ஒரு காதல் கதை - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6370
தன்னிடம் கதையைக் கூறும்படி கேட்டுக்கொண்ட விஷயத்தை ஒரு மதிப்பான காரியமாகவே ஒரு அரேபியன் கருதுவான். ஆயிரத்தொரு இரவுகளின் அற்புதக் கதைகளின் உலகத்தில் வளர்ந்த வனாயிற்றே அவன்!
ஹஸ்ஸன் சிறிது நேரம் மவுனமாக இருந்தான். கதை கூறுவதற்கான ஒரு தயார் பண்ணலாக அது இருக்கலாம்.
நிலவு வெளிச்சம் சற்று குறைந்தது. அந்த மங்கலான நிலவொளியில் ஜீசஸ் கோட்டை அகன்று அகன்று போவதைப்போல இருந்தது. இளம் வெப்பத்தைக் கொண்ட கடல்காற்று அவ்வப்போது வீசிக் கொண்டிருந்தது. நாங்கள் அமர்ந்திருந்த தரைக்குப் பின்னால் சில அசைவுகள் உண்டாயின. வவ்வால்களின் அசைவுகளே அவை. பர்தா அணிந்த பெண்கள் மரங்கள் மீது பறப்பதைப்போலத் தோன்றியது.
“இருநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இந்த ஜீசஸ் கோட்டையில் நடந்த ஒரு காதல் கதையைத்தான் நான் சொல்லப் போகிறேன்” - ஹஸ்ஸன் கதையை ஆரம்பித்தான். நான் மேலும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துப் புகைத்தவாறு உற்காசத்துடன் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
“மொம்பாஸாவிற்குள் நுழைந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய வெள்ளைக்காரர்களை எதிர்த்து ஒரு இறுதிப் போருக்குத் தயாராகிக் கொண்டு, பாரசீக வளைகுடாவிற்கு அடுத்து இருக்கும் ஓமானிலிருந்து இருபத்தைந்து போர்க்கப்பல்களுடன் ஒரு பெரிய அரேபியர்களின் கூட்டம் மொம்பாஸாவில் வந்து இறங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் என்னுடைய முன்னோரான அப்துல் கத்தீபும் இருந்தார். அப்துல் கத்தீப் எழுதி வைத்துச் சென்ற நூலில் இருந்துதான் இந்த வரலாற்றுச் சம்பவங்கள் எல்லாவற்றையும் நான் தெரிந்து கொண்டேன்.”
அந்த வகையில் ஹஸ்ஸன் தன்னுடைய கதையின் உண்மைத் தன்மைக்கு ஒரு சாட்சிப் பத்திரத்தை முன்னால் வைத்தான். அப்துல் கத்தீபுடன் தானும் இருந்ததைப்போல ஹஸ்ஸன் கதையைச் சொன்னான்.
“நாங்கள் மொம்பாஸாவில் இறங்கி கடற்கரையில் இருந்த பழைய ஜோசப் கோட்டையைக் கைப்பற்றி அங்கு தங்கினோம். அதற்கு முன்பே மொம்பாஸா நகரத்தை நாங்கள் கைப்பற்றி இருந்தோம். ஓமான் அரேபியர்களுடன் படையெடுப்பு நடந்தவுடன், சில ஊர் பட்டாளக்காரர்களும், வெள்ளைக்கார பாதிரியார்கள் பிரச்சாரம் செய்து கிறிஸ்துவர்களாக மாற்றிய கொஞ்சம் கறுப்பின மக்களும், அவர்களுடைய குடும்பங்களும், வெள்ளைக்காரர்களின் எச்சிலைத் தின்று வாழ்ந்து கொண்டிருக்கும் உள்ளூரைச் சேர்ந்த சில பெரிய மனிதர்களும் ஜீசஸ் கோட்டைக்குள் அபயம் தேடினார்கள். பெண்களும் குழந்தைகளும் உட்பட இரண்டாயிரம் பேர் இருந்தார்கள். வெள்ளைக்காரர்களான போர் வீரர்கள் அங்கு நூறு பேர் இருந்தார்கள்.
ஓமான் அரேபியர்கள் ஜீசஸ் கோட்டையைக் கைப்பற்ற முயல்வார்கள் என்று போர்த்துக்கீசியர்கள் நினைத்தார்கள். அப்போது அரேபியர்களை வெடிகள் வைத்து மரணத்தைத் தழுவச் செய்யலாம் என்ற தீர்மானத்துடன் அவர்கள் காத்திருந்தார்கள். அரேபியர்களிடம் இருப்பதைவிட அதிகமான ஆயுத பலம் போர்த்துக்கீசியர்களிடம் இருந்தது.
ஆனால், நாங்கள் ஜீசஸ் கோட்டையைச் சுற்றி வளைக்கவே இல்லை. நாங்கள் இன்னொரு தந்திரம் செய்தோம். ஜீசஸ் கோட்டையை முடிவற்ற காலம்வரை கண்டு கொள்ளாமல் இருப்பது... அதுதான் எங்களின் திட்டமாக இருந்தது.
அந்த வெள்ளைக்காரர்களையும், அவர்களிடம் அபயம் தேடிச் சென்ற தைரியமற்ற உள்ளூர்க்காரர்களையும் நாங்கள் ஜீசஸ் கோட்டைக்குள் தனிமைப்படுத்தினோம். அவர்களுக்கு வெளியில் இருந்து நீர், உணவு, ஆயுதங்கள் ஆகியவை கிடைக்கக்கூடிய எல்லா வழிகளையும் நாங்கள் தடுத்துவிட்டோம். ஆப்பிரிக்கக் கரையில் போர்த்துக்கீசியர்களின் படைக்களமான மொஸாம்பிக்கில் இருந்து பட்டாளத்தையும் போர்க்கருவிகளையும் இறக்குவதற்கு போர்த்துக்கீசியர்கள் முயற்சிப்பார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். அந்தப் பெரும் முயற்சிகள் ஒவ்வொன்றையும் நாங்கள் தோல்வியடையச் செய்தோம். மொம்பாஸா கரை தெரிவதற்கு பதிலாக கடலின் அடிப்பகுதிதான் அவர்களுக்குத் தெரிந்தது. கடல் கொள்ளைக்காரர்களான எங்களைக் கடலில் வைத்து எதிர்த்து நிற்பதற்கு ஒரு வெள்ளைக்காரப் போர் வீரனுக்கும் தைரியம் இல்லை.
நாங்கள் ஜோசப் கோட்டையில் மனிதர்களையும் ஒட்டகங்களையும் அறுத்து மிகப் பெரிய விருந்துகள் நடத்தி, சந்தோஷத்தில் திளைத்திருக்கும்போது, ஜீசஸ் கோட்டையில் இருந்த வெள்ளைக்காரர்களும் கறுப்பின மக்களும் தூக்க நோயால் பாதிக்கப்பட்டு கால்நடைகளைப் போல தாங்களாகவே செத்து மடிந்து கொண்டிருந்தனர்.”
ஹஸ்ஸன் கதையைச் சற்று நிறுத்திவிட்டு, நான்கு பக்கங்களிலும் ஒற்றைக் கண்ணைச் செலுத்திப் பார்த்தான். அலரி மரத்திற்கு மேலே வவ்வால்கள் சிறகை அடித்துக்கொண்டு பறக்கும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
“அங்கு அந்தக் கோட்டையில் ஓமான் அரேபியர்களின் அட்டகாசம் அப்படியே நடந்து கொண்டிருக்கட்டும். நாம் ஸாஞ்சிபார் சுல்தானின் அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் நுழைந்து போய் பார்ப்போம்.”
ஹஸ்ஸன் திடீரென்று கதையின் களத்தை மாற்றினான்.
“ஸாஞ்சிபார்... ஹ! அடிமைச் சந்தைகள் நடத்தி ஏராளமான பணத்தைச் சம்பாதித்த நாடு கறாம்பூவின், கறுத்த பேரழகிகளின் நாடு. அங்கு சுல்தானின் அந்தப்புரத்தில், சுல்தானின் மிக சமீபத்திய மனைவியான பேகம் கறாம்பூ - ஆமாம். கறாம்பூ என்பதுதான் அந்த புதிய பேகத்தின் பெயர் - தன்னுடைய படுக்கையறையில் சந்தனத் தாலான கட்டிலில், பச்சை நிற மெத்தையில், ஒரு சிவப்பு நிறப்பட்டுத் தலையணையில் முகத்தை அணைத்துக் கொண்டு கவிழ்ந்து படுத்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். அறையின் மேலேயிருந்து தொங்கிக் கொண்டிருந்த - முற்றிலும் கண்ணாடிகளால் ஆன மலர் மொட்டுகளுடன் அமைந்த சர விளக்கில் ஒரு கிளி தாவித் தாவி விளையாடிக் கொண்டிருந்தது. அந்த சர விளக்கிற்குக் கீழே, மெத்தைக்கு அருகில் ஒரு கறுப்பு பணியாள் ஒரு கருங்கல் சிலையைப் போல நின்றிருந்தான்.
கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்த பேகத்தின் கையில் கண்ணீரில் நனைந்த ஒரு கடிதம் இருந்தது. அது ஒரு கறுப்பின பணியாள் மொம்பாஸாவில் இருந்து கொண்டு வந்த கடிதம் அது. மொம்பாஸாவில் ஜீசஸ் கோட்டையில் சிக்கிக் கிடக்கும் வெள்ளைக்கார போர் வீரர்களில் ஒருவனான கேப்டன் இயாகோ, ஸாஞ்சிபார் சுல்தானின் கறாம்பூ பேகத்திற்குக் கொடுத்தனுப்பிய ஒரு தனிப்பட்ட தகவல் அது.
பேகம் சிறிது நேரம் அழுகையை நிறுத்திவிட்டு, கண்களைத் துடைத்துக் கொண்டு அந்தக் கடிதத்தை மீண்டும் ஒருமுறை வாசித்தாள்.
பிரியமுள்ள பேகம்,
உங்களுடைய நீல மலர் இதழ்களைப் போன்ற கரங்களில் இயாகோவின் முத்தம்.
இந்தச் செய்தி உங்களுக்குக் கிடைக்குமோ என்று எனக்கு நிச்சயமில்லை. கிடைத்தால், அந்த நேரத்தில் நான் உயிருடன் இங்கு இருப்பேனா என்பதும் நிச்சயமில்லை.