்டார்கள். கேப்டன் பெரேரா என்ற வெள்ளைக்காரரிடம் கோழி முட்டை அளவில் ஒரு மாணிக்கக் கல் இருந்தது. மலபார் கரையில் இருந்த ஒரு சிவன் கோவிலில், சிவனுடைய மூன்றாம் திருக்கண்ணாக கருங்கல் சிலையில் பதிக்கப்பட்டிருந்த ரத்தினம்தான் அது. லாரன்ஸ் என்ற வெள்ளைக்காரப் போர்வீரன் காற்சட்டைப் பையில் ஒரு சிரட்டைத் துண்டை எந்நேரமும் வைத்துக்கொண்டு திரிந்தான். அந்த சிரட்டை நிறைய வைரக் கற்கள் இருந்தன.
பின்டோ என்ற இன்னொரு வெள்ளைக்காரப் படைவீரனிடம் விலை மதிக்க முடியாத ஒரு ஓவர்கோட் இருந்தது. பச்சைத் துணியால் முழுமையாக மூடித் தைக்கப்பட்ட மரகதக் கற்கள்தான் அந்தக் கோட்டின் பொத்தான்களுக்குப் பதிலாக வைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் வெள்ளைக்காரர்கள் ஒவ்வொருவரும் கொள்ளையடித்த ரத்தினங்களைப் பல இடங்களிலும் மறைத்து வைத்துக் கொண்டு நடந்து திரிந்தனர். சிலர் சில ரகசிய இடங்களில் ரத்தினங்களைக் குழி தோண்டி மூடி வைத்தும் இருந்தார்கள்.
ஜீசஸ் கோட்டையின் சூழ்நிலை மிகவும் மோசமானவுடன், இந்த வெள்ளைக்காரப் போர் வீரர்களின் ஒரே சிந்தனை இந்த ரத்தினங்களைப் பற்றித்தான் இருந்தது. அவர்கள் ஒரவரையொருவர் நம்பவில்லை. கோட்டையில் பட்டினியும் நோய்களும் அதிகமாக பாதித்தவுடன், மரணம் அவர்களுக்கு முன்னால் கொடூர நடனத்தை ஆரம்பித்தவுடன், அந்த வெள்ளைக்காரர்கள் சுயநலம், கெட்ட எண்ணம் ஆகியவற்றின் பிறப்பிடமாக மாறினார்கள். நோயால் பாதிக்கப்பட்டு செயல்பட முடியாமல் படுத்துக் கிடக்கும் சகோதரனை கழுத்தை நெறித்துக் கொன்று, அவனுடைய கையில் இருந்த ரத்தினங்களை அபகரித்து தங்களுடைய கையிருப்பைக் கூட்டுவதற்கு அவர்கள் தயங்கவில்லை.
ஜீசஸ் கோட்டையில் இருந்த வெள்ளைக்காரப் போர் வீரர்களின் கையில் - அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து திரும்பி வந்தவர்களாக இருந்தார்கள். ஏராளமான ரத்தினங்கள் இருக்கின்றன என்ற கதையை ஓமான் அரேபியர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.